நாம மரியாதை குடுத்துருக்கோமா என்று யோசிக்கிறேன்.
எப்போதுமே கொடுத்திருக்கிறோம். கொடுத்துக் கொண்டே இருக்கிறோம். அது ஒரு வாழ்வியல் முறையாகவே நமக்குள் இருக்கிறது என்பதை திடமாகவே சொல்வேன்.
ஆனால் இன்றைய தலைமுறை என்று குறிப்பிட்டு சொல்ல வேண்டாம். எல்லா தலைமுறையிலுமே இந்தப் பிரச்சனை இருந்தபடியேதான் இருக்கிறது. மரியாதை என்ற செயலின் வடிவம் என்னவாக இருக்கிறது என்ற கேள்வி சுழன்று கொண்டேயிருக்கிறது. பெரியவர்களுக்கென்று இல்லை. பொதுவாகவே சக மனிதர்களுக்கான மரியாதை எப்படி இருக்கிறது என்ற கேள்வி மனதுக்குள் கொக்கி போட்டபடியே இருக்கிறது.
முன்ன பின்ன தெரியாத ஒருவருக்கு கூட கால் மேல் போட்டிருக்கும் காலை இறக்கி வழி விட்டிருக்கிறோம். அதுவும் வயதில் மூத்தவர் என்றால் அவர் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். தன்னால் கால் இறங்கி விடும். வரிசையில் வழி விடும். பேருந்தில் இருக்கை கொடுக்கும். ஆனால் அந்த இயல்பு இப்போது குறைந்து கொண்டு வருகிறதோ என்ற தவிப்பு நமக்கிருக்கிறது.
கடந்த வராம ஒரு தேனீர் கடையில்... நால்வர் அமரும் மேசையில்... எதிரே ஒரு பெண் உடலை சரித்து காலை நீ....ட்டி அமர்ந்திருக்கிறார். எதிரே யாரும் வந்தமராத வரை பிரச்சனை இல்லை. எதிரே நாங்கள் அமர்ந்த பிறகும் அந்த பூச்சு காலை உள்ளிழுக்கவில்லை. இதுக்கெல்லாமா எக்ஸ்கியூஸ்மீ சொல்வார்கள். இயல்பிலேயே எதிரே அமர்ந்திருப்பவருக்கு கால் வைக்க இடம் விட்டு தனக்கான அளவில் காலை மடக்கி வைத்துக் கொள்ள வேண்டும் தானே. ஆனால் அந்த அடிப்படை அறிவு இல்லாமல் அந்தப் பெண் அப்படியே நீட்டியிருக்க... பிறகு கவிக்குயில் எக்ஸ்கியூஸ்மீ சொல்லி அப்போதும் முழுதாக இழுத்துக் கொள்ளாத போது... வேறு வழியின்றி யுத்தன் தன் காலை அந்தப் பெண் பக்கம் நீட்டி முழக்க வேண்டி வந்தது. பிறகு தானாக உள்ளிழுத்துக் கொண்டது அந்த வெத்துருட்டு.
பேருந்திலும் இப்படியேதான் நடக்கும். அங்கிருப்பதே அத்தனை சின்ன இருக்கை. அதிலும் ஜன்னலோரம் அமர்ந்திருப்பவன் காலை விரித்து ஒன்றரை இருக்கையை ஆக்கிரமித்துக் கொண்டால் அருகே அமர்கிறவர் அரை இருக்கையில்தானே அமர முடியும். சீட்டில் தொங்கிக் கொண்டுதானே வர முடியும். ஆதி முட்டாள்கூட அப்படி ஒரு வேலையை செய்ய மாட்டான். அது அநியாய வெறி கொண்டவர் செய்யும் அநாகரிக செயல்.
பேருந்துக்கு ஒரு யுத்தன் வேண்டும் போல.
பைக்கில் போகும் போதே தகாத வார்த்தைகளில் சத்தம் போட்டு பேசிக்கொண்டு போவதெல்லாம் சகிக்கவே முடியாதவை. நாம் நம் நண்பர்களுக்குள் பேசிக்கொள்வது மற்றவர் காதிலும் விழுகிறதே என்றுறுத்த வேண்டாம். ஒன்றுக்கும் உதவாத வேகத்தை மட்டும் வைத்துக் கொண்டு மானுடம் சேர முடியுமா.
சிக்னலில் குடும்பத்தோடு நிற்கையில் இந்த மாதிரி ஆட்கள் வந்தாவே பயப்பட வேண்டி இருக்கிறது. வாயைத் திறந்தால்... அந்த வார்த்தை தான் வருகிறது. அதுதானே இந்த பூமிக்கு கொண்டு வந்தது. அதுதானே சிருஷ்டி. அதற்குதானே இந்த வாலிப காத்திருப்பு. பிறகு ஏன் அந்த உறுப்பின் மீது இத்தனை வன்மம். நம்ம வீட்டு பெண்களிடமும் அதுதானே இருக்கிறது என்ற நிஜம் ஏன் புரிபடுவதே இல்லை. திட்ட வேண்டும் என்றாலே.... ங்கொம்மாப்... என்று ஆரம்பிப்பது அட்டூழியம். அவுங்கம்மாவைத் திட்டுவது உங்கம்மாவையும் திட்டுவது போல தானே.. நண்பா.
வாயை ஆணி அடித்து தைக்க வேண்டும்.
அதே போல போனிலோ நேரிலோ ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே இந்தப் பக்கம் திரும்பி துப்புவதெல்லாம் துப்புக் கெட்ட செயல். எதிரே பேசிக் கொண்டிருப்பவரை இதற்கு மேல் அவமானப்படுத்த முடியாது.
என் வீட்டு வாசலில் தான் துப்புகிறேன் என்று எதிர் வீட்டு வாசலில் ஆள் இருக்கும் போது துப்புவது முன்னாள் அரசு கல்லூரி யின் முன்னாள் சீனியர் பப்ரோபஸர். இவன்லாம் என்ன சொல்லிக் குடுத்திருப்பான்.
ஒரு நாளைக்கு பாரதி கண்ணம்மா படத்தில் வடிவேலுக்கு துண்டு போர்த்தி சாத்து சாத்துனு சாத்தின மாதிரி சாத்தனும். நேரம் கூடி வரட்டும்.
பக்கத்தில் ஒரு மாளிகை கடை இருக்கிறது. அப்படி ஒரு நினைப்பு அந்த மளிகை கடை முதலாளிக்கு. பொடியன் தான். எப்பவும் தலையை செல்லுக்குள் விட்டே உக்காந்திருப்பான். போயி முன்னால் நின்னாலும் மடையனுக்கு தலை நிமிராது. முன்னால ஒரு உருவம் நிக்கறதுமா தெரியாது. மஹாராஜாவை கூப்பிடனும். அப்பதான் ஆ... என்று நிமிர்வார். ஒரு பொருளை சொல்லும் போதே "வேற" என்று அடுத்த பொருளுக்கு தாவுவார். என்ன இவன் மெண்டல் போல என்று யோசித்து...சொல்லிட்டே வந்து விட்டேன். இனி உன் கடைக்கு நான் என் பிரென்ட் அவன் பிரென்ட் அவன் பிரென்ட் அதே மாதிரி எங்க குடும்பம் யாரும் வர மாட்டோம். உனக்கு மரியாதை தெரியல.. வாடிக்கையாளரை மதிக்க தெரியல என்று.
எப்படி யோசித்தாலும் அப்படியாக இங்கிதம் இல்லை என்ற முடிவுக்கு வர வேண்டி இருக்கிறது. யார் சொல்லித் தருவது இதெல்லாம். பாடத்திட்டமா.. வீட்டுத் திட்டமா. மற்றவருக்கு தொந்தரவு ஆகும் என்ற எண்ணமே இல்லாமல்.. அலைபேசியில் சத்தமாக பாட்டு கேட்டுக்கொண்டு வரும் சக பயணியை யார் செருப்பால் அடித்து திருத்துவது.
எத்தனையோ பொறுப்புள்ள 2கே கிட்ஸ் இருக்கிறார்கள். அப்படி ஒரு ஐவர் அணிதான் நம்மை மலையில் இருந்து பாதுகாப்பாய் இறக்கினார்கள். ஆனால்.. மிகுந்த கூட்டம் ஆட்டு மந்தையாக உலவுகிறதே. அதுதான் கவலை அளிக்கிறது. கண்ணை பார்த்து பேசுங்கடா என்று கத்திக் கொண்டிருக்கிறோம். இங்கே முகத்தை பார்த்தே பேச மாட்டேன் என்கிறார்கள். கவலையோடு நோக்குகிறேன்.
- கவிஜி