kuthoosi gurusamy 3007 1/2 லட்சம் ரூபாய் செலவில் சென்னையில் கட்டப்பட்டிருக்கும் தமிழிசை மண்டபம் திறக்கப்பட்டு விட்டது. மந்திரிகளும் தமிழிசைத் தலைவர்களும் திறப்பு விழா ஆற்றுவதற்கு முன்பாக பசு மாடும் (கன்றுக் குட்டி சகிதமாக) பார்ப்பானும் புகுந்த திறப்பு விழா நடத்தியிருக்கின்றனர்! அசல் திறப்பு விழா நடத்திய மேற்படி தலைவர்களைப் பாராட்டுகிறேன்!

“டேய், தமிழா! மானங்கெட்ட தமிழா! மதிப்புக் கெட்ட தமிழா! அயோக்கியத் தமிழா! துடை நடுங்கித் தமிழா! சொரணை கெட்ட தமிழா! அறிவையிழந்த தமிழா! படித்தும் பதரான தமிழா! முதுகெலும்பில்லாத தமிழா! மூளையை அடகு வைத்த தமிழா! தமிழிசையை வளர்ப்பதற்காகக் கட்டப்பட்ட உன் புதுக் கட்டடத்துக்காக நாங்கள் காலணாவாவது கொடுத்திருப்போமா? எல்லாம் உங்களவன்களின் பணந்தானே? நாங்கள் எதற்காகக் கொடுப்போம்? கோவில் கட்ட நாங்களா பணம் கொடுக்கிறோம்? நீங்கள் கட்டினால் நாங்கள்தானே அதில் குடியேறுகிறோம்? அதுபோலத்தான் இதுவும்! அதிகாலையிலிருந்து புதுக் கட்டடத்தில் நடந்ததென்ன தெரியுமா? எங்கள் வேதப் பிராமணாள் மந்திரம் ஓதினார்கள்! ஓமம் வளர்த்தார்கள். ‘மந்திரம்’ எந்த மொழியிலடா ஓதினார்கள்? உன் தமிழிலாடா? இல்லையடா, மானங்கெட்டவனே! எங்கள் தேவ பாஷையிலடா? தமிழிசையை வளர்க்கின்ற லட்சணத்தைப் பார்த்தாயாடா? ஒரு முழக் கயிறு இருந்தால் தேடிப் பாரடா, தமிழா! உன் தலைவன்களும் நீயும் இருக்கின்ற லட்சணத்துக்கு உனக்கு மேடைப் பேச்சு வேறே! எழுத்து வேறே! உனக்குக் கொஞ்சங்கூட ரோஷமில்லியாடா?”- என்று அக்கிரகாரக் குஞ்சு ஒன்று என்னைப் பார்த்துக் கேட்டது போல் நேற்றிரவு கனவு கண்டேன்! அரைத் தூக்கத்திலேயே கையை ஓங்கி அறைந்தேன்! பக்கத்திலிருந்த சுவரில் பட்டு, விரலில் சிறிது இரத்தம் வந்ததுதான் பயன்!

மாலைப் பத்திரிகைகளில் படித்த சங்கதி மனத்தை உறுத்திக் கொண்டேயிருந்தமையால் விளைந்த விளைவுதான் இது!

“எதையும் மனத்தில் வைத்து ஆழ்ந்து நினைக்காதே! அது உன் உடலுக்குக் கெடுதல், ஏதோ சினிமா பார்ப்பது போல (அல்லது அதிலேயே ஈடுபட்டு) பொழுது போக்கிக் கொண்டிரு!” என்று ஹிருதய நோய்க்காரர்களிடம் டாக்டர்கள் கூறுவதைக் கேட்டிருக்கிறேன்! யாருக்கோ சொன்னால் நமக்கென்ன, என்று தான் இருந்து வருகிறேன்! மேற்படி தமிழிசைச் சங்கக் கட்டடத் திறப்பு விழாச் செய்தி அற்பமானதல்ல.

படித்தவர்களும் பட்டதாரிகளுமே பார்ப்பான் வந்தால் தான் கட்டடம் பலமாயிருக்கும் என்று நினைத்தால், பாமரத் தமிழர்கள் செத்துப் போன உயிர்களுக்கு அனுப்புவதற்காகப் பார்ப்பான் வாயைத் தபால் பெட்டியாக நினைத்து, பச்சரிசியையும் பச்சைப் புடலங்காயையும் அதில் கொட்டியழுகின்ற மூடத் தனத்தை கடுமையாகக் கண்டிக்கலாமா?

மேற்படி கட்டடத்துக்காக மண்வெட்டியெடுத்து, முதல் பள்ளம் தோண்டிய தொழிலாளியை அழைத்து வந்து, அவன் கையில் ஒரு பெரிய வெள்ளிச் சாவியைக் கொடுத்து கட்டடத்தைத் திறக்கச் செய்து (சாவியையும் அவனிடமே இனமாகக் கொடுத்து) விழாவைத் துவக்கி யிருந்தால் அது எவ்வளவு புத்திசாலித்தனமா யிருந்திருக்கும்?

பணக்காரனுக்கும், மேல் ஜாதிக்காரனுக்கும், பட்டதாரிக்கும் - பார்ப்பானும் அவன் மதமும் அவன் மந்திரமும் இல்லாமல் முடிகிறதா, பாருங்கள்!

“பணமும் படிப்பும் இருந்தால் மட்டும் போதாதப்பா? மூளையில் பாசி பிடிக்காமலிருக்க வேண்டுமப்பா!” - என்று கைவல்ய சாமியார் அடிக்கடி சொல்வதுண்டு.

மேற்படி செய்தியைப் படித்ததும் அவரைத்தான் நினைத்துக் கொண்டேன்.

பார்ப்பானாம்! மந்திரமாம்! பசு மாடாம்! கன்றுக் குட்டியாம்!

ராஜாஜி கருப்புச் சட்டைக்காரனைப் பார்த்து நையாண்டி செய்கிறார் என்றால் ஏன் செய்ய மாட்டார்? காங்கிரஸ்காரர் தங்கள் எதிர்க்கட்சிக் காரர்களின் வீட்டுக்குள் புகுந்து அடிக்கிறார்கள், கொலை செய்கிறார்கள், என்றால் ஏன் செய்ய மாட்டார்கள்?

தமிழிசைக் கட்டடத்துக்குள் புரோகிதப் பார்ப்பான் நுழைகிறபோது நூறு தன்மானத் தமிழர்கள் மறியல் செய்திருந்தால் அக்கிரகாரம் இவ்வளவு நிமிர்ந்து பேசுமா? "அவனவன் ஜாதித் தொழிலை அவனவன் செய்ய வேண்டும்; படிப்பு அவ்வளவு முக்கியமல்ல,” என்று ஒரு முதலமைச்சர் சொல்லத்தான் துணிவாரா?

எதை நினைத்தாலும் வேதனை! மகா மனோவேதனை! பொது வாழ்க்கையே ஒரு பொழுது போக்கு என்றும், வருமான ஊற்று என்றும், நினைப்பவர்களால்தான் இவைகளை யெல்லாம் சகித்துக் கொண்டிருக்க முடியும்!

குத்தூசி குருசாமி (14-11-1952)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It