periyar 340ஆண்பெண் வாழ்க்கை இன்பத்திற்கு இவ்விரு பாலார்க்கும் இயற்கை ஒப்பந்தம் ஒன்று, என்று மனித சமூகம் உற்பத்தியானதோ அன்று முதல் தானாகவே இருந்து வருகின்றது.

மனித சமூகம் பரவி விரிந்து நெருக்கமானதும், பெண்கள் கருப்பவதிகளாய் இருக்கும் காலத்து அவர்கட்கு ஒரு பாதுகாப்பு ஏற்படவேண்டும் என்ற முறையிலும், மனித சமூகத்தில் சிக்கன நெருக்கடி ஏற்பட்டு அதனால் பேராசை, வஞ்சகம், சோம்பேறித்தனம் முதலியவைகள் உட்புகுந்து விட்டமையாலும் பொதுசனங்கள் அறிய இவ்விரு பாலர்க்கும் மணவினை ஏற்படுதல் அவசியமாயிற்று.

இன்றேல், பெண்கள் ஏமாற்றப் படுவார்கள் என்பது திண்ணம். மேலும் குழந்தைகள் சதிபதிகட்கும் பொது வாதலால், குழந்தைகளைப் பொறுத்தவரையிலாவது தந்தையின் பொறுப்பு விளக்கமாகத் தெரிய வேண்டிய அளவிலும் மணவினை பொது சனங்கள் அறிய நிகழ்த்தப்பட வேண்டியது அவசியமாயிற்று.

எனவே, உலகத்தில் மிகச் சாதாரணமானதும் அதே சமயத்தில் மிகப் பெரியதுமான இவ்வாண் பெண் இணக்கம் மணம் என்ற பெயருடனும், பொது நிகழ்ச்சி என்ற நிபந்தனையுடனும் நாகரிகம் முதிர்ந்த சமூகங்களால் கையாளப்பட்டு வருகின்றன.

ஆதித்தமிழர் கள் தங்கள் மணவினைகளை காதல் வயப்பட்டு நடாத்தினார்கள். ஆண் பெண் இணக்கம் ஏற்பட்ட பின்னரேயே தாய் தந்தையர்கட்கும் ஊர்த் தலைவர்கட்கும் தெரியப்படுத்தி விழாச் செய்வது வழக்கமாய் இருந்தது.

இவ்வொப்புயர்வற்ற அறிவுடைய மணமுறையைப் பற்றி நாம் நமது சங்க நூல்களில் பரக்கக் காண்பதுடனின்றி, இற்றைக்கும் பர்மா தேசத்திலும், இந்தியாவுடன் ஒரு காலத்தில் ஒன்றுபட்டிருந்த சுமத்ரா, ஜாவா, வாலி முதலிய தீவுகளிலும் காணக்கூடும். ஆதலின் மணமுறைக்குப் புரோகிதருக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை.

எல்லா நிகழ்ச்சிகளிலும் புரோகிதத்தைப் புகுத்திய, பிறந்தது முதல் இறக்கும் வரையில் பார்ப்பனரல்லாத குடும்பங்களில் கடவுள் பெயரைச் சொல்லிக் கொண்டு அவர்கள் காசைப் பறிக்க சூழ்ச்சி செய்த பார்ப்பனர்கள் மணவினையினையும் தமது மகசூலில் சேர்க்காமலாயிருப்பார்கள் எனவும் தமிழர் மணவினையிலும் பார்ப்பன புரோகிதர் புகுந்து கொண்டனர்.

இது சொற்ப காலமாக அனுசரிக்கப்படும் ஒரு வழக்கமாகும். ஆனால் பார்ப்பன புரோகிதனோ வேறு எந்த புரோகிதனோ இல்லாமல் மணவினை நிகழ்த்தக் கூடுமா? அவ்வாறு நிகழ்த்தினால், அத்தகைய மணங்கள் சட்டப்படி அங்கீகரிக்கக் கூடுமா? என்பது கேள்வி. இத்தகைய கேள்விக்கே நாம் வருந்துகின்றோம்.

இத்தகைய கேள்வி ஏற்படும் ஒரு நிலைமைக்கும் நாம் மிகவும் துக்கிக்கின்றோம். பார்ப்பனர் அர்த்தமற்ற, தனக்கே விளங்காத சிலவார்த்தைகளை மந்திரம் என்னும் பெயரால் உச்சரித்து; மணமக்கள் முகத்தை சுட்டுப் பொசுக்கி கண்களிலிருந்து நீர்வடியச் செய்து அம்மியை மிதிப்பதும் அருந்ததி பார்ப்பதுமான மூடச் சடங்குகள் சிலவற்றைப் புரிவித்து, ஒவ்வொரு சடங்கிற்கும் “சுவர்ண புஷ்பம்” பெற்று மூட்டை கட்டிக் கொண்டு போனாற்றான் விவாகம் முடிந்ததாக அருத்தம் என்று மதியுள்ளவர்கள் கூறுவார்களா?

இடைக்காலத்தில் சில காலம் மாறுதற்கேற்ப ஒரு குருட்டு வழக்கம் பீடித்ததானால் இவ்வழக்கத்தை பின்பற்றித்தான் ஆக வேண்டும் என்பது ஒரு அறிவுடைய நிர்பந்தமா? இந்த நிர்பந்தத்தை நாம் ஏன் அங்கீகரிக்க வேண்டும்? அரசாங்கச் சட்ட மூலமாக பார்ப்பனரை வைத்துத்தான் விவாகம் புரிந்து கொள்ள வேண்டும் என்ற வரையறையை வற்புறுத்துவது, மூடச் சடங்காகிய புரோகிதத்தை அரசாங்கமே ஆதரவு செய்வதாகும்.

பெரும்பான்மையான தமிழ்மக்கள் பார்ப்பனர்களையே வைத்து விவாகம் செய்து கொள்ளுவது இல்லை. சில காலமாய் நடைபெறும் சீர்திருத்த விவாகங்களிலும் பார்ப்பனர்களும் பார்ப்பனீயமும் நீக்கப் பெற்றுள்ளது.

மேலும் தமிழர்களில் பிரம்ம சமாஜம் போன்ற இயக்கங்களைத் தழுவி நிற்பவர்களும் புரோகித முறையை அநுட்டிப்பவர்களன்று. எந்த விதத்தாலும் புரோகிதம் என்ற ஒரு விலாசம் இருக்க வேண்டுமென்பதை நாம் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

எனவே, விவாக முறையில் புரோகிதர்கள் குறுக்கிடுவதை தமிழ் மக்கள் சுயமரியாதையுடன் நீக்குவார்களாயின், இம்முறையில் நிகழ்ந்த மணங்களை இவ்வரசாங்க மும் சரி, எவ்வரசாங்கமாயினும் சரி அங்கீகாரம் செய்துதான் ஆக வேண்டும்.

இதை ஒழித்து மலாய் நாட்டில் பார்ப்பனரின்றி செய்த ஒரு மணத்தை மணமாக அங்கீகரிக்க மறுத்த செயலை நாம் வன்மையாய் கண்டிப்பதுடனின்றி திரு.எஸ். வீராசாமி அவர்கள் மேற்கூறிய முறையில் தமிழரின் மனப் பான்மையை எடுத்துக் காட்டி, தமிழர் மணங்கட்கு புரோகிதன் அவசியமில்லை என்று குறிப்பிட்டதையும், நாம் பாராட்டுகின்றோம்.

திரு.எஸ்.வீராசாமி அவர்களைப் போன்றே நமது கூற்றை ஆதரித்து புரோகிதத்தைக் கடிந்து வெளியிட்டுள்ள திரு.சுப்பையா நாயுடுவின் செயலையும், நாம் மும்முறையும் போற்றுகின்றோம்.

இந்நிலையில் மலாய் நாட்டுக்குச் சென்று தமிழர் உதவியால் வயிறு வளர்க்கும் ஒரு ஐயங்கார் பத்திரிகையாய “தமிழ்நேசன்” புரோகிதத்தை ஆதரிப்பதும், சுயமரியாதை கொள்கைக்கு எதிராகப் பிரசாரம் புரிவதும் வியப்பன்றே.

(குடி அரசு - கட்டுரை - 24.11.1929)

Pin It