திருச்சி பார்ப்பனரல்லாத வாலிப சங்க இரண்டாவது ஆண்டு விழா

தலைவர் அவர்களே ! சகோதரர்களே!!

“சுயமரியாதையும் சுயராஜியமும்” என்பது பற்றி பேசுவது இங்குள்ள சிலருக்கு திருப்தியைக் கொடுக்காது என்பது எனக்குத் தெரியும். ஆனால் அந்தப்படி அதிருப்திப்படுபவர்களில் அநேகர் நான் பேசிய விஷயங்கள் முழுவதையும் உணர்ந்த பின்பு ஒரு சமயம் திருப்தி அடையக் கூடும் என்று நம்புகின்றேன்.

periyar tho pramasivan 640சிலர் எந்த விதத்திலும் திருப்தி அடைய மாட்டார்கள் என்றாலும் சுயராஜ்யம் என்பதைப் பற்றி மற்றவர்கள் பேசுபவைகளில் இருந்து நான் அடையும் அதிருப்தி அவ்வளவு அவர்களுக்கு நான் பேசுவதில் ஏற்படாது என்றே நினைக்கின்றேன்.

பொதுவாகவே, சுயராஜ்யம், சுயராஜ்யம் என்கின்ற கூப்பாடு நாட்டில் நிறைந்து அந்த வார்த்தைக்கும் ஒருவித செல்வாக்குண்டாக்கப் பட்டிருக்கும் இந்தச் சமயத்தில் அதற்கு விரோதமாக ஒருவர் பேசுவது என்பது சற்று கஷ்டமான வேலை என்பதோடு அளவுக்கு மீறின தைரியம் வேண்டி யிருக்கும் என்று சொல்லுவார்கள். ஆனால் எனக்கு அது அவ்வளவு கஷ்டமாகவோ, அதிக தைரியம் வேண்டிய காரியமாகவோ தெரியவில்லை. ஏனெனில் எனது அனுபவத்தில் அது மிக சாதாரண விஷயமாகவே தோன்றுகிறது. ஆனால் கேட்பவர்களுக்கு ஏதாவது மன வருத்தம் உண்டாகலாமே என்கின்ற எண்ணம் மாத்திரம் சற்று தயங்கச் செய்கின்றது. இருந்த போதிலும் யாரையும் நான் சொல்லுவதை எல்லாம் அப்படியே ஒப்புக் கொள்ளும்படி கேட்கப் போவதில்லை. அன்றியும், நான் சொல்லுவதெல்லாம் சரியாகவே இருக்குமென்று கண்மூடித்தனமாய் நம்புங்கள் என்றும் உங்களுக்குச் சொல்லுவதில்லை. என் அபிப்பிராயத்தைச் சொல்லுகிறேன். அதை உங்கள் அபிப்பிராயங்களோடு வைத்து ஒத்துப் பார்த்து சரி எது, தப்பு எது என்பதை உணர்ந்து நீங்கள் உணர்ந்தபடி நடவுங்கள் என்றுதான் சொல்லுகின்றேன்.

ஆதலால் நான் சொல்லுவதில் யாருக்கும் எவ்வித கெடுதி ஏற்படவோ, சங்கடம் ஏற்படவோ இடமிருக்காது. மனிதன் பொதுவாகவே எவ்வித அபிப்பிராயங்களையும் கேட்பதற்கும் தெரிவதற்கும் ஒரு வித ஊக்கம் உடையவனாக இருக்க வேண்டும். இல்லை யானால் மனிதன் உண்மையைக் கண்டு பிடிக்கவோ, அறிவு பெறவோ, முன்னேற்றமடையவோ முடியாது.

அன்றியும் நமது சொந்த அறிவில் நமக்குப் போதிய தைரிய மிருந்தால் யார் என்ன சொன்னாலும் யாரிடம் நாம் எதைக் கேட்டாலும் நமக்கு எவ்வித ஆபத்தும் வந்துவிடாது. ஆகையால் ஒருவரை பேசாமல் இருக்கச் செய்வது என்பதோ, பேசுவதைக் கூட கேட்காமல் இருக்கச் செய்வது என்பதோ கோழைத்தனமேயாகும்.

ஆகவே நான் சொல்லுவதை விருப்பு வெறுப்பு இல்லாமல் நடுநிலையிலிருந்து கேட்கும்படி கோறுகிறேன்.

சகோதரர்களே! சுயமரியாதை சுயராஜ்யம் என்று சொல்லப்படும் இரண்டு வார்த்தைகளிலும் சுயமரியாதை என்பது நீங்கள் எல்லோரும் பொருள் தெரிந்து அனுபவத்தில் உங்கள் வாழ்க்கையில் எப்போதும் பிரயோகித்து வரும் ஒரு உண்மை வார்த்தை என்பதில் உங்கள் யாருக்கும் ஆnக்ஷபணை இருக்காதென்றே கருதுகின்றேன்.

மற்றும் ஒவ்வொரு மனிதனும் அவ்வார்த்தையின் தத்துவத்தை மனதில் பதிய வைத்து தன்னுடைய ஒவ்வொரு எண்ணமும் செய்கையும் அதைப்பொருத்தே இருக்க வேண்டுமென்று கருதுவதையும் உணருகின்றீர்கள். ஆனால் சுயராஜ்யம் என்னும் பதமோ சமீபகாலத்தில் உண்டாக்கப் பட்டதான ஒரு வார்த்தையேயாகும்.

எதுபோலவெனில் இந்து மதம் என்பதாக ஒரு வார்த்தை எப்படி சமீப காலத்தில் கற்பிக்கப்பட்டு அதற்கு ஒரு கருத்தில்லாமலும், அருத்தமில்லாமலும் வார்த்தை அளவில் பிரயோகிக்கப்பட்டு வருகின்றதோ அதுபோலவே தான் சுயராஜ்யம் என்னும் ஒரு வார்த்தை கற்பிக்கப்பட்டு அருத்தமில்லாமலும், கருத்தில்லாமலும் வெறும் வாய் வார்த்தையில் பிரயோகிக்கப்பட்டு வருகின்ற வார்த்தையாகும். ஆனால் இந்த வார்த்தைக்கு அருத்தமும் கருத்துமில்லாமல் போனாலும் “சுயராஜியமே எனது பிறப்புரிமை” என்று சொல்லப்படுவதிலும் அதற்கே எல்லா முக்கியஸ்தானமும் கொடுக்கப்படுவதிலும் அதாவது மேலே குறிப்பிட்ட இந்து மதத்திற்கு பிரதானம் கொடுப்பது போலவே கொடுக்கப்பட்டு மிகப் பிரமாதப் படுத்தப்பட்டு அதற்காகப் பெரிய கிளர்ச்சியும் செய்யப்பட்டு வருகின்றது. பாமர மக்களுக்கு உலகக் கல்வியும் பகுத்தறிவு ஞானமும் இல்லாத காரணமே சுயராஜ்யம் என்னும் வார்த்தை மோக்ஷம், கைலாயம் என்னும் வார்த்தையைவிட மிக்க விளம்பரமும் மக்களின் கவர்ச்சியும் பெற்று விட்டது.

இவ்வளவு மாத்திரம் அல்லாமல் “சுயராஜியம் கடவுள் யெத்தனத்தாலும் கடவுள் சித்தத்தாலும் அடையப் படவேண்டியது” என்றும் அதன் சர்வாதிகாரியான திரு.காந்தி அவர்களால் சொல்லப்படுவதாகி இனி அதற்காக வேறு கடவுள் தயவை எதிர்பார்த்து அர்ச்சனைகள் பிரார்த்தனை கள் செய்யப்பட வேண்டியதாகவுமாய்விட்டது. ஆனால் சுயமரியாதைக்கு அந்தக் கடவுள் தயவு தேவையில்லை என்ப தோடு, அந்தக் கடவுளைப் பற்றிய கவலையும் வேண்டியதில்லை என்று சொல்வதோடு சகலமும் சுய முயற்சியினாலேயே ஆக வேண்டும் என்றும் சொல்லப்படுவதாகும்.

அதுமாத்திரமல்லாமல் சுயமுயற்சியை விட்டு கடவுள் தயவுக்கும், கடவுள் செயலுக்கும் இதுவரை எதிர்பார்த்திருந்ததின் பலனே நமது நாட்டுக்கு இன்று சுயமரியாதை இவ்வளவு இன்றியமையாத அவசியமாய் போய் விட்டதென்றும் அது சொல்லுகின்றது.

நிற்க, இன்றைய தினம் கருத்தில்லாமல் கற்பிக்கப்பட்டிருக்கும் சுயராஜியம் என்னும் போலி வார்த்தைக்கு ஆதாரமாகப் பல காரணங்கள் கற்பிக்கப்பட்டிருக்கின்றன. அவை என்னவெனில்,

“இந்த நாட்டு மக்களுக்கு கல்வியில்லை, செல்வமில்லை, தொழிலில்லை மற்றும் அநேக குறைகளிருக்கின்றன. இதற்கு எல்லாம் காரணம் சுயராஜியமில்லாததே. ஆதலால் சுயராஜியம் சம்பாதிக்க வேண்டும்” என்பதாகச் சொல்லப்பட்டு பாமர மக்களை நம்பச் செய்து பட்டினி கிடப்பவர்களையும் வேலையில்லாமல் திண்டாடுவோரையும் சிறு பிள்ளைகளையும் சோம்பேரிக் கூட்டங்களால் சேர்த்துக் கொள்ளப்பட்டு ஆர்ப்பாட்டம் செய்யப்படுகின்றது. ஆனால் நான் இவற்றிற்கு அதாவது கல்வி, செல்வம், தொழில் முதலாகியவை நமது நாட்டில் இல்லை என்பதற்கும் இவை மாத்திரம் இல்லாமல் மற்றும் அறிவு, ஆராய்ச்சி, முற்போக்கு, ஈவு, இரக்கம், ஒழுக்கம், நியாயம், நீதி, மனிதத் தன்மை முதலாகியவைகூட இல்லாமல் போனதற்கும் நமது மக்களுக்குச் சுயமரியாதை உணர்ச்சி இல்லாமல் போனதே காரணம் என்று சொல்வதோடு, சுயமரியாதை உணர்ச்சியை உண்டாக்கி மேல்கண்ட சாதனங்களை மக்கள் அடையச் செய்யும் பாதைகளை அடைக்கவே “சுயராஜிய முயற்சி” என்பது புதிதாகக் கற்பிக்கப் பட்டிருக்கின்றது என்றும் நான் சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன். அன்றியும், சுயராஜிய முயற்சி என்பது வெறும் “வெள்ளைக்காரனைப் பற்றி வசை புராணம் பாடுவதன் மூலமே அவனுக்கு கஷ்டத்தை ஏற்படுத்த வேண்டுமென்பதின் மூலமே நமது கஷ்டமெல்லாம் நீங்கி விடும்” என்று சொல்லப் பட்டு வருவதோடு இதுவரை அப்படியே செய்யப் பட்டும் வரப்படுகிறது.

ஆனால் சுயமரியாதை இயக்கம் சுயராஜிய முயற்சியைப் போல் எல்லாப் பொறுப்பையும் வெள்ளைக்காரன் மீது சுமத்தி அவனைப் பற்றிப் பேசுவதிலேயே காலம் கழித்து அவனுக்குக் கஷ்டம் கொடுப்பதிலேயே நமது ஊக்கத்தையும், முயற்சியையும் செலவழிப்பதில் கவலை கொள்ளுவதில்லை. ஆனால் அவர்களது (வெள்ளைக்காரர்களது) அக்கிரமத்திற்கு ஆதாரமானதும், இடங்கொடுப்பதும், கொடுத்துக் கொண்டு இருப்பதானதுமான விஷயம் எது - யாரால்? என்று கண்டுபிடித்து அதாவது அந்த அக்கிரமங்களுக்கு எது தூண்களாய் இருந்து தாங்கிக் கொண்டிருக்கின்றனவோ அவைகளை பரித்துக் கீழே தள்ளும் வேலையில் ஈடுபடச் செய்கின்றது.

ஆகவே நாட்டில் உள்ள குறைகளை ஒப்புக் கொள்ளுவதில் சுயராஜியத்திற்கும் சுயமரியாதைக்கும் அதிக வித்தியாசமில்லை. அதற்கு ஆதாரமான காரணங்களை கண்டுபிடிப்பதிலும் காரணஸ்தர்களாகக் கண்டு பிடிக்கப்பட்டவர்களே தாங்கள் தப்பித்துக் கொள்ள அன்னியர் பேரில் பழி சுமத்துவதையும் மாத்திரம் சுயமரியாதை இயக்கம் நம்பி ஏமாந்து போவ தில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

உதாரணம் வேண்டுமானால் பாருங்கள்.

கல்வியில்லை என்பது வாஸ்தவந்தான், ஆனால் யாருக்குக் கல்வி இல்லை? பார்ப்பனர் ஒழிந்த ஏனையோருக்குதான். அதிலும் பள்ளு, பறை என்கின்ற தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், விவசாயம், கைத்தொழில் ஆகியவைகள் செய்யும் சரீரப் பிரயாசைப்படும் மக்களுக்குத் தான் கல்வியில்லையே யொழிய வேறென்ன?

ஆனால் பாடுபடாத சோம்பேறிக் கூட்டமான பார்ப்பனர்கள் எல்லோருமே நமது நாட்டில் படித்திருக்கின்றார்கள் என்பதை நீங்கள் மறுக்க முடியுமா என்று கேட்கிறேன். இதற்கு வெள்ளைக்காரர் காரணமா - சுயராஜியம் இல்லாதது காரணமா? அல்லது மக்களுக்கு சுயமரியாதை உணர்ச்சியும், அதனால் ஏற்பட வேண்டிய பகுத்தறிவு இல்லாததும் காரணமா? என்பதை உங்கள் பகுத்தறிவைக் கொண்டு யோசித்துப் பாருங்கள் என்று வேண்டிக் கொள்ளுகிறேன்.

இன்றைய வெள்ளைக்கார அரசாங்கத்தில் அதாவது சுயராஜியமில்லாத அரசாங்கத்தில் பார்ப்பனர்கள்தான் படிக்க வேண்டுமென்றாவது, அவர்கள் தவிர மற்றவர்கள் படிக்கக்கூடாது என்றாவது, எங்காவது சட்டமிருக்கின்றதா? அல்லது அவர்களது ஆட்சியில் மற்றவர்கள் படிக்க வசதி செய்யப் படாமலாவது, ஏதாவது சட்டபூர்வமான தடைகள் இருக்கின்றதா? என்று யோசித்துப் பாருங்கள்.

தாழ்த்தப்பட்ட வகுப்பாரில் 100க்கு கால் பங்கு கூட படித்தவர்கள் இல்லை. பெண் மக்களில் 100க்கு அரைப் பங்கு கூட படித்தவர்கள் இல்லை. விவசாயம், கைத்தொழில் முதலியவை செய்யும் வகுப்பார்களில் 100க்கு ஒருவர் கூட படித்தவர்கள் இல்லை. ஆனால் பார்ப்பனர்களில் 100க்கு 100 பேர்கள் படித்தவர்களாக இருக்கின்றார்களே. இதற்கு என்ன காரணம் சொல்லுகின்றீர்கள்? என்று கேட்கிறேன். இது சுயராஜியமில்லாததாலா? அல்லது பார்ப்பனரல்லாத மக்களுக்கு சுயமரியாதை இல்லாததாலா? என்ற கேள்விக்குத் தயவு செய்து பதில் சொல்லுங்கள்.

ஒரு சமயம் பணம் இல்லாததால் பார்ப்பனரல்லாதார் படிக்க முடியவில்லை என்று சொல்ல வருவீர்களானால் பார்ப்பனர்களுக்கு மாத்திரம் எப்படி பணம் சேர்ந்தது? அவர்கள் உங்களைவிட அதிகமாகப் பாடுபட்டு பணம் சம்பாதிக்கின்றார்களா? அவர்கள்தான் தங்களையே அடிக்கடி தாங்கள் பிச்சை வாங்கி உண்ணும் ஜாதி என்றும், புரோகிதம் செய்தும், மணி யாட்டியும், தட்சணையும், உபதானமும் பெற்று வயிர் வளர்க்கும் ஜாதி யென்றும் பல தடவை அவர்களே தாராளமாய்ச் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே! இன்றும் அந்தப்படி தான் பலர் இருந்தும் வருகிறார்களே. இதை நீங்கள் அறியாததா? இப்படி இருக்க அவர்கள் மாத்திரம் எப்படி 100க்கு 100 பேர் படித்தார்கள் என்பதைக் கண்டுபிடியுங்கள். சுயமரியாதை உணர்ச்சி உண்டாகி பகுத்தறிவு உங்களுக்கு ஏற்பட்டு விடுமானால்தான் இந்த இரகசியத்தை நீங்கள் சுலபத்தில் கண்டுபிடிக்க முடியும். மற்றபடி உங்களுக்கு விளங்கவே விளங்காது.

சும்மா வாயில் சுயராஜியம், சுயராஜியம் என்று கூறிக்கொண்டு கொடியைச் சுமந்து கொண்டு வந்தே மாதரம் என்று பிதற்றித் திரிய வேண்டியதுதான் நமது மக்களின் வேலையாகி விட்டது. ஆனால் இதனால் என்ன பலன் கிடைக்கும்? எப்படிக் கிடைக்கும்? என்கின்ற அறிவு பூஜியமாகி விட்டது. இன்னமும் நிர்தாட்சன்னியமாய் நான் பேசுவது என்றால் சுயராஜியம் என்பது இருந்த காலத்தில் தான் அதாவது அன்னிய ஆட்சி என்பது இல்லாத காலத்தில்தான் இந்திய மக்களில் இன்னும் அதிகமான எண்ணிக்கை உள்ள மக்கள் தற்குறிகளாய் இருந்திருக்கின்றார்கள். அன்னிய ராஜியம் ஏற்பட்ட பின்னரே “பள்ளு, பறை” தொழிலாளி - பெண்கள் ஆகிய எல்லா வகுப்பாரும் படிக்கலாம் என்கின்ற சட்டமும் அனுமதிப்பும் ஏற்பட்டது.

அன்னிய அரசாக்ஷியில் ஏற்பட்ட இந்த சட்டமும் அனுமதியும் கூட இன்று சுயராஜியம் கேட்கும் மக்களாலேயே ஆnக்ஷபிக்கப்பட்டு வருகின்றது. அனேக கிராமங்களில் பள்ளு, பறை பிள்ளைகள் படிக்க சர்க்கார் பணமும் இடமும் கொடுத்தாலும், சுயராஜியம் கேட்கின்ற தேசிய வாதிகள், தேச பக்தர்கள், காங்கிரஸ்வாதிகள் ஆகிய ஜனங்களிலேயே பலர் பள்ளிக்கூடத்தில் உட் காரவோ, பள்ளிக்கூடம் இருக்கும் இடத்திற்கு நடந்து போகும் தெருவையோ அனுமதிப்பது கூட இல்லை. தேசீயவாதிகளிலேயே கூட தேசபக்தர்களிலேயே கூட இப்படிப்பட்டவர்கள் இருந்தால் மற்ற மக்களின் ஆnக்ஷபணை எவ்வளவு இருக்கும் என்பதை எடுத்துச் சொல்ல வேண்டுமா? என்று கேட்கின்றேன்.

இந்தக் கொடுமையை ஒழிக்க சுயராஜியத்தில் வழியிருக்கின்றதா? அல்லது சுயமரியாதையில் வழி இருக்கின்றதா? என்று இப்போது யோசித்துப் பாருங்கள். முதலாவது முன்னால் இருந்து வந்த நமது சுயராஜிய அரசாங்கத்தில் ஒரு கூட்டத்தார்தான் படிக்கலாம். மற்றக் கூட்டத்தார் படிக்கக்கூடாது என்று சட்டமிருந்தும் இன்னும் அது நமது மத தர்மமாய் இருப்பதும், அன்னிய ராஜியத்தினாலேயே அவை முழுவதுமாய் தலைகாட்டச் செய்யாமல் மறைக்கப்பட்டிருப்பதும் அன்னிய ராஜியம் மறைந்த உடன் அவை அதாவது மததர்மம் என்னும் பேரால் மறுபடியும் தலைதூக்கும் என்பதும் உங்களுக்குத் தெரியாதா என்று கேட்கின்றேன்.

நாளைய தினம் இந்த திரு.காந்திக்கே சக்கரவர்த்திப் பட்டம் சூட்டினாலும் இந்த மத தர்மங்கள் அழிக்கப்பட முடியுமா என்று உங்களைக் கேட்கின்றேன். அவரைச் சுற்றித் திரிகின்றவர்கள் யார் என்று பாருங்கள். இந்தக் காந்தியும் அவரது இந்தக் கூட்டமும் நாளைக்கு இந்தத் துறைகளில் ஏதாவது நன்மை செய்யக்கூடுமானால் இன்று அவர்கள் செய்வதை யார் தடுக்கின்றார்கள் என்று நான் கேட்கின்றேன்.

செல்வம்

இதுபோலவே செல்வநிலையும் மிக மோசமானதுதான் என்பதை நான் ஒப்புக்கொள்கின்றேன். ஆனால், யாருடைய செல்வநிலை மோசமானது? என்பதை யோசித்துப் பாருங்கள். பாடுபட்டு உழைப்பவர்களுடையவும், யோக்கியமானவர்களுடையவும், செல்வநிலைதான் மோசமாக இருக் கின்றதே தவிர சோம்பேரிகள், சூக்ஷிக்காரர்கள், வஞ்சக்காரர்கள், கல் மனமுடையவர்கள் ஆகியவர்களுடைய செல்வநிலை எங்காவது மோசமாக இருக்கின்றதா என்பதை யோசித்துப் பாருங்கள்.

எந்த நாடாவது சோம்பேரிகள் எல்லாம் மூக்கு பிடிக்க சாப்பிட்டு அவர்களது பெண்டு பிள்ளைகள் எல்லாம் மோட்டார் சவாரி செய்து கொண்டு மாட மாளிகைகளில் குடியிருக்கும்படியான மேன்மையில் இருந்தால் அந்தநாடு செல்வ நிலையற்ற நாடு ஆகுமா? அல்லது சுயமரியாதை அற்ற மூடர்களையுடைய நாடு ஆகுமா என்று கேட்கின்றேன்.

இந்த மூடத்தனம் ஒழிய சுயராஜியம் வேண்டுமா? சுயமரியாதை வேண்டுமா? என்று யோசித்துப் பாருங்கள். இன்று உங்களுக்கு சுயராஜியம் வேண்டுமென்கிற ஆட்கள் எல்லாம் பெரிதும் நான் மேலே சொன்ன பாடுபடாமல் சோம்பேரியாய் இருந்து ஊரார் உழைப்பில் வயிர் வளர்க்கும் வஞ்சகர்களும், அவர்களது கூலிகளும் அல்லாமல் ஏதாவது ஒருவர் இரண்டு கூடை மண் வெட்ட தகுதி உடையவரோ அல்லது ஒரு நாலு பரி தண்ணீர் இறைக்கும் அறிவுள்ளவரோ, அல்லது ஒரு மூட்டை தூக்க தகுதி யுடையவரோ அல்லது ஏதாவது ஒரு சரீரத் தொழில் புரிய யோக்கியதை உடையவராகவா இருக்கின்றார்களா என்பதை தேடிப்பார்த்துக் கண்டு பிடித்துச் சொல்லுங்கள் என்று கேட்கின்றேன்.

மதத்தின் பேரால் காவி கட்டி சன்னியாசிகளாகி மோக்ஷத்திற்குப் பிரசாரம் செய்யும் சோம்பேரிகளுக்குச் சமமாக மற்றொரு வேஷம் போட்டு சுயராஜியப் பிரசாரம் செய்கிறவர்கள் தவிர பாடுபடுவதற்குத் தகுதி உடையவர்கள் எத்தனை பேர் என்று கேட்கின்றேன். மற்றும் ஒவ்வொரு தனி மனிதனின் வரும்படி இந்த நாட்டில் எவ்வளவு வரையில் இருக்கின்றது பாருங்கள். வருஷம்10 லக்ஷம் 8 லக்ஷம் வரும்படி உள்ள தனி மனிதர்கள் எவ்வளவு பேர்கள் இருக்கின்றார்கள். ஆள் ஒன்றுக்கு 1000, 2000, 5000, 10000 ஏக்கராக்கள் நிலமுடையவர்கள் எத்தனை பேர்கள் இருக்கின்றார்கள். இந்த யோக்கியதையில் இவர்கள் இருப்பதற்கு இவர்களுக்கு என்ன யோக்கியதைகள் இருக்கின்றன? நாட்டுக்கு இவர்களால் என்ன நன்மைகள் இருந்து வருகின்றன? என்று யோசித்துப் பாருங்கள். மற்றும் இவர்களாவது ஒரு வகையில் நகரும் பிராணிகளாக இருக்கின்றார்கள். மற்றபடி நகராத ஜெந்துக்களாகிய கடவுள்களுக்கு - குழவிக்கல்லுக்கு - எடுத்து உட்கார வைக்கும் - தூக்கிச் செல்லும் ஜீவன்களான பண்டார சன்னதிகள் சங்கராச்சாரியார் ஆகிய நகரா ஜெந்துக்களுக்கு இந்த நாட்டில் எவ்வளவு செல்வம் எவ்வளவு வரும்படி இருக்கின்றது என்பதை சற்று கவனித்துப் பாருங்கள்.

இந்தப்படி செல்வமுள்ள நாட்டின் செல்வநிலை போராது என்று ஒருவன் சொன்னால் அவன் மூடன் அல்லது உண்மையை மறைப்பவன் என்று கருதுவீர்களா அல்லது பெரிய தேசபக்தன் தேசியவாதி என்று கருதுவீர்களா என்று கேட்கின்றேன். இந்தப்படியான செல்வநிலை மாற சுயராஜியம் வேண்டுமா, சுயமரியாதை வேண்டுமா என்பதை இப்பொழுதாவது நன்றாய் யோசித்துப் பாருங்கள். கன்னியாகுமரி முதல் கல்லுருவங்களை எடுத்துக்கொள்ளுங்கள். கன்னியாகுமரி அம்மனுக்கு மாதத்திற்கு 3-நாள் வீட்டிற்கு தூரமாகின்ற சடங்குகள்கூட செய்யப்படுகின்றது. அவ்வளவு சக்தியுள்ள சாமி. ஆனால் அந்த சுத்துப்பிரகாரத்துக்குள், காந்தி, லாலா லஜபதி முதலிய எப்பேர்பட்ட மகாத்மாக்களும் தேசபக்தர்களும், தேசீயவாதிகளும் கூட போகக் கூடாது.

இந்த நிலையில் ஒரு கல்லுக்கு இருக்கும் கௌரவம், செல்வம், கட்ட டம், பூஜை, உற்சவம், வீட்டுக்குத்தூரமான சடங்கு ஆகியவற்றிற்கு செலவு எவ்வளவு என்று கருதுகிறீர்கள். அதற்கு 5 மையில் அடுத்தாப்போல் உள்ள சுசீந்திரத்திலுள்ள ஒரு கல்லுக்கு தினம் 10 மூட்டை அரிசி வேக வைத்துப் படைக்கப்படுகின்றது. அந்தக் கல்லு இருக்கும் இடத்திற்கு கால்மைல் தூரத்திற்கு இப்பால் கூட சில மனிதர்கள் நடக்கக்கூடாது. இதற்கு வருஷந்தோறும் கல்யாணம் முதலிய அநேக ஆடம்பரங்கள் இப்படியே. அதற்கடுத்த வானமாமலை, திருநெல்வேலி, திருச்செந்தூர், தென்திருப்போரை, சங்கரன்கோவில், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராமேஸ்வரம், திருப்பரங்குன்றம், மதுரை, பழனி முதலிய இடங்களின் செல்வமும், செலவையும் பார்த்துவிட்டு அவசர அவசரமாகவே ஸ்ரீரங்கத்திற்கு வந்து பாருங்கள். இந்த கோவில் திருபணி கும்பாபிஷேகம் தைலக்காப்பு உற்சவம், பூஜை, சொத்து, நகை, வாகனம், கட்டடம் ஆகிய வைகளை கணக்குப் பாருங்கள். இதுபோன்ற மற்ற தஞ்சை, வடஆற்காடு, செங்கல்பட்டு ஜில்லாக்களையும் கணக்குப் பாருங்கள். மற்றும் ஒவ்வொரு கிராமத்திய கிராம தேவதை பிறகு அவனவனுடைய குலதேவதை குலகுரு வரையிலும் கவனித்துப் பாருங்கள். இந்தச் சொத்தும் செலவும் கணக்குப் போட்டுப் பார்த்தால் நம் நாடு உண்மையிலேயே செல்வமில்லாத நாடா? என்பதை தயவு செய்து நடுநிலைமையிலிருந்து யோசித்துப் பாருங்கள்.

இந்த செல்வமும் செலவும் மக்களுக்கு பிரயோகிக்கப்பட்டால் இந்த நாட்டிற்கு வேறு என்ன தேவை இருக்கும் என்று கேட்கின்றேன். இதற்கு சுயராஜியம் வேண்டுமா? சுயமரியாதை வேண்டுமா? என்று யோசித்துப் பாருங்கள். இதைத் திருத்துவதற்கு எந்த சுயராஜியத்திலாவது திட்டம் இருக்கின்றதா என்று யோசித்துப் பாருங்கள். சர்வாதிகாரி காந்தி சுயராஜிய திட்டத்தில் ராமராஜியதிட்டம் போட்டாய் விட்டது. அதாவது மத விஷயத்தில் பொதுவில் எவ்வித மாற்றமும் செய்யக்கூடாது. பூரண சுயேச்சைக்கும் மேல்பட்ட போல்ஸ்விக்வீரர் ஜவர்லால் அவர்கள் சுயராஜிய திட்டத்திலோ செத்தவர் எலும்பு கங்கையில் போட்டால்தான் அவரது ஆத்மா மோக்ஷ மடையும் என்கிற திட்டம் போட்டாய் விட்டது காலம் தவறாமல் பிண்டங்களும் போட்டுக் கொண்டு வரப்படுகின்றது.

இந்த நிலையில் இந்தக் கோவில்கள் இடிபடவும் இந்தச் சாமிகள் அழி படவும் இந்த சோம்பேரி மடாதிபதிகள் சங்கராச்சாரிகள் ஏர் உழும்படியும், செய்யப்பட இவர்களது சுயராஜியத்தில் இடம் உண்டா என்று கேட்கின்றேன். இந்த சொத்துக்கள் வரும்படிகள் எல்லாம் பாடுபடும் மக்கள் வயிறார கஞ்சி குடிக்கவும் ஏமாற்றப்படாமல் இருக்கவும் இவர்களது சுயராஜியத்தில் இடம் உண்டா என்று கேட்கின்றேன்.

சொத்துக்களை யெல்லாம் சிலர் கைவசப்படுத்திக் கொண்டு பாடுபடுபவர்களின் வரும்படிகளையெல்லாம் சோம்பேரிகள் அனுபவித்துக் கொண்டு பாடுபடுபவனுக்கும் தொழிலாளிக்கும் கிடைக்கும் கொஞ்ச நஞ்ச வரும்படியையும் கல்லுக்கும் குட்டிச்சுவற்றிற்கும் அழுகும்படி செய்து கொண்டு இருக்கின்ற ஒரு நாட்டுக்கு சுயமரியாதை வேண்டுமா? அல்லது சுயராஜியம் வேண்டுமா? என்று யோசித்துப் பாருங்கள்.

சுயராஜியம் வந்தால் இந்த வீண் செலவுகளில் எதையாவது நிறுத்த முடியுமா? இந்தக் கோவில்களில் எதையாவது இடிக்க முடியுமா? இந்தச் சாமிகளில் எதையாவது ஒழிக்க முடியுமா? என்று பாருங்கள்.

ஒவ்வொரு சாமிக்கும் 7- சுத்து கோட்டைச் சுவர்கள் போன்ற மதில்களும் 5, 6 பிரகாரங்களும் ஆகிய இவைகள் எல்லாம் எதற்கு? இவைகள் இல்லாவிட்டால் சுவாமிகள் ஓடிப் போகுமா? ஓடிப் போனால்தான் என்ன கெடுதி ஏற்பட்டு விடும்? அல்லது சுவாமி என்றால் என்ன? அது ஒரு குற்றவாளியா? அல்லது கைதியா? அல்லது சிறைபிடிக்கப்பட்ட அடிமையா? இந்த மாதிரி அடைப்பட்டுக் கிடக்கும் சிறிதும் சுயமரியாதை இல்லாத சாமியை கும்பிடுகின்ற மக்களுக்கு சுயமரியாதை எப்படி ஏற்படும்? அந்த சாமிகள் ஒழிந்தாலல்லது சுயமரியாதை ஏற்பட மார்க்கமில்லை. இந்த மாதிரி சாமிகள் ஒழிய எந்த சுயராஜியத்திலும் திட்டமில்லை என்பது தெரிந்தும் சுயராஜியம், சுயராஜியம் என்று வீணாய் உளறுகின்றோம். இந்த மாதிரி நாட்டையும் ஜன சமூகத்தையும் தேசத்தின் செல்வத்தையும் பாழாக்கும் சாமிகள் முதலில் ஒழிய வேண்டும். ஏழைகளின் - உழைப்பாளிகளின் செல்வத்தை கொள்ளையடித்த பணக்காரர்கள் “கடவுள் செயலால் பணம் கிடைத்தது” என்று சொல்லித் தப்பித்துக் கொண்டிருப்பதும் ஏழைகள் பாடுபட்ட பொருள்களை ஏமாற்றுக்காரர்கள் கொள்ளை கொண்டுவிட்டால் அதை உணராமல் “கடவுள் செயல்” என்று சொல்லிக் கொண்டு பட்டினி கிடப்பதற்கும் ஆதாரமான “கடவுள் செயல்” “தலைவிதி” என்பவைகள் முதலில் ஒழிய வேண்டும். இவை ஒழிவதற்கு சுயராஜியத்தில் இடமிருக்கின்றதா? சுயமரியாதை இயக்கத்தில் இடமிருக்கின்றதா? என்பதை யோசித்துப் பாருங்கள்.

மற்றும் இது போலவே விவசாயம், அறிவு, ஆராய்ச்சி, வலிமை முதலிய பல காரியங்களுக்கும் சுயராஜியத்தில் சிறிதும் இடமில்லை என்றும் சுயமரியாதை ஒன்றினாலேயே தான் இவைகளை சுலபத்தில் அடையலாம்.

(குறிப்பு: திருச்சி நகரவை பொதுமண்டபத்தில் 17.05.1931 அன்று ஆற்றிய உரை.

குடி அரசு - சொற்பொழிவு - 24.05.1931)

Pin It