திருப்பூர் மாவட்டம் பொங்கலூரில் வரும் டிசம்பர் 23, 24, 25 ஆகிய தேதிகளில் இந்து முன்னணி சார்பில் யானை பூஜை, 108 குதிரை பூஜை, 1008 நாட்டுப் பசுமாட்டு பூஜை, 16 மகாயாகம் ஆகியவைகள் நடைபெற உள்ளன. இராஜராஜ சோழன் காலத்தில் நடந்ததைப் போன்று 300 மீட்டர் நீளம், 20 மீட்டர் அகலம் கொண்ட யாகபீடம் அமைக்கப்படுகிறது. சோழர்கள் காலத்திற்குப் பிறகு நடக்கும் மிகப்பெரிய யாகம் இது. இவை பற்றி இந்து முன்னணியின் மாநிலப் பொறுப்பாளர் காடேஸ்வரா சுப்ரமணியம் செய்தியாளர்களிடம் கூறியவை,

“உலக நன்மை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், வியாபாரம் வளம் பெற வேண்டியும் இந்த யாகம் நடக்க உள்ளது. வரும் டிசம்பர் மாதம் 23-ம் தேதி கஜ பூஜை, அஸ்வ பூஜை, மீனாட்சி திருக்கல்யாணம் ஆகியன நடக்க உள்ளது. தொடர்ந்து, 24-ம் தேதி 1008 நாட்டு பசுக்களை வைத்து கோ பூஜை நடக்கும். அன்று மாலை ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. மூன்றாவது நாள் நிகழ்ச்சியில் ஒரு லட்சம் குடும்பத்தைச் சேர்ந்த 10 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.

மேலும், இதனை மக்களிடையே கொண்டு செல்ல இந்த நான்கு ரதங்களும் கோவை மாநகர், திருப்பூர், ஈரோடு ஆகிய இடங்களுக்குச் செல்லும். ஒவ்வொரு குடும்பத்தில் இருந்து ஒரு செங்கல் மற்றும் பசு மாட்டின் நெய் கொடுக்க கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது. இதனை யாகத்தில் பயன்படுத்துவோம்.”

brahmins yagamஇந்த யாகத்தை மக்களிடம் பரப்பவும், நிதி திரட்டவும் கடந்த 13.11.18 அன்று, கோவையிலிருந்து நான்கு மாவட்டங்களை நோக்கி ரதயாத்திரை தொடங்கப்பட்டது. இராம.கோபாலன் இந்த பிரச்சாரப் பயணங்களைத் தொடக்கி வைத்துள்ளார். மகாலட்சுமி ரதம், வீரலட்சுமி ரதம், சிவ பார்வதி ரதம், கோமாதா ரதம் என்ற இந்த ரதங்கள் ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய நான்கு மாவட்டங்களிலும் யாகப் பிரச்சாரத்தைத் தொடங்கி விட்டன. வீடு வீடாகச் செங்கல் சேகரிப்பும், நெய் சேகரிப்பும், யாகத்தில் அழிப்பதற்காக நன்கொடைகளும் திரட்டப்பட்டு வருகின்றன.

பெரியாரின் புரட்சியால் 80 ஆண்டுகாலம் அடங்கிக் கிடந்த யாகப் பண்பாடு கடந்த 2017 ஆம் ஆண்டில் தலைதூக்கத் தொடங்கின. 2017 செப்டம்பர் 12 அன்று மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் புஷ்கர யாகங்கள் நடந்தன. உடனடியாக தி.க.வும், தி.வி.க.வும் அதை எதிர்த்துப் போராடின. தொடர்ந்து, திருச்சி ஸ்ரீரங்கம், நெல்லை, சிவசைலம் எனப் பல இடங்களில் புஷ்கர யாகங்கள் தொடங்கப்பட்டு பெரும் விழாக்களாக மாற்றப்பட்டு வருகின்றன.

2017 இல் மயிலாடுதுறையில் நடந்த புஷ்கர விழாவில் விழாவில் முதமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் துணைவியார் துர்கா அவர்களும் பங்கேற்றார். 2018 இல் தாமிரபரணியில் நடந்த புஷ்கர விழாவில் தினகரன் அணியின் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர். (அவர்கள் பங்கேற்ற அடுத்த நாளே அவர்களது எம்.எல்.ஏ.பதவி பறிபோனது) பார்ப்பன - பார்ப்பன அடிமை ஊடகங்கள் இந்த விழாக்களையும், யாகங்களையும் பெரிதுபடுத்தி வருகின்றன.

கடந்த 80 வருடங்களில் இவை போன்ற பெரும் யாகங்கள் ஆங்காங்கே திருட்டுத்தனமாக நடந்து வந்தன. ஆனால் இப்போது வெளிப்படையாக - ஏராளமாக நடக்கத் தொடங்கியுள்ளன. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனையில் கடந்த 21.11.18 அன்று யாகம் நடத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், திராவிடர் சமுதாயத்தில் இப்படித்தான் பண்டிகைகளும், யாகங்களும், விழாக்களும் மெல்ல மெல்ல நுழைக்கப்பட்டு, நமது அடையாளங்களையும், அடிப்படைகளையும் தகர்த்துள்ளன. நம் கண்ணெதிரே புஷ்கர யாகம் பெரும் விழாவாகி வருகிறது. இந்தச் சூழலை இந்து முன்னணி அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறது. யாகங்களை மக்கள் பங்கேற்புடன் நடக்கும் ஒரு மாபெரும் பண்டிகையாக மாற்றும் முயற்சியைத் தொடங்கியுள்ளது.

பார்ப்பனர்கள் யாகங்களை எதற்காக முன்னெடுக்கிறார்கள், மத விழாக்களை எதற்காக புதிது புதிதாக அறிமுகப்படுத்தி அவற்றை நமது பண்பாடாகவே மாற்றுகிறார்கள் என்பவை பற்றி அறிந்து கொள்ள வேண்டுமானால், இந்தச் சமுதாயத்தின் உற்பத்தி முறையை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

பார்ப்பனிய உற்பத்தி முறை

இந்தியாவைத் தவிர உலகிலுள்ள மற்ற நாடுகளின் மனித சமுதாயம் அவ்வப்போது உரிய மாற்றங்களையும், வளர்ச்சிகளையும் அடைந்துள்ளது. ஆதிப் பொதுவுடைமை முறை, பண்ணை அடிமை முறை, நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம் என வளர்ந்து கொண்டே வந்துள்ளது. சில நாடுகளில் முதலாளித்துவத்துக்கு அடுத்து சோசலிச சமுதாயம் உருவானது. அதை அடுத்து கம்யூனிச சமுதாயம் என்ற நிலை நோக்கிய பயணமும் தொடங்கியது.

ஆனால் இந்தியாவில் மட்டும் ஆரியப் பார்ப்பனர்களின் படையெடுப்புக்குப் பிறகு, ஆரியப் பார்ப்பனர்கள் இந்தியப் பகுதியைக் கைப்பற்றிய பிறகு இங்கு சமுதாயத்தில் எந்தவிதமான மாற்றமோ, வளர்ச்சியோ உருவாகவே இல்லை. வேறு எந்த நாடுகளிலும் இல்லாத ‘பார்ப்பனிய உற்பத்தி முறை’ இந்தியாவை முடக்கிப் போட்டது. சமுதாயத்தின் இந்தத் தேக்கத்தை, முடக்கத்தை அறிஞர் கார்ல் மார்க்ஸ் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

“இந்தியாவின் கடந்த காலத்தில் அரசியல் அம்சத்தில் எவ்வளவு மாற்றங்கள் நிகழ்ந்திருந்தாலும், மிகத் தொல் பழங்காலம் முதல் 19-ம் நூற்றாண்டின் துவக்க காலம்வரை அதன் சமுதாய நிலை மாற்றமின்றி இருந்து வந்துள்ளது” The British Rule in India – Karal Marx

இந்தியச் சமுதாயமானது உலகின் மற்ற நாடுகளைப்போல வளராமல் தேங்கிக் கிடந்தது என்பதை மார்க்சிய வரலாற்று அறிஞர் டி.டி.கோசாம்பியும் பதிவு செய்துள்ளார்.

“இப்படிப்பட்ட படிநிலைகளைக் கடந்து வந்துள்ளதென்பதை வரலாற்றுச் சான்றுகள் அடிப்படையில் நிர்ணயிக்க இயலாது”

என்று அவர் தனது The Culture and civilization of Ancient India in Historical Outline எனும் நூலில் குறிப்பிடுகிறார். இந்தத் தேக்கத்திற்குக் காரணம் இங்குள்ள பார்ப்பன உற்பத்தி முறையே ஆகும். இந்த உற்பத்தி முறை பற்றிச் சுருக்கமாகப் பார்ப்போம்.

உபரி உற்பத்தி

ஈடு செய்யாத உழைப்பின் காரணமான பொருள் அபகரிப்பு அல்லது ஈடு செய்யாத உழைப்பின் பயன். உதாரணமாக ஒருவருடைய உழைப்பிற்கு அளிக்க வேண்டிய மதிப்பு 100 ரூபாய் என்ற நிலையில், அவருக்கு வெறும் 10 ரூபாயைக் கொடுத்தோம் என்றால், மீதமுள்ள அந்தச் சுரண்டப்பட்ட 90 ரூபாய் தான் உபரி உற்பத்தி ஆகும். அதை அபகரிப்பதற்கான வழிகளை அதாவது சுரண்டல் முறைகளை ஏற்படுத்திச் சுரண்டுவது தான் உபரி உற்பத்தி அபகரிப்பு.

உபரி உற்பத்தி அபகரிப்பு - நாசம் - முடக்கம்

ஒரு கிராமத்தில் ஒரு விவசாயி ஒரு ஆண்டுக்கு செலவுகள் எல்லாம் போக, சுமார் 25 ஆயிரம் ரூபாய் மிச்சப்படுத்துகிறார் என்று வைத்துக் கொள்வோம். சரியாக அறுவடைக் காலத்தில் ஊர்த் திருவிழாக்கள், கும்பாபிசேகங்கள், யாகங்கள், சிறுதெய்வ வழிபாடுகள், குலசாமி கும்பிடுகள் என வரிசை கட்டி வருகின்றன. அதுமட்டுமல்ல, அந்த வருமானத்தைக் கொண்டுதான் காதுகுத்து, பூப்புனித நீராட்டு, கல்யாணம், வளைகாப்பு ஆகிய வீட்டுச் சடங்குகளையும் நடத்துகிறார்கள். இந்த விழாக்கள் எல்லாவற்றையும் மிக மிக அதிகமான பணச்செலவில் நடத்தினால் தான் சமுதாயத்தில் மரியாதை கிடைக்கும் என்ற மதஅடிமைச் சிந்தனையை இந்துமதப் பார்ப்பனர்கள் உருவாக்கினார்கள். இந்து மதத்தை ஏற்றுக் கொண்ட அனைவரும் அதையே தங்களது பண்பாடாகப் பின்பற்றி வருகிறார்கள்.

இவை போன்ற மத விழாக்கள், வீட்டு விழாக்களால் எந்த விவசாயியும், எந்த விவசாயத் தொழிலாளரும் அதுவரை சேர்த்து வைத்திருந்த பணத்தை மொத்தமாக அழித்து விடுகிறார்கள். அடுத்த விதைப்புக்கு கமிசன் கடைகளிலும், உரம், பூச்சி மருந்துக் கடைகளிலும் கையேந்துகின்றனர். இயற்கை விவசாயி என்றால் கமிசன் கடை மட்டும் மாறும். அவ்வளவுதான் வேறுபாடு.

இந்த நிலை பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வருகின்றது. இந்த நிலையை மார்க்சிய பாணியில் சொல்ல வேண்டுமானால் இதுதான், ‘உபரி உற்பத்தி அபகரிப்பு, நாசம்’, முடக்கம்’. இதைத்தான் அறிஞர் மார்சும், டி.டி.கோசாம்பியும் குறிப்பிடுகிறார்கள். சமுதாய அறிஞர் தோழர் பெரியார் அவருக்கே உரிய எளிய நடையில் இதை விளக்குகிறார்.

“நாட்டின் பொருளாதார நிலையை விருத்தி செய்ய அவசியமான பொதுத் தொழிற்சாலைகள், இயந்திர சாலைகள் முதலியவைகள் ஏற்பாடு செய்வதற்கும் மார்க்கமில்லாமல் பொருட்களை எல்லாம் - சடங்குகளும் வாழ்க்கை முறைகளும் கவர்ந்து கொள்வதோடு, கோவில் கட்டுதல், சாமிக்கு நகை, வாகனம் முதலியவைகள் செய்து வைத்தல், மற்றும் உற்சவம், பூசை ஆகியவைகளுக்கு ‘பண்டு’ பூமிகள் முதலிய சொத்துக்கள் ஒதுக்கி வைத்தல் ஆகிய காரியங்கள் பெரும் பெரும் தொகைகளைக் கவர்ந்து கொள்கின்றன. ஆகவே, இந்த மாதிரியாகவெல்லாம் எல்லாப் பொருள்களும் வீணாகிக் கொண்டிருக்கையில் இந்த நாடு எந்தக் காலத்தில் தான் - எந்த வகையில் தான் பொருளாதாரத்தில் சீர் அடைய முடியும்?” -தோழர் பெரியார் - குடிஅரசு -18.01.1931

இந்த அறிஞர்கள் கூறுவது ஒன்று தான். மற்ற நாடுகளில், பொருளாதார உற்பத்தி முறையை அடிப்படையாகக் கொண்டு தான் கலை, இலக்கியம், மதம், பண்பாடு, பழக்க வழக்கங்கள் உருவாகும். இந்தியாவிலோ, பொருளாதார உற்பத்தி முறையை நிர்ணயிக்கும் இடத்திலேயே ஜாதியும், மதமும் முக்கிய இடம் பிடித்துள்ளது. இந்த வகைப் பொருளாதார உற்பத்தி முறை தான் ‘பார்ப்பன உற்பத்தி முறை’ எனப்படுகிறது. இந்தப் பார்ப்பன உற்பத்தி முறையின் வெளிப்பாடுதான் இன்றும் இந்து முன்னணிகளும், பார்ப்பன ஊடகங்களும் புதிது புதிதாக உண்டாக்கி, ஊதிப் பெருக்கும் பண்டிகைகள் ஆகும். இந்தப் பார்ப்பன உற்பத்தி முறையைத் தகர்க்காமல் சமுதாய வளர்ச்சி சாத்தியமே இல்லை.

பார்ப்பன உற்பத்தி முறை எதிர்ப்பு - யாக எதிர்ப்பு

இந்திய வரலாற்றில் அனைத்து தேசிய இன மக்களின் முன்னேற்றத்தையும் சமுதாய வளர்ச்சியையும் முடக்கிப் போட்ட பார்ப்பன உற்பத்தி முறையில், மிக முக்கிய இடம் வகிப்பது இந்த ‘யாகங்கள்’. கபிலர், சார்வாகர், பரிவிராஜகர்கள் தொடங்கி, புத்தர் வரை ஏராளமான தலைவர்கள் இந்த யாகங்களை எதிர்த்துக் கடும் போர் புரிந்துள்ளனர்.

இந்து மதப் புராணங்களும், இதிகாசங்களும் இந்த நாட்டின் மண்ணின் மைந்தர்களான பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்கள் அனைவரையும், அசுரன், அரக்கன், அரக்கி, ராட்சசி என்றெல்லாம் இழிவுபடுத்தியதற்கு முக்கியக் காரணம் என்னவென்றால், நம்மவர்கள் எல்லாம், பார்ப்பனர்களின் யாகங்களை எதிர்த்துள்ளனர். யாகங்களை எதிர்ப்பவர்கள் எல்லாம் அசுரர்களாக, அரக்கர்களாகக் காட்டப்பட்டார்கள்.

திருக்குறளில் யாக எதிர்ப்பு

அவிசொரிந் தாயிரம் வேட்டலி னொன்றன்

 உயிர்செகுத் துண்ணாமை நன்று

என்று திருக்குறள் அறிவுறுத்துகிறது.. ஆயிரம் யாகங்களை நடத்துவதைவிட, ஒரு உயிரை வதைக்காமல், கொன்று உண்ணாமல் இருப்பது சிறந்தது என்கிறார் வள்ளுவர். ஆனாலும் சங்க இலக்கியக் காலத்திலிருந்து பெரியாரின் திராவிடர் பண்பாட்டுப் புரட்சி தோன்றும் வரை தமிழ்நாட்டின் அனைத்து மன்னர்களும் பார்ப்பன அடிமைகளாகி, யாகப் புகைகளில் சிக்கி தமிழ்நாட்டைச் சீரழித்தனர்; தமிழர்களின் வளர்ச்சியை முடக்கினர்.

பார்ப்பன அடிமைகளான மன்னர்கள்

தமிழ்நாட்டு மன்னர்களில் பிற்காலச் சோழர் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்துள்ளவர் இராஜராஜ சோழன். அவரது காலம் பார்ப்பனர்களுக்குப் பொற்காலம். அவருக்கு முன்பு சங்க காலத்திலேயே முற்காலச் சோழர் வரலாற்றில் மிக முக்கிய மன்னராகத் திகழ்ந்தவர் கரிகாலன். அந்தக் கரிகாலன் காலத்திலேயே தமிழ்நாட்டில் யாகங்கள் தொடங்கி விட்டன. கரிகாலனே முன்னின்று பார்ப்பனர்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்துள்ளார். யாகங்கள் என்ற பெயரால் பார்ப்பனரல்லாத தமிழர்களின் பொருளாதாரத்தை நெருப்பில் போட்டு அழித்திருக்கிறார். கல்லணை கட்டி, அதன் மூலமாக, விவசாயத்தைப் பெருக்கி, விவசாயத்தால் வந்த செல்வத்தை யாகத்தில் அழித்துள்ளார்.

புறநானுனூற்றில் கருங்குளவாதனார் எனும் புலவர் பாடிய 224 வது புறநானூற்றுப் பாடல் கரிகாலனின் யாகச் செயல்பாடுகளைத் தெளிவாக விளக்கியுள்ளது. கரிகாலன் மட்டுமல்ல, முற்காலச் சோழர்களிலேயே மற்றொரு முக்கிய அரசரான ‘பெருநற்கிள்ளி’ என்பவருக்குப் பார்ப்பனர்கள் ‘ராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளி’ என்று பட்டமே வழங்கியுள்ளனர். அந்த அளவுக்கு அவரும் பார்ப்பன அடிமையாக இருந்து தமிழர்களின் சமுதாய வளர்ச்சியை முடக்கியுள்ளார். பெருநற்கிள்ளியின் யாகச் செயல்பாடுகளை புறநானூற்றின் 367 வது பாடல் விளக்குகிறது.

சங்க காலப் பாண்டிய மன்னன் ‘பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி’ நடத்திய யாகங்களைப் பற்றி புறநானூற்றில் 15 வது பாடலாக வந்துள்ள புலவர் நெட்டிமையாரின் பாடல் விளக்கியுள்ளது. சங்க காலச் சேர மன்னர்களின் யாகச் செயல்பாடுகள் பற்றி ‘பதிற்றுப்பத்து’ எனும் சங்க இலக்கியம் விரிவாகப் பேசியுள்ளது.periyar 680

பார்ப்பனப் பொருளாதார முறையை எதிர்த்த பெரியார்

சங்க காலத்தில் தொடங்கி, பெரியாரின் திராவிடர் புரட்சி தோன்றும் வரை தமிழர்கள், யாக - வேள்வி - ஓமகுண்டங்களால் தங்களது பொருளாதாரத்தையும், அறிவையும், மானத்தையும் இழந்து - அந்த இழப்புகளையே தங்களது பெருமை வாய்ந்த பண்பாடாகவும் பின்பற்றி வந்தனர். இந்த இந்துமதச் சீரழிப்புப் பண்பாட்டுக்கு எதிராகப் பெரியார் தொடர்ச்சியாக எழுதியும், பேசியும் வந்தார்.

“இந்த யாகங்கள் புண்ணிய காரியங்களாம். சுவர்க்கத்திற்குக் காரணமானவைகளாம். சொர்க்கம் நரகம் என்பவைகள் சோம்பேறிகளின் வயிற்றுப் பிழைப்பு சாதனங்கள் என்று பல தடவை நான் சொல்லி வந்திருக்கிறேன். பாடுபட்டு உழைத்தவன் பொருளைக் கையைத் திருகிப் பிடுங்கிக் கொள்வதற்குப் பதிலாக சொர்க்க, நரகங்கள் என்னும் பூச்சாண்டிகளைக் காட்டி பயப்படுத்திப் பிடுங்கிக் கொள்ளப்படுகின்றன.

யாகத்துக்கு ஏதோ சக்தி இருப்பதாகவோ அது நம்மை ஏதாவது செய்து விடுமென்றோ யாரும் பயப்பட்டு விடாதீர்கள். இந்த தந்திரம் எல்லாம் உழைப்பாளிகளின் உழைப்பை சோம்பேறிகள் சாப்பிடுவதற்காகவே ஒழிய வேறில்லை.

...உழைத்தவன் உழைப்பின் பயனை அடைய வேண்டுமானால் இப்படி யாகம், சாஸ்திரம், வேதம், மோக்ஷம், கர்மம், முன் ஜன்மம், கடவுள் செயல் என்கின்ற பித்தலாட்டங்களுக்கு அடிமைப் படக்கூடாது.

எத்தனையோ வருஷ காலமாய் யாகம் செய்யப்பட்டு வருவதாய் அறிகிறோம். உலகத்தில் என்ன அக்கிரமம் மாறி இருக்கிறது? என்ன கொடுமை நீங்கியிருக்கின்றது? யாகம் எக்கியம் கிரமமாய் செய்யப் பட்டு வந்த தெய்வீக அரசர்களான ராமன், அரிச்சந்திரன் ஆகியவர்கள் காலத்தில் உள்ள அக்கிரமம், அயோக்கியத்தனம், கொலை பாதகம் எல்லாம் இன்னும் இருந்துதான் வருகின்றன. எவ்வித மாறுதலும் ஏற்பட்டு விடவில்லை. ஆகையால் நீங்கள் இப்படிப்பட்ட மிரட்டுதல்களைக் கண்டு பயந்துவிடாதீர்கள்! ஏமாந்து விடாதீர்கள்!!

...இவைகளெல்லாம் பாமர மக்களை ஏமாற்றுவதற்காகச் செய்யப்படும் சூழ்ச்சிப் பிரசாரமேயொழிய வேறில்லை. இப்படிப்பட்ட யாகங்களுக்கு சங்கராச்சாரி சுவாமியார் என்பவரும் அனுமதியளிக்கிறாராம்; பணம் கொடுக்கிறாராம். இதிலிருந்து சங்கராச்சாரிகள் என்பவர்கள் யோக்கியதைகளையும் உணர்ந்து கொள்ளுங்கள். - தோழர் பெரியார், புரட்சி - சொற்பொழிவு 10.06.1934

பெரியாரின் உழைப்பினால், தமிழ்நாட்டில் பெரும் பெரும் யாகங்கள் என்பவை ஒழிந்தன என்றே கூறலாம். திருமணங்கள், கிரகப்பிரவேசங்களில் மட்டும் இன்னும் ஓமகுண்டப் புகைகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்தச் சமுதாயச் சூழலை மீண்டும் பொருளாதார - அறிவு - மான இழப்புக்கு பின்னோக்கி இழுத்துச் செல்லும் முயற்சியைத் தான் இந்து முன்னணியும், பார்ப்பனர்களும் தொடங்கியுள்ளனர்.

அழிந்து கெண்டிருக்கும் திருப்பூர் மாவட்டம்

கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பா.ஜ.க.வின் மோடி அரசு அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையாலும், ஜி.எஸ்.டி வரிவிதிப்பினாலும், திருப்பூர் மாவட்டம் மிகப்பெரும் பொருளாதாரச் சீரழிவைச் சந்தித்துள்ளது. தமிழ்நாடு ஜவுளி மற்றும் கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் 08.07.2018 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்திலேயே இதை ஆதாரத்துடன் பதிவு செய்துள்ளார். மத்திய பா.ஜ.க. அரசின் ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு போன்ற நடவடிக்கைகளால் திருப்பூர் பனியன் தொழில் 16,000 கோடி ரூபாய் நட்டத்தைச் சந்தித்துள்ளது என்று அறிவித்துள்ளார்.

ஆண்டுக்கு 50,000 கோடி ரூபாய் மதிப்புள்ள திருப்பூர் பனியன் தொழிலில் பா.ஜ.க.வினர் ஏற்படுத்திய இழப்பு ஏறத்தாழ 34 விழுக்காடு ஆகும். 2004 ஆம் ஆண்டு உலக அளவில் பனியன் உற்பத்தியில் 2 இடத்தில் இந்தியாவை ஏற்றி வைத்தது திருப்பூர். இன்று பங்களாதேஷ், வியட்நாம், கம்போடியா, மியான்மர், எத்தியோப்பியா போன்ற நாடுகளின் கடும் போட்டியில் சிக்கியுள்ள நிலையில் மத்திய அரசின் மோசமான பொருளாதார நடவடிக்கைகளால் மேலும் சீரழிந்து குற்றுயிரும் குலை உயிருமாகத் தவிக்கிறது.

இந்தச் சூழலில் அதே திருப்பூர் மாவட்டத்தில் மிச்சமுள்ள பொருளாதாரத்தையும் மதம், கடவுள், பக்தி, பண்பாடு, யாகம், பண்டிகைகளின் பெயரால், மொத்தமாக வாரிச் சுருட்டி அழிக்கும் வகையில் இந்த பெரும் யாகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது திருப்பூர் மாவட்டத்திற்கு மட்டும் வரும் அழிவு அல்ல. தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களிலும், தஞ்சை டெல்டா பகுதிகளிலும் விவசாயம் இன்றி, வாழ வழியின்றி இலட்சக்கணக்கான மக்கள் திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் வாழ்வாதாரங்களைத் தேடி வந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அனைவரது வாழ்க்கையையும் இந்த யாகங்கள் அழிக்கும் என்பது உறுதி.

கோவையில் 1000 கழுதைகள் ஊர்வலம்

நம் கண்முன்னேயே நடைபெறப் போகும் பொருளாதார - பண்பாட்டுச் சீரழிவை நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்? 1987 ஆம் ஆண்டில் இதே போல கோவை சரவணம்பட்டியில், 108 யானைகளை வைத்துக் ‘கஜ பூஜை’ நடத்தப் போவதாக அறிவிப்பு வந்தது. அப்போது திராவிடர் கழகத்தின் மாநிலப் பொறுப்பாளராக இருந்த தோழர் கோவை கு.இராமக்கிருட்டிணன் அவர்கள் கஜபூஜை நடக்கும் அதே நாளில் ‘1000 கழுதைகளின் ஊர்வலம்’ நடக்கும் எனஅறிவித்தார். தமிழ்நாடே அலறியது.

30 ஆண்டுகள் கழித்து இப்போது அறிவிக்கப்பட்டுள்ள கஜ பூஜை, 108 குதிரை பூஜை, 1008 நாட்டு மாட்டு பூஜை இவை ஏதோ ஒருநாள் நிகழ்வாக மட்டும் நடக்க இருப்பவை அல்ல. கடந்த நவம்பர் 13 இல் தொடங்கி டிசம்பர் 24 வரை தமிழ்நாட்டின் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மேற்கு மாவட்டங்கள் அனைத்திலும் இந்த யாகச் சீரழிவை வீடு வீடாகப் பரப்பும் வாகனங்கள் சுற்றி வருகின்றன. பார்ப்பன அமைப்புகளின் ஆபத்தான பின்னணிகளைப் புரிந்து கொள்ள வாய்ப்பில்லாத எளிய மக்களை அணிதிரட்டுகின்றனர். அந்த அணி திரட்டலுக்கு உறுதியாக நாம் எதிர்வினை ஆற்ற வேண்டும்.

தோழர் பெரியாரின் நினைவு நாளான டிசம்பர் 24 ஆம் நாள், பெரியார் இயக்கங்களின், தோழர்கள் அனைவரும் ஏதோ ஒரு நிகழ்வை அவசியம் திட்டமிடுவார்கள். அந்தத் திட்டமிடலில், யாக எதிர்ப்பு, யாகப் பரப்புரை எதிர்ப்பு ஆகியவற்றையும் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். ஏற்கனவே, பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு என்ற ஒரு புதிய கூட்டமைப்பு டிசம்பர் 24 இல் திருச்சியில் கருஞ்சட்டைப் பேரணி நடத்தப் போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த கருஞ்சட்டைகளின் ஒன்றுகூடலை, மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியாக கோவையிலோ, திருப்பூரிலோ நடத்தினால், அது பார்ப்பன, காவிக் கும்பலுக்குச் சரியான எதிர்வினையாக அமையும்.

ஒருவேளை அந்தக் கூட்டமைப்பில் உள்ள சில தமிழ்த் தேசிய அமைப்புகளுக்கு இதில் ஆர்வம் இல்லை என்றால், திராவிடர் இயக்கங்கள் மட்டுமாவது டிசம்பர் 24 இல் திருப்பூரிலோ, கோவையிலோ அணிதிரள முயற்சித்தால் சிறப்பாக அமையும். அப்படி, காவிகள் யாகம் நடத்தும் அதே நாளில், அதே பகுதியில் நாம் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணிகளை நடத்துவது சட்டச் சிக்கலாகும் என்றோ அல்லது உரிய பயன் அளிக்காது என்றோ கருதினால், அதற்கு முன்பே மேற்கண்ட மேற்கு மாவட்டங்கள் முழுவதிலும் யாக எதிர்ப்பு - மூடநம்பிக்கை ஒழிப்புப் பயணங்களை நடத்தலாம்.

திராவிடர் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், ஆதித்தமிழர் பேரவை, தமிழ்ப்புலிகள், சமூகநீதிக் கட்சி, ஆதித்தமிழர் முன்னேற்றக் கழகம், தி.மு.க, ம.தி.மு..க போன்ற அனைத்து அமைப்புகளும் ஒன்றிணைந்து ஒரு பொதுக் கூட்டமைப்பை உருவாக்கி, இந்தப் “பொருளாதார - பண்பாட்டுச் சீரழிவு யாகங்களைத்” தொடக்கத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டும். யாகங்களுக்கு ஆதரவாக மக்களை அணிதிரட்டும் செயலுக்கு எதிர்வினையாக, அறிவியல் பரப்புரைகளையும் அறிவியல் கண்காட்சிகளையும் நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.

சான்றுகள்:

1. ‘பெரியார் பார்வையில் இந்திய தேசியம்’ நூல்

2.www.periyarwritings.org

3.The Hindu 09.07.2018

Pin It