பால் பிடிக்காதவர்கள் கூட இருக்கலாம். தயிர் பிடிக்காதவர்கள் இருக்க முடியாது என்று நம்புகிறேன். தினம் தினம் ரெண்டு கரண்டி தயிராவது... எப்படியாவது உணவில் சேர்ந்து கொள்ளல் தினப்படி இயல்பு.
சோறு மட்டும் எடுத்து கொண்டு ஒரு பாக்கெட் தயிர் வாங்கி மதிய சாப்பாட்டை முடித்துக் கொள்ளும் எத்தனையோ அலுவலர்களை அறிவோம். சோற்றில் தயிர் மட்டுமே ஊற்றி... உப்பிட்டு பிசைந்து அடிப்பதற்கு ஈடு வேறென்ன இருக்க முடியும். முழு டிபன் பாக்ஸ் முழு மூச்சோடு வயிற்றுக்குள் இறங்க... தயிர் நாளில் எல்லாம் வரம் பெற்றிருக்கும் பசி.
பொதுவாகவே தயிர் இருக்கும் நாளில்... குழம்போடு கொஞ்சம்... ரசத்தோடு கொஞ்சம் கலந்து உண்பது எனது பிடித்தம். எந்த குழம்பிலும் தயிர் கொஞ்சம் கலந்து விட்டால் அந்த நேர சோற்றில் வெந்து தணியும் பசி. வயிற்று சந்தெல்லாம் வந்து வந்து நிறையும் ருசி. தயிர் சாதத்தை விட வெறும் தயிரை சோற்றில் பிசைந்து உண்பது பெரும்பாலோருக்கு பிடிக்கும் அனிச்சை. எந்த வயதுக்காரரும் தயிர் சோறு சாப்பிடுகையில் சட்டென ஒரு சிறு பிள்ளையாக தட்டின் முன் அமர்ந்திருப்பதை உணரலாம். ஸ்பூனில் கொரிப்போர் ஆட்டத்தில் இல்லை.பாலில் இருக்கும் ஆடை கண்டு ஐயோவென நுனி சுழிக்கும் நா... தயிரில் இருக்கும் ஆடையை ஆஹாவென களைந்து மெல்லும். எல்லா வயதினருக்கும் பிடித்த தயிர்... சுடு சோற்றுக்கு குளுகுளு சேர்ப்பு. ஆறின சோற்றுக்கும் வெது வெது ஈர்ப்பு. பளீர் ருசி.. பார்க்கையிலேயே பருவம் பூத்த பருக்களாய் மின்னும். கடைத்தயிரை விட வீட்டில் உறை ஊற்றி மினுங்கும் தயிரில் நெருக்கம் அதிகம் என்று நம்புகிறேன்.
பாக்கெட் தயிரை தாண்டி இந்த கப் தயிரில் இருக்கும் வசீகரம் எப்போதும் ஈர்ப்பவை. கப்பின் வடிவத்துக்கு தகுந்த மாதிரி... நொங்கு போல..மெது மெதுவென இருக்கும் அதன் மிருது... ஆனால் அதில் இருக்கும் புட்டிங் கேக் போல கெட்டி என்று ஸ்பூனை விட்டு வெட்டும் போது... கண்களில் தானாக வந்து சிமிட்டும் சுவையின் தீவிரம்... வயது வித்தியாசமில்லாதது. மேலும் விவரிக்க வாக்கியம் போதாமல் உங்கள் சிந்தனை போக்குக்கே விட்டு விடுகிறேன். நினைவால் தொடும் போதே கப்பிலிருந்து விழும் கெட்டித்தயிர்... கெட்டிக்காரத்தனம் தான் இல்லையா.
தயிரில் உப்பு போட்டு தின்றாலும் ருசி. அதில் கொஞ்சம் சர்க்கரை போட்டு தின்றாலோ லசி. தயிர்பூரி கூட வாய்க்குள் அமிர்தம் சுரக்கும். தொட்டுக்க என்ன வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். சில நேரங்களில் தயிரையே தொட்டுக் கொள்தலும் நடக்கும். பிரியாணிக்கு தொட்டுக்க... ரைத்தாவில் தயிர். பச்சடியில் தயிர்.. என்று தயிரின் மகத்துவம் மகத்தானது.
தயிர் கொண்ட தகிப்பை தாங்கிய வயிறு மெல்ல அடுத்தபடியாக நகர்ந்து குலுங்குவது அதன் அடுத்த கட்ட வடிவம் மோருக்கு தான். வெயில் காலம் வந்து விட்டால் மோர் இன்றி நகராது நாள். சூடு கண்டு தொப்புள் கிட்ட சுருக் சுருக் என வலித்தால்... மோரிடம் சரணடைவது தான் சிறந்த வழி. பல்லைக் காட்டி கொண்டிருக்கும் சூரியன் வாயில் மோர் ஊற்றி அமைதிப்படுத்துவது கால தேவை. இல்லை எனில் வயிறு எரிச்சல்.. கண் எரிச்சல் என்று உடல் சூடு உச்சந்தலை ஏறி விடும். தாகத்துக்கும்...வெயிலின் வேகத்துக்கும் வேகத்தடை போடுவது மோர் என்றால் ஒன்ஸ் மோர் கேட்கும் சொல்லாடல்.
இஞ்சி துண்டுகள்.. கருவேப்பிலை சகிதம்... தாகம் தீர்க்கும் நீர் மோர்... சூடு தணிக்கும் கோப்பை மருந்து.
விஷயம்... இவைகளைத் தாண்டி மோர்க்குழம்பு பற்றியது.
மோர்க்குழம்பின் ருசிக்கு என்ன வடிவம் தருவதென்று தான் யோசனை. எல்லா ருசிக்கும் சொற்கள் உண்டா என்ன. வாய்க்குள் கவள சோற்றில் கலந்து கரையும் அதன் சிறு புளிப்பும்... வாய் முழுக்க பரவி அமிழும் பெரும் அழுத்தமும்... அடுத்தடுத்த வாய்க்கு வேகம் கூட்டும். கவனித்து பாருங்கள். வாய் நிறைந்த உப்பலில்... மெல்லுவதும்... மெல்ல உள்ளே தள்ளுவதும்... மெய்ம்மறந்த வேலை. கூடுதல் கவனிப்பு தேவை. நல்ல பசியை வேக வேகமாய் ருசி ஆக்கி காட்டும் வல்லமை மோர்க்குழம்புக்கு உண்டு. பேருக்கு சாம்பார் வாங்கி விட்டு மோர்க்குழம்புக்கு தாவுதல்... நல்ல மெஸ்களின் மெஸ்மரிசம்.
பிசைவதற்கும் நேரம் தராத பிசுபிசுப்பு மினுங்கல்... கைகளில் தவழ.. அள்ளி அள்ளி வாய்க்குள் போடும் லாவகம்... அதுவாக கவனத்தோடு நடப்பது மோர்க்குழம்பு தியரி.
கெட்டி தயிரில் நீர் விட்டு கொஞ்சம் உப்பு போட்டு கடைந்தெடுக்க வேண்டும். வெண்ணை வெளியேறி விட்டாலே மோர் வந்தமர்ந்து கொள்வது அறிந்ததே. மோர் கடைவதே ஒன் மோர் சமாச்சாரம்தான். சரக் சரக் என திரும்ப திரும்ப செய்யும் ஒரே வேலை. ஆனால் பார்க்க பார்க்க அதில் இருக்கும் மேஜிக் மனதைக் கடையும். பார்க்க பார்க்க ஒன்று இன்னொன்றாக மாறும் அறிவியல் தத்துவத்தை போகிற போக்கில் கடைந்து காட்டி விடும் ஆதி கைகளை வியந்து பார்த்திருக்கிறேன்.
வெண்டைக்காயை வெட்டி போட்டு எண்ணெயில் நன்கு வதக்க...அதன் கொழ கொழ வழ வழ மறைந்து... சுருங்கி நறுக் நறுக்கென கடிக்கும் லாவகத்துக்கு வந்திட வேண்டும். அதுவரை வதக்கலுக்கு வெட்கம் கூடாது. வரக் வரக் சத்தத்தில் கமழும் வெண்டை வாசனை வீடலைய வேண்டும்.
வதங்கிய வெண்டையை எடுத்து தனியாக வைத்துக் கொண்டு.. பிறகு அதே வட சட்டியில் கடுகு... உளுந்தம்பருப்பு... கறி வேப்பிலை... சீரகம்... வரமிளகாய் எல்லாம் போட்டு நன்கு வறுக்க வேண்டும். அதன் வாசமும் கமகமக்க காத்திருக்கும் நாசிகளை அமர்க்களப் படுத்தும் விதமாக அமைய வேண்டும். அது ஓர் அமுதூற்றும் வேலை. பிறகு அதனோடு ஏற்கனவே வதக்கி வெளியே எடுத்து வைத்திருந்த வறுபட்ட வெண்டையை கலந்து மறுபடியும் வறுக்க வேண்டும். முக்கால்வாசி சுவை கூட்டும் வேலை இப்போது. அதே நேரம் கொஞ்சம் தேங்காய்.... கொஞ்சம் சீரகம்... ஒரு பச்சைமிளகாய் எடுத்து மிக்சியில் போட்டு அரைத்து எடுத்து.... அதையும் அந்த வடசட்டியில் ஏற்கனவே இருக்கும் கலவைகளோடு சேர்த்து கலந்து விடுதல் வெந்து கொண்டிருக்கும் சுவைக்கு நிம்மதி.
இப்போது முழு சுவைக்கு முகாந்திரம்.... அதனோடு கொஞ்சம் மஞ்சள் தூள் தூவி... தேவையான அளவு நீர் விட்டு.... அளவான நெருப்பில் வேகுமாறு பார்த்துக் கொள்தல் தான்.
இறுதிக்கட்ட ருசியை உள்ளுணர்வோடு உணர... இனி...
வெந்தது உறுதியான பிறகு அடுப்பை அணை.
கடைந்து வைத்திருக்கும் மோரை எடுத்து அதில் கலந்து ஒரு கிளறு.
வேண்டுமென்றால் இன்னொரு கிளறு.
செய் செய்.
மோர் குழம்பு ரெடி.
மென் மஞ்சள் வண்ணத்தில் வெண்டைக்காய்... கறிவேப்பிலை... கூட வர மிளகாய் சகிதம் குண்டாவில் தேங்கி இருக்கும் மோர்க்குழம்பை பார்த்தாலே நாவூறும். சோறு தேடும்.
குதூகல குறிப்பு : எக்காரணம் கொண்டும் மோர்.... சட்டியில் இருக்கையில்... அடுப்பு எரிந்து கொண்டிருக்க கூடாது. மோர் திரி திரியாய் திரிந்து விடும்.
வெண்டைக்கு பதில் வாழைக்காயோ....வெள்ளை பூசணியோ அவரவர் தேர்வு.
மதிய சோற்றுக்கு மோர்க்குழம்பு மணமணக்க.... பிறகென்ன பசிக்கும் ருசிக்கும் போட்டி தான். வயிறு நிறைந்த கணத்தில் வந்தமரும்... மதிய நேர மயக்கம்... திண்ணை உள்ளோருக்கு வரம். கூட கொஞ்சம் வேப்ப மர காற்றும் கிடைத்து விட்டால் வாழும் போதே சொர்க்கம்.
- கவிஜி