மாயவரத்தில் பார்ப்பனரல்லாதார் மகாநாடும் சமரச சன்மார்க்க மகா நாடும் இளைஞர் மகாநாடும் கூடிக் கலைந்து விட்டது.  அதற்குச் சரியென்றும் அவசியமென்றும் தோன்றிய பல தீர்மானங்களும் நிறைவேற்றியிருக்கிறது.  இம்மகாநாடு நடந்த சிறப்பும் வந்திருந்த பிரதிநிதிகளும் தமிழ்நாட்டின் நாலா பக்கங்களிலிருந்தும் வந்திருந்த பெரியோர்களும் அவர்கள் ஒவ்வொரு தீர்மானத்தின் மீது பேசிய பேச்சுக்களும் மக்களுக்குப் பிறந்த உற்சாகங்களும் நேரில் பார்த்தவர்களே அறியக் கூடுமேயல்லாமல் மற்றபடி எவ்விதத்திலும் அதை அப்படியே தெரியப்படுத்துவதென்பது மிகவும் கஷ்டமான காரியமென்றே சொல்லுவோம்.  இம்மகாநாட்டை நடத்த தஞ்சை ஜில்லா தேசபக்தர்களும் பிரமுகர்களும் உழைத்த உழைப்பு மிகவும் பாராட்டத்தக்கதென்றே சொல்லுவோம்.  இந்நிலையில் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தினிடத்தில் பொறாமையும் துவேஷமும் கொண்டு “தமிழ்நாடு” பத்திரிகை செய்த எவ்வளவோ சூழ்ச்சிகளையும் தாண்டி எவ்வளவோ தூரம் சிறப்பாய் நடந்துவிட்டதென்று சொன்னால் யாரும் ஆச்சரியப்பட வேண்டியதுதான். 

periyar 680 மதுரையில் நடந்த மகாநாட்டின் போதும் ஸ்ரீமான் வரதராஜுலு  நாயுடு அவர்கள் காங்கிரசில் உழைத்து வந்த சில தேச பக்தர்கள் மதுரை மகா நாட்டுக்குப் போகாமலிருக்கச் செய்வதற்காக மதுரை மகாநாடு நடந்த தேதியிலேயே தேசீய மகாநாடு என்பதாக ஒரு மகாநாட்டை சென்னையில் நடத்தப் போவதாகத் தெரியப்படுத்தியிருந்ததும், இதன் மூலம் யாரையும் அதிகமாகத் தடுக்க முடியாதென்பதாகத் தெரிந்த பிறகு தனது மகாநாட்டை ஒத்திப் போட்டுவிட்டதாகத் தெரியப்படுத்தி விட்டதையும் இதற்குமுன் நாம் தெரியப்படுத்தியிருக்கிறோம்.  மாயவரம் மகாநாட்டிலேயும் அது போலவே சில இடையூறுகள் ஏற்பட முயற்சித்திருப்பதையும் வேறு பத்தியில் காணலாம். அப்படியிருந்தும் யாதொரு விக்கினமுமின்றி மகாநாடு செவ்வனே நடைபெற்று விட்டதானாலும் மகாநாடு நடந்த பிறகாவது சும்மா இருந்து விடாமல் மறுபடியும் மகாநாட்டைப் பற்றி ‘தமிழ்நாடு’ குறைகூறி தனது இயற்கையைக் காட்டியிருக்கிறது. மே 9 -ந் தேதி ‘தமிழ்நாடு’ பத்திரிகையில் “மாயவரம் மகாநாடு” என்ற தலைப்பின் கீழ் எழுதியிருப்பதாவது:-

  1. “மாயவரத்தில் நடந்த ஜஸ்டிஸ் கட்சி மகாநாடு முக்கிய விஷயங்களைப்பற்றி யாதொரு தீர்மானமும் செய்யாமல் கலைந்து போய் விட்டது;தஞ்சை ஜில்லாவிலேயே தற்கால முக்கிய விஷயம் தஞ்சை ஜில்லா போர்டு ரயில்வே ஆகும்.  அது சர்க்காருக்குக் கொடுத்து விடுவதா அல்லது போர்ட்டாரே வைத்துக் கொள்வதா என்பது பற்றி பெரிய வாதம் நடந்து கொண்டிருக்கும் போது மாயவரம் மகாநாடு அதை கண்ணெடுத்துக் கூடப் பார்க்கவில்லை”யென்று ஒரு குற்றம் சாட்டியிருக்கிறது.

இதன் யோக்கியதையைக் கவனிப்போம்.  தஞ்சாவூர் ஜில்லா போர்டு ரயில்வே சர்க்காருக்குக் கொடுப்பதில்லை என்பதாக ஏறக்குறைய முன்னமே தீர்மானமாகிவிட்டது.  அதன் பேரில் மகாநாடு செய்ய வேண்டிய வேலை ஒன்றுமே அதிகமாக பாக்கியும் இல்லை.  அப்படியிருக்க இதை ஒரு பெரிய குற்றமாகக் காட்டி மகாநாட்டைக் கண்டிப்பதன் ரகஸியம் வாசகர்களே உணர்ந்து கொள்ளலாம்.

  1. “ஜஸ்டிஸ் கட்சி தேசீயக் கொள்கைகளை ஆதரிக்கப் போகிறதா? இல்லையா? என்பது அதன் தீர்மானங்களிலிருந்து தெரியவில்லை” என்பதாக மற்றொரு குற்றம் சாட்டியிருக்கிறது.

தேசீயக் கொள்கைகள் என்பதைப் பற்றி நாம் பல தடவை எழுதியிருக்கிறோம்.  ஆயினும் பல பத்திரிகைகளும் பல தலைவர்களும் தேசீயம் என்கிற வார்த்தையை சுயநலத்துக்கும் வயிற்றுப் பிழைப்புக்கும் உபயோகப்படுத்திக் கொண்டு வருகிறார்களென்பதை இந்தக் காலத்தில் பெரும்பான்மையான ஜனங்கள் அறிந்துவிட்டதால் நாம் அதைப்பற்றி மறுபடியும் அதிகம் இதுசமயம் எழுதவில்லை.  ஆனாலும், ஜஸ்டிஸ் கட்சி மகாநாடு இந்தக் குற்றத்திலிருந்து தப்புவதற்கு மார்க்கமில்லாமல் நடந்து கொண்டது என்று சொல்லுவதற்கு இடமில்லை.  அதாவது அதன் கீழாகவே “மாகாண சுயாட்சி” வேண்டுமென்றும், “இந்தியா முழுதிற்கும் பூரண பொறுப்பாட்சி” வேண்டுமென்றும் அதற்காக இந்தியாவிலுள்ள சர்வ கட்சிகளையும் கூட்டிக் கலந்து என்ன செய்ய வேண்டுமென்று யோசிக்க வேண்டும் என்பதாகவும் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும் ஒப்புக் கொள்ளுகிறது.  இப்படிக்கிருக்க எந்த விதத்தில் ‘தமிழ்நாடு’ பத்திரிகைக்கு ஜஸ்டிஸ் கட்சியின் தீர்மானங்களிலிருந்து அது தேசீயக் கொள்கைகளை ஒப்புக் கொள்ளுகிறதா இல்லையா என்பது தெரியவில்லையோ அது  நமக்கு விளங்கவில்லை.

  1. “ஸ்ரீமான் கிருஷ்ணன் நாயர் நிலவரி விஷயமாக எவ்வளவோ பேசினார்.அதைப் பற்றி ஒரு தீர்மானத்தையுங் காணோம்” என்று ஒரு குற்றஞ்சாட்டி இருக்கிறது.  இது மிகவும் மோசமான காரியம் என்பதோடு “தமிழ்நாடு” பத்திரிகையின் தன்மை எப்படிப்பட்டதென்பதை இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.  “தமிழ்நாடு” பத்திரிகையானது மகாநாட்டில் நடந்த தீர்மானங்களைக் கூட கிரமமாகப் போடாமல் ஜனங்களுக்கு மகாநாட்டின் பேரில் அதிருப்தி ஏற்படும்படி விஷமப் பிரசாரம் செய்யவும் தைரியம் கொண்டுவிட்டது.

இந்த மகாநாட்டில் ரெவின்யூ செட்டில்மெண்டைப் பற்றி ஒரு தீர்மானம் செய்யப்பட்டிருக்கிறது.  அதாவது ரெவின்யூ செட்டில்மெண்ட் கொள்கைகள் கொண்ட ஒரு மசோதா சட்டசபையில் கொண்டுவர வேண்டுமென்றும், மற்றும் பலவிதமாக வாசகங்கள் கண்டு நிலவரியைப் பற்றி ஒரு தீர்மானம் கொண்டு வந்திருக்கிறது.  இப்படியிருக்க அடியோடு தீர்மானமே கொண்டு வரவில்லையென்று குற்றங் கூறுகிறது.  “சுயராஜ்யக் கட்சியார் நடத்தையைப் பற்றி ஜஸ்டிஸ் கட்சியார் இனி சட்டசபையில் என்ன செய்யப் போகிறார்கள் என்பதைப் பற்றி ஒன்றும் தீர்மானம் செய்யவில்லை”யென்று ஒரு குற்றம் சாட்டியிருக்கிறது. அதற்கு நாலு வரிக்கு மேலேயே “மகாநாடு மேட்டூர் தேக்கத்தையும் சர்வகலாசாலை சீர்திருத்த மசோதாவையும் மட்டும் கண்டிக்கத் தவறவில்லை.  இதிலிருந்து ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள் தங்களுடைய சட்டசபைப் போராட்டத்திற்கு மட்டும் வேண்டியவைகளை கவனித்துக் கொண்டார்கள்” என்று எழுதியிருக்கிறது.  இப்படியிருக்க எவ்விதத்தில் ஜஸ்டிஸ் கட்சியார் இனி என்ன செய்யப் போகிறார்கள் என்பதைத் தெரியப்படுத்தவில்லை என்று “தமிழ்நாடு” சொல்வதற்கு நியாயமிருக்கிறது?

  1. “ஜஸ்டிஸ் கட்சியாருக்கு மந்திரிப் பதவியில் ஆசை உண்டா?கிடைத்தால் எம்மாதிரி நடந்துகொள்ளப் போகிறார்கள் என்று ஒரு தீர்மானமும் செய்யவில்லை” என்று ஒரு குற்றம் சாட்டியிருக்கிறது. இது எவ்வளவு தூரம் வேண்டுமென்றே அக்கிரமமாகச் சாட்டிய குற்றமென்பதை ஒரு மூடன் கூட சுலபமாக அறிந்து கொள்ளக் கூடுமென்றே நினைக்கிறோம்.  ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள் என்போர்கள் மதுரை மகாநாட்டிலேயே இந்த சட்டசபையில் தாங்கள் மந்திரிப் பதவியை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பதாகத் தெரியப்படுத்தி விட்டார்கள். அப்படிக்கிருக்க மாயவரம் மகாநாட்டில் மந்திரிப் பதவியில் ஆசையுண்டா என்பதைப் பற்றியும் கிடைத்தால் எம்மாதிரி நடந்து கொள்ளுவோம் என்பதைப் பற்றியும் தெரிவிக்கவோ தீர்மானம் செய்யவோ இடமெங்கேயிருக்கிறது? என்பதை வாசகர்கள்தான் முடிவு செய்து கொள்ள வேண்டும்.
  1. “மாகாண சுயாட்சி கேட்பதும் இந்தியாவுக்கு பொறுப்பாட்சி வேண்டுமென்பதும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாயிருக்கிறது” என்பதாக ஒரு குற்றம் சாட்டியிருக்கிறது.நமது மாகாணத்துக்குப் பூரணப் பொறுப்பாட்சி கேட்பதும், இந்தியா ஒட்டுக்கும் பொறுப்பு வாய்ந்த அரசாங்கத்தைப் பெற திட்டங்களை வகுப்பதற்கு நாட்டிலுள்ள எல்லா அரசியல்வாதிகளுடையவும் மகாநாடு ஒன்றைக் கூட்ட வேண்டியதற்கான முயற்சியை சென்னை தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று செய்யப்பட்ட தீர்மானமானது எப்படி ஒன்றுக்கொன்று முரண்பட்டதாகும் என்பது நமக்கு விளங்கவில்லை.  இதையும் வாசகர்களேதான் யோசித்துக் கொள்ள வேண்டும். தவிர,
  1. “ஜஸ்டிஸ் கட்சியார் கேட்பது மாகாண சுயாட்சியா? அல்லது பூரண சுயராஜ்யமா? என்று தெரியவில்லை” என்பதாகஒரு குற்றம் சாட்டியிருக்கிறது.  மாகாணத்துக்குப் பூறா பொறுப்பாட்சியும் கேட்டுவிட்டு, இந்தியா முழுவதுக்கும் பொறுப்பாட்சித் திட்டங்களை வகுக்க எல்லா கட்சியார்களையும் ஒன்று கூட்டி யோசிக்க வேண்டுமென்று சொல்லும்போது “தமிழ் நாடு” பத்திரிகைக்கு எப்படி சந்தேகமேற்பட்டிருக்கிறதென்பது நமக்கு விளங்கவில்லை. தவிர,
  1. “பூரண சுயராஜ்யத்திற்கு வேலை செய்ய சர்வகட்சி மகாநாட்டைக் கூட்ட வேண்டுமென்றால், மாகாண சுயாட்சி பெற ஒரு வேலையும் செய்ய வேண்டாமென்பது அவர்கள் நினைப்பா?” என்று ஒரு கேள்வி கேட்பதன் மூலம் ஒரு குற்றத்தைச் சுமத்தி இருக்கிறது.இந்தக் கேள்வி “தமிழ்நாட்”டிற்கு எப்படி உண்டாயிற்றென்பதே தெரியவில்லை.
  1. இவ்வளவையும் எழுதிவிட்டு “இவையெல்லாம் ஜஸ்டிஸ் கட்சியாரின் மனக் குழப்பத்தையே காட்டுகின்றன.தேர்தலில் தோற்ற வேகத்தினால் மதுரையில் கூடிப் பல ஆச்சரியமான தீர்மானங்கள் செய்தார்கள்.  இப்பொழுது கொஞ்சம் காலம் கடந்துவிட்ட போதிலும் அவர்கள் குழப்ப நிலை இன்னும் தெளிவடையவில்லையென்பதையே மாயவர மகாநாட்டுத் தீர்மானங்கள் காட்டுகின்றன” என்று எழுதி கேவலப்படுத்தியிருக்கிறது.  எந்தத் தீர்மானத்தின் மூலம் குழப்பமிருப்பதாகக் கண்டுபிடித்திருக்கிறது?  என்பது நமக்கு விளங்கவில்லை.
  1. “ஜஸ்டிஸ் கட்சியார் கதர் கட்டிக் கொள்வதும், தீண்டாமை ஒழிக்க வேண்டும், சுயராஜ்யம் வேண்டும் என்று கேட்கத் துணிந்ததும் சென்ற தேர்தலின் பாடம் என்று சொல்லப்படுகிறது” என எழுதியிருக்கிறது. யாரால் சொல்லப்படுகிறதென்பதை எழுதவில்லை.  தீண்டாமை ஒழியக்கூடாதென்றாவது, சுயராஜ்யம் வேண்டாமென்றாவது ஜஸ்டிஸ் கட்சியார் எப்போதாவது, எங்காவது சொல்லியிருக்கிறார்களா என்பதை யோசித்துப்பார்க்கும்படி வாசகர்களையே கேட்டுக்கொள்கிறோம்.
  1. “ஜஸ்டிஸ் கட்சியாருக்கு இந்த நல்ல புத்தி ஏற்பட்டிருப்பதைக் கண்டு நாம் சந்தோஷிக்கிறோம்” என்று எழுதியிருக்கிறது.“தமிழ்நாடு” பத்திரிகை உண்மையாகச் சந்தோஷப படுவதாயிருந்தால் “தமிழ் நாடு” பத்திரிகைக்கு இம்மாதிரி விஷமப் பிரசாரம் செய்ய மனம் வருமா?  என்பதை வாசகர்களே யோசித்துப் பார்க்கட்டும்.

  

  1. “ராஜீய விஷயத்தில் ஜஸ்டிஸ் கட்சிக்கு இன்னும் பழய பின் புத்தி போகவில்லை” என்று எழுதியிருக்கிறது.ராஜீய விஷயத்தில் ஜஸ்டிஸ் கட்சியின் பின் புத்தி என்ன?  “தமிழ்நாடு”வினுடையவோ, காங்கிரசினுடையவோ, சுயராஜ்யக் கட்சியினுடையவோ, ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடுவினுடையவோ ராஜீய விஷயத்திலுள்ள “முன் புத்தி” இன்னதென்று தெரியப்படுத்தினால் யோக்கியமாயிருக்கும். இன்னும் என்னென்னமோ படிப்பதற்கே புரியாமல் உளறிக் கொட்டியிருக்கிறது.  இதை எல்லாம் பார்க்கும்பொழுது “தமிழ்நாடு” பத்திரிகையானது தன்னுடைய ஜாண் வயிறு வளர்ப்பதற்காக எவ்வளவு இழிவான காரியத்தைச் செய்யத் துணிந்திருக்கிறதென்பதையும், எவ்வளவு பெரிய சமூகத்தையும் பலிகொடுக்கத் துணிந்திருக்கிறதென்பதையும் அப்பத்திரிகைக்குக் கடுகளவாவது மனச்சாட்சியோ, இருதய சுத்தமோ, மனிதத் தன்மையோ இருக்கிறதா?  என்பதை அறியும் விஷயத்தை வாசகர்களுக்கே விட்டுவிடுகிறோம்.

மாயவரத்தில் கூடிய 2, 3 மகாநாடுகளிலும் சுமார் 20, 30 தீர்மானங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.  இவைகளில் 5, 6 தீர்மானங்களை மாத்திரம் அந்தப் பத்திரிகையில் போட்டிருக்கிறது. சாதாரண வாரப் பத்திரிகைகள் கூட சிலது முழுத்தீர்மானங்களையும் போட்டிருக்கிறது.  பார்ப்பனரல்லாதார் நன்மைக்கென்று ஏற்பட்டிருக்கிற இக்கட்சி விஷயத்தில் இப்பத்திரிகைக்கு இவ்வளவு துவேஷம் ஏன் உண்டாக வேண்டும்?  பார்ப்பனர் செய்யும் உபத்திரவம் போதாதென்று கருதியா,  இதுவொன்று முளைத்திருக்கிறது? என்று நினைக்க வேண்டியதிருக்கிறது.  பார்ப்பனப் பத்திரிகைகள் கூட இவ்வளவு மோசமாக நடக்கத் துணியவே இல்லை. “தமிழ்நாடு” பத்திரிகையானது பார்ப்பனரல்லாதார் சமூகத்துக்கு உடன்பிறந்தே சொல்லும் வியாதியாய்த் தோன்றி விட்டதைக் குறித்து நாம் வருத்தப்படாமலிருக்க முடியவில்லை.

  இது தவிர இன்னும் ஒரு உபத்திரவம் முளைத்திருக்கிறதையும் வருத்தத்துடன் தெரிவிக்கிறோம்.  அதாவது நாட்டுகோட்டை செட்டிமார்கள் நாட்டில் தோன்றியிருக்கும் ‘ஊழியன்’ என்கிற  ஒரு பத்திரிகை “தமிழ்நாடு” பத்திரிகைக்குத் தம்பியாகத் தோன்றியிருக்கிறது.  அது வரவரப் பச்சைப் பார்ப்பனப் பத்திரிகையாகப் போய்க் கொண்டிருக்கிறது.  அது எதற்காக இவ்வளவு பணத்தை சிலவு செய்து கொண்டு நடைபெற வேண்டுமோ நமக்குத் தெரிய வில்லை.  ஒரு வருஷ காலமாகவே அதன் பேச்சு மிகவும் கேவலமாகவே போய்க்கொண்டிருக்கிறது.  அப்பத்திரிகையை ஒரு கொடும் பார்ப்பனர் நடத்துகிறாரோ?  அல்லது பார்ப்பனரல்லாதார் நடத்துகிறாரோ? என்பது நாம் கண்டுபிடிக்க முடியாததாகவே  இருக்கிறது.  கொஞ்ச காலமாகப் பொருத்துப் பொருத்து பார்த்தே முடிவில் இதை எழுத வேண்டிய நிலைமைக்கு வந்து விட்டோம். என்செய்வது நடப்பது நடக்கட்டும் என்றே எழுதத் துணிந்தோம்.  இவ்வாரம் நமக்கு சாவகாசமில்லாததால் அதைப் பற்றி விரிவாக எழுத முடியாமல் போய்விட்டது.  ஆயினும் இது விஷயத்தில் நாம் மிகுதியும் வருத்தம் அடைகிறோம் என்பதை மாத்திரம் இதுசமயம் எழுதி இதை முடிக்கிறோம்.

(குடி அரசு - தலையங்கம் - 15.05.1927)