"எப்பிடிடா தினமும் இட்லி சாப்டற...?" என்பான் நண்பன் கமல்.
"எப்பிடிடா தினமும் இட்லி சாப்டாம இருக்கறது....!" என்பேன் நான்.
இருவருமே சிரித்துக் கொள்வோம்.
அப்படி வாழ்வோடு இணைந்த நால் திசை வட்டம்..இட்லி. நல்ல தினம் இட்லியோடு தான் ஆரம்பிக்கும் என்பது என் விபரம் தெரிந்த நாளில் இருந்து நான் வாழ்ந்த கணக்கு. இட்லியை நிறைய பேர் ஒதுக்குவதற்கு காரணம்.. அதன் தோற்றமோ...சுவையோ அல்ல. அதோடு சேர்த்து கொள்ளும் சட்னி ஒரே வகையில் தொடர்ந்தால்... இட்லி போர் தான். தினம் ஒரு சட்னி மாற்றினால்... கூட கொஞ்சம் சாம்பார் ஊற்றினால்... அந்த நாள் இனிய நாள் தான்.
நாலு இட்லி போதும்.. நல்ல வகை சட்னியோடு சாம்பார் கொஞ்சம் இருந்து விட்டால்... காலை உணவுக்கு உண்மையில் திடம் சேர்த்து விட்டீர்கள் என்றே அர்த்தம். ஆவியில் வெந்த உணவு நம் ஆவி காக்கும் உணவு.
கிட்டத்தில் தட்டில் கிடக்கும் நிலா என்று சாதாரண ருசிக்காரனையும் கவிதை ரசனைக்காரனாய் மாற்றி விடும்.... மொட்டு மொட்டு குட்டு மல்லிகை என்றால் இட்லி தகும். இட்லியில் கார்போ ஹைடிரேட்... சாம்பார் சட்னியில் ப்ரோடீன் என்று சரியான கலவையாக தான் காலை உணவை முன்னோர் முட்டி மடங்க இட்லி இட்லியாய் ஊற்றி எடுத்தார்கள்.அதே நேரம் இட்லிக்கு மாவரைக்கும் போது அதன் கலவைகள் சரியாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். இங்கே கிரைண்டர் மாவரைக்க (கையால் கல்லில் அரைத்த காலம் இன்னும் சுவையானது.) அங்கே வாயை திறந்து கொண்டு சீரியல் பார்த்தால் மறுநாள் காலை... இட்லிக்கு பதில் தட்டில் வெள்ளை எலி தான் துள்ளும். எடுத்தடித்தால்... எதிரே இருப்பவன் மண்டை கிழியும். சில கடையில்.. கழி போல இருக்கும் இட்லியை கண்டு.... சொல்லாமல் கொள்ளாமல் எழுந்து ஓடி வந்த நாட்களும் உண்டு. சில உறவினர் வீட்டில்.... நண்பர்கள் வீட்டில் இட்லிக்குள் மாவு ஒளிந்து வழிய.... சொல்லொணா துயரத்தோடு இட்லி என்னவோ பிடிப்பதில்லை என்று பொய் சொல்லி எகிறிய நாட்களும் உண்டு.
இட்லி... பதம் என்ற சொல்லுக்கு அருஞ்சொருள் பொருள் என்று கூட சொல்லலாம். எல்லாமே நொடியில் படியும் காரியங்கள். கரணம் தப்பினால் மரணம் போல.. நேரம்.... கூடினால் இறுகிப் போகும்.... குறைந்தால்... வெளியே வெந்தது போல நடித்து உள்ளே அழுது வழிந்து அந்த நேரத்தைக் கொல்லும். புளிப்பு அத்து மீறவும் கூடாது. அந்தரத்தில் தொங்கவும் கூடாது. அளந்து வார்த்த அழகாய்... உள்ளே ஊறி விட அதன் சுவை... அதன் தீர்க்கத்தை கூறி விடும். சமையலுக்கு பழகிய கைகள் ஓட்டையிடாமலே இட்லி வெந்து விட்டதா இல்லையா என்று சொல்லி விடும். அது ஒரு கலை.
அன்னபூரணி இட்லியை விட.... ரோட்டோர அன்னமாக்கா தள்ளுவண்டி கடை இட்லி அமர்க்களப் படுத்தும்.
ஆவி பறக்க... சுட சுட... கையில் சூடு பொறுக்காமல் படும் படாமல் எடுத்தெடுத்து அப்படி அப்படியே தட்டில் வைத்து வெங்காய சட்னி கொஞ்சம்... சாம்பார் கொஞ்சம்.. புதினா சட்னி கொஞ்சம்... எண்ணையில் கலந்த இட்லி பொடி கொஞ்சம் என்று சட் சட்டென வைத்தால்... தின்னும் முன்பே நாவில் ருசி உச்சம் பெரும். தீர்ந்து விட்ட நேர்த்திக்கடனை போல உள்ளே பெரும் நிம்மதி சாப்பிட்ட பிறகு. சுவையாக இருக்கிறதே என சும்மா ஏழட்டென்று அடுக்க கூடாது. நாலு அல்லது ஐந்து. அது தான் ஆகாரம். அதுவே உணவின் தேவாரம்.
ரோட்டு கடையில் சாப்பிட பொதுவாக எனக்கு பிடிக்காது என்றாலும்.. இந்த இட்லி சாமாச்சாரத்துக்கு கொஞ்சம் விலக்கு கொடுத்து விடுவேன். இட்லியின் சுவையே அதன் சூட்டிலும்... பறக்கும் ஆவியிலும் தான். ஏழு மணிக்கே சுட்டு எடுத்து... ஹாட்பாக்ஸ் என்ற பெயரில் பத்து இட்லி பிடிக்கும் இடத்தில் பதினைந்தை போட்டு திணித்து அமுக்கி... சாப்பிட உட்காரும் எட்டு மணிக்கு சூடு ஆறி.... அதன் வடிவம் மாறி... 'இன்னைக்கும் இட்லி தான்' என்ற நினைப்பை அதுவாகவே வரவைக்கும் பாங்கில்.. ரெண்டை பிய்த்து "என்ன பண்ணி தொலைய..." என்று தின்று விட்டு செல்வது இட்லியின் மறுபக்க கொடூரம். மறுதலிக்க வேண்டுகிறேன்.
சாப்பிடுபவர்க்கு இட்லி என்ற இளக்காரம் வரக்கூடாது என்றால் அதை செய்பவர்களுக்கும் அது இருக்க கூடாது. இட்லி அந்த நேர சுவை. நேரங்களில் வாழும் சுவைக்கு நேரங்களில் தான் மரியாதை செலுத்த வேண்டும். கவிதை தெறிக்கும் நேரம் போல இட்லி வேகும் நேரம். கணக்கிட்டு காத்திருந்து கவனி.
குக்கரில் எண்ணெய் தடவி இட்லி ஊற்றுவார்கள். அறவே வெறுக்கப்படும் முறை. இட்லியை அவமானப் படுத்தும் செயல். இட்லிக்கு ஆதி பழக்கம் இட்லி சட்டியில் ஈர துணியை விரித்து குழி இருக்கும் இடத்தில் எல்லாம் பக்குவமாய் வெற்றிடத்தை அழுத்தி குவித்து.. அதன் பிறகு வெற்றிடத்தை காற்று நிரப்பும் என்பது போல மாவும் நிரப்பும் என்பதாக மாவு ஊற்ற வேண்டும். அதும் துக்கிளியூண்டு ஊற்றி விட்டு பணியார வடிவத்தை இட்லிக்கு கொடுக்க நினைக்க கூடாது. அதே நேரம் அணுகுண்டு வடிவத்தையும் கொட்டி பார்க்கும் குரூரம் இருக்க கூடாது. கைக்கடக்கமான வடிவத்தை ஊற்றி... பக்குவம் குறையாமல் அடுப்பில் வைக்க வேண்டும். ஒரே நேரத்தில் ஒன்பது வேலை செய்யற தில்லாலங்கடி கணக்கு வேலையெல்லாம் இட்லியிடம் பலிக்காது. இட்லிக்கு கவனம் கொடுத்து... நேரம் கொடுத்து.. வெந்த கணத்தில் எடுத்து நேராக சாப்பிடும் தட்டில் தான் போட வேண்டும். இடையே தரக தட்டுகளில் விழுந்து எழுந்தால்.... பிறகு அது இட்லி இல்லை. இட்லி உப்புமாவுக்கு முந்தின ஜஸ்ட் மாவு வட்டம்.
ஊருக்கு போனால்.... தம்பி....ஒரு ஆயா கடையில் இருந்து இட்லி வாங்கி வந்து தருவான். அந்த கடை இட்லி... எப்படி சொல்ல... அப்படி ஒரு சுவை. அப்படியே மேல் தோல் உரிந்து கொண்டே வரும். சாம்பாரில் ஊறிய பிறகு உப்பி இருக்கும் அதன் உருவம் தொட தொட பஞ்சு போல நெளிந்து கையோடு வரும். தொட தொட மலர்ந்ததென்ன என யோசிக்க செய்யும் சித்து அந்த இட்லிகள். விடிந்தும் விடியாமலும் கடை முன் கூட்டம் லைன் கட்டி நின்றதை பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு விள்ளலையும் பிட்டு....(ம்ஹும் பிட்டு சரி இல்லை. தொட்டாலே பிட்டு கொள்ளும் மொட்டு என சொல்லலாம்....) வாய் பக்கம் கொண்டு செல்லும் நொடி... மூச்சிழுத்து பார்க்கும் கண்களில் கருப்பு வெள்ளை இட்லிகள் சட்டென முளைக்கும். ஒவ்வொரு இட்லியும் பந்து போல இருக்கும். ஆனால் கனமாக இருக்காது. மெதுமெதுவன பொது பொதுவென இருக்கும் அந்த ஆயா கடை இட்லி இன்றும் கூட நினைவு சாம்பாரில் மிதக்கிறது.
ஞாயிறு காலை இட்லிக்கு கறிக்குழிம்பு ஊற்றுவதாகட்டும்.. மீன் குழம்பு ஊற்றுவதாகட்டும்.. பிரமாதமான கூட்டமைப்பு. எண்ணெய் மிதக்க சொத சொதவென ஊற்றி தொட்டு தொட்டு சாப்பிடுகையில்... இந்த வாழ்வின் வாழ்தலுக்கான அடிப்படை உணர்வு... உணவில் இருந்தே எழும்புவதை கிட்டத்தில் நம்பலாம்.
இட்லிக்கு சர்க்கரை தொட்டு தின்போர் உண்டு. ஊறுகாய் தொட்டு உஷ் உஷ் என உருட்டுவோர் உண்டு. சாம்பார் இட்லி... ரச இட்லி.. ரவா இட்லி...என்று இட்லிக்கு சேரவா.... கூட்டு இல்லை. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு போல.... மினி இட்லி.... சில்லி இட்லி... மிளகாய் பொடி இட்லி என்று இட்லிகள் சும்மா புகுந்து பந்து விளையாடும். மைதானம் காலியாக இருக்க வேண்டும். அவ்வளவு தான்.
ஓர் இரவில் மைசூரில் இட்லி சாப்பிட நேர்ந்தது. அங்கு தான்... நடிகையின் பெயர் கொண்ட அந்த இட்லியை கண்டேன். ஒரே இட்லி. தட்டு முழுக்க நிறைந்திருந்தது. சிரிப்பு தானாக வந்தாலும்.. சிந்தனையைக் கட்டுப்படுத்திக் கொண்டு... மைசூர் காரத்தில் சாப்பிட தொடங்கினேன். மல்லிகை பூ மாதிரி என்பார்களே. அது எப்படி என்று கண்ணாரக் கண்டேன். வயிறார உண்டேன். வாயார.... இதோ உங்களிடம் பகிர்கிறேன்.
- கவிஜி