சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்த கால முதல்கொண்டு பார்ப்பனரல்லாதாரின் சுயமரியாதைக்காக உழைத்து வருவதும் ஜஸ்டிஸ் கக்ஷிக்கு உதவி புரிந்து வருவதும், ஜஸ்டிஸ் கக்ஷிப் பிரமுகர்களுடைய ஆதரவு பெற்று வந்ததுமான காரியம் எதுவும் சுயமரியாதை இயக்கத்திலுள்ள எவரும் அறியாததல்ல. ஜஸ்டிஸ் கக்ஷியானது சென்ற தேர்தலில் நின்ற காலத்தில் சுயமரியாதை இயக்கம் அதற்கு உதவி புரிந்து வந்திருக்கிறது.periyar 533செங்கல்பட்டில் கூடின சுயமரியாதை மாகாண கான்பரன்ஸ் என்பது முழுதும் ஜஸ்டிஸ் கக்ஷி பிரமுகர் ஆதரவிலும், பிரசன்னத்திலும் நடந்ததும், மற்றும் ஜஸ்டிஸ் கக்ஷியைச் சேர்ந்த இளைஞர், முதியோர் ஆகியவர்கள் பெரிதும் சுயமரியாதை இயக்கத்தில் இருந்து வந்ததும் சுயமரியாதை இயக்கத்திலுள்ள முதியோர், இளைஞர் ஆகியவர்கள் பெரிதும் இன்னும் ஜஸ்டிஸ் கக்ஷியில் இருந்து வருவதும் ஒருவரும் அறியாததல்ல.

மற்றும் சுயமரியாதை இயக்கம் அதனுடைய சமதர்மக் கொள்கையைக் கூட பார்ப்பனரல்லாத சமூகம் சமூகத்துறையில் சமதர்மம் அடைய வேண்டும் என்பதை முதன்மையாகக் கொண்டது என்பதை அநேக சுயமரியாதைக்காரர் ஒத்துக்கொண்டும், அதை அமுலில் நடத்த முயற்சித்துக் கொண்டும் வந்திருக்கிறார்கள். இன்னும் வருகிறார்கள் என்பது சிறிது கூட புதிதானது என்றோ, ரகசியமானது என்றோ யாரும் சொல்லிவிட முடியாது. எனவே பார்ப்பனரல்லாதார் சமூக முன்னேற்றம் என்பதைக் கருதி ஜஸ்டிஸ் கக்ஷியாருக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டிய சமயம் ஏற்பட்டால் அதைச் செய்ய ஆசைப்படுகின்றவர்கள் எந்தக் காரணத்தை முன்னிட்டும் வெட்கப்படவோ, வருத்தப்படவோ அவசியமில்லை என்பதை சுயமரியாதை இயக்க இளைஞர்களுக்கும், வாலிபர்களுக்கும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

(பகுத்தறிவு துணைத் தலையங்கம் 04.11.1934)

 

Pin It