மொபைல் இன்டர்நெட் வந்தாலும் வந்தது – இருந்த இடத்தில் இருந்து கொண்டே பஸ் டிக்கெட் முன்பதிவதில் தொடங்கிப் படம் பார்ப்பது வரை எல்லா வேலைகளையும் பார்க்கலாம் என்ற நிலை உருவாகி விட்டது.  இப்படி எல்லாமும் ஆகிவிட்ட இன்டர்நெட் மூலம் நினைத்ததைப் படிக்க முடியாதா?  தாராளமாகப் படிக்கலாம் – ஏராளமான தலைப்புகளில் படிக்கலாம் – அதுவும் முழுக்க முழுக்க இலவசமாக!  

coursera

கோர்சரா.ஆர்க்

கொலம்பியா பல்கலைக்கழகம், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம், சிகாகோ பல்கலைக்கழகம், யேல் பல்கலைக்கழகம், என்று உலகம் முழுவதும் உள்ள பெரிய பல்கலைக்கழக ஆசிரியர்களிடம் படிக்க வேண்டுமா?  கோர்சரா.ஆர்க் (www.coursera.org/) தளத்தைப் பாருங்கள்.  ஏறத்தாழ 2000 படிப்புகளைக் கொண்டிருக்கும் இந்தத் தளத்தில் இல்லாத படிப்புகளே இல்லை எனலாம்.  ஆங்கிலம், சீன மொழி படிப்பதில் தொடங்கி, போட்டோகிராபி, கிராபிக்ஸ், புத்த மதம், பைத்தான் மொழி, நிதி மேலாண்மை என்று எக்கச்சக்க படிப்புகளைப் பெரிய பெரிய பேராசிரியர்கள் நடத்துகிறார்கள்.  பல படிப்புகளுக்குக் குறைந்த கட்டணத்தை வைத்திருக்கும் கோர்சராவில், ஏழை மாணவர் என்றால் இலவசம் என்பதும் கூடுதல் சிறப்பு உங்கள் மொபைலில் இருந்து படிப்பதற்கு வசதியாகச் செயலி இருக்கிறது என்பதும் கூடுதல் சிறப்புகள்.  

இடிஎக்ஸ்

ஓபன் சோர்ஸ் எனப்படும் கட்டற்ற மென்பொருளில் செயல்படும் இலவசக் கல்வி வழங்குநர் தான் இடிஎக்ஸ்  (www.edx.org).  சோலார் சிஸ்டம்ஸ் பற்றிப் படிக்க வேண்டுமா?  மனித குலம் தோன்றிய வரலாறு பற்றிப் படிக்க வேண்டுமா?  சமூகவியல் படிக்க வேண்டுமா?  அக்கவுண்டன்சி பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமா?  நிறைய பேர் இப்போது படிக்கத் தொடங்கியிருக்கும் ரூபி கணினி மொழி படிக்க வேண்டுமா?  இப்படிப் பல படிப்புகளைத் தருகிறது இடிஎக்ஸ்.  ஹார்வர்டு, பாஸ்டன், ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழகம் எனப் பல பல்கலைக்கழகங்கள் இடிஎக்சுடன் இணைந்து இலவசப் படிப்புகளைக் கொடுக்கின்றன.  இலவசப் படிப்பு லாபம் என்றால், இடிஎக்சில் படிப்பதில் இருக்கும் இன்னொரு லாபம் – ‘யூனிவர்சிட்டி கிரெடிட்’ படிப்புகள்!  இந்தப் படிப்புகளை இங்குப் படித்து முடித்து விட்டால், தேர்ந்தெடுக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் சேரும் போது இந்தப் படிப்புகளுக்கு விலக்கும் வாங்கிக் கொள்ளலாம்.  பணமும் செலுத்தத் தேவையில்லை.  

கான் அகாடமி

எல்லோருக்கும் எப்போதும் எல்லாமும் இலவசம் – இது தான் கான் அகாடமி(www.khanacademy.org) யின் தாரக மந்திரம்.  அமெரிக்க இந்தியரான சல்மான் கானால்  நடத்தப்படும் இந்தத் தளத்தில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பதில் இருந்து இயற்பியல், வேதியியல், கணிதம், இசை, பொருளாதாரம், தொழில்முனைவோர்க்கான படிப்பு என்று எக்கச்சக்க படிப்புகள் இருக்கின்றன.  குழந்தைகளுக்காகப் பெற்றோர் உறுப்பினர் ஆகிக் கொள்ளலாம்.  மழலையர் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்குத் தொடங்கி, ஐஐடி நுழைவுத் தேர்வு வரை இங்கு இலவசமாகப் படிக்கலாம்.  

(கட்டுரை – புதிய வாழ்வியல் மலர் 2016 ஜூலை 1-15 இதழில் வெளியானது)  

- முத்துக்குட்டி

Pin It