ராமாயணத்தில் புத்தரை "நாஸ்திகன்', "திருடன்',"நாட்டிலே இருக்கக் கூடாதவன்' என்று எழுதி வைத்து இருக்கிறார்கள். தேவாரங்களிலே நாயன்மார்கள் என்பவர்கள் புத்தரைப்பற்றி, அவரது கொள்கையைப் பற்றி மிக மிகக் கேவலமாகப் பாடி இருக்கிறார்கள். ""சமண – பவுத்த பெண்களை கற்பழிக்க தமக்கு வரம் அருள வேண்டும்'' என்று கடவுளை வேண்டிக் கொண்டும் இருக்கின்றனர்.
பிரபந்தங்களில் ஆழ்வார்களும் நாயன்மார்களுக்கு இளைத்தவர்கள் அல்லர். இவ்வாறு எல்லாம் இழிவுபடுத்தியது அல்லாமல் புத்த ஜைனர்களைக் கொன்றும் அவர்கள் மடங்களைத் தீயிட்டும் அழித்திருக்கிறார்கள்.
இப்படி எல்லாம் செய்து, புத்தரை மகாவிஷ்ணுவின் 11 ஆவது அவதாரம் என்று புகழ்கிறார்கள்.புத்த நெறிக்கு மாசு கற்பிக்க முயல்கிறார்கள். நாம் கண்ட அளவில் இந்த இந்திய உபகண்டத்திலேயே முதலாவதாக தோன்றிய அறிவுவாதி புத்தர்தான். வேறு எவரும் தோன்றவில்லை.
தோழர்களே! இந்த நாட்டில் கடவுளின் அவதாரங்கள் என்பவை எல்லாம் பெரிதும் புத்தனுக்குப் பிறகுதான் ஏற்படுத்தப்பட்டன. அதுவும் புத்தருடைய அறிவுக் கொள்கையினை ஒழிக்கவே தோன்றியவை ஆகும். புத்தருக்கு முன் கூட பார்ப்பனர்களுக்கு கடவுள் இல்லை. ஆரியர்களின் வேதங்களில் கடவுள் குறிக்கப்படவே இல்லை.
பல தேவர்கள் காணப்படுகின்றனர். இடி, மின்னல், மழை, வெயில், காற்று, நெருப்பு, தண்ணீர், சூரியன், விஷ்ணு, சிவன், எமன், இந்திரன் முதலிய இயற்கை நிகழ்ச்சிகளையே தேவர்களாக ஆக்கி பிரார்த்தித்துக் கொண்டாடி வந்தனர். இன்று அவற்றில் சிலவற்றைத் தான் கடவுள்களாக ஆக்கிக் கொண்டார்கள். புத்தருக்குப் பிறகுதான் ராமன், கிருஷ்ணன் கதை போன்றவை உற்பத்தி செய்யப்பட்டன.
புத்தருக்குப் பிறகுதான் பாரத, ராமாயணங்கள், உபநிஷதங்கள் முதலியன ஏற்படுத்தப்பட்டன. ஆதாரம் வேண்டுமானால் இவற்றில் எல்லாம் புத்தர் காணப்படுவதைப் பார்க்கலாம்.
தோழர்களே! புத்தர் வாழ்ந்து 2600 ஆண்டுகளுக்கு முந்தி புத்தருடைய அறிவுக் கொள்கையானது அந்தக் காலத்தில் எப்படி வேகமாகப் பரவி இருக்கிறது என்றால் பஞ்சில் நெருப்புப் பிடித்த மாதிரியாகும். புத்தர் பிறந்த நாடு இங்கிருந்து 1500, 2000 மைல்களுக்கு அப்பால் உள்ளதாகும். 2600 ஆண்டுகளுக்கு முன்பு அந்த நாட்டுக்கும் நம் நாட்டுக்கும் என்ன போக்குவரத்துச் சாதனங்கள் இருந்து இருக்க முடியும்? நல்ல சாலை இல்லாத காலம் காடும் மலையும் புதரும் நிறைந்து இருந்த காலம் எப்படி – இமயமலை ஓரத்தில் பிறந்த புத்தருடைய கொள்கை – இங்கெல்லாம் கன்னியா–குமரி வரை பரவியது என்பதை எண்ணிப் பார்க்க அதிசயமாக உள்ளது.
தஞ்சை, திருச்சி மாவட்டங்களில்தான் மிகமிக அதிகமாகப் பரவி இருந்திருக்கிறது. கன்னியா குமரியோடு மட்டும் நில்லாமல் இலங்கை வரையில் பரவி இருக்கிறது. இந்த அறிவு மார்க்கம் எந்த மண்ணில் தோன்றியதோ அந்த நாட்டில் அந்த மார்க்கத்துக்கு நாதியே இல்லாமல் போய் விட்டது.
அந்த அறிவு மார்க்கத்தை பார்ப்பனர்கள் அழித்து நாசப்படுத்தி, மக்களை எல்லாம் வெறும் நம்பிக்கைவாதிகளாக்கி விட்டார்கள். தஞ்சை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் புத்த மார்க்கம் ஒரு காலத்தில் மிக்க செல்வாக்குடன் இருந்திருக்கிறது. இங்கு ஆண்ட மன்னர்களை எல்லாம் பார்ப்பனர்கள் வசப்படுத்திக் கொண்டு புத்த மார்க்கத்தை ஒழித்தார்கள். புத்த மடாலயங்களையும் கோயில்களையும் தரைமட்டமாக்கினார்கள்.
புத்த – சமணர்களை எல்லாம் பனங்காயைச் சீவுவது போல தலையை வெட்டிக் குவித்து இருக்கின்றனர் மற்றும் ஆயிரக்கணக்கில் கழுவேற்றப்பட்டிருக்கின்றனர். புத்த மடங்களும் கோயில்களும் இருந்த இடங்களில் எல்லாம் ஏராளமான மூடநம்பிக்கைக் கோயில்களையும் குளங்களையும் எழுப்பி புண்யஸ்தலம், பாபம் போக்கும் தீர்க்கும் என்று செய்து விட்டனர்.
வேத சம்பந்தமான கருத்துகளுக்கு, காரியங்களுக்கு எதிர்ப்பு ஏற்பட்டது புத்தரால்தான். புத்தரால் பலத்த எதிர்ப்பு ஏற்பட்ட பின்புதான் இந்த அவதாரங்கள், புராணங்கள் எல்லாம் என்று மறுபடியும் சொல்லுகிறேன். நான் முன்பு குறிப்பிட்டதுபோல இத்தனை கோயில்களையும் ஆழ்வார்களையும் நாயன்மார்களையும் ஏற்படுத்தியதும் இதற்காகத்தான்.
இந்த நாட்டில் சமீப காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ராமகிருஷ்ண பரமஹம்சர், அந்த ஆனந்தா, இந்த தீர்த்தா, அந்த சரஸ்வதி, இந்த மகரிஷி என்பவர்கள் எல்லாம் கூட புத்த நெறியை எதிர்த்தொழிக்கவும் மக்கள் அறிவு வழியில் ஈடுபட்டு விழிப்படையாமல் இருக்கச் செய்யவுமே ஆகும். அரசுகள் கூட புத்த எதிர்ப்புக் கொள்கைகளைக் காப்பாற்றவே ஏற்படுத்தப்பட்டதாகும்.இவ்வளவென்ன?இந்து மதம் என்பதே புத்தமத எதிர்ப்பு சாதனம்தான்.
தோழர்களே! புத்தனுடைய அறிவுப் பிரச்சாரத்தின் காரணமாகத்தான் உலகமே கண் விழித்தது என்று சொல்லலாம். பல கடவுள்களையும் பல உருவங்களையும் வணங்கிக் கொண்டு காட்டுமிராண்டிகளாக இருந்த வெள்ளைக்காரர்கள், ஏசு கிறிஸ்துவிற்குப் பின்னால் அத்தனையையும் சுருக்கி ஒரே கடவுளாக, உருவம் அற்றதாக ஏற்றுக்கொண்டார்கள் என்றால் இது புத்தருக்கு அறுநூறு ஆண்டுகளுக்குப் பின்தான்!