ஏழைப் பங்காளனின் ஆட்சி..!
எப்போதும் வாரி வழங்கும் வள்ளல்
மின்சாரத்தை வாரி வழங்குகிறான்
பன்னாட்டு நிறுவனங்களுக்கு..!

ஒரு வழியும் அற்ற மக்களுக்கு
நான்கு வழிச் சாலையைக்
காட்டுகிறார்கள்…!

வறுமையைக் கடக்க
கதியற்ற மக்களிடம்
கட்டிய பாலத்தைக் காட்டி
கடந்து போக சொல்கிறார்கள்..!

ஒட்டுக் கோவணத்தையும்
உருவிச் சென்றவர்கள்
கட்டிக்கச் சொல்லி
கரைவேட்டி தருகிறார்கள்..!

நாம் வாழும் உரிமையை
வன்முறையாய் பறித்துக் கொண்டு
"இலவசம் இலவசம்" என
எப்போதும் முழங்குகிறார்கள்..!
எல்லாம் அவன் வசமானது..!

ஆட்சி
அதிகாரம்
அரச வன்முறையால்
ஆளும் அவனை
அனைவரும் அடிபணிகிறார்கள்
ஆண்டவனைப் போல..!

எல்லாம் அவன் வசம்..!
கடைசி விவசாயியின்
கைகளில் மட்டும் விஷம்..!

- அமீர் அப்பாஸ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It