periyar 32“குடி அரசு” ம் சுயமரியாதை இயக்கமும் ஏற்பட்டது முதல் தமிழ் நாட்டில், பார்ப்பனர்கள் பிராமண மகாநாடு என்றும் வருணாச்சிரம தரும மகாநாடு என்றும், ஆரிய தர்ம பரிபாலன மகாநாடு என்றும், சநாதந தர்ம மகாநாடு என்றும், ஆஸ்திக மகாநாடு என்றும் இந்து மத தர்மமகாநாடு என்றும் இப்படி பல்வேறு பெயர்களால் அடிக்கடி மகாநாடுகளைக் கூட்டுவதும் இந்து மதம், வேதம், சாஸ்திரம், புராணம், ஸ்மிருதி, இதிகாசம், மோட்சம், நரகம் என்பவைகளைப் பற்றிப் பேசி நிலைநிறுத்தித் தங்களை மிக்க உயர்ந்த ஜாதிக்காரர்கள் என்று தாங்களே நினைத்துக் கொண்டு, தங்களுக்கு தனி மரியாதையும் தனி சுதந்திரமும் கொடுக்க வேண்டுமென்று தீர்மானம் செய்து கொண்டு, பார்ப்பனர்கள் தவிர மற்றவர்களையெல்லாம் குறை கூறிக் கொண்டும், அவர்கள் முன்னேற்றத்தைப் பற்றி ஆத்திரமும் பொறாமையுங் கொண்டு அதற்குத் தடைகளைக் கற்பிப்பதும் ஆகிய காரியங்கள் செய்து வருவதோடு, ஸர்க்காரையும் தங்களிஷ்டப்படி நடக்க வேண்டுமென்றும், அதற்கு விரோதமாய் நடந்தால் ஸர்க்காருக்கு விரோதிகளாய் உள்ளவர்களிடம் சேர்ந்து கொள்ளுவோம் என்று பயப்படுத்துவதும் ஆகிய காரியங்களைச் செய்து கொண்டே வந்திருக்கிறார்கள்.

இந்த கொள்கையை அனுசரித்தே சென்ற மே மாதம் 31 ம் தேதியில் கும்பகோணத்தில் “சென்னை மாகாண பிராமண மகாநாடு” என்னும் பேரால் ஒரு மகாநாட்டைக் கூட்டி சில பார்ப்பனர்கள் சேர்ந்து சீர்திருத்த சம்பந்தமான பல கொள்கைகளையும், சட்டங்களையும் எதிர்த்துப் பேசி கண்டித்துத் தீர்மானம் செய்திருப்பதோடு சர்வகட்சி மகாநாட்டில் பிராமணர்களுக்கென்று பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டுமென்றும், சாரதா சட்டத்தை எடுத்து விட வேண்டுமென்றும், டாக்டர் கவர் மசோதாவை நிறைவேற்றி வைக்கக் கூடாதென்றும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

இந்த மகாநாட்டிற்கு ஸர்க்கார் உத்தியோகத்தில் வெகுகாலம் சேவை செய்து பென்ஷன் வாங்கிக் கொண்டிருக்கும் ஒரு ஐயங்கார் பார்ப்பனர் வரவேற்பு அக்கிராசனராகவும், சென்னை நீதி ஸ்தலத் தில் வெகுகாலம் வக்கீலாயிருந்தும் சென்னை ஹைகோர்ட்டில் சில காலம் ஜட்ஜ் ஆகயிருந்தும் லட்சக்கணக்கான ரூபாய்கள் சம்பாதித்து இப்பொழுதும் வக்கீல் உத்தியோகத்தில் மாதம் ஆயிரக்கணக்காக பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கும் திரு. வி. வி. சீனிவாசையங்காராகிய மற்றொரு ஐயங்கார் பார்ப்பனர் மகாநாட்டின் தலைவருமாவார்.

இவ்விரு ஐயங்கார்களும் மகாநாட்டில் வரவேற்பு அக்கிராசனர் என்ற முறையிலும், மகாநாட்டுத் தலைவர் என்கிற முறையிலும் செய்திருக்கும் பிரசங்கங்களைக் கவனித்துப் பார்த்தால் பார்ப்பனப் புரட்டுகள் என்பதும், அவர்கள் செய்துவரும் சூட்சிகள் என்ன வென்பதும், அவர்கள் நம்மை எவ்வளவு கேவலமாகக் கருதி ஏமாற்றப் பார்க்கிறார்களென்பதும், சீர்திருத்தங்களுக்கும், முன்னேற்றங்களுக்கும், மக்களின் ஒற்றுமைக்கும், சமத்துவத்திற்கும் விடுதலைக்கும் பார்ப்பனர்கள் எவ்வளவு விரோதிகளாய் இருந்து வந்திருக்கிறார்கள் என்பதும், இன்றைக்கும் இருக்கிறார்கள் என்பதும் நன்றாய் விளங்கும்.

உதாரணமாக வரவேற்பு அக்கிராசனர் திரு. இராமானுஜம் ஐயங்கார் “இந்த தேசத்தை நம்முடைய தேசத்தார் ஆளுவதாய் ஏற்பட்டால் அப்போது நமது நிலை என்னமாயிருக்கும் என்கின்ற விஷயத்தில் எனக்கு மிக பயமாயிருக்கிறது” என்று சொல்லி பிறகு “அதற்கு ஆதாரமாக இரண்டு சங்கதிகளை தெரிவிக்கிறேன்.

அதாவது சில மாதங்களுக்கு முன்னால் செய்யப்பட்ட கலியாணச் சட்டம் என்பது ஒன்று; அப்பிராமணர்களுக்கு நம்மிடத்தில் இருக்கும் விரோதபாவம் என்பது மற்றொன்று” என்று சொல்லியிருக்கிறார். அந்த விரோதபாவத்துக்கு ஆதாரங்கள் காட்டும் போது எல்லா வகுப்பார்களுக்கும் சம சந்தர்ப்பம் உத்தியோகங்களில் கிடைக்கும் படி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதை எடுத்துக் காட்டியிருக்கிறார்.

இதைக் காட்டுகிற முறையில் ஸர்க்காரார் நல்ல வேலைக்காரர்களாயும், பரீட்சையில் தேறினவர்களாயும் பார்த்து உத்தியோகங்களுக்கு நியமித்துக் கொண்டிருந் ததை மாற்றி இப்பொழுது மற்றவர்களை (அதாவது கெட்ட வேலைக்காரர்களையும் பரீட்சையில் தேறாதவர்களையும்) வேலைக்கு வைத்துக் கொள்ள வேண்டுமென்று ஏற்பாடு செய்திருப்பதாகச் சொல்லுகிறார்.

இந்த இரண்டு காரணங்களையே பிரிட்டிஷ் அரசாங்கம் மாறி இந்தியர்களால் இந்தியாவை ஆளப்படும் நிலைமை ஏற்பட்டு விட்டால் தங்களுக்கு ஏற்படக் கூடிய ஆபத்துக்கு முக்கிய உதாரணமாக எடுத்துக் காட்டியிருக்கிறார்.

ஆகவே இந்த நாட்டிற்கு அந்நிய அரசாங்கம் தான் இருக்க வேண்டும் என்கின்ற விஷயத்தில் தங்களை உண்மையான பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர்களுக்கு எவ்வளவு கவலையிருந்து அந்த அந்நிய ஆட்சிக்கு அவர்கள் எவ்வளவு உதவி செய்து வந்திருக்கிறார்கள் என்பது நன்றாய் விளங்கும்.

இது தவிர வேதத்தை பிராமணர்கள் எல்லோரும் படித்து அதன் படியே எல்லோரும் நடக்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறார். நிற்க, தீண்டாமை விஷயமும், ஆலய பிரவேச விஷயமும், வேதத்திலும் தர்ம சாஸ்திரத்திலும் கண்டிப்பாய் சொல்லியிருக்கிற படியால் அதற்கு விரோதமாக நடந்தால் மற்ற விஷயங்களில் வேதமும் தர்ம சாஸ்திரமும் அலட்சியஞ் செய்யப்பட்டு விடுமாதலால் தீண்டாமை விலக்குவதற்கும் தீண்டாதார்களை ஆலய முதலியவைகளில் அனுமதிப்பதற்கும் கண்டிப்பாய் இடங்கொடுக்கக் கூடாதென்று சொல்லியிருக்கிறார்.

ஆகவே பார்ப்பனர்கள் வேதத்தையும் சாஸ்திரத்தையும் காப்பாற்றுவதற்காக தீண்டாமை விலக்குக் கூடாதென்றும், ஆலயங்களிலும், தெருக்களிலும் பிரவே சிக்க விடக் கூடாதென்றும் சொல்லப்படுவதானால் வேதமும், சாஸ்திரமும் காப்பாற்றப்பட்டுவிட்டால் வேதத்தின் படியும் சாஸ்திரத்தின் படியும் நமது நிலைமை என்னமாய் இருக்குமென்பதை வேத சாஸ்திரங்களில் நம்பிக்கையுள்ள ஆஸ்திகர்களையும் இந்துக்களையும் யோசித்துப் பார்க்கும் படி வேண்டிக் கொள்ளுகிறோம்.

கடைசியாக மகமதியர்கள் செய்த பலாத்காரங்களுக்கும் கிறிஸ்தவர்கள் செய்த சூட்சிகளுக்கும் தப்பிப் பிழைத்த நாம் இனி எதற்கும் பயப்பட வேண்டியதில்லை என்பதாகச் சொல்லி தைரியமும் காட்டிக் கொண்டிருக்கிறார்.

நிற்க மகாநாட்டின் தலைவர் திரு.வி.வி. சீனிவாசையங்கார் அவர்களும் முன் பேசிய வரவேற்பு அக்ராசனரை தழுவியே பேசியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அதில் அவர் கொஞ்ச காலத்திற்கு முன்பு இந்தியாவில் பிரமுகர்களும் பாமர ஜனங்களும் பிரிட்டீஷ் கவர்ன்மெண்டார் செய்திருக்கும் நன்மைகளைப் பாராட்டி இந்தியாவிற்குப் பிரிட்டீஷ் ராஜ்யத்தை அனுப்பியதற்காகக் கடவுளுக்கு நன்றி கூறுவது வழக்கம் என்றும், ஆனால் இப்போது சுயேச்சையடைய பிரதிநிதி ஸ்தலங்கள் வேண்டுமென்று கருதி மேல் நாட்டு ஜனநாயக ஸ்தாபனங்களை ஏற்படுத்தும் நோக்கத்தை கொண்டிருக்கிறார்களென்றும் இது பெரிய தவறு என்றும் அதைவிட ஆபத்தான காரியம் வேறொன்றும் இல்லை என்பதாகத்தான் நினைப்பதாகவும் சொல்லியிருக்கிறார்.

சீர்திருத்தக் கோரும் எவரும் ஜனங்களுடைய தன்மையையும் பழைய அனுபவங்களையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டுமென்றும் ஆதலால் நமக்கு சீர்திருத்தம் கூடாதென்றும் சொல்லியிருப்பதோடு, அதற்கு உதாரணமாக இப்பொழுது இதுவரை கிடைத்த சீர்திருத் தங்களில் பெருத்த அதிகார நிருவாகம் மூன்றாந்தரமான மனிதர்களிடம் போய் விட்டதென்றும், ஆதலால் அது கூடாதென்றும், இத்தேசத்திற்கு அருகதையில்லாத சீர்திருத்தம் கொடுபட்டதால் இம்மாதிரி கஷ்டம் ஏற்பட்டதென்றும் சொல்லியிருக்கிறார்.

ஆகவே அதனாலும் பார்ப்பனர்களினுடைய சுயராஜியம் என்ன என்பதும், எப்படியானால் அவர்களுக்கு சுயராஜியம் இஷ்டம் என்பதும், எப்படியானால் சுயராஜியம் வேண்டாமென்பதும் இதனால் நன்றாய் விளங்கி விட்டது. தவிர பிராமணர்களிடம் மற்றவர்கட்கு ஏற்பட்ட துவேஷத்தினால் மதம், கடவுள் பல நூற்றாண்டுகளாக பிராம ணர்கள் பாதுகாத்து வந்த கதைகள் பாரமார்த்தீக லட்சியங்கள் ஆகிய இவைகளுக்கு விரோதிகளாக பிராமணரல்லாதார் ஆகிவிட்டதாகவும் மிக்க வருந்துகிறார்.

ஆகையால் இவைகளைக் காப்பாற்றத் தங்களுக்குள் ஒரு கட்டுப்பாடு இருக்க வேண்டுமென்றும் ஆசைப்படுகிறார். அதோடு சுயமரியாதை இயக்கம் செய்யும் வேலைகளைப் பார்த்துக் கொண்டு இனித் தூங்கிக் கொண்டிருந்தால் காரியங்கெட்டுப் போகுமென்றும் மிக்க வருந்துகிறார்.

அதோடு ருஷியாவின் உதாரணத்தைப் பின்பற்றுகிறவர்களும் பலர் இருக்கிறார்களென்றும் மிக்க ஓலமிடுகிறார். ஆகவே பிராமண மகாநாடு என்பதும் பிராமணியம் என்பதும் வேதம், கலை, ஆத்மார்த்தம் என்பதும் பார்ப்பனர்களால் எதற்காக காப்பாற்றப் படுகிறதென்பதும் இப்போதாவது பொது ஜனங்கள் அறியலாமென்று நினைக்கின்றோம்.

இதை நம்மவர்களிலேயே உள்ள சில பண்டிதர்களும் அழுக்கு மூட்டைகளும், வெறுந்தலைப் பணக்காரர்களும் தெரிந்திருந்தாலும் அப் பார்ப்பனர்களுக்கு அஞ்சித் தங்கள் வயிறு வளர்ப்பதையும் போலி கௌரவத்தையும் உத்தேசித்து அவர்களோடு கூடவே அவர்கள் ஆட்டத் திற்குத் தகுந்த தாளம் போடுகிறார்கள்.

ஆதலால் மற்றவர்களாவது இந்த சூட்சியையறிந்து பார்ப்பன ஆயுதங்களுக்குக் கழுத்தைக் கொடுக்க மாட்டார்களென்று நம்புகிறோம். தவிர பிராமணர்கள் தங்களுடைய பிராமணீயத்தை விட்டுவிட்டதினாலும் வேதம் படிக்காததினாலும், ஆத்மார்த்தத்தைக் கருதாததினாலும் தங்கட்கு இம்மாதிரி கஷ்டம் வந்திருப்பதாக இருவரும் சொல்லியிருக்கிறார்கள்.

இந்த விஷயத்தில் நாம் சிறிதும் ஆட்சேபனையோ தடங்கலோ செய்வதில்லை என்பதை நாம் உண்மையாகவே பார்ப்பனர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம். ஒவ்வொரு பார்ப்பனரும் இப்போது அவர்கள் செய்யும் தொழிலை விட்டுவிட்டு வேதம் படிக்கப் போவதையும் மூன்று வேளை குளித்து விட்டு ஆறுகாலம் சந்தியாவந்தனம் செய்வதையும் காயத்ரீயை ஜபிப்பதையும் பிராணாயாமம் பண்ணுவதையும் நாம் சிறிதும் ஆட்சேபிக்கப் போவதில்லை.

அது விஷயத்தில் நமக்கு எவ்வித நஷ்டமுமில்லை. ஆனால் அதற்காக நம்மை வந்து காசு கேட்கக் கூடாதென்றும் இந்தக் காரியங்களுக்காக இவர்களுக்கு நமது மூட சிகாமணிகள் பிச்சைக் கொடுக்கக்கூடாதென்றும் வெட்டியில் சோறு போடக்கூடாதென்றும் பார்ப்பனரல்லாத மேற்படி மூடசிகாமணிகளை மாத்திரம் வேண்டிக் கொள்ளுகிறோம்.

இந்தப் பார்ப்பனர்களும் இந்தக் காரியங்களைத் தங்களுடைய மோட்சத்திற்கும், ஆத்மார்த்தத்திற்கும் செய்து கொண்டிருந்தால் போதுமென்றும் நமக்காக நமது மோட்சத்திற்காக ஒன்றும் செய்ய வேண்டாமென்றும் கேட்டுக் கொள்ளுகிறோம்.

கடைசியாக நாம் சொல்லுவது என்ன வென்றால் இந்த இருபதாவது நூற்றாண்டில் ருஷியாவையும் ஜப்பானையும் சைனாவையும் துருக்கியையும் பார்த்த இந்த இரண்டு அய்யங்கார் பார்ப்பனக் குள்ளநரிகள் பிராமண மகாநாட்டைக் கூட்டிக் கொண்டு பாரமார்த்திகத்தையும் ஆத்மார்த்தத்தையும் பற்றிப் பேசி, நம்மை ஏமாற்ற நினைக்கிறார்களே என்றால் இதற்கு முன் இருந்தவர்கள், மூட ஜனங்கள் காலத்தில் எவ்வளவு மோசங்கள் செய்திருப்பார்கள்? என்பதை யோசித்துப் பார்க்கும்படி வேண்டிக் கொள்கிறோம்.

(குடி அரசு - தலையங்கம் - 08.06.1930)

Pin It