சங்கிகளின் கேள்விகளுக்கு நெத்தியடி பதில் (4)
கேள்வி : ‘ஹிந்துக்கள்’ தாலி அணிகிறார்கள். கிறிஸ்தவர்கள் திருமண மோதிரம் அணிகிறார்கள். முஸ்லிம்கள் பர்தா அணிகிறார்கள். ‘ஹிந்துக்கள்’ தாலி அறுக்கும் போராட்டம் நடத்திய நீங்கள், கிறிஸ்தர்கள் மோதிரம் கழற்றும் போராட்டமும், பர்தா கழற்றும் நிகழ்ச்சியும் நடத்தும் ஆண்மை இருக்கிறதா?
பதில் : ‘தாலி’ அறுப்புப் போராட்டம் என தவறாகக் கூறுவது பற்றியும் ‘ஹிந்துக்கள்’ பற்றியும் ஏற்கெனவே விளக்கியாகிவிட்டது.
சிறுபான்மை கிறித்துவ மக்கள் மோதிரம் மாற்றி, திருமண பந்தத்தைக் காட்டுவது, ஒருவருக்கொருவர் மோதிரம் அணிவிப்பது போல், இந்துக்கள் என்பாரும் ஆணும் பெண்ணுமாகவா தாலி கட்டிக் கொள்கிறார்கள்? இல்லையே! பெண்ணுக்கு மட்டும்தானே தாலி?
கிறித்துவ சிறுபான்மை மக்களின், இஸ்லாமிய சிறுபான்மை மக்களின் பர்தா அணிதல் உட்பட்ட பழக்க வழக்கங்கள், அந்த மதக் குழுக்களின் அடையாளங்கள், அவற்றை மதித்து நடத்தலே பெரும்பான்மை மக்களின் ஜனநாயகப் பண்பாக இருக்க முடியும்.
ஆனால் பூணூல் அணிவது என்பது, எம் மக்களை ஆரியப் பார்ப்பனர் ‘சூத்திரர்’ என இழிவுபடுத்துவதும், தம்மை ‘பிராமணர்’ என உயர்த்திக் காட்டுவதுமான அடையாளம் அது போலவா கிறித்துவர் மோதிரம் அணிதலும், இஸ்லாமியர் பர்தா அணிவதும் அமைந்துள்ளது?
பர்தா அணிவது, பெண்ணடிமைக் குறியீடுதான்! அதற்கு இஸ்லாமியப் பெண்களிடமிருந்து நியாயமான எதிர்ப்புகள் வரவேண்டும்; வந்தால், நாங்கள் பெண்கள் பக்கமே நிற்போம். ‘முத்தலாக்’கை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவர்கள் இஸ்லாமியப் பெண்கள். நாங்கள் அவர்கள் பக்கமே நின்று, முத்தலாக்கில் நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்றோம். ஆனால் இந்துப் பெண்கள் சபரிமலை கோயிலுக்குள் போகலாம் என்று இந்துப் பெண்கள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நீங்கள் ஆதரித்தீர்களா? ஏன் எதிர்க்கிறீர்கள்? பதில் தேவை.
கேள்வி : பார்ப்பனன், வைசியன், ஷத்திரியன், சூத்திரன் என்ற பிரிவு, அவரவர்களின் பிறப்புத் திறனைக் கொண்டு நெறியமைக்கப்பட் டுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்களா? காவல் நிலையங்களில் அல்சேஷன் கூடாது, பொமரேனியன் வகை நாய்க் குட்டிகள்தான் காவலுக்கு வளர்க்க வேண்டும் என்று போராட்டம் நடத்தும் துணிவும், அறிவும் உங்களுக்கு உண்டா?
பதில் : வர்ணாஸ்ரமத்தை நாய்களோடு ஒப்பிட்டதற்கு முதலில் நன்றி. நீங்கள் குறிப்பிடும் வர்ணப் பிரிவுகளில் பார்ப்பனர் என்று குறிப்பிடுவது சரியல்ல; ‘பிராமணர்’ எனக் குறிப்பிட வேண்டும்.
மனித நேயம் கொண்டவர்கள், மனித சமத்துவம் வேண்டும் எனப் போராடிய இராமானுஜர் உள்ளிட்ட ஆத்திகப் பெருமக்களும், பகுத்தறிவாளர்களும், நாத்திகர்களும் பிறப்பினால் எவரும் உயர்ந்தோரில்லை எனப் போராடி வரும் நிலையில், ஆரியப் பார்ப்பன உயர் வருணம் என்பது பிறப்பினால் வருவதே என ‘ஆரியக் கொழுப்பு’ தலைக்கேறி நீர் பிதற்றுவது கண்டு இந்த பேத நிலை அகற்றிட, மேலும் தீவிரமாகப் போராடிட வேண்டும் எனும் உறுதி எமக்குப் பிறக்கிறது.
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ எனும் வள்ளுவன் வாக்கிற்கு இணங்க, சாதி பேதமற்று, இன இழிவு இல்லாது பெருவாழ்வு வாழ்ந்த மக்களிடையே ஆரியக் கூட்டம் பரப்பிய நால்வருணத்தைத் தூக்கிப் பிடித்து பெருமை கொண்டாடும் ‘அக்ரகாரக் கூட்டத்திற்கு’ அதன் அங்கமான ‘தொங்கு சதை’ப் பேர்வழிகளான உம் போன்றோருக்கு உரைக்கும் விதத்தில் இளைஞர் சமுதாயம் அறிவுச் சுடர் ஏந்தி, நால்வருணப் பிறப்பின் பெருமையை எரித்துச் சாம்பலாக்கும். அதுவரை ஆரிய - திராவிடப் போர் தொடரும்.
உமது வாதப்படி பிறப்புத் திறன் கொண்ட பிராமணனுக்கான கடமை என்ன தெரியுமா? வர்ண தர்மப்படி வேதம் ஓதுவது மட்டும் தான் அவன் கடமை. கடல் தாண்டிப் போகக் கூடாது. ஆனால் ‘பிராமணர்கள்’ வெளி நாட்டுக்கு ஓடுகிறார்கள். உயர் அதிகாரப் பதவிகளில் இருக்கிறார்கள். இப்படி ‘பிராமணர்களே’ வர்ணத்தை மீறுகிறார்களே! அதைத் தட்டிக் கேட்கும் துணிவும், அறிவும் உமக்கு உண்டா?
கேள்வி: ‘பூணூல்’ என்பது ஒரு பகுதியினரின் அடையாளம். உங்களுக்குக் கருப்பு சட்டை போல! பூணூலை அறுக்கும் உங்கள் பகுத்தறிவு கருப்புச் சட்டை பற்றி ஒன்றும் உணர்த்தவில்லையா?
பதில் : ‘பிராமணர்களின்’ ‘பூணூல்’ என்பது இந்நாட்டு மண்ணின் மைந்தர்களை, பெரும்பான்மை மக்களை ‘சூத்திரர்’ என அறிவித்து, இழிவுபடுத்தும் அடையாளமே தவிர, வெறுமனே ‘பிராமணர்’ என அடையாளம் காட்டுவதற்கு அல்ல என ஏற்கனவே இதுபற்றி விளக்கியாகிவிட்டது.
‘கருப்புச் சட்டை’ என்பது, நாங்கள் இழிவுபடுத்தப்பட்டிருக்கிறோம், சட்டத்தால், வருணத்தால், ஜாதிப் பிளவால் என்பதை ஒருவருக் கொருவர் உணர்த்தி, அந்த இழிவு நீங்கிட போராட வேண்டும் எனும் எழுச்சியை உருவாக்குவதற்கு அணியும் போர்வீரர்களின் சீருடை.
கருப்பு - காவிக்கு மறுப்பு! - இந்தத் துயரம், இழிவு நீங்கிட, இரத்தம் சிந்தியும் போராட வேண்டும் என்பதைக் குறிப்பதே, கருப்பின் அங்கம் கொண்டுள்ள சிவப்பு உணர்த்தும் பாடம்.
சமூக இருள், இன இழிவு நீங்கி, பெரும்பான்மையாய்ச் சூழ்ந்துள்ள கருப்பு எனும் கொடுமை அறவே நீக்கப்பட்டு, முழுவதும் சிவப்பாய் மாறி, எல்லோர்க்கும் எல்லாமும் கிடைத்திடும் பொது உரிமை - பொது உடைமைச் சமுதாயம் படைப்பதே எமது இலக்கு. அந்த நிலை வரும்போது எங்கள் கருப்புடைகள், புரட்சியின் வெற்றிச் சிவப்பாய் முழுவதும் மாறியே தீரும். அந்நேரம் பூமியில் எங்கும் பிராமண வருணபேதம், ஒழிக்கப்பட்டு மக்கள் சமத்துவ நிலையை அடைந்திருப்பர். அதுவரை இந்த இலக்கை அடையும் வரை பெரியாரியக்கம் போராடும்! வெற்றி பெறும்!
கேள்வி : ஒன்றின் மீது நம்பிக்கை இருந்தால் அதைப் பின்பற்ற வேண்டும். இல்லையென்றால் பின்பற்ற வேண்டும் என்ற கட்டாய மில்லை. யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. அப்படியிருக்க பிராமணனையும், கடவுளையும் தூற்றி பொழப்பு நடத்துகிறீர்களே உங்களுக்கு வேறு வேலை வெட்டி கிடையாதா?
பதில் : ‘அறிவுக் கொழுந்தாக’ இந்தக் கேள்வியை எழுப்பி உள்ள ‘ஆரிய சிசு’ உடனடியாக இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஓர் அங்கமாகவுள்ள ‘இந்து லா’ பகுதியைப் படித்துவிட்டு வர வேண்டும்.
இந்நாட்டுப் பெரும்பான்மை மக்கள், பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர வர்ணத்தார்களாகவும், இந்த வர்ண பேதங்களுக்குள் வராத - வரஇயலாத ‘அவர்ணஸ்தர்கள்’, ‘பஞ்சமர்’ என இழிவிலும் இழிவாக, நாங்கள் ஏற்க மறுத்தும் கட்டாயப்படுத்திக் கட்டிப் போடப்பட் டிருக்கிறோம்.
எனவேதான், தந்தை பெரியார் தலைமையில் ஜாதி இழிவைப் பாதுகாக்கும், பிராமண வருண பேதத்தைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவை தீ வைத்துக் கொளுத்தி பெரியார் தொண்டர்கள் சிறை பட்டு, வதைபட்டனர். எனவேதான், எங்கள் இன இழிவை ஒழிப் பதற்காகத்தான் ‘பிராமண’ உயர் ஆதிக்கக் கருத்தைத் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம்.
‘இந்த உலகம் முழுதும் கடவுளுக்கு கட்டுப்பட்டது. கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர். மந்திரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டது. எனவே பிராமணர்களே கடவுளாவர்’ என்று, தங்கள் உயர் ஆதிக்கத்திற்கு, எமது இன இழிவிற்கு நியாயம் கற்பிக்கத் துணிந்து மூட நம்பிக்கைகளைப் பரப்பியபோதுதான், பெரியாரின் அறிவியக்கம் அந்தக் கடவுளையே மறுத்து அறிவுப் போர் நடத்தியது. எனவே, வேலை வெட்டி இல்லாமல் இந்தப் போராட்டத்தில் நாம் இறங்கவில்லை. மனித குல சமத்துவத் திற்காகப் போராடிடவே இந்த வேலையில் இறங்கியுள்ளோம். வெற்றி பெறுவோம்!
சரி இருக்கட்டும்; கட்டாயப்படுத்துவது கூடாது என்று கூறும் உமக்கு ஒரு கேள்வி. இந்துவாகப் பிறந்த ஒவ்வொருவரும் ஏதோ ஒரு ஜாதியின் அடையாளத்தோடு தான் இருந்தாக வேண்டும் என்று கட்டாயப் படுத்தியிருப்பது யார்? இந்துவாகப் பிறந்தவுடன் எந்த ஜாதிக்கும் மாறிக் கொள்ளலாம் என்று உங்களால் அறிவிக்க முடியுமா?அல்லது இந்துவுக்கு ஜாதி ஒரு கட்டாயமில்லை என்று கூற முடியுமா? பிறப்பின் அடிப்படையில் கூறு போடப்படும் ‘வர்ணாஸ்ரமத்தை’ பிறவித் திறன் என்று கூறிக் கொண்டு திரிவது நீர் தானே? பதில் வேண்டும்!