கோவையில் சென்னை மாகாண பார்ப்பனரல்லாதார் விசேஷ மகாநாடு ஜுலை மாதம் 2, 3 தேதிகளில் அதாவது ஆனி மாதம் 18, 19 தேதி சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் நடத்துவதாய் முடிவாகத் தீர்மானிக்கப்பட்டு விட்டது. கோவை ஜில்லா மகாநாடாக கூட்டுவதாயிருந்த இந்த மகாநாடு காங்சிரசில் உள்ள சில பார்ப்பனரல்லாதாரின் உணர்ச்சியை அனுசரித்து மாகாண விசேஷ மகாநாடாகக் கூட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதோடு கூட, காங்கிரஸ் பார்ப்பனர்கள் தேசத்தின் பெயரால், காங்கிரஸ் என்கிற ஸ்தாபனத்தைக் கைக்கொண்டு அதன் மூலம் பார்ப்பனரல்லாதார்க்கு செய்து வரும் கெடுதியையும், தேசத்தின் விடுதலையைக் காட்டிக் கொடுத்து தேசத் துரோகம் செய்து பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ள செய்துவரும் சூக்ஷியையும் அறிந்து ஒன்றா காங்கிரசினது யோக்கியதையை வெளியிலெடுத்துச் சொல்லி பாமர மக்களை அக்காங்கிரஸ் படுகுழி மோசத்தில் இருந்து தப்புவிக்க வழிதேட வேண்டும். அல்லது காங்கிரஸைக் கைப்பற்றி அதிலுள்ள அயோக்கியர்களையும், சுயநலக்காரரையும் வெளியாக்கி காங்கிரசின் மூலம் தேசத்திற்கு உண்மையான விடுதலையும், சுயமரியாதையும் உண்டாகும்படி செய்ய வேண்டும் என்கிற ஆசையானது ஜஸ்டிஸ் கக்ஷியைச் சேர்ந்த சில தலைவர்களுக்கு உண்டானதினாலும் மாகாண பொது மகாநாடாக கூட்டி பார்ப்பனரல்லாத கனவான்களில் அரசியல் விஷயத்திலும் மற்றும் பல விஷயங்களிலும் அபிப்பிராய பேதப்பட்ட எல்லா கனவான்களையும் அழைத்து ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்ற நோக்கத்துடனும் அம்மகாநாடு கூட்டவேண்டிய அவசியம் ஏற்பட்டது என்றும் சொல்லலாம். எனவே, இம்மாகாண பார்ப்பனரல்லாத பொதுமக்களுக்கு இதுசமயம் பெரிய பொறுப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பதை ஞாபகப்படுத்துகிறோம்.

periyar and gt naiduசுயராஜ்யக் கக்ஷியையும் ஜஸ்டிஸ் கட்சியையும் வைது கொண்டு தேசியக் கட்சியின் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கும் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடுவுக்கும், அதே மாதிரி சுயராஜ்ஜியக் கட்சியை அக்கிரமக் கட்சி என்று சொல்லிக் கொண்டும் ஜஸ்டிஸ் கட்சியை பார்ப்பனரல்லாதார் எல்லாருக்கும் பிரதிநிதியான கட்சி அல்லவென்று சொல்லிக் கொண்டும் சன்மார்க்க சங்கத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு இருக்கும் ஸ்ரீமான் கல்யாணசுந்திர முதலியார் அவர்களுக்கும் மற்றும் இதுபோலவே 'காங்கிரஸ் கொள்கையும் தப்பு, சுயராஜ்ஜியக் கக்ஷியார் நடவடிக்கையும் பிடிக்கவில்லை, ஜஸ்டிஸ் கக்ஷித் தலைவர்களிடத்திலும் நம்பிக்கை இல்லை' என்று சொல்லிக் கொண்டு மந்திரிகளை ஆதரிக்க வேண்டியது தனது கடமை என்றும் சொல்லிக் கொண்டிருக்கும் ஸ்ரீமான் டி. ஏ. ராமலிங்க செட்டியாருக்கும் மற்றும் 'காங்கிரஸ் நல்லது, அதை நடத்துகிறவர்கள் அயோக்கியர்கள், அவர்களை வெளியாக்கி காங்கிரஸைக் கைப்பற்றிக் கொள்ள வேண்டும். ஜஸ்டிஸ் கக்ஷியின் சமூக சம்பந்தமான கொள்கைகள் சரியானதுதான். ஆனால், அதன் அரசியல் கொள்கை காங்கிரஸ் கொள்கையாக இருக்க வேண்டும்' என்று சொல்கிற ஸ்ரீமான் ஆர்.கே. ஷண்முகம் செட்டியாருக்கும் மற்றும் யாதொரு கொள்கையும் இல்லாமல் மாதம் 30 நாள் நடந்தேற வேண்டியதும், 5500 ரூபாய் சம்பளம் பெறுவதும் தவிர அது நிரந்தரமாய் கிடைத்துக் கொண்டிருக்க வேண்டியதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார் என்கிற கொள்கையுடைய மந்திரிமார்களுக்கும் இவர்கள் இத்தனைப் பெயருடைய கோஷ்டியாருக்கும் பின்பற்றுவோர்க்கும் இம் மகாநாடு தாராளமாய் வழி திறந்திருப்பதுடன் இவர்கள் இத்தனை பேரும் சொல்லும் யோசனையை வணக்கத்துடனும் சகிப்புத் தன்மையுடனும் காது கொடுக்கவும் அவற்றிற்கு சரியான நியாயம் வழங்கவும் தயாராக காத்துக் கொண்டிருக்கிறது.

மதுரை மகாநாடும் இப்படியேதான் எல்லோரையும் வரவேற்க காத்திருந்தது. ஆனால், சிலருக்கு அதுசமயம் பலவித சந்தேகங்களும், அசௌகரியங்களும் ஏற்பட்டிருக்கலாம். இப்போது மதுரை மகாநாடு நடந்த பிறகும் காங்கிரஸ் நடைமுறையைக் கண்ட பிறகும் அவரவர்களுக்கு ஏற்பட்டிருந்த சந்தேகங்களும் அசவுகரியங்களும் அநேகமாக ஒழிந்திருக்குமென்றே எண்ணுகிறோம். எப்படியெனில் மகாத்மாவின் நிர்ணயமான திட்டத்தை காங்கிரஸ் உதைத்துத் தள்ளியிருந்துங் கூட ஜஸ்டிஸ் கட்சி அதை ஏற்றுக் கொண்டதும், “இரட்டையாட்சியை ஒழிக்க வேண்டும், மந்திரி சபையை ஒழிக்க வேண்டும்” என்று காங்கிரஸ் செய்த தீர்மானத்தைக் காங்கிரஸ் தலைவர்கள் என்பவர்களே உதைத்துத் தள்ளிவிட்டு இரகசியமாய் இரட்டை ஆட்சியையும் வெளிப்படையாய் மந்திரிகளையும் சர்க்காரையும் ஆதரித்து வந்தும், ஜஸ்டிஸ் கட்சி தைரியமாய் மந்திரி சபையையும் சர்க்காரையும் எதிர்த்து வருவதும் இதன் பலனாக மந்திரி பதவிகளை வலிய தங்களுக்குக் கொடுத்தாலும் எடுத்துக் கொள்ளுவதில்லை என்று உறுதியாய் இருப்பதும் யாவரும் அறிந்த விஷயமேதான்.

ஆதலால் ஜஸ்டிஸ் கட்சியின் அரசியல் கொள்கைகளிலோ சமூகக் கொள்கைகளிலோ நிர்மாணத் திட்டத்திலோ இனி யாரும் குறை கூறிக் கொண்டு சாக்குப் போக்குச் சொல்ல முடியாது. “நடத்துகிறவர்கள் ஒழுங்காயில்லை, தலைவர்கள் சரியாயில்லை” என்று சொல்லவோ “அடிப்படைத் தத்துவம் சரியாயில்லை” என்று சொல்லவோ இனி யாருக்கும் இடமும் இல்லை. ஏனெனில் யாவர்களும் வந்து அவரவர்கள் அபிப்பிராயங்களைச் சொல்லி அவற்றை ஒப்புக் கொள்ளாததினாலோ அல்லது “மற்றவர்களை உள் சேர்க்கக் கூடாது. ஒரு சிலரிடமே ஆதிக்கம் இருக்க வேண்டும்” என்று சூக்ஷியைக் கண்ட பிறகோ, யாராவது அதன் பேரில் குற்றம் சொன்னால் சொல்லலாம்.

அப்படிக்கு ஒன்றும் இல்லாமல் எல்லோரையும் வரவேற்க தயாராய் இருப்பதுடன் எல்லோருடைய அபிப்பிராயத்திற்கும் மதிப்புக்கொடுக்கத் தயாராயிருக்கும்போது வருவதற்கு இசையாதவர்களை பார்ப்பன பயம் காரணமில்லாமல் வேறு சாக்குச் சொல்லவே முடியாது என்றே சொல்லுவோம்.

தவிர, மகாநாட்டின் அக்கிராசனர் ஸ்ரீமான் திவான் பகதூர் எஸ்.குமாரசாமி ரெட்டியார் அவர்கள். அவரைப் பற்றி நமது மாகாணத்தில் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அவர்கள் 1907 - ம் வருஷத்தில் ஏற்பட்ட வங்காளப் பிரிவினைக் கிளர்ச்சியின் போதே தேசீய விஷயத்தில் ஈடுபட்டவர். தூத்துக்குடி சுதேசி ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனிக்கு முக்கியஸ்தராயிருந்து கிராமம் கிராமமாகச் சுற்றி 10 லட்சக்கணக்காக பொருள் வசூல் செய்து கப்பல்கள் வாங்கி நடத்தியும் மற்றும் எவ்வளவோ பிரயாசைப்பட்டவரும், பார்ப்பனரல்லாதார் இயக்கத்திற்காக பத்து ´ காலத்திற்கு அதிகமாகவே ஒரே கொள்கையுடன் கட்டுப்பாடாய் இருந்து நாணயமாக நடந்து வருபவரும், திருநெல்வேலி ஜில்லா கவர்மெண்ட் வக்கீலாய் இருந்தவரும், ஜில்லா போர்டு பிரசிடெண்ட்டாக இரண்டு முறை இருக்கிறவரும், சென்னை சட்டசபையில் முக்கிய அங்கத்தினராகவும் இருந்தும் வருகிறவர். எனவே, அவரது தலைமைப் பதவி “காங்கிரஸ் தலைவர்கள்” தலைமைப் பதவியைப் போலல்லாமல் கண்ணியத்துடனும் சாமர்த்தியத்துடனும் நடைபெறும் என்பது நமது உறுதி. இப்பேர்ப்பட்ட தலைவர் இந்த நெருக்கடியான சமயத்தில் கிடைத்ததே மகாநாட்டின் பாக்கியம் என்று சொல்ல வேண்டும். அதுபோலவே, வரவேற்புத் தலைவராகிய ஸ்ரீமான் பி. இரத்தினசபாபதி கவுண்டர் அவர்களைப் பற்றியும் நாம் அதிகம் சொல்ல வேண்டியதில்லை. அவர், இந்த ஜில்லாவின் பெரும் பாகமான சமூகமாகிய கொங்கு வேளாளர் சமூகப் பிரமுகர்களில் ஒருவர். கொங்கு வேளாளர் சங்கத்திற்கு ஆதி முதல் காரியதரிசியாகவும் கடைசியாக நடந்த மகாநாட்டிற்கு வரவேற்புத் தலைவராகவும், கோயம்புத்தூர் ஜில்லா பஞ்சு வர்த்த கர்களில் முக்கியஸ்தராகவும் செல்வந்தராகவும் பொதுநலச் சேவையில் உண்மையான பற்றுக் கொண்டவராகவும் உள்ள கனவான். இந்த ஜில்லாவில் அவருக்குத் தமது சமூகத்திலும் மற்றும் வியாபார சமூகத்திலும் பாமர மக்களிடத்திலும் விசேஷ செல்வாக்குண்டு. எனவே, அவரது வரவேற்புத் தலைமையானது யாவருக்கும் திருப்தியைத் தரத்தக்கதாகவே இருக்கும்.

அதன் காரியதரிசிகளோ மிகவும் விசேஷப்பட்டவர்கள்:- ஒன்று, ராவ்பகதூர் சி. எஸ். இரத்தினசபாபதி முதலியார், எம். எல். சி. ஜில்லாபோர்டு பிரசிடெண்ட், முனிசிபல் சேர்மன். இரண்டு, ஸ்ரீமான் பி. எஸ். சாத்தப்ப செட்டியார், காளீஸ்வரர் மில் முதலிய பல மில்லுகளின் ஏஜண்ட். அவரது முயற்சி எல்லோரையும் விட மிகச் சிறந்தது. மூன்று, ஸ்ரீமான் சி. வி. நஞ்சய கவுண்டர், கோயம்புத்தூர் ஜில்லா போர்டு வைஸ் பிரசிடெண்ட்டு ஸ்ரீமான் வி. சி. வெள்ளியங்கிரி கவுண்டர் அவர்களின் மருமான். நான்கு, பி.எஸ்.ஜி சன்ஸ் வெங்கடசாமி நாயுடு. ரங்கவிலாஸ் மில் ஏஜண்ட், கம்ம நாயுடு சமூகப் பிரமுகர், அநேகப் பெரிய தர்மங்கள் செய்தவரும், ஜில்லாவில் மிக்க செல்வாக்குடையவரும் ஆவார். 5. ஸ்ரீமான் அருணாசலம் செட்டியார். கோயம்புத்தூர் முனிசிபல் வைஸ் சேர்மன், தேவாங்க குல பிரமுகர், பொதுக் காரியங்களில் மிகவும் ஊக்கமாகவும் உழைத்து வருபவர். ஆறு, ஸ்ரீமான் நஞ்சுண்ட கவுண்டர். முனிசிபல் கவுன்சிலர், ஒரு பெரிய பாங்க்கின் காரியதரிசி, ஒக்கிலிகர் சமூகப் பிரமுகர். இன்னமும் இது போன்ற நிர்வாக சபை அங்கத்தினர்கள் ஆகிய அநேக பெரியோர்களையும், முக்கியஸ்தர்களையும் கொண்ட இம்மகாநாட்டை விசேஷ மகாநாட்டில் மிக விசேஷமானது என்று சொல்வது மிகையாகாது.

ஆதலால் மாகாணத்தில் பல பாகங்களிலும் சிறப்பாக தமிழ்நாட்டில் உள்ள எல்லா ஜில்லா, தாலூகா, கிராமங்களில் இருந்தும் தவறாமல் பிரதிநிதிகள் ஆயிரக்கணக்காக வந்து சேரவேண்டியது ஒவ்வொரு உண்மையான பார்ப்பனரல்லாதாரின் கடமையாகும். முக்கிய விசேஷம் என்னவென்றால் ஸ்ரீமான்கள் வரதராஜுலு நாயுடு, கல்யாணசுந்திர முதலியார், ஆர். கே. சண்முகம் செட்டியார், வி.ஓ. சிதம்பரம்பிள்ளை ஆகிய அநேக கனவான்கள் இம்மகாநாட்டிற்கு வரக்கூடும். அவர்கள் யாவரும் வருவதற்குத் தகுந்த அழைப்புகளும் ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.

இம்மகாநாட்டின் மூலமும் அநேக கனவான்களின் விஜயம் மூலமும் பார்ப்பனரல்லாத சமூகத்திற்குள் ஒரு புது கட்டுப்பாடும், ஒற்றுமையும், பொது வேலைத் திட்டமும் ஏற்படக்கூடும் என்பதற்கு அநேக ஆதாரங்கள் இருக்கின்றன. யாவரும் தவறாமல் வந்து மகாநாட்டின் உத்தேசத்தை நிறைவேற்றி வைக்க வேண்டுகிறோம்.

(குடி அரசு - தலையங்கம் - 19.06.1927)

Pin It