கன்னியாகுமரி ஐயன் திருவள்ளுவர் சிலையை ஆர்.எஸ்.எஸ். இயக்கமான விவேகானந்தர் கேந்திராவுக்குத் தாரைவார்த்து விடுகிற வகையில் விவேகானந்தர் மண்டபப் பாறைக்கும் திருவள்ளுவர் சிலையுள்ள பாறைக்கும் இடையிலான பாலம் அமைத்துவிடக்கூடாது!

திருக்குறள் இயக்கத்தினர், தமிழிய உணர்வாளர்கள், திருக்குறள் நெறியாளர்களின் கூட்டறிக்கை

மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்க்குத் திருக்குறள் நெறியர்கள் அனைவரும் இணைந்து மிக வருத்தத்தோடு இந்த அறிக்கையை அளிக்கிறோம்.

கன்னியாகுமரியில் மிகக் கடுமையான எதிர்ப்புகளைக் கடந்து கலைஞர் அவர்களால் ஐயன் திருவள்ளுவருக்குச் சிலை அமைக்கப்பட்டதைத் தாங்கள் அறிவீர்கள். அது அமைக்கப்பட்ட சில ஆண்டுகளுக்குப் பிறகு அச்சிலை சரிவர பேணப்படாத நிலையிலும் அந்தச் சிலைக்குப் படகுகள் போய் வர மறுக்கப்பட்ட நிலையிலும் தொடர்ந்து திருவள்ளுவர் சிலை புறக்கணிக்கப்பட்டே வந்திருக்கிறது.

அப்படியான புறக்கணிப்பை விவேகானந்தர் மண்டபத்தை நிறுவிய விவேகானந்தர் கேந்திரமும் அதற்குப் பின்புலமாக இருந்து செயல்பட்டு வருகிற ஆர்.எஸ்.எஸ். நிறுவனமும் திட்டமிட்டுச் செய்து வருவதைத் தாங்கள் அறிந்திருக்கலாம். அங்குச் செயல்படுகிற பூம்புகார் படகு போக்குவரத்துக் கழகத்தின் படகுகளைத் திருவள்ளுவர் சிலைக்கு அனுப்ப விடாது சண்டித்தனம் செய்கிற வகையிலேயே விவேகானந்தர் கேந்திரம் மறைமுகமாகச் செயல்பட்டு வருவதை அந்த மாவட்டத்தில் உள்ள திருக்குறள் செயற்பாட்டாளர்கள் அறிவார்கள்.

இந்த நிலையில், ஐயன் திருவள்ளுவர் சிலையினை மதிக்கிற வகையில் கன்னியாகுமரி கடற்கரையில் இருந்து நேரடியாகத் திருவள்ளுவர் சிலையுள்ள பாறைக்கு ஒரு பாலம் அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து திருக்குறள் இயக்கத்தினர் குரலெழுப்பி வருகிறோம்.

ஆனால், தமிழ்நாடு அரசு அதைக் கவனத்தில் கொள்ளாத வகையில் விவேகானந்தர் மண்டபம் உள்ள பாறைக்கும் திருவள்ளுவர் சிலை உள்ள பாறைக்கும் இடையே பாலத்தைக் கட்டுகிற திட்டத்தைத் தொடங்கி அடிக்கல் நாட்ட இருப்பதாக வந்திருக்கிற செய்தி தமிழ் நெஞ்சத்தினரிடையே ஈட்டியைப் பாய்ச்சுகிற கொடுஞ்செயலாகவே உணர முடிகிறது. விவேகானந்தர் பாறையைப் பார்த்துவிட்டுத்தான் திருவள்ளுவரைப் பார்க்க வேண்டுமான கொடுஞ்சூழலை தமிழ்நாடு அரசு உருவாக்கி தரக்கூடாது என வலியுறுத்துகிறோம்.

விவேகானந்தருக்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன வகைத் தொடர்பும் இல்லை என்பதோடு வங்காளத்திலோ வேறு எந்த வடநாடுகளிலோ பொது இடத்தில் திருவள்ளுவருக்கு மண்டபம் எழுப்பி விட முடியாத நிலையில், விவேகானந்தர் மண்டபத்திற்கு முதன்மை தந்து ஐயன் திருவள்ளுவர் சிலையை ஒதுக்கி வைப்பது ஏற்றுக்கொள்ள இயலாதது.

தமிழ்நாட்டு முதலமைச்சர் மெத்தனமாக இருந்து விடக்கூடாது என்கிற அக்கறையோடேயே திருக்குறள் ஆர்வலர்கள் இக்கருத்தை மிகவும் வலியுறுத்துகிறோம்!

எனவே, கன்னியாகுமரி ஐயன் திருவள்ளுவர் சிலைக் குக் கடற்கரையிலிருந்து தனியே பாலம் அமைத்திட வேண்டும் என்றும், அமைச்சர் எ.வ.வேலு விவேகானந்தர் மண்டபப் பாறைக்கும் திருவள்ளுவர் சிலையுள்ள பாறைக்கும் இடை யிலான பாலம் அமைக்க அடிக்கல் நாட்டுவதை நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

திருவள்ளுவரை ஆர்.எஸ்.எஸ் காவு வாங்கிவிடக் கூடாது எனும் அக்கறையிலேயே இதைத் தெரிவிக்கிறோம்.

160 அமைப்பினர் அறிக்கையில் ஒப்பமிட்டு, முதலமைச்சருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Pin It