stalin 233தமிழிய - முற்போக்கு இயக்கங்கள், பல்துறை அறிஞர்கள் – கல்வியாளர்களின் ஒருங்கிணைந்த அறிக்கை ...

திமுக தலைமையில் கூட்டணி உருவாக்கித் தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்திருக்கும் தமிழ்நாட்டு அரசுக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் எங்களின் வணக்கத்தையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்..

முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தம் பெரும் முயற்சியில் பெற்றிருக்கிற வெற்றியைக் கொண்டு தமிழ்நாட்டு உரிமைகளையும், தமிழ் மொழி, இன உரிமைகளையும் போராடிப் பெற்று தமிழ்நாட்டில் சிறந்ததொரு ஆட்சியை மேற்கொள்ள வேண்டும் என்று விழைகிறோம்..

கொரானா பெருந்தொற்றுப் பேரழிவிலிருந்து காத்திட மக்கள் இயக்கமாகச் செயல்படுவோம் என அறிவித்துள்ளதை வரவேற்பதோடு, இப் பேரழிவிலிருந்து மக்களைக் காக்கும் முயற்சியில் தங்களுக்குத் தோள்கொடுப்போம் எனும் உறுதியையும் அளிக்கிறோம்.

தொடர்ச்சியாக, கீழ்க்காணும் சில முதன்மைப் பணிகளில் முதல்வர் அவர்கள் கவனம் செலுத்தி நிறைவேற்றிட வேண்டுமாறு அக்கறையுடன் முன்வைக்கிறோம்..

1. கன்னியாகுமரியில் உள்ள வள்ளுவர் சிலை, சென்னை வள்ளுவர் கோட்டம், பூம்புகார் கலைக் கூடங்கள், சித்தன்னவாயில் உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களையெல்லாம் உலக நாடுகள் அளவில் அடையாளப்படும் வகையில் சிறப்பாக மேம்படுத்தி, உரிய அளவில் விளம்பரம் செய்து சிறந்த சுற்றுலாத் தலங்களாக அறிவிக்க வேண்டுகிறோம்..

2. தமிழ்நாட்டுத் தலைமைச் செயலகத்திலிருந்து அரசு அலுவலகங்கள் அனைத்திலும் 100 விழுக்காடு அளவில் தமிழை ஆட்சி மொழியாக நடைமுறைப்படுத்திட வேண்டுகிறோம்..

செம்மொழி உயராய்வு நிறுவனம், தமிழ்ப் பல்கலைக் கழகம் செயற்பாடுகளை விரிவும் விரைவும் படுத்திடக் கோருகிறோம்.. தமிழ்வழிக் கல்வியை முதன்மை கொடுத்து வளர்க்க வேண்டுவதோடு, தமிழ்வழிப் படித்தவருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கிட வேண்டுகிறோம்..

3. தமிழ்நாட்டில் உள்ள வானூர்தி நிலையங்கள், தொடர்வண்டி நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட முதன்மையான இடங்களுக்குப் பழந்தமிழ் மற்றும் பிற்கால, இக்காலத் தமிழ் அறிஞர்கள், தலைவர்களின் பெயர்களை மட்டுமே சூட்டிடக் கோருகிறோம்..

வணிக நிறுவனங்கள், ஊர்ப் பெயர்கள் உள்ளிட்ட பெயர்கள் அனைத்தும் கட்டாயம் தமிழில் இருக்க ஆணை பிறப்பித்து முழுமையாக நடைமுறைப்படுத்திட வேண்டுகிறோம்..

4. தமிழ்நாட்டு அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், தமிழ்நாட்டில் உள்ள இந்திய ஒன்றிய அரசு அலுவலகங்கள் அனைத்திலும் 80 விழுக்காட்டினர் தமிழர்களாகவே அமர்த்தப்படுவதற்கு உரிய நடவடிக்கையை உடனே எடுத்திட வேண்டுகிறோம்..

5. கல்வித்துறையை முழுக்க முழுக்க தமிழ்நாட்டு அரசுக்கு உரிமை உடையதாக மாநிலப் பட்டியலுக்குள் கொண்டு வருகிறபடி சட்டமன்ற முதல் கூட்டத் தொடரிலேயே தீர்மானம் இயற்றிட வலியுறுத்துகிறோம்..

6. ஏழு தமிழர்களின் விடுதலைக்கு உடனடியாக ஆவன செய்திட வேண்டுகிறோம்..

7. தமிழறிஞர்களின் முன்மொழிவை ஏற்று, கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் நடைமுறைப்படுத்திய தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பதை அவரவர் விருப்பத்திற்கு மாற்ற முடியாத வகையில் உரிய சட்டப் பாதுகாப்போடு மீண்டும் கொண்டுவந்திடக் கோருகிறோம்..

அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வழங்கும் சிறப்பு நன்னர் ஊதியங்களை (போனஸ்) பொங்கல் திருநாள் - தமிழ்ப் புத்தாண்டை ஒட்டியே வழங்க வேண்டும் எனவும் அறிவித்திட வேண்டுகிறோம்..

8. நீட் நுழைவுத்தேர்வு, புதிய கல்விக் கொள்கை, வேளாண் சட்டங்கள், ஐட்ரோகார்பன் திட்டங்கள், எட்டு வழிச்சாலை திட்டங்கள், கெயில் திட்டங்கள், ஸ்டெர்லைட் தொழிற்சாலை திறப்பு சூழ்ச்சிகள், உயர்மின் கோபுரச் சிக்கல், கடற்கரை மேலாண்மை அறிவிப்பாணை முதலானவை முழுமையாக நிறுத்தப்பட்டுத் தடை செய்ய வலியுறுத்துகிறோம்..

9. நெய்வேலி நிலக்கரி, நரிமனம் கன்னெய் (பெட்ரோல்) உள்ளிட்ட இந்திய அரசு பறித்து எடுத்துச் செல்லும் கனிம வளங்களுக்குக் குறைந்த அளவு 15 விழுக்காடு மதிப்பு (இராயல்டி)த் தொகையை அவை எடுக்கப்பட்ட காலம்தொட்டு கணக்கிட்டு வாங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுகிறோம்..

10. தமிழ்நாட்டுக் கோயில்கள் அனைத்திலும் தமிழே வழிபாட்டிலும் குடமுழுக்கிலும் பயன்படுத்தப் படுவதோடு, தமிழ்ப் பூசைக்கு மூன்றில் ஒரு பகுதி கட்டணம் மட்டுமே பெறுவதோடு அனைத்துச் சாதியினரையும் பூசகர்களாக அமர்த்துகிற ஆணை வெளியிடக் கோருகிறோம்..

11. தமிழ்நாடு நாளை ( நவம்பர் 1 ) விடுமுறை நாளாக அறிவிப்பதோடு தமிழ்நாட்டிற்கென்று கொடி ஒன்றை அறிஞர்களின், மக்களின் கருத்தறிந்து உருவாக்கி, வருகிற தமிழ்நாடு நாளுக்கு ( நவம்பர் 1 ) முன்பாக அறிவிக்க வலியுறுத்துகிறோம்.

12. தமிழ்நாடு அரசும் மக்களும் போராடிப் பெற்றிருக்கிற இடஒதுக்கீட்டைச் சிதைக்கும் வகையில் இந்திய அரசு செய்திருக்கிற நடவடிக்கைகளை மறுத்து இதுவரைப் பெற்று வந்திருக்கிற 69 விழுக்காட்டு இட ஒதுக்கீட்டை நிலைப்படுத்திடவும், 100 விழுக்காடு இடங்களையும் மக்கள்தொகை அடிப்படையில் பங்கீடு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் வேண்டுகிறோம்..

13. சாதி மறுப்புத் திருமணம் புரிந்தோர்க்கு ‘சாதி மதம் அற்றவர்’ எனச் சான்று வழங்கி, அவர்களுக்கு கல்வி, வேலை, தொழில் உள்ளிட்ட எல்லா வாய்ப்புகளிலும் 20ரூ தனி இடஒதுக்கீடு அளித்திட உரிய நடவடிக்கை எடுத்திடக் கோருகிறோம்

14. தமிழ்நாட்டுக் கல்விப் பாடத்திட்டங்களில் கடந்த ஆட்சிக் காலங்களில் சிதைத்து விட்டிருக்கிற தமிழ் மொழி, இன வரலாறுகளை, பகுத்தறிவுக் கருத்துகளை மீண்டும் ஒழுங்கமைத்துப் பள்ளிக்கல்வி முதல் பல்கலைக்கழகக் கல்வி வரை இக் கருத்துகளைப் பாடங்களாக வைத்துப் பயிற்றுவித்திட நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்..

15. இந்தியப் புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ)-யின் செயல்பாடுகளைத் தமிழ்நாட்டில் மறுத்திடுவதோடு, அதன்வழி பல்வேறு செயற்பாட்டாளர்கள் மீது போடப்பட்டுள்ள ‘உபா’ (UAPA) உள்ளிட்ட அரசியல் பொய் வழக்குகளை உடனே திரும்பப்பெற வேண்டுகிறோம்.

ஒருங்கிணைப்பு

பொழிலன்
கொளத்தூர் தா.செ. மணி
கோவை கு. இராமகிருட்டிணன்
கண. குறிஞ்சி
கோ. பாவேந்தன்
முனைவர் முத்தமிழ்

Pin It