ஒரு காலத்தில் ஞாயிறு அன்று கிடைக்கும் சிக்கனில்... அதன் மீது ஓர் ஈர்ப்பு இருந்தது.
நினைத்த நேரத்தில் கிடைக்கும் இன்றைய சிக்கனில் அது குறைந்திருக்கிறது என்று தான் நம்புகிறேன். அல்லது இல்லை என்றே சொல்லி அது ஓர் இயல்புக்குள் வந்து விட்டதாக கருதலாம். நினைத்த நேரத்தில் எல்லாம் சிக்கன் எடுத்து அதன் சுவையையும் அது மீது கொண்ட விருப்பத்தையும் இன்றைய கால கட்டம் குறைத்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
ஒரு... நாள் இல்லை.. ஒரு... கிழமை இல்லை.... போர் அடித்தால் சிக்கன். அதுவும் இந்த பிரியாணி என்ற ஒன்று அதன் பூத பற்களை மஞ்சள் நிறத்தில் காட்டி... சிக்கன் போக்கையே மாற்றி விட்டது. அதனோடு சேர்ந்த இந்த சிக்கன்... வகை வகையாய் தன்னை மலினப்படுத்திக் கொண்டதோ என்று கூட தோன்றும். நினைத்த நேரம்.. கோழியாகவும் வாங்கலாம். குழம்பாகவும் வாங்கலாம். அதில் செட்டி நாடு குழம்பு... காரைக்குடி சிக்கன் குழம்பு... கேர்லிக் சிக்கன் குழம்பு...என்று வகையறாக்கள் வேறு நிறைய.
சிக்கனுக்கு காத்திருந்த காலம் ஒன்று இருந்தது. அதுவும் ஊரில் இருந்து உறவினர்கள் வந்து விட்டால்.. கோழி அடித்து குழம்பு வைப்பது வீட்டுக்கு வீடு கமகமக்கும் ஒரு வழக்கம். சொந்த பந்தம் கூடுகையிலெல்லாம் கோழிக்கறி கொண்டையை தூக்கி கொண்டு சட்டியில் கொதிக்கும் அழகு... பசி ருசி தாண்டி கொண்டாட்டத்துக்கானது. வீட்டுக்கு மாப்பிளை வர்றாரா.... அடி கோழியை. வீட்ல விசேஷமா.... புடி சேவலை.கோழி குழம்பன்று குட்டி போட்ட பூனைகளாக தான் வீட்டு குட்டிஸ் இருந்திருக்கிறோம். இன்று.. போகிற போக்கில் சுக்கில ஆர்டர் போட்டு யாருக்கும் தெரியாமல் டிவி பார்த்துக்கொண்டே நொறுக்கி விடும் குட்டிஸ்... குட்டிஸ் இல்லை. சாத்தான்ஸ். அது கோழியும் இல்லை. பிராய்லர்ஸ்.
கடையிலேயே வெட்டி வாங்கி வராமல்.. கோழியை உயிரோடு பிடித்துக் கொண்டு வருவதே ஞாயிறு கெத்து தான். கால்கள் கட்டப்பட்ட கோழியை வலைப்பைக்குள் போட்டு மாமாவிடம் கேட்டு.... தூக்க முடியாமல் தூக்கி வருவேன். வீடு வரும் வரை எனக்கும் குறுகுறுவென கோழி நடை வாய்த்து விடும். மாமா முன்னால் நடக்க பின்னால் பூ போல நடப்பது இப்போது நினைத்தாலும்...ஒரு கிளாசிக் ஷாட் ஆக மனதில் விரிகிறது.
வீடு வந்த பிறகு... மற்ற வேலைகள் எல்லாம் நடக்கும். கோழியை கொன்று உரித்து...
கொல்லும் போது அந்த பக்கம் யாரும் வர கூடாது என்பது மாமாவின் கட்டளை. சற்று நேரத்துக்கு பிறகு இறகுகளை உரிப்பார். அப்போது பார்க்க அனுமதி உண்டு. தீயில் வாட்டி... மஞ்சள் தடவி.. பார்த்து பக்குவமாய் வெட்டி அலசி... அதை அடுப்புக்கு கொண்டு வருவது வரை மாமாவின் வேலையாகத் தான் இருக்கும். கூட மாட எடுபுடி வேலைக்கு நான். கோழியை கழுவுவதற்கு சுடு தண்ணீர் ஊற்றுவதாகட்டும். மஞ்சள் எடுத்து வருவதாகட்டும்.. வாட்டுவதற்கு நெருப்பு சமாச்சாரம்.. என்று ஓர் அட்டகாசமான உதவியாளன் நான். எள்ளென்றால் எண்ணையாக நிற்பேன். சொல்லென்றால் வாக்கியம் ஆகி விடுவேன்.
பிராய்லர் என்ற பதமே அப்போது அறிந்திருக்கவில்லை. கடைக்கு சென்று கோழி வாங்கினாலே... அது நாட்டுக்கோழி தான். நமக்கு தெரிந்தது எல்லாம் விருந்துக்கென்றால் கோழி பிடிக்க வேண்டும். விருந்தினர் எண்ணிக்கை கூடும் அன்று கோழிக்கு பதில் சேவல். அவ்வளவு தான்.
சிக்கனை பிடிக்காதவர்கள் குறைவு தான். மற்றபடி சிக்கனை பல விதங்களில் வெளுத்து கட்டுவோர் எல்லா காலத்திலும் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள். ப்ரோட்டீன் என்ற பதார்த்தம் எல்லாம் தெரியாது. சளி பிடித்திருக்கிறதா.... கோழி சூப்பு. நெஞ்சு சளியா... காரஞ்சாரமாய் கோழிக்குழம்பு. பச்ச புள்ளைக்காரியா.. நாட்டுக்கோழி சாறு தான்.
சோற்றுக்கு.. இட்லிக்கு... தோசைக்கு... என கோழிக் குழம்பு எப்போதுமே சரியான ஜோடி தான். மிளகு தூக்கலாக கருநிறம் பூத்து எண்ணெய் மிதக்க... அகப்பையில் அள்ளி எடுக்கும் தண்ணீ மாதிரி குழம்பு தான் அப்போதெல்லாம். வெறும் குழம்பு சாரிலேயே ரெண்டு கரண்டி சோறு காலி ஆகும். ஒவ்வொரு நாள் கெட்டியாக பின்னாளில் அதன் பெயர் கிரேவி என்று தெரிய வந்த... செந்நிறம் கமகமக்க... எண்ணெய் மிதக்க.... அது ஒரு சிறு கரண்டி போட்டுக்கொண்டால்.... பாதி தட்டு சோறு செந்நிறத்தில் மடமடவென காலியாகும். எலும்பையும் சதையையும் தனி தனியாக பிரிக்கும் கலை வாய்த்த வாயை சப்புக்கொட்டி மெச்சுவோம்.
நெஞ்சுக்கறி ஈரல் எல்லாம் மாமா தட்டுக்கு போனால் அது அடுத்த நொடி என் தட்டுக்கு வந்து விடும். எடுத்தெடுத்து வைத்து விடுவார். கறியோடு சேர்ந்த கருணை கூட்டு குடும்பத்தில் கிடைத்த காலம் அது.
கோழி என்பது வாழ்க்கையின் ஒரு பக்கம். கோழி இல்லாத வாழ்க்கையை பெரும்பாலைய குடும்பங்கள் விரும்புவதில்லை. வாழ்க்கை முறையின் ஒரு பகுதி கோழிக்குழம்பு. எத்தனை பெரிய சண்டையும் கோழி குழம்புக்கு முன் பின் என்று சரியாகி விடும். அது ஒரு குறியீடு. சொந்த பந்தங்கள் கூடி...திருவிழா... விஷேசம் நோம்பி நாள்...என்று கோழியின் இடம் நம் வாழ்வில் மிக முக்கியமானது. சிக்கன் குழம்பு அன்று சிரித்த முகம் தான் எல்லாருக்கும். ஆளாளுக்கு ஒரு வேலையை இழுத்து போட்டு செய்த காலத்தில் கோழிக்குழம்பு சட்டியில் மட்டுமா கொதித்தது. சப்பு கொட்டும் நாக்கிலும் தான்.
வீட்டுக்கு வீடு செய்முறை பக்குவம் மாறினாலும் அடிப்படை இதுவாகத்தான் இருக்கும். ஆதலால்....
மல்லி... சீரகம்....வரமிளகாய்....பூண்டு... மிளகு இவற்றை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளலாம். வறுத்தவைகளை நன்றாக ஆற விடுவது அவசியம். சின்ன வெங்காயத்தை நல்லெண்ணெய் விட்டு நன்றாக வதக்கி எடுத்துக் கொள்ளலாம். வதக்கிய சின்ன வெங்காயம் ஆறிய மல்லி சீரகம் மிளகு வரமிளகாய் பூண்டு சமாச்சாரங்களை அம்மியில் வைத்து அரைத்து எடுத்துக் கொள்ளலாம். அம்மியில் அரைப்பது மீட்டெடுக்கப் பட வேண்டிய ருசியின் மிச்சம். அரைக்கையில் கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ளலாம். கவிதைக்கு புள்ளிகள் போல கறிக்குழம்புக்கு இந்த கறிவேப்பிலை.
பிறகு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு....எண்ணெய் காய்ந்தவுடன் மிளகிட்டு பொறித்து... பின்பு அரைத்து வைத்திருக்கும் உள்ளங்கை மசால் பந்தை கொட்டி கழுவிய கோழித்துண்டுகளையும் உப்பையும் சேர்த்து அடுப்பில் ஜுவாலை கூட்டலாம். தேங்காய்த்துண்டுகளை சின்ன சின்னதாய் வெட்டி... குழம்பில் சேர்க்கலாம். அரைக்க மட்டுமின்றி....குழம்பு கொதித்த பின்னும் கறிவேப்பிலையைச் சேர்க்க..... குழம்புக்கு சிறகு முளைக்கும்.
"நாட்டுக்கோழி அடிச்சு நாக்கு சொட்ட சமைச்சு நல்லெண்ணெய் ஊத்தி குடு ஆத்தா..." பாட்டிலேயே மணக்கும் நாட்டுக்கோழி... மாதம் ஒரு முறையாவது வீட்டில் மணக்கட்டும்.
- கவிஜி