கோபி கழக மாநாட்டில் அப்துல் சமது ஆற்றிய உரை

எச். ராஜா, இராம. கோபாலன், சுப்பிரமணிய சாமி பார்ப்பனர்கள் தமிழகத்தில் மதக் கலவரத்தை உருவாக்க உருவாக்கிய குறுந் தகட்டை தமிழக அரசு தடை செய்திருக்கிறது என்ற தகவலை அப்துல் சமது வெளியிட்டார்.

கோபியில் பிப்.28 அன்று திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாட்டில் மனித நேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் சமது ஆற்றிய உரை: (சென்ற இதழ் தொடர்ச்சி)

மராட்டியத்தில் கோவிந்த் பன்சாரே என்கிற பொதுவுடைமை இயக்கத் தலைவர், எழுத்தாளர் இருந்தார்.  அவரை நடைப்பயிற்சியின் போது சுட்டுக் கொன்றது பார்ப்பன காவிக்கும்பல். எதற்காக இந்த படுகொலை நடந்தது என நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

‘யார்  இந்த சிவாஜி?’ என்ற ஒரு புத்தகத்தை கோவிந்த் பன்சாரே எழுதினார். சிவாஜி என்று சொன்னால் முஸ்லீம்களுக்கு எதிரான ஒரு மன்னர். சத்ரபதி சிவாஜி, முஸ்லீம்களுக்கு எதிராகக் களமாடியவர்; இந்துக்களின் தலைவர்; அவுரங்கசீப் போன்ற முஸ்லீம் மன்னர்களுக்கு எதிராகப் போரிட்டவர் எனக் கூறி, அரபிக்கடலில் பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாயில் சிவாஜிக்கு சிலை எழுப்பப் போகிறோம் என்று மகாராஷ்டிர அரசு அறிவித்திருக்கிறது.

சத்ரபதி சிவாஜியை பாசிச காவிக்கும்பல் இந்துக்களின் தலைவனாக முன்னிறுத்துகிறது.  ஆனால், சிவாஜியைப் பற்றி நமக்கு எல்லாம் அண்ணா அவர்கள் ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்’ நாடகம் மூலம் பாலபாடமே நடத்திவிட்டார்.

சிவாஜி இந்துக்களின் தலைவன் அல்ல என்று கோவிந்த பன்சாரே புத்தகம் எழுதினார்.

சிவாஜி என்பவர் காவிகளின் தலைவன் அல்ல; காவிய தலைவன். சிவாஜியின் படையில் மெய்க் காப்பாளராக இசுலாமியர்கள் இருந்தனர்; படைத் தலைவர்களாக, நம்பிக்கை மிக்க அரசியல் தூதர் களாக இருந்தனர் என்ற பட்டியலை கோவிந்த் பன்சாரே சொல்கிறார்.

அதுபோல அவுரங்கசீப் படைகளில் தளபதி களாக இந்துக்கள் இருந்து இருக்கிறார்கள்.  இங்கே  இந்துக்களும், அங்கே இசுலாமியர்களும் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்து இருக்கிறார்கள்.

சிவாஜிக்கும், அவுரங்கசீப்பிற்கும் நடந்த போர் என்பது மதத்திற்கான போர் அல்ல; அது மண்ணிற் கான போர்.  இந்த மண்ணை யார் ஆக்கிரமிப்பு செய்வது என மண்ணிற்கான நடந்த போரே தவிர மதத்திற்கான போரே அல்ல என்பதை பல்வேறு ஆதாரங்களோடு அந்த புத்தகத்தில் கோவிந்த் பன்சாரே எழுதினார்.  அவரின் புத்தகம் 5 லட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்தன.

இவர்களைப் பற்றி நாடு முழுவதும் தெரிந்தது; மக்கள் விழிப்புணர்வு பெறுகிறார்கள் என்கிற ஒரே காரணத்தால் கோவிந்த் பன்சாரே அவர்களைச் சுட்டுக் கொன்றது பார்ப்பன இந்து மதவெறிக் கும்பல்.  கோவிந்த் பன்சாரேயைக் கொன்றவர்கள் யாரையும் இதுவரை கைது செய்யப்படவில்லை. அதுபோல் மூடநம்பிக்கைக்கு எதிராக போராடியதற்காக நரேந்திர தபோல்கரைச் சுட்டு கொன்றதும் இந்து காவிக்கும்பல்தான்.

சாகித்ய அகாடமி விருதுபெற்ற கர்நாடகத்தைச் சார்ந்த எழுத்தாளர் கல்புர்க்கி அவர்களைச் சுட்டுக் கொன்றனர்.  இக்கொலைகளில் கொலையாளிகள் எவருமே கைது செய்யப்படவில்லை. எதை நோக்கி செல்கிறது இந்தநாடு?

அதுபோல் அநியாயமாக பார்ப்பன மதவெறியர் களால் தற்கொலை செய்துகொள்ள செய்யப்பட்ட ரோகித் வெமுலாவின் மரணம், இந்நாட்டில் மிகப் பெரிய அதிர்வினை உருவாக்கி இருக்கிறது.  மத்திய இணை அமைச்சர் ஸ்மிருதி இரானி பாராளு மன்றத்தில் மிகப்பெரிய பொய்யைக் கூறியுள்ளார்.  பிணத்தை வைத்து அரசியல் நடத்துகிறார்கள் என்றும் அவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்ல அனுமதிக்கவில்லை என்றும் சொல்லியுள்ளார்.

ரோகித் வெமுலா சொன்ன செய்தி என்ன?  எங்களிடமிருந்து அம்பேத்கரை பிரிக்க வேண்டு மானால் ஒரு பத்துகிராம் விசம், அல்லது தூக்குக் கயிறைக் கொடுத்து அனுப்புங்கள் என தனது  கடிதம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். அந்த அளவிற்கு பல்கலைக் கழகத்தின் சூழல் இருக்கிறது.  என்றால் அதற்கு யார் காரணம்?

பார்ப்பனீயம் தான் இந்த நாட்டில் நடைபெறும்.  அத்தனை கொடிய செயல்களுக்கும் காரணம் என்பதை நாம்தான் மக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

இசுலாமியர்களை இந்த நாட்டில் பயங்கரவாதிகள் என காட்டுவதன் நோக்கம் பார்ப்பன வர்ணாசிரம சித்தாந்தத்திற்கு நேர் எதிர் சித்தாந்தத்தை இசுலாம் சொல்கிறது.

பார்ப்பனீயம் சொல்வது ஒருவன் படைக்கப்படும் போதே நான்கு வகை ஜாதி அடுக்குகளாக படைக்கப் படுகிறான்.  இதை கடவுள்தான் செய்கிறார்.  கீதையில் சதுர்வர்ணம் மயா சிருஷ்டம் என பகவான் கிருஷ்ணன் கீதையில் கூறுகிறார்.  ஆனால் இசுலாம், ‘மனிதன் அனைவரும் ஒரே சரிசமம்’ எனச் சொல்கிறது.

சமத்துவத்தை இசுலாம் போதிக்கின்ற காரணத் தினால் தான், ‘கடவுளை மற’ என்று சொன்ன தந்தை பெரியார் கூட ஒரு சமயம், ‘இன இழிவு ஒழிய இசுலாமே நன்மருந்து’ என்று சொன்னார்.

அதனால்தான் இசுலாமியத்தையும், பெரியாரை யும் எதிர்க்கிறார்கள். அம்பேத்கரைக்கூட உள் வாங்கிய பார்ப்பனிய காவிக் கும்பல்காரர்கள் பெரியாரை உள்வாங்க முடியவில்லை. ஏனென்றால் பெரியார் ஒரு பெரும் நெருப்பு.

புத்தரைப் பார்ப்பனீயம் உள்வாங்கி அவரை விஷ்ணுவின் 11ஆவது அவதாரம் என்று சொல்லி புத்த மதத்தை அழித்தது. அம்பேத்கர் சொன்னார், ‘நான் இந்துவாக பிறந்தது எனது தவறு இல்லை;  ஆனால் நான் இறக்கும்போது கண்டிப்பாக இந்துவாக இறக்கமாட்டேன்’ என்று கூறினார். அதுபோல் அம்பேத்கர் அவர்களை ‘இந்துத்துவாதி’ என உள் வாங்க முயற்சிக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் பார்ப்பனீயத்தால் உள்வாங்க முடியாத, உள்வாங்க நினைக்கக்கூட முடியாத ஒரே தலைவர் தந்தை பெரியார் தான்.

டெல்லி ஜவகர்லால் பல்கலைக்கழகத்தில் அப்சல்குருவின் நினைவு தினத்தை முன்னிட்டு ஒரு கருத்தரங்கத்தை நடத்த மாணவர்கள் முயற்சி செய் கிறார்கள். அதற்கு பல தடைகள் போடுகிறது நிர் வாகம். கருத்தரங்கம் அன்று மாணவர்கள் பேரணி யாக வரும்போது ஏ.பி.வி.பி அமைப்பைச் சார்ந்த பார்ப்பன மாணவர்கள் உள்ளே ஊடுருவி ‘பாகிஸ் தான் ஜிந்தாபாத்’ என கோசம் போட்டுள்ளனர். அதற்கு மாணவர்கள் அமைப்பின் தலைவர் கன்யாகுமார்தான் கோசம் போட்டார் எனக்கூறி அவரை தேச விரோத வழக்கில் கைது செய்கிறார்கள்.

அப்சல் குரு மீது குற்றச்சாட்டு நிரூபணம் செய்யப் படவில்லை.  ‘மக்களின் கூட்டு மனசாட்சிக்காக தூக்கு’ என்று சொன்னது நீதிமன்றம். பாராளுமன்றம் தாக்குதலில் நேரடியாக அப்சல்குரு ஈடுபட்டார் என ஒரு சாட்சி கூட இல்லை. எந்த தீவிரவாத அமைப் பிலும் அப்சல்குரு உறுப்பினராக இருந்ததில்லை என்றும் கூறியது நீதிமன்றம். இந்நிலையில் உலகிலேயே ஒருவரை நிரபராதி என்று சொல்லி விட்டு அவரை தூக்கிலிட்ட ஒரே நாடு இந்தியாதான்.

அப்சல் குருவிற்கு எதிராக வழங்கப்பட்ட தூக்கு அநீதி. அதை விளக்கத்தான் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.  அந்த போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிச இயக்க தலைவரான தோழர் ராஜாவின் மகள் அபராஜிதாவை சுட்டுக்கொல்ல வேண்டும் என இங்குள்ள கேவலமான பிறவியான எச்.ராஜா போன்றோர் ஊளையிடுகிறார்கள். இத்தகைய மோசமான வெறித்தனங்கள் மோடி ஆட்சியில் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

தமிழகத்தில் சமீபத்தில் எச்.ராஜா, இராம கோபாலன், சுப்ரமணியசாமி ஆகிய மூவரும் தமிழகத்தை சூழும் ஜிகாத் எனும் ஒரு சிடியை வெளியிட்டார்கள் 6 மணி நேரத்திற்கு மேல் ஓடக் கூடியதாகும். இராமநாதபுரம் கடற்கரைப் பகுதிகளில் இசுலாமிய கிராமங்கள் அதிகமாகிவிட்டன. இதன் மூலம் கள்ளக்கடத்தல், ஆயுத சேகரிப்பு நடக்கிறது என நச்சுக் கருத்துகளை அந்த சிடி சொல்கிறது.

அதில் இந்துக்கள் இங்கு வாழ்வதையும், கோவில்களில் வழிபாடு நடத்துவதையும் முஸ்லீம்கள் தடுக்கிறார்கள் என சொல்கிறது. இப்படிப்பட்ட பச்சை பொய்யைப் பரப்பி இங்கு கலவரத்தை தூண்ட பார்ப்பன இந்து மதவாதக் கும்பல் முயற்சிக்கிறது.  நம் தமிழகத்தில் இவர்கள் கனவு ஒருபோதும் பலிக்காது.  ஏனென்றால் இது பெரியாரின் மண்.  அவரால் பக்குவ படுத்தப்பட்ட மண்.  காவிகள் இதை புரிந்துக் கொள்ளவேண்டும்.

இதை சமூக வளைதளம் மூலம் பரப்புகிறார்கள் இதைத் தடுக்க மனிதநேய மக்கள் கட்சி உள்பட ஜனநாயக சக்திகள் போராடியதன் விளைவாக தமிழக அரசு அதை யூடியூப்பில் தடைசெய்து ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த ஒருவரை கைதும் செய்து இருக்கிறது.  அதற்காக நாங்கள் தமிழக அரசைப் பாராட்டுகிறோம்.

அமைதியாக உள்ள தமிழகத்தில் பார்ப்பன இந்து மதவாதக் கும்பல் திட்டமிட்டு கலவரத்தை தூண்டு வதற்கு முயற்சிக்கிறது.

இதுபோன்ற ஒரு சிடி தான் மத்தியபிரதேசத்தில். 2 சீட் வெற்றிபெற முடியாத பாஜக இன்றைக்கு மோடி ஆட்சிக்கு வரவே ஒரு சிடிதான் காரணம்.  ஜாட் இனத்தை சேர்ந்த ஒரு பெண்ணை ஒரு முஸ்லீம் பாலியல் பலாத்காரம் செய்து கும்பலாக கொலை செய்ததாக சிடி தயாரிக்கப்பட்டது.  அதை விநியோகித்து முஸ்லீம்களுக்கு எதிராக கலவரம் தூண்டி ஆட்சி அமைத்தனர்.

அக்கலவரத்தில் 120 முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர். ஒன்றரை லட்சம் மக்கள் அகதியானார்கள்.  முசாபர் நகர் கலவரம் அதில் இறந்த உடல்களை பிணக்கூராய்வு செய்த மருத்துவர் சொன்னது நான் 20 ஆண்டுகள் இந்த துறையில் இருக்கிறேன்; இதுபோல் கொல்லப்பட்ட இரு பகுதிகளாக வெட்டப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் இருபுறமும் வெட்டி வெளியே எடுத்த சிசுவை கூட கொலை செய்யப்பட்டதை நான் இதுவரை கண்டதில்லை என கூறுகிறார்.

இத்தகைய மிகப் பெரிய கொடூரத்தைப் பார்ப்பனியம் தான் நடத்தியது.  சிறுபான்மை மக்களுக்கு எதிராக தாக்குதலில் பார்ப்பனர்கள் நேரிடையாக சண்டைக்கு வந்தது கிடையாது.  அப்பாவிகளான பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் மனதில் கொடிய மதவெறியைப் புகுத்தி அவர்களை மூளைச்சலவை செய்து சிறுபான்மை மக்களுக்கு எதிராக கொம்புசீவி விடப்படுகின்றனர்.  இந்த நாட்டில் நடந்த எந்த கலவரத்திலும், எந்த குண்டு வெடிப்பிலும் ஒரு பார்ப்பனர் கூட இறந்தது கிடையாது இதுதான் பார்ப்பனர் சூழ்ச்சி.

காந்தியைக் கொன்றாலும்கூட இந்த நாட்டில் பார்ப்பனீயம் பாதுகாப்பாகவே இருக்கிறது.  இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்ட போது இந்த நாட்டில் 3 ஆயிரம் அப்பாவி சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.  ராஜிவ்காந்தி கொலை செய்யப்பட்டதில் ஒன்றரை லட்சம் அப்பாவி ஈழத்தமிழர்கள் பெண்கள், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் என ஈவு இரக்கம் இல்லாமல் படுகொலை செய்யப்பட்டனர்.

ஆனால் இந்த தேசத்திற்கு விடுதலை பெற்று தருவதற்காகவும், இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காகவும் பாடுபட்ட காந்தி யடிகளை கொலை செய்தது நாதுராம்கோட்சே தலைமையிலான பார்ப்பனர்கள். அதுவும் மராட் டியத்தில் உள்ள சித்பவன் பார்ப்பனர்கள்.  அதற்கு எதிர்வினையாக ஒரு பார்ப்பனர்கூட இந்த நாட்டில் இரத்தம் சிந்தவில்லை. மாறாக ஒரு கும்பலால் கொலையாளிகள் தேசபக்தர்களாகப் போற்றப்படு கின்றனர்.  இது தான் பார்ப்பனீயம் இதைத்தான் நாம் ஒழிக்கவேண்டும் என்று கூறுகிறோம்.

சூத்திரன் கொலை செய்தால் அவனுக்கு கொடூரமாக தண்டனை வழங்கவேண்டும்.  ஆனால், பார்ப்பனர்கள் கொலை செய்தால் அவன் தலைமுடியை மட்டும் சிரைத்தால் போதும். இதைச் சொல்வது மனுநீதி, இதை மீண்டும் கொண்டு வரத்தான் மோடி அரசு துடிக்கிறது.  இதுதான் பார்ப்பனர்களின் ஒரு குலத்திற்கு ஒருநீதி எனும் அநீதியாகும்.

 இந்த மாநாடு நடைபெறும் இந்த நாள் மிகவும் முக்கியமான நாளாகும்.  இதே பிப்ரவரி 27, 28, 29 நாட்களில் தான் குஜராத்தில் மிகக் கொடூரமான படுகொலைகள் நடந்தன.  குஜராத் முதல்வராக இருந்த மோடி அரசு உயர்அதிகாரிகளை அழைத்து ஒரு கூட்டத்தைப் போட்டு என்ன சொன்னார் தெரியுமா? இந்துக்கள் அவர்களின் கோபத்தை வெளிபடுத்த அனுமதியுங்கள் என்று சொன்னார்.  மூன்று நாட்களுக்கு எதையும் தடுக்காதீர்கள் என மோடி உத்தரவு போட்டார். 

அவர் மாநிலத்தில் குடிமக்களான முஸ்லீம்கள் 3 ஆயிரம் பேரை படு கொலை செய்யப்பட்ட நாள் தான் இது.  அப்போது வாஜ்பாய் கூட “மோடி ராஜதர்மத்தை மீறி விட்டார்” எனக் கூறினார். அந்த படுகொலைகளை நிகழ்த்தி யதைத் தவிர வேறு எந்த தகுதியும் இல்லாத மோடியை முதல்வர் பதவியிலிருந்து இன்றைக்கு நாட்டின் பிரதமராக உட்காரவைத்தது பார்ப்பனீயம்.  இன்றைக்கு உச்சபட்ச அதிகாரத்தோடு பார்ப்பனீயம் மீண்டும் வீறுகொண்டு எழுகிறது.  இதை நாம் பெரியாரின் கைத்தடியைக் கொண்டு மட்டுமே அடித்து வீழ்த்த முடியும்.

(தொடரும்)

Pin It