periyar hosp 350மிஸ். மேயோ என்னும் ஓர் அமெரிக்க மாதால் இந்தியாவிலுள்ள சமூக மத ஆபாசங்களைப் பற்றி எழுதப்பட்ட “இந்திய தாய்” என்னும் புத்தகத்தில் உள்ள விஷயங்களை அநேகமாகப் பத்திரிகை உலகத்தில் கலந்திருக்கும் மக்கள் எல்லோரும் அறிந்திருக்கக் கூடும். அதோடு சீர்திருத்த உலகத்திலும் வைதீக உலகத்திலும் நடந்துள்ள சாதக பாதகமான அபிப்பிராயமுடையவர்கள் எல்லோரும் அநேகமாக அறிந்திருக்கலாம். ஆனால் அப் புத்தகங்களிலுள்ள விஷயங்களை நம் நாட்டிள்ள எல்லா பத்திரிகைக்காரர்களும், அரசியல்காரர்களும், எல்லாச் சீர்த்திருத்தக்காரர்களும், எல்லா வைதீகர்களும், எல்லா மேடைப் பிரசங்கிகளும் வெளியிட்டு மிஸ். மேயோ அம்மையை கைவலிக்க வாய்வலிக்க இழிமொழிகளால் வைதார்களே ஒழிய இன்றைய வரையில் இனிமேலாவது இதைப்போல் இனியுமொரு புத்தகம் ஒருவரும் எழுதாமலிருப்பதற்கு எவ்வித ஏற்பாடுகளும் செய்தார்கள் இல்லை.

அன்றியும் அவ்வம்மை எழுதிய விஷயங்களை தைரியமாய் மறுத்துக் கூறி வாதுக்கழைத்தார்களும் இல்லை. ஆனால் அப்புத்தகத்திற்கு ‘பதில்’ என்பதாக ஏதேதோ பொருத்தமற்ற குப்பைக் கூளங்களையும் பழி வாங்கும் நோக்கம் கொண்ட இழிவான எதிர்வாசகங்களையும் நிரப்பி புத்தக ரூபமாய் அச்சுப் போட்டு அதனால் பலர் பணம் சம்பாதித்துக் கொண்டார்கள். அன்றியும், அப்படிப்பட்ட பதில் புத்தகங்களில் காணப்படும் விஷயங்கள் தான் என்ன என்று பார்ப்போமானால் மிஸ் மேயோ தனது புத்தகத்தில் இந்தியாவைப் பற்றி எழுதப்பட்ட ஆபாசமான விஷயங்களைப் போல் “அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நடப்பதில்லையா?” என்பதும் “இதை விட அதிகமாக நடப்பதில்லையா?” என்பதும் அவைகளுக்கு ஆதாரமாய் மேல்நாடுகளில் நடக்கும் ஏதோ இரண்டொரு விஷயங்களையுமே எழுதி சரி செய்து விட்டார்கள். மற்றபடி நம் நாட்டில் உள்ளவைகளை ஒழிக்கவோ அல்லது திருத்தவோ இன்றைய வரையில் யாரும் வேறு எவ்வித பிரயத்தனமும் செய்தார்கள் இல்லை.

உதாரணமாக மிஸ். மேயோவின் புத்தகத்தில் இந்தியர்களில் அநேகர் மாட்டு மலத்தையும் மூத்திரத்தையும் சாப்பிடுகின்றார்கள் என்று எழுதி இருக்கின்றார்கள் என்றால் அதற்கு பதில் சொன்ன கவி.ரவீந்திரநாதர் “மதத்தின் பேரால் ஆத்மார்த்தத்தை உத்தேசித்து நாங்கள் மாட்டின் மலத்தையும் மூத்திரத்தையும் சாப்பிடுகின்றோமே ஒழிய வயிற்றுக்கில்லாமல் சாப்பிடுவதில்லை” என்றுதான் சொன்னார்களேயொழிய சாணியும் மூத்திரமும் நாங்கள் சாப்பிடுவதில்லை என்று சொல்லவே இல்லை.

மற்றும் இந்தியாவில் உள்ள பார்ப்பனர்கள் தங்கள் சூழ்ச்சிகளால் தங்களைத் தவிர மற்ற பார்ப்பனரல்லாதார்களை படிக்கவொட்டாமல் கொடுமை செய்து விட்டதோடு அதையே மதக் கட்டளையாகவும் கடவுள் கட்டளையாகவும் செய்து விட்டார்கள். இதனால்தான் இப்போதுகூட இந்தியாவில் பார்ப்பனர்கள் நூற்றுக்கு நூறுபேர் படித்தவர்களாகவும், பார்ப்பனரல்லாதார்களில் நூற்றுக்கு தொண்ணூற்றைந்து பேர் படிக்காதவர்களாகவும் இருக்கின்றார்கள் என்று எழுதி இருப்பதற்குப் பதில் சொல்ல வந்த திரு.எஸ்.சத்தியமூர்த்தி சாஸ்திரி என்ன சொன்னார் என்றால் பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதார்களை வேதமும் சாஸ்திரமும் தான் படிக்கக் கூடாது என்று சொன்னார்களே ஒழிய வேறில்லை, அதுவும் மதக்கட்டளையால் சொல்லப்பட்டதே தவிர தாங்கள் சுதாவாய்ச் சொல்லப்பட்டதல்ல என்று சொன்னாரேயொழிய அந்தப்படி இல்லை என்று சொல்லவே இல்லை.

மனிதன் படிக்க வேண்டியது என்பது நீதிகளும் தர்மங்களும் அடங்கியது என்று சொல்லப்படும் வேத சாஸ்திரங்களே அல்லாமல் வேறு என்னமாயிருக்கக் கூடும்? இம்மாதிரியாகவே அந்தம்மாள் இந்தியாவைப் பற்றி எழுதியுள்ள ஆபாசங்கள் ஒன்றைக் கூட அடியுடன் மறுப்பதற்கு யோக்கியதையில்லாத நிலையில்தான் இன்றைய இந்து மதமும் வைதீகமும் லௌகீகமும் அனுபவமும் இருந்து வருகின்றதே அல்லாமல் வேறு என்ன? அந்தம்மாள் இந்த புஸ்தகத்தை எந்த எண்ணத்தோடு எழுதினார்கள் என்பது வேறு விஷயம். அது அரசியல் புரட்டர்கள் கவனிக்க வேண்டியதாகும். சுயமரியாதை உள்ள இந்திய மக்கள் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்பதேதான் இங்கு கவனிக்க வேண்டிய விஷயமாகும். ஏனெனில் இதே அபிப்பிராயத்தை மிஸ்.மேயோவுக்கு முன்னும் பின்னும் ஆயிரக்கணக்கான பேர்கள் எழுதி இருக்கின்றார்கள்.

திரு.காந்தி அவர்கள் கூட இந்த புத்தகத்தைப் பார்த்து என்ன பதில் எழுதி இருக்கின்றார் என்று பார்ப்போமானால், அவர் அதிலுள்ள விஷயம் ஒன்றைக் கூட மறுக்காமல் “மிஸ் மேயோ எழுதி யிருப்பவை எல்லாம் இந்தியாவின் சாக்கடைகளில் காணப்படும் விஷயமாகும்” என்று சொன்னார். அதோடு கூட, அநேக தடவைகளில் மிஸ்.மேயோ போன்றவர்கள் எழுதியிருக்கும் “குறைகள் இந்தியாவை விட்டு நீங்கினா லொழிய இந்தியாவுக்கு சுயராஜ்ஜியம் கிடைக்கும் என்று நினைப்பது முட்டாள்தனமும். அல்லது அயோக்கியத்தனமும் ஆகும்” என்றும் எழுதி இருக்கின்றார்.

இவற்றால் என்ன ஏற்படுகின்றது? இந்தியாவில் அம்மாதிரி விஷயங்கள் இல்லை என்று எழுதியதாக ஏற்படுகின்றதா? இருக்கின்றது என்றும், அது சாக்கடைபோல் இழிமக்களிடம் இருக்கின்ற வழக்கம் என்றும்தான் ஏற்படுகின்றது. அந்தப்படி பார்ப்போமானால் இந்தியா முழுவதும் தான் சாக்கடையாக இருப்பதாக முடிவு செய்ய வேண்டுமே யொழிய வேறில்லை. அதிலும் “உயர்ந்த ஜாதியார்”, “மேல் வகுப்பார்”, “வைதீகர்கள்”, “படித்தவர்கள்” என்பவர்கள் வீட்டில் நடக்கும் விஷயங்களே சாக்கடையானால், இன்னும் மற்ற இடங்களில் நடக்கும் விஷயங்கள் கக்கூஸ் என்றுதானே சொல்லியாக வேண்டும்.

மேலும், திரு.காந்தி அப்புத்தகத்தைப் பற்றி முடிவுரை கூறுகையில் இந்தியர்கள் அப்புத்தகத்தை மறக்காமல் எப்போதும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் வெளிநாட்டார் உடனே மறந்துவிட வேண்டும் என்றும் எழுதியிருக்கின்றார். இதனுடைய அர்த்தம் என்ன? இந்தியர்கள் இதை எப்போதும் ஞாபகத்தில் இருத்தி இவ்வாபாசங்களில் இருந்தும் இழிவுகளிலிருந்தும் இந்தியா மீளுவதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்றுதானே கொள்ள இடமிருக்கின்றது. இப்படி இருக்க எந்த சமூக சீர்த்திருத்தக்காரரோ இந்து மத சீர்திருத்தக்காரரோ, ஆஸ்தீகவாதியோ, பூரண சுயேச்சைக்காரரோ, சுயராஜ்யவாதியோ, தேசீயவாதியோ இதுவரை அவற்றுள் ஒரு சிறிதாவது விளக்க முயற்சித்தார்களா? என்று கேட்கின்றோம். மேன் மேலும் வருணாசிரம மகாநாடுகள் கூட்டி மேயோ புத்தகத்திற்கு மேலொப்பம் போட்டார்களேயொழிய வேறு என்ன செய்தார்கள்? என்று கேட்கின்றோம்.

ஒருவன் நம்மைப் பார்த்து! “அயோக்கியனே” “கீழ் மகனே” என்று கூப்பிட்டால், “நீ மாத்திரம் வாழ்கின்றனையோ” என்று நாம் திருப்பிக் கேட்டு விட்டால் நாம் அயோக்கியர்கள் அல்ல, கீழ் மக்கள் அல்ல என்று நிரூபித்ததாக ஏற்பட்டு விடுமா? ஒருக்காலும் ஆகாதே. அன்றியும் நாம் திருப்பிக் கேட்டதில் இருந்து நம்மிடம் இருக்கும் கீழ்மையையும், இழிவையும் நாம் ஒப்புக் கொண்டதாகவும், அதை மறுக்க முடியாததற்காக நமது மனசமாதானத்தின் பொருட்டு நாமும் திருப்பிச் சொன்னதாகவும் தானே ஏற்படும். இதனால் நம்மை அவர்கள் சொன்ன சங்கதிகள் உறுதியாய் விட்டது என்பதும் அவர்களை நாம் சொன்னவைகள் அவர்கள் ஒப்புக் கொள்ளுகின்றவரை அனாமத்தில் வைக்க வேண்டியது என்பதுமாய் விட்டது. அதனால் நமக்கு என்ன லாபம்?

ஒரு சமயம் பதில் சொல்லாமலும் திருப்பிச் சொல்லாமலும் அவற்றை அலட்சியமாய்க் கருதி இருப்பதாகக் காட்டிக் கொண்டிருந்தாலாவது மற்றவர்கள் ஒரு சமயம் சந்தேகப்படவாவது கூடும். இப்போது அதற்குக்கூட இல்லாமல் முழுவதையும் நாம் ஒப்புக் கொண்டதாக முடிவு கட்டிக் கொண்டோமே, இதற்கென்ன செய்யப் போகின்றோம் என்பதுதான் இப்போது நம்முடைய கேள்வி?

அன்றியும் மிஸ் மேயோ இந்தியாவின் நிலைமை பற்றி எழுதிய புத்தகத்தினால் உலகில் இந்தியாவின் யோக்கிதையைப் பற்றி வெகு இழிவாய்க் கருதப்பட்டு போய்விட்டதன் பலன் இந்தியர்கள் அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் திருப்பி வைவதால் தீர்ந்து விடுமா? அல்லது அதில் கூறப்பட்ட - நமது நாட்டில் உள்ளதான குறைகள் ஒழிந்து விடுமா? என்று கேட்கின்றோம்.

நிற்க, அப்புத்தகத்தில் கண்டுள்ள ஏதாவது ஒரு சிறிய விஷயத்திற்காவது மகம்மதியர்களோ வெள்ளைக்காரர்களோ மகம்மதிய அரசாங்கமோ வெள்ளைக்கார அரசாங்கமோ காரணம் என்றாவது அல்லது அச்சமூகங்களும் அவ்வரசாங்கங்களும் ஒழிந்தால்தான் முடியும் என்றாவது எந்த ஒரு யோக்கியமான சீர்திருத்தவாதியோ, மதவாதியோ, தேசீயவாதியோ, அரசியல் வாதியோ, ஆஸ்தீகவாதியோ சொல்ல முடியுமா? என்று பந்தயம் கூறிக் கேட்கின்றோம்.

எனவே இந்தியாவின் சுயமரியாதையிலோ, விடுதலையிலோ, சுயராஜ்ஜியம் என்பதிலோ யாருக்காவது ஒரு சிறிது கவலை இருந்தாலும் அவர்கள் செய்ய வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால் திரு.மேயோவின் இந்தியத் தாய் என்னும் புத்தகத்தையும் மற்றும் அது போன்ற புத்தகங்களையும் கையில் வைத்துக் கொண்டு அதில் சொல்லப்பட்டுள்ள குறைபாடுகளை ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்து, அது சிறிதானாலும், பெரிதானாலும் பெரிதுபடுத்திச் சொன்னதானாலும் கவலையோடு தேடிப் பிடித்து அவைகளை அடியோடு ஒழிக்க வேண்டியதே முக்கிய கடமையாகும்.

கோபத்தையும் வெறுப்பையும், தந்திரங்களையும் சூழ்ச்சி களையும் காட்டி அவைகளை மறைக்க முயற்சித்தோமானால் ஒரு சமயம் இன்று நாம் வெற்றியடைந்தாலும் நம்மால் மறக்கப்பட்ட விஷயங்கள் அழுகிப் புழுத்துப் புரையேறி மற்ற எல்லா விஷயங்களையும் நாசமாக்கி விடும் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டுகின்றோம்.

(குடி அரசு - கட்டுரை - 23.06.1929)