kuthoosi gurusamy 268கல்யாணத்தின் போதும், கருமாதியின் போதும் பிர்ம்மாவுக்குச் சொந்தக்காரர்களான பிராமணர்கள், நம் வீட்டுப் பச்சரிசியையும் நம் வீட்டு, மஞ்சளையும் சேர்த்துக் கலந்து கொண்டு அதையள்ளி நம் தலையிலே போட்டு “தீர்க்காயுசு பவஹ”, என்று சொல்வதைக் கேட்டிருக்கிறோம். (இன்னமும் இவ்வாறு தலையைக் காட்டும் திராவிடப் பெரும் பிரகிருதிகள் இருந்தால் எழுதுங்கள்! அதுகளின் பெயர்களை ஊரார் அறிந்து நகைக்கச் செய்வோம்!)

அதாவது மஞ்சளும் அரிசியும் அவன் கை பட்ட மாத்திரத்தில் ‘அட்சதை’ என்ற பெயர் சூடிக் கொள்கின்றன!

அழுக்குத் தண்ணீர் அவன் கையினாலும், வாயினாலும் ‘தீர்த்தம்’ ஆவதுபோல!

மாட்டு மூத்திரமும் சாணியும் அவன் கையினாலும் வாயினாலும், ‘பஞ்சகவ்யம்’ ஆவது போல! நம் பெண்கள் ஆடியபோது “தேவடியாள்கள் சதிர்” என்ற பெயர் இருந்தது, பிறகு அக்கிரகாரப் பெண்கள் ஆடத்தொடங்கிய பிறகு இப்போது “பரத நாட்டியக்” கலை ஆகிவிட்ட மாதிரி!

அவனும் எத்தனையோ நூற்றாண்டுகளாக நம் மூதாதையர் தலைகளில் ‘அட்சதை’ போட்டுக் கொண்டுதானிருந்தான்! ஆனால் நம்மவர்களில் யாரும் (லட்சப் பிராமண போஜனம் பலவற்றை நடத்திய தஞ்சாவூர் மன்னர்கள் உட்பட) அவன் சொன்னபடி “தீர்க்காயுசுடன்” இருக்கவேயில்லை! நாம்தான் போகட்டும்... அவனுக்காவது அவன் மந்திரமோ, அட்சதையோ பயனளித்ததா என்றால், வெளியே சொன்னால் வெட்கம்!

“உங்கள் தலையில் வெள்ளைத் துணி முக்காடு போட்டிருக்கிறீர்களே, இந்தச் சிறுவயதில் ஏனம்மா? அய்யோ, பாவம்! தலை மயிரைக் கூட மொட்டையடித்திருக்கிறீர்களே! ஏனம்மா? திருப்பதிக்காவது பழனிக்காவது வேண்டுதலையோ?” என்று கேட்டார், விஷயந்தெரியாத ஒருவர், ஒரு அக்கிரகாரப் பெண்ணை நோக்கி!

“ஒரு வேண்டுதலையும் இல்லை! என் ஆத்துக்காரர் விவாகமான அடுத்த வருஷத்திலேயே வைகுந்தப் பதவி யடைந்துவிட்டார்,” - என்று சொன்னாள், கண்ணீர் ததும்பிய கண்களுடன். அய்யோ பாவம்! அவருக்குக் கிடைத்த “பதவி” வைகுண்டமாயிருந்தாலும் வேறு எதுவாயிருந்தாலும் அந்தம்மாள் விதவைதானே!

இந்தம்மாள் தலையிலும் இதே அட்சதை (மஞ்சளரிசி) விழுந்துதானே இருக்கும்? இந்தம்மாளின் கணவன் தலையிலும் விழுந்திருக்குமே! இந்த மாதிரிப் பெண்கள் அக்கிரகாரத்தில் வீட்டுக்கு இரண்டுக்குக் குறையாமல் இருப்பதைக் கண்ட பிறகுங்கூட பார்ப்பானைத் தன் வீட்டுக்குக் கூப்பிட்டுத் திருமணமும், மற்றச் சடங்குகளும் நடத்துகிறானே, அந்த மரமண்டைத் தமிழனை மனிதன் என்றா நினைக்கிறீர்கள்?

அவன் எவ்வளவு பெரிய லட்சாதி பதியானாலுஞ் சரி! உலகஞ் சுற்றியவன் ஆனாலுஞ் சரி! யானைக்குப் பிறந்த “பெரியமனுஷன்” ஆனாலுஞ்சரி! நான் அவனை ஒரு அழுகல் மூளை என்றுதான் மதிக்கிறேன்! அவன் அறிவை என் ஆஃபீஸ் பையனின் கால் தூசிக்குச் சமமாகவேதான் கருதுகிறேன்!

ரஷ்யாவில் வாசிலி சர்கீவிட்ச் என்பவருக்கு 145 வயதாகிறதாம். திடமாகவே இருக்கிறாராம். சோவியத் மக்களில் 100 (நூறு) வயதுக்கு மேற்பட்டவர்கள் முப்பதாயிரம் (30,000) பேர் இருக்கிறார்களாம்! இவர்கள் தலைகளில் ‘அட்சதை’ போட்டு, “தீர்க்காயுசுபவஹ” என்று சொன்னவர்கள் யார். இவர்களுக்கு ஆயுசு ஹோமம் வளர்த்த அந்தணப் பெரியார்கள் யார்?

இவர்கள் தங்கள் பிதிர்க்களுக்கு எந்தப் புரோகிதன் (திருடன்) மூலம் உணவுப் பார்சல் அனுப்பினார்கள்? ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதித் தெரிந்து வையுங்கள்! எழுதும் போது, நம் பஞ்சாங்க மந்திரி ஆச்சாரியார் வருஷப் பிறப்பில் பஞ்சாங்கம் படித்து, புது வருஷ பலனை எடுத்து மற்ற மதி மந்திரிகளிடம் கூறியதையும் எழுதிவையுங்கள்! இந்த நாட்டு மந்திரிகளின் புத்தி தீட்சண்யத்தைப் பற்றி அவரும் அறிந்து கொள்வது நல்லதல்லவா?

- குத்தூசி குருசாமி (7-5-51)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It