ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட, உயிரைத் துச்சமென நினைத்து, 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடி, மரணத்தை முத்தமிட்டனர் மாவீரர்கள் மருது சகோதரர்கள். இம்மாவீரர்களில் தியாகத்தை தமிழ்நாட்டு அரசு உட்பட அனைத்து தரப்பு மக்களும் போற்றிவருகிறார்கள். இந்நிலையில், திருச்சியில் அக்டோபர் 23, 2023 ல் மருது சகோதரர்கள் நினைவு விழா ஒன்றில் பேசிய ஆளுநர் ரவி, சுதந்திர போராட்ட தியாகிகளை மக்களின் நினைவில் இருந்து அகற்ற தமிழ்நாடு அரசு முயல்வதாகவும், மருது சகோதரர்கள், முத்துராமலிங்கத் தேவர் ஆகியோரின் குரு பூஜை விழாவை கொண்டாடக்கூடாது என்று மாநில அரசு நினைப்பதாகவும் அவதூறாகப் பேசியிருக்கிறார்.rn ravi and rssஇந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற சுதந்திர தின விழா அணிவகுப்பில் மருது சகோதரர்கள் சிலைகள் கொண்ட ஊர்திகளை சேர்க்க முடியாது என மறுத்தது ஒன்றிய பாசக அரசு. தமிழ்நாட்டின் வரலாற்றைப் பறைசாற்றும் கொண்டு செல்லப்பட்ட ஊர்திகளை ஒன்றிய அரசு திருப்பி அனுப்பிய போது இதே ஆளுநர் ரவி ஏன் கேள்வி எழுப்பவில்லை? அப்போது அவருக்கு வரலாறு தெரியவில்லையா? அல்லது நினைவுக்கு வரவில்லையா? என்பது நமக்கு இயல்பாக எழும் கேள்வியாக இருக்கிறது. இவை இன்று நேற்றல்ல, ஆளுநர் ஆர்என் ரவி பதவி ஏற்றதில் இருந்து தொடர்ந்து தமிழ்நாட்டின் பண்பாடு, வரலாறு, தமிழ்மொழி ஆகியவற்றுக்கு எதிராகத் தொடர்ந்து உளறிக் கொண்டிருக்கிறார். அதில் சிலவற்றைப் பார்ப்போம்.

திருவள்ளுவர் மற்றும் வள்ளலார் ஆகியோர் சனாதனத்துக்கு நேர் எதிரானவர்கள். அவர்கள் சமஸ்கிருத-வேத மதமாகிய இந்து மதத்தை சார்ந்தவர்கள் என பொய்யாக கட்டமைப்பதும், கால்டுவெல், காரல் மார்க்ஸ் ஆகியோரின் தத்துவங்களை மடைமாற்றவும் வரலாற்று திரிபுகளை செய்து வருகிறார். அதுமட்டுமின்றி மாநிலக்கொள்கைகளுக்கு எதிரான நீட் நுழைவுத்தேர்வு, மும்மொழிக்கொள்கை, புதிய கல்விக்கொள்கை ஆகியவற்றை மக்களிடையே திணிக்கும் வேலை செய்வது, தன்னுரிமைச் சார்ந்து மக்களின் தன்னெழுச்சியால் நடைபெற்ற ஸ்டெர்லைட் மற்றும் கூடங்குளம் போராட்டங்களை கொச்சைப்படுத்துவது, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை பலமாதங்கள் காத்திருப்பில் வைத்திருத்தல், மட்டுமல்லாது “அப்படி வைத்திருந்தால் அதற்கு நிராகரிப்பு என்றே பொருள்” என்ற ஆணவத்திமிருடன் பேசுதல் ஆகிய மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபடுகிறார்.

இவ்வாறான பேச்சுக்கு அரசியல் செயல்பாட்டாளர்கள், முற்போக்கு இயக்கங்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற பிரதிநிதிகள், தமிழ்நாட்டு முதலமைச்சர், கல்வியாளர்கள் மற்றும் மாணவ அமைப்பினர் என பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கடுமையான கண்டனங்கள் எழுகின்றன. ஆளுநருக்கு எதிராக முற்றுகை போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் தமிழ்நாட்டில் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணமே இருக்கிறது. இருப்பினும் தொடர்ந்து தினம் தினம் ஆளுநர் அவதூறுகளை அள்ளி வீசி வருகிறார். இவர் ஆளுநராக செயல்படாமல் அரசியல்வாதியாக நடந்துக்கொள்கிறார் என்பதனை ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் பார்க்கிறோம். ஆன்மா, ஆன்மீகம், ரிஷிகள், பாரதம், வேதம், இந்து மதம், இந்தி மற்றும் சமஸ்கிருத மொழி ஆகிய பாஜக- ஆர்.எஸ்.எஸ்-சின் கொள்கை பிரச்சாரங்களை மக்களிடையே கொண்டு சேர்க்கும் நபராவும் செயல்படுவதை இவரின் பல செயல்பாடுகள் மூலம் நிரூபணமாகிறது.

திருக்குறள் மற்றும் திருவள்ளுவர்

ஆளுநர் ரவி, “திருக்குறள் என்பது ஆன்மிக நூல். அது, நீதி சாஸ்திரம், தர்ம சாஸ்திரம் குறித்தும் பேசுகிறது. திருக்குறளில் உள்ள ‘ஆதி பகவன்’ என்ற சொல் ரிக் வேதத்தில் இருந்து பெறப்பட்டது” எனவும் “ஜி.யு.போப் திருக்குறளில் இருக்கின்ற ஆன்மிக சிந்தனைகளையும், பக்தி கண்ணோட்டத்தையும் நீக்கி பெரிய அவமதிப்பை அதற்குச் செய்துவிட்டார்” எனவும், திருக்குறளை சனாதனத்தோடு ஒப்பிட்டும் பேசுகிறார்.

உலக பொதுமறையான திருக்குறளில் ஒன்றான,

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்”

என்கிற திருக்குறளின்படி, “பிறப்பினால் அனைவரும் சமம். நாம் செய்யும் தொழிலில் காட்டுகிற திறமையில் மட்டுமே வேறுபாடு காண முடியும்” என்கிறார் திருவள்ளுவர். அப்படி இருக்க “பிறப்பின் அடிப்படையில் அனைவரும் சமமில்லை” என்கிற வருணாசிரம தர்மத்தை சார்ந்த சனாதனத்தோடு திருக்குறளை எப்படி ஒப்பிட முடியும்? அதுமட்டுமின்றி தமிழர்களின் வாழ்வியல் நெறியாக இருக்கும் திருக்குறளை ஒரு ஆன்மீக நூலாக, திருவள்ளுவரை ஆன்மீகவாதியாக மட்டுமே பார்ப்பது சிறிய குவளையில் கடல் நீரை அடைப்பது போன்றதாகும். இவை ஆளுநருக்கு தெரியாமல் இல்லை. அவர் திட்டமிட்டு அடையாள திருட்டை செய்ய முயலும் சனாதனிகளின் களப்பணியாளராக செயல்படுகிறார்.

வேத காலம் என்பது சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்புள்ள காலமாகும். கி.மு.1000 – கி.மு.600 ஆண்டுக்கும் இடையேயானது என்று அறியமுடிகிறது. ரிக் வேதங்களுக்கு எந்தவித மொழி வரி வடிவம் கிடையாது. பிற்காலத்தில் இங்கு வந்த கிரேக்கர்கள் அன்று பேசப்பட்ட இம்மொழிக்கு ‘சமஸ்கிருதம்’ என்று பெயரிட்டு ஒரு வரிவடிவம் கொடுத்தனர். அந்த வரி வடிவத்திலேயே இந்த வேதங்கள் எழுதப்பட்டன. ஆனால், சமஸ்கிருதத்தை தூக்கி பிடிக்க ஆதிபகவன் என்கிற சொல் ரிக்வேதத்திலிருந்து பெறப்பட்டது என எந்தவித வரலாற்று புரிதலுமின்றி உளறுகிறார் ஆளுநர்.

நாற்பது ஆண்டுகளாக திருக்குறளை படித்து சுவைத்தறிந்து 1886ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் ஜி.யு.போப். அவரது திருக்குறள் உரை தனது ஆன்மீக சித்தாந்தத்துக்கு உட்படவில்லை என்பதால் போகிறப்போக்கில் அதன்மீது ஆளுநர் அவதூறுப் பரப்புகிறார். இவர்கள் திருவாசகம் மொழிபெயர்க்கப்பட்ட போது அமைதியாக கடந்து சென்றனர். இவ்வாறு, ஆர்.எஸ்.எஸ் நபரான ஆர்.என்.ரவியும் மற்றும் பாஜகவினரும் திருவள்ளுவரை ஆன்மீகவாதியாக மட்டுமே சித்தரிக்க முயல்வதும், திருவள்ளுவரின்மீது காவிச்சாயத்தை பூச முயல்வதும், இதைப் பயன்படுத்தி இந்துமதவுணர்வை ஊட்டி கட்சியை வளர்க்கலாம்; ஓட்டு வாங்கலாம் என்கிற கனவுடன் பேசி வருகின்றனர். ஆனால் திருவள்ளுவத்தை தமிழ் மக்கள் உலகப் பொதுமறையாகவே கருதி வருகின்றனர் என்பதுதான் உண்மை. 

வள்ளலார்

தமிழ்நாட்டில் நீட் தேர்வால் மாணவர்களும், இணையவழி சூதாட்டத்தால் இளைஞர்களும் தொடர்ச்சியாக தற்கொலை செய்துக் கொண்டிருக்கின்றனர். இருப்பினும், இதனை தடை செய்யக் கோருகிற மசோதாக்களில் கையொப்பமிடாமல் பல ஆண்டுகளாக இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார் ஆளுநர். இவர்தான் தற்போது “வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றுச் சொன்ன வள்ளலாரைப் போல் இருக்க வேண்டும்” எனச் சொல்கிறார். மேலும் சாதி படிநிலைக்கொண்ட சனாதனத்தை எதிர்த்த வள்ளலாரை சனாதனதர்மத்தின் உச்சநட்சத்திரம் என பேசுகிறார். இது வரலாற்று புரட்டாகும்.

“சாதி வேற்றுமைகள் அடியோடு ஒழிய வேண்டும்,
மதங்களற்ற மனித சமுதாயம் அமைய வேண்டும்,
உயிர்கள் அனைத்தையும் சமமாகக் கருதி அவற்றின்பால் அன்பு செலுத்த வேண்டும்.
பட்டினி தொலைந்து பாரிலுள்ள அனைவரும் பசியாற உண்ண வேண்டும்”

என்றார் வள்ளலார். ஆனால் வள்ளலாரை தற்போது கையில் எடுத்து பார்ப்பனிய இந்து வலையில் சிக்கவைக்க ஆளுநர் ரவி பேசி வருகிறார்.

இந்தியா

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னர் 632 ராஜ்ஜியம்/சமஸ்தானங்களாக இருந்தது. அவற்றை ஆண்ட மகாராஜாக்களுடன் அன்றைய சுதந்திரப் போராட்டத் தலைவர்கள், கிழக்கிந்திய கம்பெனி ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தி இந்தியா என்கிற நாட்டை உருவாக்கினார்கள். உன்மையில் சொல்லப்போனால் இந்தியா பல தேசிய இனங்களின் சிறைக்கூடம். அப்படியிருக்க “சனாதன தர்மம்தான் நம் பாரதத்தை உருவாக்கியது; ரிஷிகளாலும் முனிவர்களாலும், சனாதன தர்மத்தின் ஒளியாலும் இந்நாடு உருவானது” என கற்பனைக் கதைகளைப் பேசிவருகிறார். ஆளுநர் எந்த ரிஷி ? எந்த முனிவர்? என குறிப்பிட்டு பேசியிருக்கலாமே!

ஆர்.எஸ்.எஸ்-க்கு இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் எவ்வித பங்கும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் அவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் கலந்துக் கொண்ட போராளிகளைக் காட்டிக் கொடுத்து துரோகம் இழைத்தவர்களாக இருந்தார்கள். அதனால்தான் ஆளுநர் உட்பட ஆர். எஸ். எஸ்காரர்கள் ரிஷிகள், முனிவர்கள் என உளறி வருகிறார்கள்.

திராவிட-ஆரிய சண்டையென்பது ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேல் நடந்துவருகிறது. அப்போது ஆரிய இனத்தின் தினோதிசியன் என்கிற அரசன் திராவிட அரசனான சம்பரன் அரசனை வெல்கிறான். வென்ற அரசன் பரதக்குழுவில் இருந்ததால்தான் இன்னும் இந்த ஆரியக்கும்பல் ‘பாரதம்’ மற்றும் ‘பாரத தேசம்’ எனச் சொல்லிக்கொண்டு வருகிறது. அதை தான் ஆரிய பார்ப்பனரான ஆளுநரும் ‘பாரதம் ! பாரதம்!’ என மூச்சிரைக்க பேசி வருகிறார்.

rn ravi and vhp(விஎச்பி இயக்கத்தினருடன் ஆளுநர் ஆர்என் ரவி)

அதுமட்டுமின்றி “இந்தியாவை மதச்சார்பற்ற நாடு எனச் சொல்கின்றனர். எந்த ஒரு நாடும் ஏதாவது ஒரு மதத்தைச் சார்ந்துதான் இருக்க முடியும். அதில் இந்தியா விதிவிலக்கு அல்ல!. உலகின் மற்ற நாடுகளைப்போல இந்தியாவும் ஒரு மதத்தைச் சார்ந்திருக்கிறது” என சனாதன சிந்தனையோடு பேசுகிறார். இந்நாட்டிற்கு அரசியலமைப்பு சட்டம் இருக்கிறது என்பதும் ஆளுநர் பதவி அச்சட்டத்திற்கு உட்பட்டதுதான் என்பது தெரிந்தும் அதனை மதிக்காமல் பேசி வருகிறார். மதவெறி அரசியலை நடத்தும் ஒன்றிய அரசு ஆளுநரை தனது முகவராக பயன்படுத்தி வருகிறது.

திராவிடம்

ஒவ்வொரு மண்ணுக்கும் ஒவ்வொரு வரலாறு உண்டு. தமிழர் வரலாறு நீண்ட நெடியது. பன்மைத்துவம் மிக்கது. பல அரசியல் எதிர்வுகளை காலங்காலமாக கண்டது தமிழர் பண்பாடு. அதில் மிக குறிப்பானது ஆரியர்களுக்கு எதிரான ‘திராவிடம்’ எனும் அரசியல் எதிர்வு. ஆரியர்கள் படையெடுப்புக்கு முன்பு, இந்திய துணைக்கண்டத்தில் வாழ்ந்த பூர்வக்குடி மக்களை திராவிட இன மக்கள் எனவும், அவர்களுள் பேசப்படுகிற 86 மொழிகளை உள்ளடக்கிய ஒரு மொழிக் குடும்பம் திராவிட மொழிக் குடும்பம் எனச் சொல்லப்படுகிறது. இம்மக்கள் தெற்கு, தென்-மத்தி, மத்தி, வடக்கு என நான்கு குழுக்களாகப் பிரிந்து வாழ்கின்றனர் என உலக வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த, 18 மொழிகளில் புலமைமிக்க அறிஞர் இராபர்ட் கால்டுவெல் இயற்றிய ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற பேராய்வு, திராவிடத்துக்குக் கிடைத்த நவீன முகவரிகளுள் ஒன்று. மட்டுமல்லாமல் அயோத்திதாசப் பண்டிதர் அவர்கள் திராவிடன் – தமிழன் என்ற அடையாளத்தை அரசியல் களத்தில் முன்னெடுத்ததை தொடர்ந்து, தமிழர்களின் இன, மொழி உணர்வு மேம்பட்டு, தமிழர்களின் இனமேன்மைக்காகப் பல போராட்டங்களை முன்னெடுத்தது திராவிட இயக்கம். திராவிட இயக்கம் வெகு மக்களிடத்தில் பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பியது; பெண் விடுதலையைப் முன்னெடுத்துச் சென்றது. அதன் மூலம் சமூக நீதிப் போர்க்களங்கள் பலவற்றில் வெற்றியும் கண்டது தமிழினம்.

ஈராயிரம் ஆண்டுகளாக பார்ப்பனர்களுக்கு மட்டுமே கல்வி, அரசு வேலை ஆகியவை கிடைத்து வந்தது. இந்நிலையில், பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடி மக்கள் என அனைத்து தரப்பு மக்களுக்காக ஓர் இயக்கம் உருவாகி, அது நீதிக் கட்சியாகத் தோற்றம் பெற்று, 100 ஆண்டு காலப் போராட்டத்தின் மூலமே கல்வி, மருத்துவம், பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவை நகரங்கள் தொடங்கி கிராமப்புறம் வரை சென்று சேர்ந்திருக்கிறது.

இந்த வரலாற்றையெல்லாம் வெள்ளையடித்து “பாரதத்தின் ஒற்றுமையை பலவீனப்படுத்த, வெள்ளையர் உருவாக்கிய இனவாத கோட்பாடுதான் திராவிடம்” என்கிற விசமத்தனமான வாதம் பார்பனர்களால் பல காலமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் போலி தமிழ்தேசியவாதிகள் அப்பிரச்சாரத்தில் பார்பனர்களுடன் உடன் நிற்கிறார்கள். இதே வரலாற்று திரிபுகளை ஆளுநர் ரவியும் பேசிவருகிறார். திராவிட இயக்க அரசியலால் தமிழர் அடைந்த வளர்ச்சிநிலை சமூக பொருளாதார அறிஞர்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்றாக இருக்கிறது. அதனால் அதை மறுக்கமுடியாமல் “சில பிராந்தியங்கள் மட்டும் முன்னேறுவது சரியல்ல. பிரதமர் மோடியின் ’எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மாடல்’தான் எல்லா அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய ஒன்று” என மோடியின் துதிப்பாடலை ஆளுநர் ரவி பாடுகிறார்.

“மாநில அளவிலான வளர்ச்சி நம் நாட்டுக்கு சரியானதாக இருக்காது. அதனால் ஏற்றத்தாழ்வு உண்டாகும்” என பேசுகிறார் ஆளுநர். வளர்ச்சி குன்றிய மாநிலங்களுக்கு அதன் ஆட்சியாளர்கள் தானே பொறுப்பேற்க வேண்டும்! அதை விட்டுவிட்டு வளர்ச்சியடைந்த மாநிலத்தை குறைபட்டுக்கொள்வதா? தமிழ்நாடு ஆளுநராக இருந்துக்கொண்டு தமிழ்நாட்டின் வளர்ச்சியை மனக்கவலையுடன் ஆளுனர் அணுக வேண்டிய காரணம் என்ன? வடநாடுப் போல இங்கு மத அரசியல் எடுபடவில்லை. பெரும்பான்மை மக்கள் இந்துமதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் மனதளவில் சமூகநீதி வேண்டும், சமத்துவம் வேண்டும், மான உணர்ச்சிவேண்டும், சுயமரியாதை வேண்டும் என்கிற தந்தை பெரியாரின் கொள்கையை ஏற்று நிற்பவர்களாக இருக்கின்றனர். இவையே ஆளுநரின் குமுறலுக்குக் காரணமாக இருக்கின்றன.

அறிவியல் வெறுப்பு

மதத்தை ஓர் அரசியல் முன்னெடுப்பாக கொண்டு செல்லப்படுவது மனித சமூக வளர்ச்சியை பின்னுக்குத் தள்ளுவதாகும். காலங்காலமாக புரட்சியாளர்கள் சமூக வெளியிலிருந்து ஆன்மீகத்தையும், கடவுளையும் தள்ளி வைத்தது இதன் காரணத்தால் தான். ஆன்மீகம் என்பது அவரவர் நம்பிக்கை சம்பந்தப்பட்டதாகும். அதை மற்றவர்கள் மீது திணிப்பதும் ஏற்புடையதல்ல. ஆனால் அது சமூக அரசியல் வெளியில் மனித சமூகத்தை பின்னோக்கி நகர்த்தக் கூடியதாகிறது. இதை தமிழ் சமூகத்தின் வளர்ச்சி நிலையிலேயே காணலாம். சமனம் பௌத்தம் ஓங்கியிருந்த காலம் வரை தமிழ்ச்சமூகத்தின் வளர்ச்சி என்பது பரந்துபட்ட அளவில் அனைத்து தளங்களிலும் ஏற்பட்டிருந்தது. பிறகு, பக்தி இயக்க காலத்தில் தொடங்கி, தனது அறிவை, அறிவியலை கோவிலில் கொண்டு போய் அடகு வைத்தது தமிழ் சமூகம். அதனால் ஏற்பட்ட சமூக வீழ்ச்சியை சரி செய்ய திராவிட இயக்கம் வரவேண்டியிருந்தது. ஆனால் அதற்குள் பல நூற்றாண்டுகள் கடந்து விட்டிருந்தன. ஆனால் திராவிட அரசியல் இந்து-இந்தி-இந்திய அரசியலை தமிழ்நாட்டு அரசியலில் இருந்து அந்நியப்படுத்தியே வைத்திருந்தது.

ஆனால் சமீபகாலமாக அந்நிலையினை மாற்றவேண்டுமென இந்துத்துவவாதிகள் களம் இறக்கி விடப்பட்டிருக்கிறார்கள். ஊடகவெளி, சமூக வளைதளங்கள், பள்ளிகள் கல்லூரிகள் ஆகியவை இந்துத்துவ பரப்புரை தளங்களாக மாற்றப்படுகின்றன. வளரும் தலைமுறையை குறிவைத்து இச்செயல்கள் முன்னகர்த்தப்படுகின்றது. இந்த வகையில், தமிழக ஆளுநர் செல்லும் இடமெல்லாம் மாணவர்களிடையே ஆன்மீகம் பேசி, அறிவியலை மழுங்கடிப்பது போன்ற முயற்சியில் ஈடுபடுகிறார். அதாவது “நமது தேசிய வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்துவது மேற்கத்திய சித்தாந்தங்கள். அவை டார்வீன் மற்றும் காரல் மார்க்ஸ் கோட்பாடு” எனவும், “இந்தியா ராணுவம் மற்றும் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைவதைப்போல ஆன்மிகத்திலும் வளர்வது முக்கியம். ஆன்மிகத்தில் வளர சனாதன தர்மம் வழிமுறையாக இருக்கும். இந்தியாவின் தலைமைத்துவம் ஆன்மிகத்தின் மீது நம்பிக்கை கொண்டதாக இருக்க வேண்டும்” என கல்வியில் ஆன்மீக திணிப்பை- அறிவியல் ஒதுக்கலை வலியுறுத்துகிறார்.

பூமியில் வாழும் உயிரினங்களின் தோற்றம், தேவை, அதன் மூலம் தூண்டப் பெற்ற பரிணாம வளர்ச்சி பற்றிய டார்வினின் கோட்பாடுகள் பரந்த தளங்களைக் கொண்டது. இன்றைய அறிவியல் வளர்ச்சியில் மிக முக்கிய பங்கினை டார்வினின் கோட்பாடுகள் கொண்டிருக்கின்றன. கடவுள் மனிதனை படைத்தான் என்ற பொது உளவியலுக்கு சம்மட்டி அடியாக டார்வினின் கோட்பாடு இருக்கிறது; ‘மாற்றம்’ என்கிற கருத்தாக்கத்தை ஏற்காத ‘சனாதனிகள்’ டார்வினை புறந்தள்ளுவது இயற்கையே. அந்தவகையில்தான் டார்வினின் கோட்பாடுகளைப் பற்றிய ஆளுனநரின் பேச்சினைப் புரிந்துக் கொள்ளமுடியும்.

அடுத்து சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியல் பற்றிய காரல் மார்க்சின் கோட்பாடுகள், சிந்தனைகள் மானுட அறிவியலில், சமூக பொருளாதார தளத்தில் மிகப்பெரிய புரட்சியை கொண்டு வந்தவை. மனித சமூகம் முதலாளியத்தால் ஏற்பட்ட வீழ்ச்சிக்கான காரணங்களையும் அதிலிருந்து மனித சமூகம் மீள்வதற்கான வழிமுறைகளை அறிவியல்பூர்வமாக முன்வைத்தவர் காரல் மார்க்ஸ். மனித சமூகங்கள் வர்க்க மோதலின் மூலம் உருவாகின்றன என உலகிற்கே தெளிவுப்படுத்தியவர். மேலும் அநீதி, ஏற்றத்தாழ்வு மற்றும் சுரண்டலை முடிவுக்கு கொண்டுவர வழிகண்டவர். அவரைத்தான் ஆளுநர் “இந்தியர்களை பற்றி தவறாக எழுதி வைத்திருப்பவர் கார்ல் மார்க்ஸ். நமது பாரதம் உலகின் வல்லராசாகும் வாய்ப்பிருந்தது. ஆனால் ஆங்கிலேயருக்கு உதவிய கார்ல் மார்க்ஸ் இந்திய சமூக கட்டமைப்பையே அழிக்க வேண்டும் என அதை இல்லாமல் செய்துவிட்டார். இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையில் மார்க்சியக் கோட்பாடு நிரந்தரப் பகைமைகளை உருவாக்கிவிடுகிறது. ‘மார்க்சிய மாடல்’, சமுதாயத்தின் வெவ்வேறு பிரிவுகளுக்கிடையில் பாகுபாட்டை தோற்றுவிக்கிறது. சமூகத்தில் நிரந்தர மோதலைத் தூண்டிவிடுகிறது” என்கிறார் ஆளுநர். மேலும் காரல் மார்க்ஸின் தத்துவம் செத்துப்போய்விட்டது, அது தோன்றிய நாட்டிலேயே அதைக் கைவிட்டு விட்டார்கள் என்கிறார்.

சாதியமைப்பை- பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகளை வலியுறுத்தும் சனாதன கோட்பாட்டை கடைப்பிடிக்கும் ஆளுநருக்கு வர்க்க பேதமில்லாத, சாதி, மத வேற்றுமைகள் இல்லாத, நிகரற்ற மனிதநேய சமூகம் அமைக்க முடியும் என்ற அறிவியல் உண்மையை உலகத்திற்கு அறிவித்த மேதை காரல் மார்க்ஸ் எதிரியாகத்தான் தெரிய முடியும்.

நீட் தேர்வு

சமீபத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை குழுமம் நீட் தேர்வு பற்றிய ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. நீட் தேர்வில் தேசிய அளவில் முதல் 50 தரவரிசைகளில் இடம்பெற்ற மாணவர்கள் ஆய்வில் எடுத்துக் கொள்ளப்பட்டனர். அவ்வாய்வின் முடிவுகள் நீட் தேர்வு உண்டாக்கியிருக்கிற சமநிலையற்றத் தன்மையை விளக்கக் கூடியதாக இருக்கிறது. அதன்படி.

  • 50 மாணவர்களில் பெரும்பான்மையானவர்கள் பயிற்சி நிறுவனத்தை நம்பி தேர்வை எதிர்நோக்கியவர்கள்.
  • 38 மாணவர்கள் பயிற்சி நிறுவனங்களில் பயின்று நீட் தேர்வு எழுதியவர்கள்.
  • 29 மாணவர்கள் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்தவர்கள்.
  • அந்த 29 மாணவர்களுமே பொதுப்பிரிவை சேர்ந்த உயர்சாதி பிரிவினர்.
  • இவர்கள் அனைவரும் நகர் புறத்தில் வளர்ந்த மற்றும் பொருளாதார அடிப்படையில் வசதி படைத்தவர்கள்.

நீட் தேர்வு மையங்களில் நடத்தப்பட்ட மேற்சொன்ன ஆய்வு அறிக்கையில் கிடைத்த முடிவுகளுக்கு அப்படியே நேர் எதிரானது தமிழ்நாடு அரசு, ஏ கே ராஜன் அவர்கள் தலைமையில் அமைத்த குழுவின் அறிக்கை. இக்குழு தமிழ்நாட்டின் விளிம்பு நிலையில் இருக்கிற, அரசு பள்ளிகளில் பயில்கிற மாணவர்களின் நீட் தேர்விற்கு முன் பின்பான மறுத்துவ படிப்பிற்கான சேர்க்கைப் பற்றிய முடிவுகளை தருகிறது. நீட் தேர்வுக்கு பிறகு அரசு பள்ளி மாணவர்கள், குறிப்பாக தமிழ்வழி கல்வி பயின்ற மாணவர்களின் மறுத்துவப் படிப்பு சேர்க்கை எண்ணிக்கை பல மடங்கு குறைந்துள்ளதை இவ்வாய்வறிக்கை வெட்ட வெளிச்சமாக்குகிறது.pre neet and post neetஇந்நிலையில் “நீட் தேர்வுக்கு முன்பிருந்த நிலையைவிட நீட் வந்த பிறகு அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவப்படிப்பு சேர்க்கை அதிகரித்திருக்கிறது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் தொடர்ச்சியாக இயற்றப்படுகிற நீட் விலக்கு மசோதா கிராமப்புற மாணவர்களின் நலனுக்கு எதிரானது. தமிழக சட்டப்பேரவை இந்த மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.” என்கிறார் ஆளுநர்.

இதுவரை நீட் தேர்வினால் தமிழ்நாட்டைச் சேர்ந்த 23க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலைச் செய்துள்ளனர். நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதில் இருந்து தமிழ்நாட்டு மககள் அதனை எதிர்த்துப் போராடி வருகின்றனர். இருப்பினும் ஆளுநர் நீட் ஆதரவு கருத்துக்களை பேசிவருகிறார். இது பொதுமக்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பை உருவாக்கியிருக்கிறது. நீட் தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த மாணவர்களை வைத்து நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் நீட் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர் ஒருவரின் தந்தை அம்மாசியப்பன் “தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மாணவர்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என தொடர்ந்து கேட்டு வருகிறோம், நீட் விலக்கு எப்போது கொடுப்பீர்கள் ”என்று ஆளுநரை நோக்கி கேள்வியும் எழுப்பினார். எனினும் ஒன்றிய அரசின் இசைவுக்கு ஏற்ப நீட் அவசியம் தேவை என விதண்டாவாதம் செய்கிறார் ஆளுநர்.

தற்போது 2023 ஆம் ஆண்டிலிருந்து முதுநிலை (PG) மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வில் பூஜ்ஜியம் கட் ஆஃப் மதிப்பெண் பெற்றவர்களும் அப்படிப்பிற்குத் தகுதியானவர்கள் என்ற அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது. இதன்மூலம் நீட் தேர்வினால் தகுதியான மருத்துவர்களை உருவாக்கமுடியும் என்கிற போலி பிம்பம் உடைக்கப்பட்டது. இந்நிலையில் ஆய்வறிக்கை முடிவு, வெகுமக்கள் கருத்து, மாணவர்கள் நலன் ஆகிய எந்த ஒரு கருதுகோளையும் ஏற்காமல் ஒன்றிய அரசு கொண்டு வந்த ஒரே காரணத்தால் ஆளுநர் நீட் ஆதரவு பிரச்சாரத்தை செய்து வருகிறார்.

இசுலாமிய வெறுப்பு

பாஜக ஆளும் மாநிலங்களில் கட்டுக்கடங்காத சாதியக்கொடுமைகள், பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள், மதக்கலவரங்கள், மனித உரிமை மீறல்கள் நடந்து வருகின்றன. காஷ்மீர், குஜராத் மற்றும் மணிப்பூரில் தொடர்ந்து இஸ்லாமியர்கள், தலித்துகள், வடகிழக்குப் பகுதிமக்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இந்தியா முழுவதும் இதுவே நிலை. ஆனால் அப்போதெல்லாம் அமைதி காத்துவிட்டு, கோவை பகுதியை பயங்கரவாதத்துக்குப் பெயர் போன இடம் போல சித்தரிப்பதும், சிறுபான்மையின மக்களின் மீது அவதூறு பரப்பி பொது மக்களிடையே பதற்றத்தை விதைப்பதுமாகிய செயல்களை செய்கிறார் ஆளுநர். ஆளுநர் பேசுகின்ற பெரும்பான்மை மேடைகளில் சிறுபான்மையின மக்களை எதிரியாக கட்டமைக்க முயல்கிறார். இசுலாமிய சிறைவாசிகளுக்கு விடுதலை வேண்டி அனுப்பிய மசோதாவிலும் கையொப்பமிட மறுப்பதும் குறிப்பிடத்தக்கது. அரசியல் சாசனத்திற்கு எதிராகவும், ஒன்றிய பாஜக அரசின் கொள்கைப் பிரச்சாரராகவும் ஆளுநர் செயல்பட்டு வருகிறார்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அடங்கிய சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களில் கையெழுத்து இட மறுத்து கிடப்பில் போட்டதோடு இல்லாமல் “கிடப்பில் போடப்பட்ட மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம். சட்டமசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றினால் மட்டும் சட்டமாகாது” என மக்கள் விரோதமாக பேசுகிறார் .பொதுப்பாடத்திட்டம் மற்றும் துணைவேந்தர் நியமனம் உட்பட அனைத்திலும் தன்னிச்சையாக முடிவு எடுப்பது போன்ற சட்டத்திற்கு புறம்பாக நடந்து வருகிறார். சிதம்பரம் கோயிலில் குழந்தைத் திருமணங்கள் செய்து வைத்த தீட்சிதர்களுக்கு ஆதரவாக ஆளுநர் செயல்பட்டது அரசியலமைப்பு சட்டத்தை மீறிய செயலாகும். இவ்விவகாரத்தில் ஆளுநர் நானும் குழந்தை திருமணம் செய்துள்ளேன் என கூறி அதற்கு நியாயம் கற்பிக்கும் வேலையில் இறங்குகிறார்.

இந்துத்துவத்தை வளர்த்தெடுக்கும் ஆர்எஸ்எஸ்-பாஜகவின் ஊதுகுழலாக ஆளுநர் ஆர்என் ரவி நடந்து கொள்வதைப் போலத்தான் இன்று ஒவ்வொரு ஆளுநரும் நடந்துக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில். ஏனெனில் ஆளுநர் பதவி என்பது ஒன்றிய அரசின் எதேச்சதிகாரத்தினைக் நேரடியாகக் காட்ட வாய்ப்பாக அமைகிறது. காலனிய ஆட்சியின் நீட்சியாக இன்றும் தொடரும் ஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கையாக என்றும் இருந்து வருகிறது. அந்தவகையில் ஆளுநர் ஆர்என் ரவி, தமிழ்நாட்டு மக்கள் இறையாண்மைக்கும், அரசியல் சாசனத்துக்கும் எதிராக செயல்படுவதும், மக்கள் உரிமை சார்ந்த போராட்டங்களை கொச்சைப்படுத்தி பேசி வருவதும் மிகவும் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டு மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு, இதர செலவினங்களென கூறி பல கோடி ரூபாய் செலவழித்து 156 ஏக்கரில் சொகுசாக வாழ்ந்துகொண்டு, மக்களுக்கு எதிரான திட்டங்களை பிரச்சாரம் செய்வதும் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மையளிக்கும் மசோதாக்களை கிடப்பில் போட்டு வைப்பதும் ஆகிய ஆளுநரின் நடவடிக்கையை நிறுத்த வேண்டுமெனில் ஆளுநர் என்ற பதவியை ஒழிப்பதே நிரந்தரத் தீர்வாக அமையும்.

- மே பதினேழு இயக்கம்

Pin It