periyar05சகோதரர்களே! சகோதரிகளே!

இந்தக் கண்ணனூரிலுள்ள பழமையானதும் மிக்க பொதுஜன சேவை செய்து வருவதுமான உங்களுடைய செவ்வாய் தரும சமாஜத்தின் தலைமை வகிக்கும் பெருமையை எனக்குக் கொடுத்ததற்காக முதலில் எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த சமாஜத்தின் மூலமாக நீங்கள் செய்திருக்கும் பொது நல சேவைக்கும் உங்களை மிகவும் பாராட்டுவதோடு இங்குள்ள பொது ஜனங்களையும் இன்னும் அதிகமாக ஒத்துழைத்து உங்கட்கு வேண்டிய சகாயஞ் செய்து இச்சமாஜத்தால் மக்களுக்கு இன்னும் அதிகமான நன்மை ஏற்படும் படியாய் செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாண்டு விழாவுக்கு நான் தலைமை வகித்ததன் மூலம் எனது சொந்த அபிப்பிராயமாக நான் ஏதாவது சொல்ல வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்ப்பதோடு நானும் சொல்ல வேண்டியதும் எனது கடமையாக இருக்கிறது.

அப்படிச் சொல்லுவதில் உங்களுடைய சமாஜத்தின் பெயராகிய தர்மம் என்பது பற்றியும் இரண்டு பெரியார்கள் உபன்யாசம் செய்த விஷயங் களாகிய பெண்கள் சுதந்தரம், தர்மம், கடவுள் என்பது பற்றியும் முறையே பேசுவது பொருத்தமானதென்று கருதுகிறேன். ஆகையால் அவைகளைப் பற்றியே சில வார்த்தைகள் சொல்லுகிறேன். முதலாவதாக தர்மம் என்பது பற்றி சொல்கிறேன்.

தர்மம்

சகோதரர்களே! தர்மம் என்றால் என்ன? மனித வாழ்க்கையில் தர்மம் என்கின்ற வார்த்தை பெரிதும் உபயோகப்படுத்தப்படுகிறது. அதைப் பற்றி பலர் பலவிதமாக சொல்லவும் எழுதவும் படுகிறது.

ஆனால் சாதாரணமாக தர்மம் என்பதற்கு பொருள் கூறும்போது தர்மம் என்பது ஒரு மனிதனின் கடமைக்கும் மனிதனின் இயற்கைத் தன்மைக்கும். ஒரு மனிதன் மற்றொரு மனிதனிடம் செய்ய வேண்டிய உதவிக்கும் மற்றும் ஒரு மனிதன் ஆத்மார்த்த சாதனம் என்னும் நலமடைவதற்குச் செய்ய வேண்டிய கடமை என்பதற்கும் பொதுவாக இயற்கை என்பதற்கும், உபயோகப்பட்டு வருவதோடு பெரும் பாலும் பிச்சைக்காரர்களும், சோம்பேறிகளும் ஏமாற்றுக்காரர்களும் பிழைப்பதற்கும் ஒரு சாதனமாக உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

எது எப்படி இருந்த போதிலும் நான் அதை நீங்கள் எந்த வழியில் உபயோகப்படுத்துகிறீர்கள் என்று கருதுகிறேனோ அதைப்பற்றி சில வார்த்தைகள் சொல்லுகிறேன்.

அதாவது ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்கு செய்கிற உதவியை தர்மம் என்று கருதி அதையே உங்கள் கடமையாகவும் கொண்டு நடந்து வருகிறீர்கள் என்பதாகவே நினைத்து அதைப் பற்றியே சில வார்த்தைகள் சொல்லுகிறேன்.

ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்குச் செய்யும் உபகாரம், கடமை என்பவைகள் காலதேச வர்த்தமானத்துக்கேற்றது போலும் அவ்வப் போது மாறுதலடையக் கூடிய ஒரு தன்மையுடையதேயல்லாமல் மற்றபடி தர்மம் என்பது ஏதோ ஒரு காலத்தில் யாராலோ யாருக்கோ குறிப்பிடப்பட்டு அதேபடிக்கு நடந்து கொண்டிருக்க வேண்டியது அல்லவென்பதை உணர்ந்து கொண்டால் தான் நாம் உண்மையான தர்மம் செய்தவர்கள் ஆவோம் என்பதோடு நமது தர்மமும் மக்களுக்கும் நாட்டிற்கும் பயன்படக் கூடியதாகும்.

அப்படிக்கில்லாமல் நமது பெரியோர்கள் செய்து வந்தார்கள்; முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்; அவதாரங்களும் ஆச்சாரிகளும் எழுதி வைத்தார்கள்; வெகுகாலமாக நடந்து வருகிறது; அனேகம் பேர்களும் செய்து வருகிறார்கள் என்கின்றதான காரணங்களை வைத்துக் கொண்டு கண்மூடித்தனமாக அதன் பலா பலன்களை கவனியாமல் செய்து கொண்டிருப்பது வீண் வேலையாகும்.

ஏனெனில் ஒரு காலத்தில் தருமம் என்று சொல்லப்படுவது மற்றொரு காலத்தில் முட்டாள்தனமாகத் தோன்றப்படுவதை நேரில் பார்க்கிறோம். உதாரணமாக மனிதன் கஷ்டப்பட்டு சம்பாதித்து பணம் சேகரித்து அவற்றைப் பார்ப்பனர்கட்கு அள்ளிக் கொடுத்து ஆசிர்வாதம் பெறுவது மனிதனுடைய கடமையான தருமம் என்று கருதப்பட்டு வந்தது.

ஆனால் அவை இன்றைய தினம் சுத்த மூடத்தனம் என்றும் ஏமாந்தத்தனம் என்றும் தோன்றி விட்டது. அதுபோலவே ஏழைகளை ஏமாற்றிக் கொடுமைப்படுத்திச் சம்பாதித்த பணத்தைக் கொண்டு கோயில் கட்டுவது, மோட்சத்தில் இடம் சம்பாதித்துக் கொள்வதற்காகச் செய்யப்படும் தர்மம் என்று கருதப்பட்டு வந்தது.

ஆனால் இப்போது அதை முட்டாள் தனமென்றும், தேசத்திற்கு கெடுதியை விளைவிக்கத்தக்கதான தேசத்துரோகம் என்றும் தோன்றி அனேகர்களுக்கு, பள்ளிக்கூடம், தொழிற்சாலை, வைத்தியசாலை முதலியவைகட்கு உபயோகப்படுத்த வேண்டியது முக்கியமான தர்மம் என்று தோன்றிவிட்டது.

ஒரு காலத்தில் மூன்று வேளை குளித்து, நான்கு வேளை சாப்பிட்டு விட்டு சாம்பலையும் மண்ணையும் பூசிக் கொண்டு உத்திராட்சத்தையும் துளசி மணியையும் உருட்டுவது தர்மமென்று நினைக்கப்பட்டது. ஆனால் இப்போது அது திருடர்களுடையவும் சோம்பேறிகளுடையவும் வேலையென்று நினைத்து அப்படிப்பட்ட மனிதர்களிடம் வெறுப்பு ஏற்பட்டு இரண்டு வேளையும் உடலை வருத்திக் கஷ்டப்பட்டு சாப்பிடுகின்றவர்களிடம் இரக்கமும், அன்பும், நம்பிக்கையும் ஏற்பட்டு விட்டது.

ஒரு காலத்தில் கள்ளையும் சாராயத்தையும் குடிக்கக் கூடியதாகவும், ஆட்டையும் எருமையையும் பலியாக சாப்பிடக் கூடியனதாகவும் உள்ள குணங்கள் கற்பிக்கப்பட்ட சாமி என்பதை கும்பிட்டுக் கொண்டு அவைகளை அதற்கு வைத்துப் படைத்துக் கொண்டு தாங்களும் சாப்பிடுவது கடவுள் வணக்கத் தருமமென்று கருதப்பட்டு வந்தது.

இப்பொழுது அவைகள் காட்டுமிராண்டித்தனமென்று உணர்ந்து மக்களுக்கு உணர்த்தப்பட்டு வருகிறது. மற்றும் ஒரு கூட்டத்தாருக்கு ஆடும், பன்றியும் தின்பது தருமமாகயிருக்கிறது. மாடு தின்பது அதர்மமாய் இருக்கிறது. இன்னொரு கூட்டத்தாருக்கு மாடு தின்பது தருமமாக இருக்கிறது. பன்றி தின்பது அதர்மமாக இருக்கின்றது. வேறொருக் கூட்டத்தாருக்கு எந்த ஜெந்துவையும் சாப்பிடுவது தருமமாக இருக்கிறது. பிரிதொருக் கூட்டத்தாருக்கு எந்த ஜெந்துவையானாலும் சாப்பிடுவது அதர்மமாயிருக்கிறது.

ஒரு மதக்காரருக்கே மதக் கொள்கைபடி கள்ளு, சாராயம் குடிப்பது தருமமாயிருக்கிறது. வேறொரு மதக்காரருக்கு அவைகளைத் தொடுவது அதர்மமாயிருக்கிறது. ஒரு கூட்டத்தாருக்கு மனிதனை மனிதன் தொடுவது தீட்டாகக் கருதப்படுகிறது. இன்னொரு கூட்டத்தாருக்கு யாரைத் தொட்டாலும் தீட்டில்லை என்று சொல்லப்படுகிறது. அதுபோலவே விவாக சம்மந்த முறையிலும் ஒரு கூட்டத்தார் அத்தைப் பெண்ணை மணக்கிறார்கள்.

மற்றொரு கூட்டத்தார் சித்தப்பன், பெரியப்பன் பெண்ணை மணக்கிறார்கள். பிறிதொரு கூட்டத்தார் சிறிய தாயார் பெண்ணை மணக்கிறார்கள். இனியொரு கூட்டத்தார் மாமன் பெண்ணை மணக்கிறார்கள். ஒரு வகுப்பார் தங்கையை மணக்கிறார்கள். வேறொரு கூட்டத்தார் யாரையும் மணந்து கொள்கிறார்கள்.

மற்றொரு கூட்டத்தார் விபசாரத்தனத்தை வெறுக்கிறார்கள். இன்னொரு கூட்டத்தார் விபசாரத்தனத்தை தங்கள் குல தருமமாக கொள்ளுகிறார்கள். வேறொரு கூட்டத்தார் பார்ப்பனர்களை யோக்கியமற்றவர்களென்று வெறுக்கிறார்கள். மற்றொரு கூட்டத்தார் பார்ப்பனர்களைப் புணருவது மோட்ச சாதன மென்று கருதுகிறார்கள். இப்படி எத்தனையோ விதமாக ஒன்றுக்கொன்று விபரீதமான முறைகள் தருமமாகக் காணப்படுகிறது.

மேலும் இது போலவே சாஸ்திர விடயங்களிலும் ஒரு காலத்தில் மனித சமூகத்திற்கு கடவுளால் அளிக்கப்பட்ட தருமமென்று சொல்கிற மனுதரும சாஸ்திரம் வெகு பக்தி சிரத்தையோடு பின்பற்றப்பட்டு வந்தது. இப்போது அவை சுயநலக்காரர்களின் சூட்சிக்காரர்களின் அயோக்கியத்தனமான செய்கையென்று நெருப்பு வைத்து கொளுத்தப்படுகிறது.

இது போலவே காலத்திற்கும் தேசத்திற்கும் அறிவிற்கும் தகுந்த படி தருமங்கள் மாறுவது சகஜமாக இருக்கிறது. உதாரணமாக உங்கள் சமாஜத்திலேயே ஒரு அதிசயமான மாறுதலைப் பார்க்கிறேன். அதாவது மக்கள் இறந்துபோய்விட்டால் அவர்களை வைத்து சுடுகாட்டுக்கு எடுத்துக் கொண்டு போவதற்கு அழகான ஒரு பெட்டி செய்து வைத்திருக்கிறீர்கள்.

இந்த பெட்டியை அனேகருக்கு உதவி, அனேக பிணங்களை அதில் வைத்து வண்டியில் கொண்டு போனதாக உங்கள் ரிப்போர்டில் வாசித்திருக்கிறீர்கள். இதை இந்துக்கள் என்பவர்கள் சற்றுக் கேவலமாகக் கருதுவதுண்டு. எனக்கு ஐந்தாறு வருடமாக இம்மாதிரி செய்ய வேண்டுமென் கிற ஆசை இருந்து வருகிறது. ஆனால் நீங்கள் செய்திருப்பது பலருக்குப் புதிதாகவும் அதர்மமாகவும் தோன்றினாலும் சீக்கிரத்தில் இந்த பழக்கம் எங்கும் தருமமாகி விடுமென்று கருதுகிறேன்.

ஆகையினால் தருமம் என்கிற விஷயத்தில் மிக அறிவைச் செலுத்தி உலகத்தையெல்லாம் நன்றாய் ஆராய்ந்தறிந்து மிக்க அவசியமென்றும் பயன் படத்தக்கது எதுவென்றும் தெரிந்து செய்வது தான் உண்மையான தரும மாகும். ஆகவே இது வரையில் நீங்கள் செய்து வந்திருக்கும் தருமங்களைப் பாராட்டுவதோடு இனியும் காலதேசவர்த்தனமானத்திற்குத் தகுந்தபடி எல்லா மக்களுக்கும் பயன்தரதக்க தர்மமாகவே செய்து வருவீர்களென்று கருது கிறேன்.

அடுத்தாற்போல் பெண்கள் சுவாதந்திரியம்:- பெண்கள் சுதந்திரம்

பெண்கள் சுதந்திரம் என்பது பற்றி திருமதி. அலர்மேல் மங்கைத் தாயாரம்மாள் அவர்கள் பேசியதை நீங்கள் எல்லோரும் கேட்டுக் கொண்டிருந்தீர்கள். பெண்கள் சுதந்திர விஷயத்தில் எனக்கு மிக்க ஆவல் உண்டு. என்னுடைய இயக்கத்தில் அதற்கு நான் முக்கிய ஸ்தானம் கொடுத்திருக்கிறேன்.

என்னுடைய அபிப்பிராயத்தில் ஒரு இந்து என்பவன் தன்னை ஒரு இந்து மதத்தான் என்று சொல்லிக் கொண்டு பெண்கட்கு சுதந்தரம் வேண்டு மென்று சொல்லுவதை ஒருக்காலும் ஒப்புக் கொள்ள முடியாது. ஏனென்றால் இந்து மதத்தில் பெண்களுக்கு சுதந்தரம் இல்லை என்பதே நீங்கள் நன்றாய் உணர வேண்டும்.

பெண்களுக்கு சுதந்தரம் வாங்கிக் கொடுக்க பிரியப்படுபவர்கள் அதற்கு தடையாய் உள்ளதை எதிர்க்கவும் அழிக்கவும் துணிந்தவர்களாயிருந்தால் தான் அவர்கள் உண்மையான சுதந்தரவாதிகள் ஆவார்களே தவிர மற்றபடி தடைகளை ஆதரித்து கொண்டு சுதந்திரம் பேசுகிறவர்கள் தந்திரவாதிகளே ஆவார்கள், அல்லது மூடர்களே ஆவார்கள்.

இந்து மத தருமத்தில் பெண்கள் ஈனப்பிறவி, கடவுளாலேயே விபச்சாரிகளாகப் பிறப்புவிக்கப்பட்டார்கள். சுதந்திரத்திற்கு அருகதையற்றவர்கள். ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய தாய் விபச்சாரம் செய்திருப்பாள் என்கிற நம்பிக்கையோடுப் பிராயசித்தம் செய்துக் கொள்ளக் கூடியவன். பெண்கள் கலியாணம் செய்து கொள்ளும் வரையில் தகப்பனுடைய பந்தோபஸ்தில் இருக்க வேண்டும்.

கலியாணம் செய்து கொண்ட பிறகு புருஷனுடைய பந்தோபஸ்திலிருக்க வேண்டும். புருஷன் இறந்த பிறகு மகனுடைய பந்தோ பஸ்திலிருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒழுக்க வீணர்களாய்ப் போய் விடுவார்கள். பெண்களுக்குச் சொத்து இருக்க கூடாது.

அவர்களிடத்தில் புருஷர்கள் உண்மை பேசக்கூடாது, ரகசியம் சொல்லக் கூடாது. இன்னும் இவைபோன்ற எத்தனையோ நிபந்தனைகள் தரும சாஸ்திரத்திலும் கலியுகத்திற்கு ஆதாரமான பராசரஸ்மிருதியிலும் மற்றும் அவைகளை ஆதரிக்கும் இதிகாசப் புராணங்களிலும் சொல்லப்பட்டிருக்கிறது.

இவைகளை (இந்த புஸ்தகங்களையும் சாஸ்திரங்களையும்) ஒப்புக் கொள்ளுகிறவனும் உண்மையான சநாதன ஹிந்து என்று சொல்லிக் கொள்ளுகிற எவனுக்கும் பெண்கள் சுதந்திரத்தைப் பற்றி பேச உரிமை இல்லை என்பதே தான் எனது அபிப்பிராயம்.

இந்த விஷயத்தில் திராவிட தர்மமோ, சமண தருமமோ எல்லாம் ஒரேவித யோக்கியதைக் கொண்டதே என்பது எனது அபிப்பிராயம். தெய்வத் தன்மை பொருந்தியவரென்று சொல்லும் திருவள்ளுவர் என்பவர் கூட தம் பெண்சாதியை விபசாரியா பதிவிரதையா என்று பரிட்சித்துப் பார்க்க ஆசைப்பட்டு மணலை சோறாகச் சமைக்கச் சொல்லி அந்த அம்மாளும் அது போலவே சமைத்துப் போட்ட பிறகே தான் கலியாணம் செய்து கொண்டதாகச் சொல்லப்படுகிறது.

இந்தப்படி பரீட்சை செய்து பார்த்தால் இன்றையதினம் உலகத்திலுள்ள பெண்கள் எல்லாம், இங்கு இருக்கிற பெண்கள் எல்லாம் விபசாரிகளென்று தான் நாம் தீர்மானிக்க வேண்டும். ஏனெனில் ஒரு சகோதரியாலும் மணலை அரிசி சாதமாக சமைக்கவோ, மழை பெய்ய சொல்லவோ, பச்சை வாழைத்தண்டுவைக் கொண்டு சமையல் செய்யவோ முடியாதென்று சொல்ல வேண்டியிருக்கிறது.

வேறு எந்த காரியத்துக்காகவும் இந்து மதத்தை ஒழிக்காமல் தாட்சண்யம் பார்ப்பதாயிருந்தாலும் பெண்களுடைய சுதந்திரத்தை உத்தேசித்தாவது இந்து மதமென்பது அழிய வேண்டியது மிக்க அவசியமாகும். இந்து மத புராண இதிகாசங்களில் புருஷன் தாசி வீட்டுக்கு கூட்டிக் கொண்டு போனதாகவும், புருஷன் குஷ்டரோகியாகி விட்டதால் அவனைக் கூடையில் சுமந்துக் கொண்டு போனதாக நளாயினி முதலிய கதைகள் சொல்லப்படுகிறது.

எவ்வளவு அக்கிரமும் கொடுமையுமானக் கொள்கை இது என்பதை யோசித்துப் பாருங்கள். என்னுடைய மகள் நளாயினியைப் போல் இருப்பாளானால் கட்டாயம் அவளை நான் விஷம் வைத்துக் கொன்று விடுவேனேயொழிய குஷ்ட ரோகியை சுமந்து கொண்டு தாசி வீட்டிற்குக் கொண்டுபோய் விடும்படிப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன்.

பெண்கள் விபசாரிகள் என்பதை ஆதரிக்க எழுதி வைத்த ஆதாரங்களில் ஒன்று தான் பாரதம் என்பது எனது அபிப்பிராயம். ஏனெனில் பாரதத்தின் முக்கிய பாத்திரங்களில் ஒன்றான திரௌபதை என்பவள் தனக்கு ஐந்து புருஷன்மார்கள் உண்டு என்றும் அவ்வளவும் போதாமல் ஆறாவது புருஷன் ஒருவன் மீது தனக்கு ஆசையிருந்தது என்றும், ஆதலால் தான் விபச்சாரி என்றும் உலகத்தில் பெண் தன் புருஷனைத் தவிர வேறு ஆண்களே இல்லாமலிருந்தால்தான் பெண்கள் பதிவிரதையாய் இருக்க முடியுமென்றும் ஓர் உயர்குலப் பெண்ணேத் தன் வாயினால் சொன்னதாக எழுதி வைக்கப்பட்டிருக்கிறது.

அரிச்சந்திர புராணத்தில் தன் பெண் ஜாதியை பல சொத்துகளில் ஒன்றாகக் கருதி வேறு எவனுக்கோ விலைக்கு விற்றதாகவும், அவளும் தன்னை ஒரு உண்மையான அடிமை என்பதை ஒப்புக் கொண்டு வாங்கப்பட்டவனிடம் தொண்டு செய்ததாகச் சொல்லப்பட்டு இருக்கிறது.

வேறு “புண்ணிய” புராணங்களில் அடியார்கட்கு பெண்சாதி மார்களைக் கூட்டிக் கொடுத்ததாகவும் அந்தப் பெண்களும் அப்புருஷர்கள் வாக்கைத் தட்டக்கூடாது என்று கருதி அடியார்களிடம் போய் படுத்துக் கொண்டதாகவும், சொல்லப்பட்டிருக்கிறது. மற்றும் சில நீதிக் கதைகளில் தங்கள் புருஷன்மார்களுடைய வைப்பாட்டிகளுக்குத் தொண்டு செய்ததாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

இராமாயணம் என்கிற இதிகாசத்தில் ஒருவன், ஒரு நீதியான சக்கரவர்த்தி அறுபதினாயிரம் பெண்சாதிகளை மணந்து கொண்டதாகவும் பட்டத்துக்கு தன் சொந்த அரண்மனையில் வேறு மூன்று பெண்டாட்டிகளை மணந்து கொண்டிருந்ததாகவும், யாகத்தில் அவர்களைப் பார்ப்பனர்களுக்குத் தன்னுடைய சொத்துவைப் போல கருதித் தருமமாக கொடுத்து விட்டதாகவும் அவர்களாலே பெண்களை வைத்து நிர்வகிக்க முடியாமல் திரும்பவும், பணம் வாங்கி கொண்டு ராஜாவுக்கேக் கொடுத்து விட்டதாகவும், இம்மாதிரி பண்ட மாற்றுதலுக்கு பெண்களை உபயோகப் படுத்தினதாகச் சொல்லப்படுகிறது.

இன்னும் நம்முடைய பழைய அரசர்கள் ஒருவராவது ஒரு பெண்சாதியுடன் இருந்ததாகவோ, பெண்சாதிகளை சமமாகவோ காண்பதற்கில்லை. அப்படி எங்காவது காணப்படுவதாயிருந்தாலும் அது ஒருக்காலும் மேற்படி மததர்மங்கட்கு முரணானது என்று தான் சொல்ல வேண்டும். இது வரையிலும் மக்கள் பெண்கள் சுதந்திரம் என்று பேசிக் கொண்டு வந்ததெல்லாம் வெறும் புரட்டும் முன்னுக்கு பின் முரணுமாய் முடிந்திருக்கிறதே தவிர காரியத்தில் உண்மையாகப் பெண்கள் விடுதலைக்கு மார்க்கங்கூட கண்டுப் பிடிக்கப்படவில்லை என்பது தான் எனது அபிப்பிராயம்.

பெண்கள் விடுதலைக்கு வெளியில் வருபவர்கள் பெண் சம்மந்தமான இந்துமத தர்மத்தையும், சாஸ்திரத்தையும், புராணத்தையும், இதிகாசத்தையும் நீதிக் கதையையும் ஒதுக்கி வைத்து விட்டுத்தான் வர வேண்டும்.

அப்படிக்கில்லாமல் மேற்கண்ட அழுக்கு மூட்டைகளைச் சுமந்து கொண்டு யார் எங்கு போய் பெண்கள் சுதந்திரம் பேசினாலும் அது கட்டுப்பாடு உள்ள அடிமை பிரசாரமாகத்தான் முடியுமே தவிர அது சிறிதும் விடுதலையை உண்டாக்காது.

மற்றும் பெண்களைப் படிக்க வைக்க வேண்டும் என்று சொல்லி எழுத்து வாசனையுண்டாக்கி அவர்கட்கு அரிச்சந்திர புராணத்தையும், நளாயினி கதையையும், இராமாயணத்தையும், பாரதத்தையும் படிக்க வைத்தால் பின்னும் அதிகமாக அடிமைகள் ஆவார்களா? சுதந்தர மடைவார்களா? என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள்.

இவற்றை எல்லாம் விட கற்பு என்கின்ற ஒரு பெரிய கற்பாறை அயோக்கியத்தனமாய் அவர்கள் தலைமீது வைக்கப்பட்டிருக்கின்ற வரையில் ஒரு நாளும் பெண் மக்களை உலகம் முன்னேற்றமடையவோ, சுதந்தரமடையவோ ஒருக்காலும் முடியவே முடியாது.

கற்புக்கு லட்சணம் சொல்கிறபோது ஒரு பழமையான தமிழ் நூலில் காணப்படும் ஒரு வார்த்தை எவ்வளவு கடுமையான அடிமைத்தனத்தை மனதில் வைத்து உண்டாக்கப்பட்ட தென்பதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்.

அதாவது யாராவது ஒரு புருஷன் ஒரு பெண்ணைப் பார்த்து அவளை தன் மனதில் நினைத்து விட்டானேயானால் அந்த பெண்ணுடைய கற்புக் கெட்டுப் போய்விட்டதாம். ஏனெனில் அந்த பெண் கற்புடையவளாய் இருந்திருந்தால் மற்றொரு மனிதன் அவளை மனதில் நினைத்திருக்க முடியாதாம். எவ்வளவு (அ) நீதி என்பதை நினைத்துப் பாருங்கள்! எந்த நிர்பந்தமானாலும், எந்தக் கட்டுப்பாடானாலும், எந்த தருமமானாலும், ஆணுக்கும், பெண்ணுக்கும், இருவருக்கும் சமமாக விருப்பதனால் அதைப் பற்றி நமக்குக் கவலையில்லை.(தொடர்ச்சி 29.06.1930 குடி அரசு இதழ் )

குறிப்பு : 01.061930 இல் கண்ணனூரில் (செவ்வாய் பாகத்தில் உள்ள தர்ம சமாஜ மண்டபத்தில்) நடைபெற்ற தர்ம சமாஜத்தின் எட்டாவது ஆண்டுவிழா - தலைமை - தொடக்கவுரை.

குடி அரசு - சொற்பொழிவு - 08.06.1930

Pin It