இந்திய ஒன்றியத்தில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களுள் ஒன்றாக ‘ஜவகர்லால் நேரு’ பல்கலைக்கழகம் விளங்குகிறது.
இப்பல்கலையில் இந்திய மொழிகள் மையத்தில் தமிழ், இந்தி, உருது, கன்னடம், ஒடியா, வங்கம் ஆகிய மொழிகளின் இருக்கைகள் இயங்குகின்றன.
தமிழ் இலக்கியவியல், தமிழ் - திராவிட மொழியியல், தமிழ் - தென்னக வரலாறு, சமூகவியல் ஆகிய ஆய்வுகளை மூன்று வகையாக விரிவுபடுத்தி அந்தப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியவியல் எனும் தனித்துறையாகச் சிறப்பாக இயங்கும் வகையில் தமிழக அரசு ரூபாய் 5 கோடியை நிதியாக வழங்க முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆணையிட்டுள்ளார் என்பது, இனிப்பேறிய செய்தியாக இருக்கிறது.
இது குறித்து முதல்வர் தன் வலைத்தளப் பதிவில், மறைந்த முன்னாள் முதல்வர், தலைவர் கலைஞர் அவர்கள் தமிழுக்குச் செம்மொழித் தகுதியைப் பெற்றுத் தந்ததன் விளைவால், ஜே.என்.யூவில் தமிழிருக்கைத் தோற்றுவிக்கப்பட்டது என்றும், அதன் அடுத்தக் கட்ட வளர்ச்சிக்காகத் தமிழக அரசு இந்நிதியை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம், உலக அளவில் தமிழ்மொழிக்கான அங்கீகாரத்தைப் பெற்றுத் தருதல், தமிழின், தமிழரின் மதிப்பை உயர்த்தல், தமிழ் மொழியை, தமிழ் அறிவுத் தொகுதிகளை உலக மக்களோடு பகிர்தல், தமிழ், தமிழியல் தொடர்பான உயர் ஆய்வினை மேற்கொள்ளல், தமிழாய்வின் தரத்தினை மேம்படுத்தல் போன்ற வளர்ச்சிக்கு உறுதுணை சேர்க்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் இந்த முயற்சி பெரிதும் பாராட்டப் படவேண்டும்.
“உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல்" என்கிறார், பெரும்புலவர் திருவள்ளுவர்.
- கருஞ்சட்டைத் தமிழர்