தேநீருக்கு தவம் இருக்கும் நாட்களை உற்று நோக்குகிறேன். சுட சுட குடித்திட தவிக்கும் ஒரு மாலை நேர கோப்பைக்குள் நுரையின்றி நிறைய ஆவல்.

இங்கே பெரும்பாலானோருக்கு டீ போட தெரியவில்லை. டீ என்ற பெயரில் ஒரு கெட்ட கனவை கோப்பைக்குள் ஊற்றுகிறார்கள். சக்கரையை கொட்டி பாயசமாக்கி விடுகிறார்கள். அல்லது பாலை ஊற்றி டிகாஷனை வெளுத்து விடுகிறார்கள். கோப்பையின் கழுத்து தாண்டி மூஞ்சை மறைத்து மூச்சு முட்ட செய்யும் வேலை தான் பெரும்பாலும் வீடுகளில்.

தேநீர் ஒரு கலை. கவித்துவம் மிளிரும் அதன் வடிவத்தை அடித்துடைத்த வீடுகள் கண்டு மிரள்கிறேன்.

சிறு வயதில் கோப்பை தளும்ப தளும்ப டீ வேண்டும். கொஞ்சம் குறைந்தாலும்..முகம் கோணும். பாட்டி உள்ளே எடுத்து சென்று கொஞ்சம் நீரூற்றி நிறைத்து கூடவே சீனி கொஞ்சம் போட்டு கொடுத்து விடும். சிரித்துக் கொண்டே குடித்து கொள்வேன். அதுவும் எழுந்ததும் தூங்கி கொண்டே குடிக்கும் குவளை குறையவே கூடாது என்றெல்லாம் வேண்டுவேன். நினைத்தாலே இனிக்கும் சம்பவங்கள் தான் தேநீர் வழியாகவும் நிறைய இருக்கின்றன. தேநீர் என்றாலே இனிப்பு என்ற நம்பிக்கையை பின்னொரு காலம் உடைத்து போட்டது. சீனாவில் இருந்து தேநீர் வந்த கதை அறிந்த பிறகு அதன் மீதான கவனம் இன்னும் தீவிரமாக அலசப்பட்டது. அதன் வழியில்.. தேநீருக்கு பாலே சேர்க்க கூடாது என்பது தான் அதன் மகத்துவம். இங்கு எல்லாம் மாறி விட்டது. வியாபாரம் விஸ்வரூபம் எடுக்க... விதி எல்லாவற்றையும் இணைத்தது. கன்று குட்டி குடிக்க வேண்டிய பாலை மனிதன் குடித்தது மட்டுமல்லாமல் விற்கவும் செய்தான். இன்று பாலினின்றி நாள் ஏது.tea 620சரி தேநீர்க்கு வருகிறேன்.

ஊருக்கெல்லாம் சென்றால்... குட்டிக்கு நான் டீ போடல.. நீ போடு.. என்று அண்ணி சொல்லும். தம்பி மனைவி உஷா... ஐயோ குட்டிண்ணனுக்கு நான் டீ போட்டா புடிக்காது... நீங்களே போடுங்க என்று கவிக்குயிலை சிக்க வைத்து விடுவார்கள். மட்டனில் பிரமாதப்படுத்தும் கவிக்குயில் தேநீரில் சொதப்புவது எப்படி என்று புக்கே எழுதும்.

தேநீர்க்கு என்றால் சக்கரையை ஏன் அப்படி எடுத்து கொட்டுகிறார்கள் என்று விளங்குவதே இல்லை. உறவினர் வீடுகள் எல்லாமே சர்க்கரை குடோன் தான். ஆரம்பத்தில் வாங்கி ஒரு சிப் குடித்து விட்டு தடுமாறி நெளிந்து அப்படியே வைத்திருப்பேன். என்ன மயிலு... டீ அப்டியே இருக்கு.. குடி என்று அழுத்தி பிடித்து சங்கில் ஊற்றி விடும் அளவுக்கு அழுத்தம் கொடுப்பார்கள். சிரித்துக் கொண்டே ஒரே கல்ப் அடித்து விட்டு ஓடி வருவேன். இப்போதெல்லாம் நான் டீ குடிக்கறது இல்ல என்று சொல்லி விடுகிறேன். நல்லதுக்கு பொய் சொல்லலாம் இல்லையா.

தேநீர் தயாரிப்பு என்பது அளவுகளால் ஆனது. இது இவ்ளோ அது அவ்ளோ... நீரின் சூடு... கலவையின் விகிதம் என்று அது ஒரு என்ஜினீரிங் வேலை. மூணாங்கிளாஸ் அறிவோடு டீ போட்டால்... அது சுடுதண்ணிக்கு சுகர் போட்ட மாதிரி தான். தேறவே தேறாது. ஒன்று பாயாசம். இல்லை என்றால் கஷாயம்.

(மிக சில வீடுகளில் மிக அற்புதமான தேநீரை சுவைத்திருக்கிறேன். எதுவுமே சொல்லாமல்.. என்னை பற்றியும் தெரியாமல்... அளவான சர்க்கரையில்... அதிரூப டிகாஷனில் அற்புதம் செய்திருந்த வீடுகளில் வில்வம் சார் வீடும் நாஞ்சில் நாடன் ஐயா வீடும் ஒன்று.)

சரி இந்த கொடுமை வீடுகளில் தான் என்றால்... கடைகளில் அதற்கு மேல். எனக்கு தெரிந்து சில கடைகள் மட்டுமே தேநீருக்கு சிறப்பு சேர்க்கின்றன. மிச்ச கடைகள் எல்லாம் சக்கரை டப்பா காலி செய்யும் வேலையை தான் செய்கின்றன. ஒரே நீரில் மொத்த கண்ணாடி கோப்பைகளையும் முங்கி முங்கி எடுத்து வைக்கும் போதே நமக்கு கண்கள் முட்டி கொண்டு வந்து விடுகின்றன. சர்க்கரை குவித்து... சல்லடையில் இருக்கும் தூளை மாற்றாமல்... மண்ணை பிழிவது போல சொட்டி விட்டு... பால் காய்ந்திருக்கிறதா இல்லையா... என்ற எந்த பாகுபாடும் இன்றி... பச்சை வாசம் பூக்க எடுத்து ஊற்றி கலந்து ஒரு ஆத்து ஆத்தி கால்வாசி நுரையோடு தரும் டீ க்கு 15 ரூபாய். அது சுடுதண்ணியை விட ஷோக்காய் இருப்பதாக டீ மாஸ்டருக்கு பெருமிதம் வேறு. பல கடைகளில் கண்ணாடி கோப்பை அதர பழசு. உள்ளே டீ இருக்க... வெளியே கோப்பையை சுற்றிய நாள்பட்ட வடுக்கள்.

சில கடைகள் ஆரம்பத்தில் பார்த்து பார்த்து டீ போடுவார்கள். பிக் அப் ஆன பிறகு கழுதை தேஞ்சு கட்டெறும்பு ஆன மாதிரி...டீ தேஞ்சு ஈ ஆன மாதிரி ஆகிடும். ஒருத்தனாவது குடிக்கறது டீ என்ற உணர்வோடு குடிக்கறானா. எதுவோ எதையோ உறிஞ்ச மாதிரி தான் உறியறானுங்க. நமக்கு சண்டை போட்டு தீரல. சில கடைகளில் கவிஜி நாட் அலவுட் என்று போர்டுதான் மாட்டவில்லை. பத்தாததுக்கு பாதி கடைகள்ல ஹிந்திகாரனுங்க தான் சப்ளயர்ஸ். சில கடைகள்ல மாஸ்டராவே ஆகிட்டானுங்க. ஸ்ட்ராங்கான்னு சொன்னதுக்கு கோப்பையில் பாதி வரை டிகாஷனை ஊற்றினானே... எனக்கு தலையே சுற்றி விட்டது. சில மாஸ்டர்ஸ் கோபக்காரர்களாக இருப்பார்கள். சுகர் கம்மினா கேக்கற... என்று சுத்தமாக போடாமல் நம்மை சக்கரை நோயாளியாக்குவார்கள். இனி நான் டீயே குடிக்கலடா.. என்ன விடுங்கடா... என்று கவுண்டமணி குரலில் கத்தி விட்டு வருவது போல தான் சம்பவங்கள் இருக்கும்.

நல்லா ஆத்தி.... ஆத்தாம... சக்கர நிறைய.. சக்கர கம்மியா... லைட்டா... ஸ்ட்ராங்கா... பால் டீ... வர டீ லெமன் டீ.. இஞ்சி டீ... என்று கேட்போர் கேட்க தான் செய்வார்கள். டீ போடுகிறவர் புத்தி தெளிந்திருக்க வேண்டும். அதனால் தான் அவர் டீ மாஸ்டர். ஆனால் அந்த பொறுப்போடு வேலை செய்கிறார்களா என்றால்... சந்தேகம் தான். சில கடைகளில் ஒரு டீ 18 ரூபாய் 20 ரூபாய் வரை சென்று விட்டது. ஆனால் சுவையும் தரமும்...கேள்விக்குறி தான். வெகு சில விரல் விட்டு எண்ணக்கூடிய கடையில் 20 ரூபாய். சுவை ஓகே தான். ஆனால் பிஹேவிங் கொடுமை. வாடிக்கையாளரை பார்க்கவே மாட்டார்கள். உள்ளே அவர்களுக்குள்ளாகவே பேசி சிரித்து... அதாவது உனக்கென்ன.... கை வேலை செய்யுதுல என்ற பாவனை. ஆனால் அது தப்பு. வாடிக்கையாளரை வைத்துக் கொண்டு கதை அடிக்க கூடாது. அவர்களுக்குள் கூட முறை தவறி பேசிக் கொள்ள கூடாது. விளையாட்டு கூடவே கூடாது. ஆனால் அது நடக்கிறது. 10 கிளாஸ் பெயில் ஆகி தான டீ ஆத்த வந்த. இங்க வந்தும் கவனம் இல்லனா எப்பிடி என்று கேட்டேன். மீண்டும் சண்டை. ஒரு வேலையை பிடிக்காமல் செய்ய கூடாது. வேறு வழியில்லாமல் செய்தால் கூட பிடிக்காமல் செய்கிறோம் என்று வெளியே காட்ட கூடாது. ஆனால் டீ கடைகளில் அதிகமாக வெறுப்போடு தான் அலைவார்கள் சப்ளையர்ஸ். ஹ்ம்ம் சொன்னா சொல்லிட்டே இருப்பேன்..

இப்ப கூட ஒரு டீ குடிக்க தோணுது. என்ன செய்ய. மாலை ஆறு மணி வரை காத்திருக்க வேண்டும். அந்த நல்ல தேநீர் கடைக்கு அப்போது தான் செல்ல இயலும். அது வரை இருக்கவே இருக்கு... வெறும் நீர். தேநீரை கற்பனைக்குள் ஆற்ற கவிஞனுக்கு தெரியாதா என்ன.

- கவிஜி

Pin It