தோழர் உமா தொகுத்துள்ள “திராவிட இயக்க மும் சமூக நீதியும்” என்ற நூல் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளாகவும் கருத்துக் குவியலாகவும் இருக்கிறது.

ira uma book on dravidamதிராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசின் ‘திராவிட இயக்கமும் தமிழ்த் தேசிய உணர்ச்சியும்’ என்கிற கட்டுரையில் திராவிடம் என்றால் என்ன என்பதில் தொடங்கி, திராவிட இனத்தின் வரலாறும், திராவிட நிலத்தின் வரலாறும், திராவிட மொழியின் மூத்த மொழியான தமிழின் வரலாறும் ஆய்வுரீதியான ஆதாரங்களோடு அடுக்குகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

திராவிடத்திற்கு ஐரோப்பிய அறிஞர்கள் கொடுத்த ஆதாரத்தையும் குறிப்பாக இராபர்ட் கால்டுவெலின் ஒப்பிலக்கணம் என்கிற திராவிட மொழிக் குடும்பம் பற்றிய தகவல், நீதிக்கட்சி ஆட்சியில் தொடங்கி, திமுகவின் கலைஞர் ஆட்சி வரை திராவிடமும் தமிழும் எப்படிப் பயணித்தன என்பதை இந்த 22பக்க கட்டுரை நமக்கு ஏராளமான தரவுகளோடு தருகிறது.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றனின் ‘திராவிட இயக்கமும் வகுப்புவாரி உரிமையும்’ என்கிற கட்டுரை பார்ப்பனர் அல்லாதோர்களின் கல்வி உரிமைப் போரட்டத்தையும், பார்ப்பன ஆட்சியாளார்களின் சூழ்ச்சி முறையையும் விவரிக்கிறது.

1870இல் தொடங்கி நீதிக்கட்சி ஆட்சிக்கு வரும்வரை பார்ப்பனர் அல்லாதார் ஒற்றை விழுக்காடு மட்டுமே கல்வி கற்றவர்களாகச் சூழல் இருந்தும், ஆட்சிப் பணி, நீதித்துறை, கல்வித்துறை என்று அனைத்தையும் மூன்று புள்ளி ஒரு சதவீதம் மட்டுமே உள்ள பார்ப்பனர்கள் எப்படி ஆதிக்கம் செலுத்தினார்கள் என்ற புள்ளி விவரத்தோடு, நீதிக்கட்சி ஆட்சி மாணவர்களின் கல்விக்கு உதவியதோடு கல்வி நிலையங்களில் விதிதாச்சார முறையில் வேலை ஒதுக்கீடு முறை அமலுக்கு வந்ததையும், இராஜாஜியின் ஆட்சியில் கல்விக்கூடங்களை மூடியதும். ஓமந்தூரார் ராமசாமி ஆட்சியில் வகுப்புவாரி வேலை வாய்ப்பும், அதைக் கடுமையாகப் பார்ப்பனர்கள் எதிர்த்ததோடு ஓமந்தூராரைத் தாடி வைக்காத பெரியார் என வசைபாடியது (புகழ்ந்தது), புதிய அரசியல் சட்டத்தை வைத்து வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைப் பார்ப்பனர்கள் சூழ்ச்சியால் எதிர்கொண்டார்கள் என்கிற நீதிமன்ற விசாரணை முழுமையும், ஏராளமான தகவல்களும் 2006/11இல் கலைஞர் ஆட்சியில் நுழைவுத் தேர்வு ரத்தால் 85விழுக்காட்டுக்கு மேல் பார்ப்பனர் அல்லாதோர் மருத்துவப் படிப்பில் படித்தது என கலி.பூங்குன்றனின் கட்டுரை சமூகநீதிக் கல்வி ஆவணம்போல் இருக்கிறது.

 திமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ.இராசாவின் ‘திராவிட இயக்கமும் தாழ்த்தப்பட்டோரும்’ என்கிற கட்டுரை, காலம் காலமாக ஒடுக்கப்பட்ட மக்களாக இருந்தவர்களுக்கு நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் ஏற்பட்ட சமூகநீதியை விவரிக்கிறது.

பஞ்சமர்கள் பொதுத் தெருவில் நடந்து போகச் சட்டம்,

பறையன் என்ற சொல்லின் பயன்பாட்டை நீக்கியது.

தாழ்த்தப்பட்டோருக்கான முதல் அமைச்சகம்.

புரதவண்ணார் சமூகத்தினர் பகலில் நடக்க அனுமதி, 

பேருந்துகளில் தாழ்த்தப்பட்டோருக்கு அனுமதி,

கோவில் அறங்காவலர் குழுவில் தாழ்த்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு,

நாடகம் பார்க்க அனுமதி 

 என நீதிக்கட்சி கொண்டு வந்த ஒடுக்கப்பட்டோர்களுக்கான சட்டங்களும், சைமன் கமிசன், வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கர் மற்றும் காந்தியின் செயல்பாடுகளும், தெருக்களில் சாதிப்பெயர் ஒழிப்பு, பெயருக்குப் பின்னால் சாதிப்பெயர் ஒழிப்பு என திராவிடக் கருத்தியலின் சமூகநீதிச் சாதனையை விளக்குகிறது ஆ.ராசாவின் கட்டுரை.

தமிழ் நாடு சமூகநீதி மண், இங்கு மதவெறிக்கு இடமில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் இந்தியா சுதந்திரம் பெற்றபோது பிரிவினையைத் தொடர்ந்து மதக்கலவரம் நிகழ்ந்த போதும், பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது நாடு முழுக்க மதக்கலவரம் நிகழ்ந்த போதும் தமிழகத்தில் மதநல்லிணக்கம் பேணப்பட்டது. 

பேரா.அருணனின் ‘திராவிட இயக்கமும் மதவெறி எதிர்ப்பும்’ கட்டுரை, கடவுள் பற்றிய கற்பிதங்கள், கற்பனைகள் பற்றியும், மதவெறியால் நடந்த படுகொலைகள், வெகுமக்கள் பட்ட துயரம், இந்துமகா சபை, ஆர்.எஸ்.எஸ்-இன் மதவெறிச் செயல்பாடுகள், மதவெறி ஆட்சியைப் பற்றிய கடுமையான விமர்சனம், புராணங்களின் புளுகும், காப்பிங்களின் காவாளித்தனமும் பற்றிய தந்தை பெரியாரின் கருத்து என நிறைந்த ஆதாரங்களோடு இருக்கிறது.

இந்நூலில் இறுதிக் கட்டுரையாக பேரா.மு.ராமசுவாமி எழுதியுள்ள ‘திராவிட இயக்கமும் நாடகத் தமிழும்‘ என்ற கட்டுரை திராவிட இயக்கம் வளர்ந்த வரலாறு, திராவிட இயக்கம் சந்தித்த சோதனைகள், திராவிட இயக்கத்தில் நடத்தப்பட்ட நாடகங்கள், அந்த நாடகங்கள் மூலம் வெகுமக்களுக்குக் கொண்டு போன சமூக நீதி, அதோடு திராவிடக் கருத்தியல்களான சமூக நீதியில் அறிஞர் அண்ணா மற்றும் கலைஞரின் பங்களிப்பு என நீண்ட கட்டுரையாக பல தகவல்களோடு இக்கட்டுரை முடிகிறது.

கருஞ்சட்டைப் பதிப்பகத்தின் வெளியீடாக வெளிவந்துள்ள “திராவிட இயக்கமும் சமூக நீதியும்” என்ற இந்நூல் ஒவ்வொருவரும் கட்டாயம் படிக்க வேண்டிய ஒன்று.

திராவிட இயக்கமும் சமூக நீதியும்

ஆசிரியர்: இரா.உமா

வெளியீடு: கருஞ்சட்டைப் பதிப்பகம்

விலை: ரூபாய்.80

தொடர்புக்கு: 9940407468, 044 24726408

Pin It