பிறக்கும் போதே, கோரமாய்க் கொடூரமாய் எந்தக் குழந்தையும் பிறப்பதில்லை. ஆனால் சில சட்டங்கள் அப்படிப் பிறக்கின்றன. நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்பட உள்ள மீனவ சமூகம் தொடர்பான ஒரு சட்ட முன்வடிவு, நம்மைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்துகின்றது. இப்போது இணையத் தளத்தில் காணக்கிடக்கும் அந்த முன்வடிவு, விரைவில் சட்டமாகவும் ஆகிவிடக்கூடும். அதனைத் தடுத்தே ஆக வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது.
தமிழகத்தின் பாரம்பரியத் தொழில்கள் என்று, உழவு, நெசவு, மீன்பிடித் தொழில் மூன்றையும் கூறுவர். மூன்றுமே கடின உழைப்பையும், குறைந்த வருமானத்தையும் கொண்டவை. அதிலும் மீனவ வாழ்க்கை, பல்வேறு துன்பங்களைச் சுமப்பது. தொடர்ந்தால் தொடரும், முடிந்தால் முடியும் என்னும் நிலையாமைத் தத்துவம், அவர்களின் அன்றாட வாழ்க்கையின் குரல். கடல் அலையோடு போராடும் அவர்கள், அவ்வப்போது புயல், சூறாவளிகளுக்கும் முகம் கொடுக்க வேண்டியுள்ளது. அண்மைக் காலமாகக் கடல்கோள் (சுனாமி) என்னும் பெருந்துயரமும் அவர்களைச் சூழ்ந்துள்ளது. இதுபோன்ற இயற்கைத் துன்பங்கள் போதாவென்று, தென் தமிழக மீனவர்கள், சிங்களக் காடையரின் துப்பாக்கிக் குண்டுகளுக்கும் இரையாகின்றனர்.
இப்படிப் பல்வேறு துயரங்களுக்கும் ஆளாகிக் கிடக்கும் மீனவ சமூகத்தைக் கைதூக்கி விட அரசுகள் முயல வேண்டும். மாறாக, நடுவண் அரசு இப்போது கொண்டு வரவிருக்கும் சட்ட முன்வடிவோ, அவர்களை ஆழ்கடலில் அமிழ்த்துவதாக உள்ளது.
12 கடல் மைல் தாண்டி மீன் பிடிக்கச் சென்றால், 9 லட்சம் ரூபாய் தண்டமும், மூன்று மாதச் சிறைத் தண்டனையும் விதிக்கப்படுமாம். கடல் பயணம் என்பது சாலைப் பயணம் போன்றதன்று. எல்லைக் கோடுகளை அவ்வளவு துல்லியமாக வரையறுத்துவிட முடியாது. சில நேரங்களில் பர்மாவிலிருந்து கூடச் சில மீனவர்கள் இந்திய எல்லைக்கு வந்து விடுகின்றனர். அவர்களை எச்சரித்துத் திருப்பி அனுப்புவதுதான் மரபு. இப்படிக் கடுந்தண்டமும், கொடுந்தண்டனையும் விதிப்பது மனிதநேயமுமில்லை, ஜனநாயகமுமில்லை.
நம்மவர்கள் எல்லை தாண்டக் கூடாதாம். ஆனால், வெளிநாட்டுக் கப்பல்கள் நம் கடல் எல்லைக்குள் வந்து மீன் பிடித்துச் செல்லலாமாம். என்ன கொடுமையான சட்டம் இது? இதைவிட, நம்நாட்டைக் கூறுபோட்டு வெளிநாடுகளுக்கு விற்றுவிட்டுப் போய்விடலாம்.
வெளிநாட்டினர், பன்னாட்டு நிறுவனங்களின் தேவையைக் கருத்தில் கொண்டே இதுபோன்ற சட்டங்கள், உலக வர்த்தக நிறுவனத்தின் ஆணைக்கு இணங்க இங்கே கொண்டுவரப் படுகின்றன என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. இந்தச் சட்ட முன்வடிவை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் நடுவண் அரசுக்கு மடல் எழுதியுள்ளார். இது ஏதோ மீனவர்களைப் பாதிக்கும் சட்டம் என்று கருதாமல், ஒட்டுமொத்தத் தமிழினமும் வீறு கொண்டு எழுந்து, இச்சட்ட முன்வடிவை எதிர்க்க வேண்டும்.
- சுப.வீரபாண்டியன்