suryaசினிமா என்ற கலைவடிவத்துக்கும் ஆவணப்படத்துக்குமான வித்தியாசம் என்பது நன்கு அறியக்கூடியதே. ஒரு சினிமாவை ஆவணப்படம் போன்றோ ஒரு ஆவணப்படத்தை சினிமா போன்றோ எடுப்பது வர்த்தக நோக்கில் இருந்து பார்க்கும் போது இயலாததாகவே தெரியும்.

காரணம் இரண்டுக்குமான ரசிகர் கூட்டம் என்பது வெறும் ரசனை என்பதை தாண்டி அறிவு மட்டத்திலும் வெவ்வேறானது. சினிமா என்பது வெகுஜன மக்களின் கலைவடிவமாக இருக்க ஆவணப்படங்களோ சமூக அக்கறை உள்ள அரசியல் விழிப்புணர்வு பெற்றவர்களின் கலைவடிவமாக இருக்கின்றது.

அதனால் இயல்பாகவே சினிமாவுக்கான சந்தை என்பது அந்த வெகுஜன மக்களைக் கவரும் அம்சங்கள் உள்ளடக்கியதாகவும் ஆவணப்படங்கள் என்பது பட்டவர்த்தனமான உண்மைகளைப் பேசுபவையாகவும் உள்ளது.

இதனால் சினிமா இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் என அனைவருமே வெகுஜன மக்களைத் திருப்திபடுத்தும் நோக்கில் பல்வேறு வகையான உத்திகளை கையாண்டு படத்தை வெற்றி பெறவைக்க முயற்சிக்கின்றனர்.

காதல், சண்டை ஆபாசம், நகைச்சுவை என அனைத்தையுமே படத்தில் வைத்து அனைத்து தரப்பு மக்களையும் திருப்திபடுத்த முயற்சிக்கின்றனர்.

இதற்காக ஒருபடத்தை வெறும் பொழுதுபோக்குக்காக பார்க்கும் ஒரு சாமானிய மனிதன் அதைத்தாண்டி வேறு எதையுமே சினிமாவில் எதிர்பார்க்கவில்லை என்றோ அப்படியான சினிமா எடுக்கும் ஒரு இயக்குநருக்கும் அதைத்தாண்டி எந்த அரசியலும் இல்லை என்ற முடிவுக்கு நாம் வந்துவிட முடியுமா?

நிச்சயம் முடியாது. காரணம் ஒரு கமர்சியல் சினிமாவில் மேற்குரிய எல்லா அம்சங்களும் இருந்தாலும் அதை இணைத்துச் செல்லும் மைய சரடாக ஒரு கதை இருந்தே ஆகவேண்டும். அந்தக் கதை ஏதோ ஒரு கருத்தைப் பார்வையாளனுக்கு சொல்கின்றது. பார்வையாளன் தான் இதுவரை வைத்திருந்த ஒரு முன்முடிவான சமூகக் கருத்தியலின் மீது ஒரு மாறுதலை கோருகின்றது.

உதாரணமாக பெண்களை இழிவாக நினைத்துக் கொண்டிருந்த ஒருவரை பெண்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள் என்றோ, காதல் எதிர்க்கப்பட வேண்டும் என்ற கருத்துடைய ஒருவரிடம் காதல் இயல்பானது என்றோ, சாதிவெறி பிடித்த ஒருவனிடம் சாதி மனிதத் தன்மையற்ற செயல் என்றோ ஏதோ ஒரு கருத்தை பார்வையாளனுக்கு கடத்த முயற்சிக்கின்றது.

இயக்குநர் இப்படி தான் சொல்லவரும் ஒரு மையக்கருத்தை திரைக்கதையாக்கி அதற்கு பல்வேறு கதாபாத்திரங்கள், காட்சிகளை வடிவமைத்து உயிர் கொடுக்கின்றார். இங்குதான் ஒரு அரசியல் அதாவது கதையின் மையக்கருத்தை சொல்ல இயக்குநர் எப்படியான காட்சிகளை திரைப்படுத்துகின்றார் என்பதை பொறுத்து படத்தின் தன்மை அமைகின்றது.

ஒரு காதல் ஜோடியை சாதிவெறியர்கள் கட்டிப்போட்டு ஊரே பார்க்க எரிப்பதை பகிரங்கமாக காட்சிப்படுத்தி சாதியின் கொடூரத்தையும், சாதிவெறியர்களின் அயோக்கியத்தனத்தையும் அம்பலப்படுத்தி சாதியின் கொடூரத்தை ஒரு பார்வையாளனுக்கு இயக்குநர் கடத்த முயன்றால் அந்த இயக்குநரை நாம் சாமானிய மக்களின் நலனில் அக்கறை உள்ள இயக்குநர் என்று மனதார பாராட்டுகின்றோம். அதே வேளையில் அந்தப் படமும் பார்வையாளனின் மனதில் காட்சிப் படிவங்களாக படிந்து ஒரு சிறு தாக்கத்தையாவது ஏற்படுத்துகின்றது.

ஆனால் அதுவே ஒரு இயக்குநர் விபச்சார விடுதியில் பல ஆண்களுடன் உறவுவைத்துக் கொள்வதை அப்படியே காட்சிப்படுத்திவிட்டு இறுதியில் “காமம் சாதி பார்ப்பதில்லை” என்று சாதி ஒழிப்பு பேசவைத்தால் அது போன்ற இயக்குநரை நாம் அயோக்கியன் என்றும் அரிப்பெடுத்த நபர்களை திரையரைங்கை நோக்கி வரவைக்க சாதி ஒழிப்பு என்ற கருத்தை தவறாக பயன்படுத்தி இருக்கின்றான் என்றும் குற்றம் சாட்டுவோம்.

அதையேதான் சூரரைப் போற்று திரைப்படமும் செய்துள்ளது. ஆனால் மலத்தில் அரிசி கடந்தால் கூட அதை நாங்கள் எடுத்து பயன்படுத்துவோம் என்று சொல்லிக் கொண்டு திரியும் ஒரு சுயநலவாத, அற்பவாத கும்பல் வான்டேடாக போய் சூரியாவுக்கும், சுதா கொங்கராவுக்கும் முட்டுக் கொடுத்துக் கொண்டு இருக்கின்றது.

இவர்களின் அற்பவாத பார்வை சுயமரியாதை சமதர்மம் என்ற கோட்பாட்டிற்கே எதிரானது. தங்களின் அடிமை மனோபாவத்தையும், சித்தாந்த அம்மணத்தையும் காட்ட எங்கேயாவது இடம் கிடைக்காதா என அலையும் சில புல்லுறுவிகள் சமூக வலைதளங்கள் வாயிலாக இது போன்ற விபச்சாரத்தனம் நிறைந்த கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

அது போன்ற சித்தாந்த தெளிவற்ற குறிப்பாக முதலாளித்துவ பயங்கரவாதம் பற்றிய எந்தவித அறிவும் அக்கறையும் அற்ற தன்னை முற்போக்குவாதி என்று சொல்லிக் கொண்டு திரியும் அற்பப் பதர்கள் ‘முயன்றால் முன்னேறலாம்’ ‘உன்னால் முடியும் தம்பி’ போன்ற சோப்பலாங்கிகளின் வெட்டி தத்துவத்தை கடைவிரிக்க முயற்சிக்கின்றார்கள்.

ஏதோ சினிமா என்பது முழுவதும் முற்போக்குக் கருத்துகளை சொல்லமுடியாத இடம் என்றும் எனவே அதில் சில முற்போக்கு கருத்துக்களை யாராவது பேசினால் அவனின் பிருஷ்டத்தின் பின்னால் அணிவகுப்பது நேர்மையான முற்போக்குவாதிகளின் கடமை என்றும் மிரட்டுகின்றார்கள்.

முட்டுக்கொடுத்து கடைந்தேறத்தான் எத்தனை படபடப்பு எத்தனை பதைபதைப்பு!. கோரூர் ராமசாமி ஐயங்கார் கோபிநாத்தை நெடுமாறன் ராஜாங்கமாக காட்டியதில் துவங்கும் சுதா கொங்கராவின் புனிதப்படுத்தும் பணி படம் நெடுக தொடர்கின்றது.

ஏழைகளுக்கு குறைந்த விலையில் விமான பயணத்தை சாத்தியப்படுத்துவது என்பதெல்லாம் முதலாளிகளின் பார்வையில் இருந்து வேண்டுமானால் மாபெரும் சேவையாக சுயவிளம்பரம் செய்துகொள்ளலாம். ஆனால் ஒரு சாமானியனின் பார்வையில் இருந்து பார்க்கும் போது அது விமானப் பயணத்தை வாழ்வின் லட்சியமாகக் கருதும் நடுத்தரவர்க்க மக்களை கவர வைக்கப்படும் பொறியாகும்.

விலையைக் குறைப்பதன் மூலம் சந்தையில் போட்டியாளர்களை வீழ்த்துவது என்பது முதலாளித்துவத்தின் தவிர்க்க முடியாத விளைவாகும். அதைத்தன் கோரூர் ராமசாமி ஐயங்கார் கோபிநாத்தும் செய்துள்ளார். இதில் என்ன முற்போக்கு இருக்கின்றது? ஜியோவால் ஒட்டுமொத்த தொலைத்தொடர்பு நிறுவனங்களும் பெரும் சவாலை சந்தித்தை நாம் அறிவோம். இதை தொழிற்போட்டி என்று சொல்வோமா? இல்லை முகேஷ் அம்பானியின் ஏழைகளின் மீதான கரிசனம் என்று சொல்வோமா?

சுதா கொங்கரா நம்மை கோரூர் ராமசாமி ஐயங்கார் கோபிநாத்தை ஏழைகளின் பங்காளனாக நம்பச் சொல்கின்றார். முகேஷ் அம்பானி மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களை முடித்துக்கட்ட குறைந்த விலையில் ஜியோவை கொடுத்த போது வோடபோனும் ஐடியாவும் இணைந்து அதன் ஆதிக்கத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயன்றது நமக்குத் தெரியும். நிறுவனங்களின் இணைப்பும் கையகப்படுத்துதலும் உலகமய காலகட்டத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியிருக்கின்றது.

அந்த அடிப்படையில்தான் 2006-ம் ஆண்டு ஏர் டெக்கான் நிறுவனம் சரிவை சந்தித்த போது விஐய் மல்லையாவின் யுனைடெட் பிவரேஜஸ் குழுமம் ஏர்டெக்கானின் 26% சதவீத பங்குகளை வாங்கியது. 2007-ல் ஏர் டெக்கான் நிறுவனம் மல்லையாவின் கிங்க் ஃபிஷர் ஏர்லைன்ஸ் உடன் இணைக்கப்பட்டது.

2008-ம் ஆண்டு விஜய் மல்லையா அதன் தலைமை நிர்வாக அதிகாரியானார். கோரூர் ராமசாமி ஐயங்கார் கோபிநாத் அதன் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால் படத்திலோ கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் கோபிநாத் மல்லையாவுக்கு விற்க மறுத்தது போல காட்டப்பட்டுள்ளது. ஒரு பெரும் ஊழல் பேர்வழியை படத்தில் உத்தமனாக காட்டுவதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?

மேலும் ரசிகர்களின் கண்ணீரை பிழிந்தெடுக்க கோபிநாத்தின் தந்தை உடல்நலக் குறைவு காரணமாக படுத்த படுக்கையாக இருக்கும் போது அவரைப் பார்க்க விமானம் மூலம் தனது சொந்த ஊருக்கு பயணம் செல்ல முயற்சி செய்வது போலவும் ஆனால் விமானத்தில் பயணிக்க போதிய பணம் இல்லாமல் விமான நிலையத்தில் அனைவரிடமும் பணத்திற்கு கெஞ்சுவது போன்றும் இதனால் நெடுமாறன் சொந்த ஊருக்கு வருவதில் தாமதம் ஏற்படுவதால் அவரின் அப்பா இறந்துவிடுவது போன்றும் இதுவே நெடுமாறனுக்கு அதாவது கோபிநாத்துக்கு ‘பணக்காரன் மட்டும் பறக்கத்தான் விமானமா அதில் ஏழைகள் பறக்க முடியாதா’ என்ற வைராக்கியம் எற்பட்டு ஏர் டெக்கான் நிறுவனத்தை உருவாக்க பாடுபட்டதாகவும் சுதா கொங்கரா பெரும் தில்லாலங்கடி வேலையைச் செய்திருக்கின்றார்.

ஆனால் உண்மையில் விஜய் மல்லையாவின் கிங் ஃபிஷர் நிறுவனத்தால் கடன் பெறப்பட்டு திரும்ப செலுத்தப்படாத விவகாரங்களில் 2014-ம் ஆண்டு கோரூர் ராமசாமி ஐயங்கார் கோபிநாத்தும் புலனாய்வு நிறுவனங்களின் விசாரணை வளையத்திற்குள் வைக்கப்பட்டிருந்தார்.

ஆக்சிஸ் வங்கியின் கணக்குகள் மூலமாக நிதிகளை மாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டு கோபிநாத் சிபிஐ விசாரணை வளையத்திற்குள் இருந்தார். ஏனென்றால் அப்போது அவர் கிங்ஃபிஷர் ஏர்லைன்சின் இயக்குநர்களில் ஒருவராக இருந்தார்.

கோபிநாத் மற்றும் அவரது நிறுவனம் 155 கோடிக்கு பெற்ற கடனை திரும்பக் கட்டாமல் இருந்தது. 2012-ம் ஆண்டிலிருந்து அதற்கான வட்டியைக் கட்டக் கோரி தீர்ப்பாயத்தில் முறையிடப்பட்டது.

இதை எல்லாம் மிகக் கவனமாக படத்தில் தவிர்த்துவிட்டார் சுதா கொங்கரா. அவரின் நோக்கம் எந்த ஒரு முதலாளியும் மிக எளிமையாக வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிடுவதில்லை அதிலும் குறிப்பாக ஐயங்கார் கோபிநாத்துகள் மிக போராடியே வெற்றி பெறுகின்றார்கள் என்பதை காட்டுவதுதான்.

பள்ளிக்கூடம் செல்லாமல் வீட்டிலேயே தனது ஐயங்கார் தந்தையால் ஆச்சாரமாக வளர்க்கப்பட்டு பின்பு கன்னட வழி பள்ளியில் நேரடியாக ஐந்தாம் வகுப்பு சேர்ந்து அதன்பின் உயர்தட்டு வகுப்பினர் மட்டுமே படிக்கும் பிஜாப்பூரின் சைனிக் பள்ளியில் சேர்ந்து படித்த கோரூர் ராமசாமி ஐயங்கார் கோபிநாத்துக்கும் சுதா கொங்கரா படத்தில் காட்டும் நெடுமாறனுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கின்றதா?

இந்தப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் இங்கிருக்கும் சில முற்போக்கு மூஞ்சுறுகள்தான். இந்த முற்போக்கு மூஞ்சுறுகளுக்கு முதலாளித்துவம் என்றால் என்ன என்ற அரிச்சுவடி கூட தெரியாது.

வாழ்க்கையில் முதலாளித்துவத்தை மனமாற ஏற்றுக்கொண்டு மேனா மினிக்கியாக வாழ்ந்துகொண்டு தன்னை ஒரு முற்போக்குவாதி என்று சொல்லிக் கொள்ளும் சுயநலவாத கூட்டம்தான் ‘ஆகா படத்தில் சாதி ஒழிப்பு பேசப்படுகின்றது, அதனால் அதை முதல் ஆளாக சென்று வரவேற்க வேண்டும்’ என முந்திக்கொண்டு போய் ஆதரவு தெரிவித்தது.

தங்களுடைய கேடுகெட்ட முற்போக்கு ஓட்டாண்டித்தனத்தை மறைக்க வணிக சினிமாவில் அவ்வளவுதான் காட்ட முடியும் அதற்கு மேல் காட்டினால் மக்கள் விரும்பமாட்டார்கள் என சப்பைக் கட்டு கட்டுகின்றார்கள்.

நல்ல வேளை இரண்டாம் குத்து படத்தில் சாதி ஒழிப்பையோ, பெரியாரின் படத்தையோ காட்டவில்லை. ஒரு வேளை காட்டியிருந்தால் இரண்டாம் குத்து திரைப்படத்தை பெரிய புரட்சிப் படமாக்கியிருப்பார்கள்.

- செ.கார்கி

Pin It