தோழர் சர். ஆர்.கே. ஷண்முகம் தேர்தல் விஷயத்தில் காங்கிரஸ்காரர்கள் என்பவர்களும், காங்கிரஸ் பத்திரிகைகள் என்பவைகளும் மனதறிந்த பொய்யை தைரியமாய் பேசியும், எழுதியும் வருவதானது காங்கிரசின் யோக்கியதையையும் அதிலுள்ளவர்களின் நாணையத்தையும் தெரிந்து கொள்ள ஒரு சாதனமாகும்.

பாக்கி இருக்கும் தேர்தல்களில் தங்களுக்கு தோல்வி ஏற்படாமல் இருப்பதற்காகச் சில பொய்கள் சொல்லலாம் என்பது ஒரு அளவுக்கு அனுமதிக்கப் பட்டதானாலும் சத்தியமும், நீதியும் அடிப்படையாகக் கொண்ட காங்கிரஸ் என்பதைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் ஜனங்கள் அந்த ஒரு அளவையும் தாண்டி மனதறிந்த பொய்யைப் பரப்ப முயற்சிப்பது என்பது மிகவும் வெறுக்கத் தகுந்த காரியமேயாகும்.

நிருபர்கள் என்கின்ற பெயரால் எதையும் எழுதிக் கொள்வதற்கு பத்திரிகை உலகில் பழக்கம் இருந்து வருகின்றது என்றாலும் ஒரு வாரத்தில் பொய்யாகப் போகும் விஷயங்களைக் கூட எழுதுவது என்பது சீக்கிரத்தில் பொது ஜனங்களிடம் மதிப்பை இழப்பதற்குத் தான் பயன்படுமே தவிர காரிய சித்திக்கு அனுகூலமாகாதென்றே சொல்லுவோம்.periyar 524கடசித் தடவை நடந்த சென்னை சட்டசபைத் தேர்தலில், பனக்கால் அரசர் தொகுதியில் இதே மாதிரியாகவே அரசருக்குப் போட்டியாய் நின்ற தோழர் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யருக்கு ஜெயம் கிடைத்து விட்டது என்று பொய் ஆரவாரம் செய்து மக்களை ஏமாற்றினார்கள். "ஜஸ்டிஸ் கட்சி மாண்டு விட்டது" என்று பார்ப்பனர்கள் புகையிலை வழங்கினார்கள். டிங்டாங்டிங் என்று தலையங்கமிட்டு சாவோலை பாடினார்கள்.

இதற்கு எல்லாப் பார்ப்பனர்களும், பார்ப்பனப் பத்திரிக்கைகளும் அஸ்திவாரமாகவும், ஆதரவாகவும் இருந்தார்கள். பொய்பிரசாரத்தின் பயனாய் மற்ற தொகுதி தேர்தல்கள்கூட பாதிக்கப்பட்டு விட்டன.

என்றாலும், இவற்றாலெல்லாம் பார்ப்பனர்கள் அடைந்த பலன் என்ன என்று பார்ப்போமானால், முன்னைய நிலைமையை விட மோச நிலைமையையே அடைந்தார்கள் என்பதோடு தாங்களாகவே தங்கள் தலையை மறைத்துக் கொள்ள வேண்டிய நிலைமைக்கு வந்தார்கள். பிறகு காந்தியார் உப்பு சத்தியாக்கிரக நாடகம் ஆரம்பித்த பின்னரே சிலருக்காவது வெளியில் தலை நீட்டக்கூடிய யோக்கியதை ஏற்பட்டது.

இப்போதும் இந்த சூட்சிகளினாலெல்லாம் அந்த நிலைதான் இன்னும் அதைவிட வலுவான அஸ்திவாரத்தின் மீது ஏற்படுமே அல்லாமல் பார்ப்பனரல்லாதாருக்கு ஏதும் மோசம் ஏற்பட்டு விடும் என்றோ சிறிதும் கருத வேண்டியதில்லை.

தோழர் ஷண்முகம் முன்னுக்கு வருகிறார், இன்னும் வரப்போகிறார் என்கின்ற பொறாமையே இன்று பார்ப்பனர்களை இவ்வளவு தூரம் அவருக்கு விரோதம் செய்யத் தூண்டுகிறதே ஒழிய மற்றபடி ஷண்முகம் செய்த குற்றம் இன்னது என்று சொல்ல எவரும் முன்வரவே இல்லை.

தோழர் ஷண்முகம் உறுதியாய் நம்பி இருந்த ஓட்டுகள் சிலது மாறிவிட்டது உண்மையாய் இருக்கலாம். அதற்குக் காரணம் சென்னை முதலிய இடங்களில் உள்ள வக்கீல் பார்ப்பனர்களுடைய ஆதிக்கத்திற்கு உட்பட்ட சிலர் வேறு மார்க்கமில்லாமல் தங்களுடைய ஜீவாதாரங்கள் சில வக்கீல்கள் கையில் சிக்கி இருக்கிற காரணத்தால் பயந்து அவர்களுக்கு அடிமைப்பட வேண்டியதாயிற்று.

என்றாலும், அதனால் தோழர் ஷண்முகத்துக்கு எதிர்பார்த்ததிலிருந்து சில ஓட்டுகள் குறைந்து விட்டது என்று சொல்லுவதுதான் யோக்கியமாகுமே ஒழிய, ஷண்முகம் தோற்று விட்டார் தோழர் சாமி வெங்கிடாசலம் செட்டியார் 200 ஓட்டுகள் அதிகத்தில் வெற்றி பெற்று விட்டார் என்று சொல்லுவது மனதார துணிந்து கற்பனை செய்து சொல்லும் பொய்யே தவிர வேறு ஒன்றும் இல்லை.

செட்டி நாட்டில் சில ஓட்டுகள் தவறி விட்டது என்றாலும் ஆந்திர நாட்டில் எதிர்பார்த்ததற்கு மேலாகவே கிடைத்து அந்தக் குறைவை பூர்த்தி செய்து தக்கதொரு வெற்றி ஏற்பட்டிருக்கிறது என்பதை தைரியமாய் சொல்லுவோம்.

இந்தப் பொய்ப் பிரசாரப் பத்திரிக்கைகளுக்கும் விஷமப் பிரசாரக் கூலிகளுக்கும் வெட்கம் வரத்தக்க நிலையில் புத்தி கற்பிக்கத் தக்க நிலையில் ஷண்முகத்தின் வெற்றிச் சேதி வெளியாகப் போகின்றது என்கின்ற விஷயத்தில் நமக்கு சிறிதும் சந்தேகமில்லை.

(பகுத்தறிவு துணைத் தலையங்கம் 04.11.1934)

Pin It