இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் அவ்வப்போது ஏதாவது கருத்து சொல்லி தனது மேதாவித்தனத்தை உலகத்துக்குக் காட்டிக் கொண்டே இருப்பார். கொஞ்ச நாளுக்கு முன்னால்  இந்திய பொருளாதார வளர்ச்சி பற்றி பேசுகையில் ‘பார்வையற்றோர் தேசத்தில் ஒற்றைக் கண் உடையவனே மன்னன்’ என்று சொல்லி பா.ஜ.க வானரங்களின் பகையைச் சம்பாதித்துக் கொண்டார்.

 Raghuram Rajan ரகுராம் ராஜன் போன்ற மெத்தப் படித்த மேதாவிகள் எப்பொழுதுமே வாழ்க்கையைச் சாமானிய மக்களின்  பார்வையில் இருந்து சிந்தித்துப் பார்ப்பதே கிடையாது. ஓர் உயர்தரமான செல்வந்தக் குடும்பத்தில் பிறந்து இந்திய தொழில்நுட்பக் கழகம், இந்திய மேலாண்மைக் கழகம், எம்ஐடி போன்றவற்றில் படித்து முடித்து சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், சர்வதேச நாணய நிதியத்திலும் பணியாற்றிய அவர் தன்னுடைய தகுதியையும் திறமையையும் வைத்தே இந்திய மக்களை மதிப்பிட்டுக் கொண்டு இருக்கின்றார். தன்னைப் போலவே இந்திய மக்கள் அனைவருக்கும் படிப்பதற்கான வாய்ப்பும், தகுதியும், திறமையும் நிச்சயம் இருக்கும் என்ற மேட்டுக்குடி நினைப்பிலேயே இருக்கின்றார்.

  நொய்டாவில் உள்ள ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பேசிய ராஜன் “பயனில்லா பட்டங்களை வழங்கும் கல்வி மையங்களில் படிக்கும் மாணவர்களுக்கு அதனால் எந்த பயனும் கிடைக்கப் போவதில்லை; வேலையும் கிடைக்கப் போவதில்லை. பயனற்ற இந்தப் பட்டங்களை அளிக்கும் கல்வி மையங்களை வங்கிகள் அடையாளம் காண வேண்டும். அதில் படிக்கும் மாணவர்கள் கல்விக்கடன் கோரினால் அதை அனுமதிப்பதில் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்” என்று பேசியிருக்கின்றார்.

  எவ்வளவு அபத்தமான பேச்சு!.  அது என்ன பயனற்ற பட்டங்கள்!. அந்தப் பயனற்ற பட்டங்களைச் சொல்லிக் கொடுக்க பல்கலைக்கழகத்திற்கு அனுமதி கொடுத்த அயோக்கியர்கர்கள் யார்? எந்த மாணவனும் வேண்டும் என்றே பயனில்லாத பாடத் திட்டத்தைத் தேர்வு செய்து தனது தலையில் தானே மண் அள்ளி போட்டுக் கொள்ள மாட்டான். எது படித்தாலும் வேலை வாய்ப்பே இல்லை என்ற சூழ்நிலையில் மாணவர்களையும், பெற்றோர்களையும் ஏமாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகவே ஒவ்வொரு ஆண்டும் பல நூறு புதிய படிப்புகளை கவர்ச்சியான பெயர்களில் பல்கலைக்கழகங்கள் கொண்டுவருகின்றன. அவற்றிக்கு யூ.ஜி.சியும் அனுமதி தருகின்றது. பல்கலைக்கழகங்கள் இந்தப் படிப்புகளின் மீது உருவாக்கும் பிரம்மையும், பெயர்களில் உள்ள கவர்ச்சித் தன்மையும், வேலையில்லாத் திண்டாட்டமும் சேர்ந்தே அந்த அப்பாவி மாணவர்களை இது போன்ற மொக்கைப் பாடங்களை எடுத்துப் படிக்க தூண்டுகின்றது.

  எந்த மாணவனும் படிக்கும் காலத்தில் தனக்கு நிச்சயம் வேலை கிடைக்காது என்ற முன்முடிவோடு படிப்பதில்லை. படித்து முடித்து வெளியே வரும்போது தான் படிக்கும் கல்வி நிறுவனம் மூலம் நிச்சயம் வளாகத் தேர்வில் (campus interview) வெற்றி பெற்று  எப்படியும் ஏதாவது ஒரு நல்ல நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து விடலாம் என்ற நம்பிக்கையில் தான் அனைத்து மாணவர்களும் படிக்கின்றார்கள்.  பெற்றோர்களும் அந்த நம்பிக்கையில்தான் வங்கி அதிகாரிகளின் கையில் விழுந்து, காலில் விழுந்து , சொத்துக்களை அடமானம் வைத்துத் தங்களுடைய பிள்ளைகளை கல்லூரிகளில் சேர்க்கின்றார்கள்.

   ஆனால் வளாகத் தேர்வு என்பதெல்லாம் கல்வி நிறுவனங்களும் தொழில் நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டுத் துறையை சார்ந்த அதிகாரிகளும் சேர்ந்து நடத்தும் நாடகம் என்பது பின்னால் தான் மாணவர்கள் உணர்கின்றார்கள். சரி, படித்த கல்வி நிறுவனங்கள் தான் ஏமாற்றிவிட்டது... நாமாவது சுயமாக வேலையைத் தேடிக் கொள்ளலாம் என்றால் அதற்கும் வழியில்லை. பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் ஏற்கெனவே இருக்கும் தொழிலாளர்களையே ஆட்குறைப்பு செய்துகொண்டுள்ளன. பல தொழில் நிறுவனங்கள் உலகமயமாக்கலுக்குப் பின்பு இழுத்து மூடப்பட்டிருக்கின்றன. ஒட்டுமொத்த இந்தியாவின் தொழிற்துறை உற்பத்தியே படுத்துப்போய் கிடக்கின்றது. எங்கு வேலைக்குப் போனாலும் ‘ரெசியும கொடுத்துட்டுப் போங்க இருந்தா சொல்லி அனுப்புறோம்’ என்று திருப்பி அனுப்பிவிடுகின்றார்கள். அனைத்து வாய்ப்புகளும் கைவிட்ட சூழ்நிலையில் கிடைத்த வேலைக்கு, கிடைத்த கூலிக்குப் போகும் அத்துக்கூலியாக மாறுகின்றான் அந்த மாணவன்.

 இதில் எந்த இடத்தில் மாணவனின் தவறு உள்ளது? தரமற்ற கல்வி நிறுவனங்களையும், தரமற்ற மொக்கை பாடத் திட்டங்களையும் உருவாக்கி கோடிக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை நாசப்படுத்தியது எது? அரசாங்கம் தானே! அப்படி என்றால் ரகுராம் ராஜன் உண்மையில் இந்த அரசை அல்லவா குற்றம் சொல்ல வேண்டும். அதை சொல்லத் துப்பில்லாத ராஜன் ஏழை மாணவர்களுக்கு  வழங்கும் கல்விக்கடனில் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்  என்று சொல்வது எவ்வளவு அருவருப்பானது!

 மேலும் கல்வி என்பது ஒருவனின் அடிப்படை உரிமை. அதை அரசே இலவசமாக வழங்க வேண்டும். அடிப்படை கல்வியில் இருந்து ஆராய்ச்சிக் கல்வி வரை இலவசமாக வழங்க வேண்டியது ஒரு அரசின் பொறுப்பாகும். ஆனால் ரகுராம் ராஜன் போன்ற முதலாளித்துவ அறிவுஜீவிகளோ “மிகவும் உயர்ந்த தரத்திலான பல்கலைக் கழகங்களில் கல்விக்கட்டணம் மிக அதிகமாகத்தான் இருக்கும். எதிர்காலத்தில் இவை மேலும் அதிகரிக்கக்கூடும்” என கல்விக் கொள்ளையர்களுக்கு வக்காலத்து வாங்குகின்றார்கள். சர்வதேச நாணய நிதியம் என்ற கந்துவட்டிக் கடையில் வேலை பார்த்த ராஜன் போன்றவர்கள்  கல்வி முதலாளிகளின் காலை நக்குவது  ஒன்றும் வியப்பில்லைதான்.

   ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு சில லட்சங்களை சம்பளமாக வாங்கும் இந்த அதிமேதாவிக்குச் சாமானிய மக்கள் பெறும் கல்விக் கடன் கண்ணை உறுத்துவது ஒன்றும் வியப்பில்லை தான்.  தகுதி இல்லாத நிறுவனங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடிகளை அள்ளித் தரும் வங்கிகளை கண்டிக்கத் துப்பில்லை. விஜய் மல்லையா 9000 கோடிகளை வாங்கிக்கொண்டு வங்கிகளின் சுவற்றில் சிறுநீர்கழித்து விட்டு ஓடிப்போய்விட்டான். அவனை ஒன்றும் புடுங்கமுடியவில்லை. திருடன் அதானிக்கு 72 ஆயிரம் கோடிகளை பொதுத்துறை வங்கிகள் கடனாகக் கொடுத்துள்ளன. அதைப் பற்றி எல்லாம் அலட்டிக் கொள்ளாத ராஜனுக்கு ஏழை மாணவர்களுக்குக் கொடுத்த கல்விக்கடன் தான் கண்களை உறுத்துகின்றது.

 இந்தியாவில் 10 சதவீத மாணவர்கள் தான் உயர்கல்விக்கே செல்கின்றனர். 80 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கே செல்வதில்லை. 8 கோடி குழந்தைகள் பள்ளிக்கல்வியை பாதியிலேயே குடும்பப் பொருளாதார சூழல் காரணமாக நிறுத்தி விடுகின்றார்கள். கல்வி முழுவதும் தனியார்மயம் ஆகிவிட்ட சூழ்நிலையில், கல்வி என்பது  பெரும் பொருள் படைத்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய பண்டமாக மாறிவிட்ட நிலையில் ஏழை மாணவர்கள் பெரும்பாலும் இந்த கல்விக்கடனை நம்பியே படிக்கின்றார்கள். அதுவும் கூட அனைத்து மாணவர்களுக்கும் கிடைப்பதில்லை. அசையா சொத்துக்களோ, உள்ளூர் அரசியல் பிரமுகர்களின் உத்திரவாதமோ இருந்தால் மட்டுமே கிடைக்கின்றது. இதுதான் எதார்த்த நிலவரம்.

  பங்குச் சந்தை வளர்ச்சியை மட்டுமே நாட்டின் வளர்ச்சியாகப் பார்க்கும் ரகுராம் ராஜன் சாமானிய மக்களின் உண்மை பொருளாதாரத்தையும் கொஞ்சம் கணக்கிட்டு பேசவேண்டும். தொழிற்துறையை வளர்த்தெடுத்து அனைத்து மக்களுக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க திராணியில்லாத ஒரு அரசின் கீழ் வேலை பார்க்கும் ராஜன், ஏழை மாணவர்களின் கடனை திருப்பி செலுத்தும் தகுதியைப் பற்றி பேசுவது கேலிக்கூத்தானது.

- செ.கார்கி

Pin It