"என்ன குழம்பு வெச்ச பெரிம்மா....?" என்று பத்மினிக்கா வரும் போதே கையில் கிண்ணம் வைத்திருக்கும். கண்ணில் மதிய குழம்புக்கு எண்ணம் வைத்திருக்கும்.

"என்ன குழம்பு... காலைல காட்டுலருந்து கொஞ்சம் கீரை பொறிச்சிட்டு வந்தேன். கொஞ்சம் பருப்பு போட்டு நாலு மொளகாய போட்டு கடைஞ்சேன்" என்று சொல்லி அந்த ஞாயிறை மணக்க செய்யும் பாட்டி. பார்த்து பார்த்து பக்குவமாய் செய்யும் நாளை விட அவசர கதியில் அப்பிடி போகிற போக்கில் செய்யும் கீரை குழம்பில் சுவை கூடிவிடுவது ஒவ்வொரு முறையும் நிகழுவது. ஒரு முறையாவது உங்களுக்கும் நிகழ்ந்திருக்கலாம்.

சிறு வயதில் இருந்தே எந்த கீரையையும் நான் ஒதுக்கியது இல்லை. மாறாக ஒவ்வொரு கீரையும் குழம்பாகவோ பொரியலாகவோ கிடைக்கும் போது... அந்த கீரையின் பெயரை தெரிந்து கொள்ள விரும்புவேன்.

"இது என்ன கீர மாமா..."

"இது எப்பிடி செவப்பு கலர்ல இருக்கு பாட்டி..."

"இது ஏன் இப்பிடி மடங்கி மடங்கி இருக்கு தாத்தா...."

கீரை கேள்விகள் கோர தாண்டவம் ஆடும். அதுவும் சிவப்பு வண்ண கீரை கண்டால் கண்களில் ஒளி கூடும். கவனத்தில் வண்ணம் கூடும்.keerai kuzhambuபருப்பு கீரையை கடைவதாகட்டும்.... சிறுகீரையை சில போது கடைவது....சில போது பொரிப்பது...... அரைக்கீரையும் அப்படித்தான். பள பள சோற்றோடு பக்குவத்தில் பரிமாறப்படுகையில்...நிச்சயம் இரண்டு கவளம் சேர்ந்து உண்பது உறுதி. முளைக்கீரை கூட்டு.... தண்டு கீரை பொரியல்... எல்லாமே அதனதன் தனித்துவத்தோடு தட்டு நடுவே தக தகவென மின்னுகையில்... தானாக பசி வந்து நானாக தின்று தீர்க்கும்.

பாலக்கீரை குழம்பு... சோற்றோடு பிசைகையில் கையில் மாட்டாமல் நழுவும் அதன் போக்கிற்கு உடன்பட்டு... கைக்கும் வாய்க்குமான இடைவெளி குறைகையில்... வெகு அருகே சுவை அறிய கிடைத்த வாய்ப்பு அது. சுவையை.... உணர்வது தாண்டி கீரைக்குழம்பில் பார்க்க முடியும் என்று நம்புகிறேன். கொத்தாக மாட்டிக் கொண்டு வரும் கீரை குழம்பின் வடிவத்தில் இருக்கும் மினுங்கல் பார்த்தாலே பரவசம்.

மணத்தக்காளி அல்லது குட்டித் தக்காளி கீரையில் பொரியலும் செய்யலாம் துவையலும் செய்யலாம். அந்த சிறு கசப்பிலும் தனி சுவை காணலாம். முட்டையோடு பொரிக்கையில்... நறுக் நறுக் கொஞ்சம் சமாதானம் ஆகும். பொதுவாகவே கீரைகள் உடம்புக்கு வலு ஊட்டக்கூடியவை. மணத்தக்காளி வாய்ப்புண்... வயிற்று புண் என்று எல்லாவற்றையும் ஆற்றி விடும் வல்லமை கொண்டவை. இரும்பு சத்து.... இலகு சத்து என கீரைகளின் தத்துவம்.... மானுடத்தின் வழி வழியான உடன்போக்கு.

முருங்கை கீரையைப் பொரிக்கலாம். பருப்போடு போட்டு குழம்பு வைக்கலாம். ஏன் சூப் கூட ருசி தான். தண்ணீராக சொட்டும் குழம்பில் கைக்குள் அடங்காத சுவை வாய்க்குள் சுழலும். நல்லெண்ணெய் ஊற்றி பொரிக்கையில்... நாவுக்கினிய நல் நாளென அந்த நாள்.

ஒவ்வொரு கீரையிலும் ஒவ்வொரு ருசி. ருசியெல்லாம் பசி தீர்த்து பலம் சேர்க்க... கீரைகளின் வழியே வீரம் பேசலாம். கட்டு கீரை பொரியலோடு கொஞ்சமே கொஞ்சம் சோறு போட்டு பிசைந்து தின்ன தின்ன அது ஒரு பசி நேர ஆகச் சிறந்த அனுபவம். வயிற்று சிக்கல் நாளில் செய்து பாருங்கள். சிக்கெடுக்கும். கீரையோடு சிறு சிறு தண்டு துண்டுகள் கடிப்பதற்கு நன்றாக இருக்கும். சோற்றோடு பிசைகையில் இருக்கும் பிசுபிசுப்பு இன்னும் இன்னும் ருசி கூட்டுவது எனக்கு மட்டுமா. எல்லாருக்குமா.

கீரைக்கட்டை பார்க்கும் போதே பச்சையம் பூத்த ஆச்சரியம் வந்து விடும். எப்படி தனித்தனியாக வேறு வேறு சுவையோடு... இருக்கிறது என்ற ஆர்வம் எப்போதும் இருக்கிறது. இலை இலையாய்.... இந்த பூமி வார்த்தெடுத்த பூங்கொத்துகளாய் எத்தனை அதிசயம் இல்லையா. மண்ணிலிருந்து வரும் மகத்துவம் பெரிதினும் பெரிது. மண்ணை கும்பிடுதல் பண்பாடு.

இதில் இன்னொரு விஷத்தை கவனித்து பார்த்தால்.... பாட்டிக்கு ஊசி கோர்க்க கண்கள் உதவாது. ஆனால்.. சரியாக களையை பிரித்தெடுக்கும். நமக்கு களை எது இலை எது என்று இன்று வரை சந்தேகம் தான். ஆனால்.... பாட்டிக்கு... விரல்களில் கண்கள் இருக்கும். பார்த்த மாத்திரத்தில் இது இன்ன கீரை என்று சொல்லி விடும் அந்த பழுப்புக் கண்களை நான் ஆச்சரியம் குறையாமல் இன்று வரை யோசிக்கிறேன். கீரை ஆய்வதே பெரும் கலை. பேச்சு பேச்சாக இருக்கும். ஆனாலும் கால் நீட்டி அமர்ந்தபடி நடக்கின்ற வேலை சுத்தமாக இருக்கும். விரல்களில் வித்தை காணலாம். தண்டு இந்த பக்கம்... களை இந்த பக்கம்... கீரை இலை முறத்தில். பல்கலைக்கழக பயிற்சி.

"கீ....ரை..... கீ......ரே...." என்று கூடையில் கொண்டு வரும் பாட்டிமார்கள் ஆகட்டும்... டிவிஎஸ்-ல் கூடை கட்டி வரும் முதிர்ந்த மனிதர்கள் ஆகட்டும்.. மனதுக்குள் தென்றல் அடிக்க மெல்ல எட்டி பார்த்து வேடிக்கை தான் நமக்கு. கீரையின் பச்சை வாசத்தில் ஒரு நெருக்கம் உணரலாம். காடுள்ள மனதில் வீசும் பால்ய காற்றென நம்புகிறேன்.

ஊரில் "சேமங்கீரை" என்றொரு வகை கீரை இருக்கிறது.

கிட்டத்தட்ட சேற்றில் தான் முளைத்திருக்கும். படர்ந்து தாமரை இலை போல நீண்டு வட்டமடித்து.... மடமடவென காற்றாடியாய் அசைந்தபடி இருக்கும். வட்ட முனையில் வந்து போயி இருக்கும் சிறு வளைவுகளை பார்க்கும் போதே புளிக்கும். புளிச்ச கீரை என்று இன்னொரு பெயரும் உண்டு. கடைந்து வைத்து விட்டால்... அன்றைக்கு சுவை. அடுத்த நாளுக்கு ஆஹாஹா சுவை. ஒரு கரண்டி குழம்புக்கு ஒரு தட்டு சோறு காலி ஆகும்.

பள்ளி விட்டு மதியம் ஓடோடி வந்தால்... சோற்றை சேமங்கீரையோடு பிசைந்தபடி பாட்டி நிற்கும் கோலமே ஒரு கீரை செடி வளர்ந்து காத்திருப்பது போல தான் இருக்கும்.

சப்பு கொட்டி அந்த புளிப்பு சுவை முகத்தில் படர...தின்று ஏப்பம் விடுகையில்... அன்றைய பசி அதோடு காலி. சட்டியில் மிச்சம் மீதி என ஒட்டி கிடக்கும் சேமங்கீரை குழம்பில் சோற்றை போட்டு சட்டியோடு பிசைவது அப்பப்பா.... அப்படி கிடைக்கும் ஒவ்வொரு உருண்டையிலும் உயிர் வாழ்ந்ததை இப்போது உணர்கிறேன். ஒரு வாய் முழுங்க முழுங்கவே இன்னொரு வாய்க்கு வாயை நீட்டிய காட்சி... மூச்சு பிடித்து இன்னமும் நெஞ்சத்தில் மெல்லுகிறது.

வேதமென கொள். உடலே உயிர். உடலே உலகம். வாரக் கட்டில் கீரைக் கட்டிருந்தால்... உடல் கட்டில் தளர்வேது.

- கவிஜி

Pin It