kavan 450தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வந்திருக்கும் படம் கவண். ஒளிப்பதிவாளரான இவர் இயக்குநராக மாறியதிலிருந்து முக்கியப் படங்களில் எழுத்தாளர்கள் சுபா துணையுடனே வலம் வருவார். இப்படத்தில் கபிலனும் சேர்ந்திருக்கிறார் . தன் முந்தைய படமான ‘கோ’ வில் பத்திரிக்கை துறை என்ற தளத்தில் பயணித்த இயக்குநர் இம்முறை பயணித்திருப்பது சின்னத்திரையில்.

உலகமயமாக்கலுக்குப் பின் அசுர வளர்ச்சி அடைந்திருக்கும் துறைகளில் முக்கியமானது சின்னத்திரை எனப்படும் தொலைக்காட்சி ஊடகம்.… வட இந்திய ஊடகங்கள் போல தமிழ் செய்தி ஊடகங்களும் விவாத நிகழ்ச்சிகளை நடத்தி வரும் இன்றைய காலகட்டத்தில் பொழுது போக்குத் தொலைக்காட்சிகளை விட செய்தித் தொலைக்காட்சிகளே அதிக முக்கியத்துவம் பெற்று வருகின்றன.

நெம்பர் 1 சேனல் ஆக இருக்க, ஒரு தனியார் தொலைக்காட்சி என்னென்ன குறுக்கு வழிகளைக் கையாள்கிறது என்பதை விரிவாக சொல்லியுள்ளது கவண். தனிப்பட்ட முறையில் திரைப்படமாகப் பார்த்தால் கதாநாயகி மடோனா, கதை நாயகனாக நடித்துள்ள விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர், விக்ராந்த் உள்ளிட்ட அனைவரும் தங்கள் பங்கைச் சிறப்பாக ஆற்றியுள்ளார்கள்.…

படத்திலேயே மிகவும் சொதப்பலான பங்கு இசையமைப்பாளர் ஆதியுடையது.. தனது ஆஸ்தான இசையமைப்பாளரான ஹாரீஸ் ஜெயராஜிடமிருந்து விலகி ஆதியை பயன்படுத்தியது இயக்குநரின் மிகப்பெரிய தவறு.…துள்ளலாக அமைந்திருக்க வேண்டிய புத்தாண்டுப் பாடலில் ஜீவனே இல்லை. பிண்ணனி இசை அதை விட சொதப்பல்.. தனிப்பட்ட முறையில் ஆதிக்கு நம் கோரிக்கை என்னவென்றால் நீங்க மிசையை முறுக்கிட்டு கலாச்சரத்தையோ, அல்லது வாலை முறுக்கிட்டு ஜல்லிக்கட்டையோ காப்பாத்தப் போனால் தமிழ் திரை இசை காப்பாற்றப்படும்.…

விஜய் சேதுபதி, மடோனா இடையே நடக்கும் ஊடலில் ஆண் தவறிழைத்து விடுவான், பெண் கோபப்பட்டு ஒதுங்குவாள், பின்பு ஆண் அப்பெண் பின்னாலேயே சுற்றுவான் இறுதியில் பெண் அதே ஆணால் மீண்டும் கவரப்படுவாள். அதற்கான காரணம் அவனின் வீரம். வழக்கம் போல ஆணின் வெற்றிக்கு பின் பெண் இருப்பாள் என இம்மி பிசங்காமல் இந்து ஆணாதிக்க சினிமா என்பதை கவணும் பிரதிபலித்திருக்கிறது.. வழக்கமாக நாமும் கடந்து போய்விட்டோம்.. விக்ராந்த் –தர்சனா ( அப்துல்- கல்பனா) ஜோடிகளின் விசயத்தில் அதை ஈடு கட்ட முயற்சி செய்துள்ளார் போதவில்லை..

போராட்டக் குழுவில் உள்ள சிறுபான்மை மக்களின் சமூகநிலை அதை ஊடகங்கள் பிரதிபலிப்பது, பெண் போராட்டக்காரர்களின் நிலை ஆகியவற்றை இயன்ற வரை சரியாகக் காட்டி இருக்கிறார்.… அதென்ன போராட்ட குழுவில் அப்துல்லா- முருகன் என மத நல்லிணக்கம் என சப்பைக் கட்டு? இங்கே மதங்கள் கூட போரட்டத்தால் ஒருங்கிணையும். இந்து  மதத்தின் ஏற்ற தாழ்வான ஜாதிகள் போராட்டத்தில் கூட இணையாது…என்பதை தமிழகமெங்கும் நடைபெறும் டாஸ்மாக்குக்கு எதிரான போராட்டங்கள் நமக்கு தெளிவாக காட்டுகின்றன.…

அடுத்து, மக்களுக்கு எதிரான தொழிற்சாலை அரசியல்வாதியுடையது என்பதும்,  ஒழுக்கமின்மை என்பது எப்போதும் போதையில் இருப்பது என்பது போலாகப் படம் நெடுக - பொதுப் புத்திக்குத் தீனி போடுபவையே அதிகம்.

அரசியல் வாதிகளை ஊடகங்கள் இப்படி பூதாகரமாக, நல்லவனாகக் காட்டுகிறது என்பதையும் அதற்கான வழிமுறைகளையும் வெளிப்படையாகச் சொல்லியிருப்பது தமிழ்ச்சூழலுக்குப் புதுசு பாராட்டத்தக்கது.. இதை அப்படியே மோடி விசயத்தில் பொருத்திப் பார்ப்பது மிகச்சரியாக இருக்கும்.…

மிக முக்கியமாக ‘கவண்’ இலக்கு மாறிய இடம், ஊடகத்துறையில் உள்ள பார்ப்பன அதிக்கம் ( காட்டாறு வெளியிட்ட இட ஒதுக்கிட்டு உரிமை புத்தகத்தின் செய்தி காண்க பெட்டி செய்தி) பற்றி வாயே திறக்காமல் இருந்ததே. திரையில் அதெல்லம் காட்டினால் படமே வெளிவராது என்ற சப்பை கட்டெல்லாம் ‘ஜீவா’ படம் வெளிவராத்துக்கு முன் சொல்லியிருந்தால் ஏற்றுக் கொண்டிருக்கலாம்..

இன்று தொலைக்காட்சிச் செய்திகளில், விவாதங்களில், மற்றும் முக்கியமாக அனைத்து தொலைக்காட்சிகளுக்கும் செய்தி தரும் பி.டி.ஐ, ஏ.என்.ஐ போன்ற செய்தி நிறுவனங்களில் பார்ப்பனர்கள் பங்கே அதிகம்.. குறைந்தபட்சம் குறியீடுகள் மூலமாகவாவது உணர்த்தியிருக்கலாம். அவ்வகையில் இலக்கு மறந்த கவணே இது…

இறுதியாக, தொலைக்காட்சி நிறுவனங்களில் இருக்கும் பெரியாரிய, பொதுவுடமை, பெண்ணிய, சிந்தனையுடைய நண்பர்களுக்கு கவண் திரை விமர்சனம் மூலம் காட்டாறு ஒரு கோரிக்கை வைக்கிறது, இதை செயல் படுத்த விவாதியுங்கள், இதோ அக்கோரிக்கை.

கவணில் டி.ஆரின் முத்தமிழ் தொலைக்காட்சிக்கு சேதுபதி டீம் வரும் போது பாலியில் நிகழ்ச்சி நடத்தும் இடமாக அது இருக்கும். அந்நிகழ்வை மிகப் பெரிய தவறாக சேதுபதி சொல்ல அதற்கு டி.ஆர் சொல்வார் எது கேவலம் இன்னிக்கு உலகம் போர் இல்லாமல் இருக்கிறது. அதற்குப் பாலியல்  முக்கியம் என்பார்.

தமிழ்ச்சூழலில் பாலியல் கல்விக்கான விவாதம் ஒரு புறம் நடந்தாலும், தொலைக்காட்சிகளும் பாலியல் நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை.…அதென்ன இரவு 11 மணிக்கு மேல் மிட்-நைட் மசாலா போலவே பாலியல் கேள்வி - பதில் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது? அதுவும் பெரும்பாலான நிகழ்ச்சிகள் அறிவுப்பூர்வமாக இல்லாமல் தரமற்றதாகவே உள்ளது..

ஆகவே, பாலியல் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சிகள்  முறையான பயிற்சி பெற்ற Sexologists, Psychiatrist மருத்துவர்களை கொண்டு ( சிவராஜ் சித்த வைத்திய சாலை போல இல்லாமல்) பிரைம் டைம் எனப்படும் இரவு 8 மணியிலிருந்து 10 மணிக்குள் நடத்த வேண்டும் என காட்டாறு கோரிக்கை வைக்கிறது.. அதுவே ஆரோக்கியமான சமூகம் அமைய வழி வகுக்கும்…..                

ஊடகத்துறையில் பார்ப்பன ஆதிக்கம்

இந்தியாவின் ஊடகத்துறையில் முன்னணியில் உள்ள 315 மூத்தபத்திரிகை யாளர்களிடம் 2006 ல் ஒரு சர்வே நடத்தப்பட்டது. நமக்கு எந்தச் செய்தி வர வேண்டும், இன்று தொலைக் காட்சிகளில் எந்தச் செய்தி விவாதிக்கப்பட வேண்டும் என்பதை நிர்ணயிப் பவர்கள் இந்த மூத்த பத்திரிக்கையாளர்கள். ஆங்கில, இந்தி மொழிகளில் வெளியாகும் அச்சு, காட்சி, இணையதளம் என அனைத்து துறைசார்ந்தும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

Centre for the Study of Developing Societies (CSDS) என்ற புது டில்லியில் உள்ள நிறுவனம் பேராசிரியர் யோகேந்திர யாதவ் தலைமையில் இந்த ஆய்வை நடத்தியது. பேராசிரியர் யோகேந்திரா அவர்கள் University Grants Commission and   National Advisory Council (NAC) on Right to Education Act (RTE)  போன்றவற்றில் பணியாற்றியவர்.

பார்ப்பனஉயர்ஜாதி OBC SC/ST Muslims Cristians

88 %     4% 0% 3% 2.3%

Source: CSDS, The Hindu 05.06.2006

இந்த ஆய்வில் மக்கள் தொகையில் 5 சதவீதம் மட்டும் உள்ள பார்ப்பனர்கள் 49 சதவீதம் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.  ராஜ்புத்திரர், காயஸ்தா போன்ற ஆதிக்க ஜாதிகளையும் சேர்த்து 88 சதவீதம் உள்ளனர். குறிப்பாக ஆங்கில செய்தி ஊடகங்களில் பிற்படுத்தப்பட்டவர்கள் வெறும் 1 சதவீதம் தான் இருக்கின்றனர். தாழ்த்தப்பட்டவர்கள் அதுவும் இல்லை.

இந்தியாவின் அரசியல், பொருளாதாரம், அரசு நிர்வாகம், நீதித்துறை, ஊடகத்துறை, வங்கித்துறை என அனைத்திலும் இந்த 2016 ஆம் ஆண்டிலும் பார்ப்பனர்கள் தான் ஆதிக்கச் சக்திகளாக இருக்கிறார்கள் என்பதை ஆதாரங்களுடன் விளக்கிள்ளோம். இன்னும் அணுசக்தித்துறை, இராணுவம், அறிவியல் ஆராய்ச்சித் துறை போன்ற பல துறைகள் முற்றிலும் பார்ப்பன மயமாகவே உள்ளன.

பிற்படுத்தப்பட்டவர்கள் தங்களது எதிரிகளாகத் தாழ்த்தப் பட்டவர்களைக் கருதுவதும், தாழ்த்தப்பட்டவர்கள் தங்களது எதிரிகளாகப் பிற்படுத்தப்பட்டவரைக் கருதுவதும் - அதன் அடிப்படையில் நாமே ஒருவருக்கொருவார் மோதிக் கொண்டு இருப்பதும் தொடரும் வரை இந்தப் பார்ப்பன ஆதிக்கத்துக்கு முடிவே கிடையாது.

Pin It