“தேவை! பெண் தேவை! மிக உயர்ந்த படிப்புப் படித்துள்ள சிறுவனின் திருமணத்துக்கு ஒரு நல்ல பெண் தேவை. பெண் ஆரம்பக் கல்வி மட்டுமே படித்திருக்க வேண்டும்,” - என்று ஒரு பத்திரிகை விளம்பரம் வெளியிட வேண்டுமென்று என் நண்பர் சொன்னார்.

kuthoosi gurusamyஏனய்யா நண்பரே! உயர்ந்த படிப்புப் படித்தவனுக்கு உயர்ந்த படிப்புப் படித்த பெண் தானே நல்ல ஜோடி? உயர்ந்த படிப்புப் படித்திருந்தால் சமையல் சாமானைப் பாழாக்கி விடுவாள்! அல்லது “மேக் அப்” செய்வதிலேயே தினம் 6 மணி நேரத்தை வீணாக்கி விடுவாள்! அல்லது அடங்கி நடக்க மாட்டாள்! என்ற பயமா?” என்று கேட்டேன்.

“அதெல்லாம் பயமில்லை. பையன் சரிப்படுத்திக் கொள்வான்! ஆனால் காலேஜ் படித்த பெண்ணாயிருந்தால் தேவாங்கு மாதிரி யிருக்குமே! நான் எத்தனையோ காலேஜ் பெண்களைப் பார்த்திருக்கிறேன்! பெரும்பாலும் க்ஷயரோகம் பிடித்த மாதிரியே யிருக்கும்! ஆடிக் காற்றின்போது தெருவில் நடந்தால் நிச்சயம் கீழே விழுந்து விடும்! “என்பு தோல் போர்த்த உடம்பு” என்று அறிஞர்கள் கூறினார்களே! அதேதான்! “இப்போதே உயிரை விடட்டுமா? அல்லது நாளைக்கு விடட்டுமா?” என்று கேட்பது போலவே யிருக்கும்! புல் தடுக்கினாலும் போதும்! கீழே விழுந்து உயிர் போய்விடும்! எதிர்த்த வீட்டுக்குப் போவதற்கே வண்டி கேட்கும்! இம்மாதிரிப் பெண்ணுக்குத் திருமணம் செய்து ஒரு குழந்தையும் பிறந்து விட்டாலோ? சொல்ல வேண்டியதில்லை! லட்சாதிபதியா யிருந்தாலும் அவ்வளவு சொத்தையும் டாக்டர்கள் பிடுங்கிக் கொள்வார்கள்! இது ஒன்றுக்காகத்தான் காலேஜ் படித்த பெண் வேண்டாமென்கிறான், பையன்,”

என்றார், அந்த நண்பர்! இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு பொடிப் பயல் வந்து பக்கத்தில் நின்றான்.

“ஏய்! தம்பீ! யாரடா நீ? எந்தக் கிளாசில் படிக்கிறாய்? உனக்கென்ன சீக்காப்பா? ஏன் இப்படி எலும்பும் தோலுமாயிருக்கிறாய்? இங்கே யாரைப் பார்க்க வந்தாய்?” - என்று கேட்டேன். கேட்டவுடனே அவன் முகம் சுட்ட மாம்பழம் போலச் சுருங்கி விட்டது.

“இவர் தான் நாம் பேசிக் கொண்டிருந்த மாப்பிள்ளை! எம். ஏ. பாஸ் செய்திருக்கிறார்! பெரிய வேலைக்குப் போகப் போகிறார்”, என்றார்.

“அப்படியா சார்! உட்காருங்க!” என்று சொன்னேன். அவர் உடலைக் கண்டு முதலில் அலட்சியமாக நினைத்த நான்!

“மன்னித்துக் கொள்ளுங்கள்! உங்கள் பேச்சில் குறுக்கிட விரும்ப வில்லை! நான் பிறகு வருகிறேன்,” என்று தந்திரமாகச் சொல்லிவிட்டுக் கம்பி நீட்டினான், மாப்பிள்ளை!

“நல்ல மாப்பிள்ளையய்யா, இவர்! காலேஜில் படித்த தேவாங்குப் பெண் கூடாது என்கிறீர்! இவரைப் பார்த்தால் மூஞ்சூரு மாதிரி யிருக்கிறாரே!”- என்று கேட்டேன்.

“ஆமய்யா! என்ன செய்வது? இவன் தந்தை எனக்கு நெருங்கிய நண்பன். செல்வமாக வளர்த்துப் படிக்க வைத்தான். இந்தக் காலத்து காலேஜ் பையன்களைத் தான் உமக்குத் தெரியுமே! மாலை நேரத்திலே நல்ல விளையாட்டுக்கள் விளையாடுவதில்லை! ஒரு சடுகுடு! லாங்ஜம்ப்! ஹைஜம்ப்! நீச்சல்! ஓட்டம்! டென்னிஸ்! ஃபுட்பால்! ஏதாவது இருந்தால் தானே? படிப்பதும் குறைவு! விளையாட்டும் அதை விடக் குறைவு! ஏதோ 4-5 வேளை காஃபி குடிக்க வேண்டியது! தினம் சினிமாப் பார்க்க வேண்டியது! சிகரெட் பிடிக்க வேண்டியது! மீதி நேரத்தில் (உடற்பயிற்சிக்குப் பதிலாக) நாக்குப் பயிற்சி (பேச்சு) நடத்த வேண்டியது! அதுதான் 100க்கு 90 காலேஜ் பையன்கள் மூஞ்சூரு மாதிரியே இருக்கிறான்கள்! என்ன செய்து தொலைக்கிறது? விளையாட வேண்டிய நேரத்தை யெல்லாம் இந்தப் பாழும் சினிமாவிலேயே பாழாக்கித் தொலைக்கிறான்கள்! இவனும் அந்த ரகம்தான்!”, -  என்று சொன்னார்!

“உடல் நலத் துறையில் குறிப்பிட்ட அளவுக்குத் தேர்ச்சி பெற்றிராத மாணவர்களைக் கல்லூரிகளில் சேர்க்காமல் தடுத்துவிட வேண்டும்” - எனத் தாம் யோசித்து வருவதாக பம்பாய் கல்வியமைச்சர் தினகர்ராவ் தேசாய் பேசியிருக்கிறார். ஆனால் காலேஜ் பெண்களை இவர் மறந்து விட்டாரே!

மூஞ்சூருக்கும் தேவாங்குக்கும் திருமணமாகி, முருங்கைக்காய்க் குழந்தை பிறப்பதைத் தடுக்க வேண்டாமா?

குத்தூசி குருசாமி (14-11-1952)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It