அடுத்தடுத்த இரண்டு படங்கள் எப்போதுமே மனதுக்குள் சித்திரம் தீட்டுபவை. கண்களை அகல திறப்பவை.
ஒன்று ஜந்தாவது படிக்கையில் பார்த்த "கிழக்கு வாசல்". இன்னொன்று ஆறாவது படிக்கையில் பார்த்த "மருது பாண்டி". இரண்டு படங்களுமே மனதுக்கு நெருக்கமான படங்கள். இனம் புரியாத தவிப்பும் சந்தோஷமும் இரண்டிலுமே நான் உணர்ந்திருக்கிறேன். அதில் நடித்த நாயகர்கள் கார்த்திக் ராம்கி இருவரையும் இன்று வரை பிடிக்க காரணமாக இருக்கிறது என்றால்... அது இந்த படங்களின் தாக்கம் என்று தான் நினைக்கிறேன். ஆக்கம் அத்தனை சிறப்பு என்று தான் சொல்ல முடியும். ஏதோ ஒரு வகையில் இரண்டு படங்களிலும் என் பால்யம் திரையை ஒட்டி அகன்ற மனதோடு நிற்பதை இப்போதும் ரசித்து பார்க்கிறேன்.
அடிக்கடி இந்த படங்களை பார்ப்பது உண்டென்றாலும்.. சமீபத்தில் பார்த்த போது படத்திற்குள் பேச பட்ட சமூக சமமின்மை.. மேட்டுக்குடி வர்க்கத்தின் அடாவடி... ஆண்டை மனப்பான்மையின் அநியாய வெளிப்பாடு... பொருளாதாரத்தில் கீழே இருப்பவனை அடிமையாகவே வைத்திருக்க வேண்டிய அதிகார வர்க்கத்தின் கட்டாயம்... பெண்ணடிமை... சாதி வன்முறை... அடக்குமுறை... என்று காதலின் வழியே ஆரம்பிக்கும் கதை.... மேற்சொன்ன பல அத்தியாயங்களை தொட்டு விட்டு செல்வதை உணர்ந்தேன்.
கிழக்கு வாசல்.... படத்தில்... கூத்து கட்டி வாழும் பொன்னுரங்கம்.... கள்ளம் கபடமற்ற காட்டாறு மாதிரி. அவன் போக்கில் பாடி ஆடிக் கொண்டிருப்பவனை... வம்படியாக இழுத்து காதல் பேசி... ஆசையை ஊட்டி... வீட்டில் வந்து பெண் கேள் என்று சொல்லும் மேட்டுக்குடி இளைஞி... செல்வி. அவளுக்கும் அங்கே நிலவும் சாதி சாமி பாகுபாடு பெரிதாக தெரிவதில்லை. விளைவு... பெண் கேட்டு சென்ற பொன்னுரங்கத்தின் அம்மா அடிபட்டு அவமானப்பட்டு.. கூனி குறுகி வெட்கப்பட்டு வேதனைப்பட்டு செத்தே போவது. விஷயம் அறிந்து பொன்னுரங்கம் சண்டைக்கு சென்று பெரிய மனுசன் வள்ளியூரானிடம் நியாயம் கேட்கும் இடமெல்லாம் மனதை பிழிந்து மானுடம் கூச செய்யும். அடிமட்ட மனிதனின் உயிர் ஒரு பொருட்டே அல்ல. அது ஒரு சம்பவம் மட்டுமே என்று கடந்து செல்ல விளிம்பு நிலை மனிதன் பழகிக் கொள்ள வேண்டும். எந்த வகையில் எதிர்த்தாலும்... அவர்கள் அடி வயிற்றில் கை வைப்பார்கள் என்பது எத்தனை பெரிய அகங்காரம். அதிகாரம்.
தன் போக்கில் இருந்த ஓர் எளிய வாழ்வு... தாயை பறிகொடுத்து... காதலையும் விட்டு விட்டு..." பாடி பறந்த கிளி... பாதை மறந்ததடி....பூ மானே" என்று செல்வியின் திருமணத்துக்கே சென்று கூத்து கட்டும் நிலைக்கு செல்கிறது. விரோதி வீட்டில் கூட கூத்து கட்டும் அறம்... எளிய மனிதனின் தரம்.
அதே கதையோட்டத்தில் ஊருக்குள் இன்னொரு பெரிய மனுஷருக்கு அந்தப்புர நாயகியாக கட்டாயப்படுத்தி வைத்திருக்கும் இன்னொரு நாயகி தாயம்மா. தான் எடுத்து வளர்த்த அநாதை பெண் தாயம்மாவை... ஒரு கால கட்டத்துக்கு பின் சொந்தமாக்கி கொள்ள பெரிய மனுஷன் எடுக்கும் காம அவதாரத்தை அடக்கி ஒடுக்க மீண்டும் பொன்னுரங்கம் ஒரு நிகழ் கூத்து நடத்த வேண்டி இருக்கிறது. எந்த காதலில் சோர்ந்தானோ... அதே காதலில் மீண்டும் எழுந்து வேறொரு அர்த்தம் கண்டெடுத்து தன் வாழ்வுக்கு மட்டுமல்ல தாயம்மா வாழ்வுக்கும் நம்பிக்கை சூட்டுகிறான். தாயம்மா ஒரு தெய்வ பதுமை. அவள் தேவை எல்லாம் பெண் விடுதலை. சிந்தனை சுதந்திரம். தன் உடல் தன் விருப்பம் என்ற ஓர் இயல்பான எண்ணம். எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மேட்டுக்குடி பண்ணையாரிடம் இருந்து தாயம்மாவை பொன்னுரங்கம் எப்படி காப்பாற்றுகிறான் என்பது தான் மீதி கதை.
மருதுபாண்டி அம்மாபட்டிக்கே காவல்காரன். அவனை தேடி வரும் சி ஐ டி போலீஸ் ஆக ஒரு கூத்தாடும் பெண். அவள் நயிச்சியமாக ஊருக்குள் வந்து மெல்ல மெல்ல மருதுபாண்டி யார் என்பதை கண்டு பிடிக்கிறாள். இதற்கிடையே கோயில் தூணில் காலில் சங்கிலியோடு கட்டி போடப்பட்டிருக்கும் பைத்தியக்கார வயித்துப்புள்ளைக்காரி. அவளுக்கும் மருது பாண்டிக்கும் என்ன தொடர்பு... அவன் வாழ்வில் நடந்த சம்பவங்கள் என்ன என்று திரைக்கதை திருப்புக்காட்சியில் மிக நேர்த்தியாக நகரும்.
ஜாமீன்தார் வீட்டு பெண் கவிதாவுடனான காதல்... நெசவு தொழில் செய்யும் மருதுபாண்டியை உருக்குலைத்து கொலைகாரனாகவே மாற்றி விடுவதுதான் மருது பாண்டியின் கதை. நான் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்று எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்.... என்பதை இன்னொரு முறை மருது பாண்டி இறுதிக்காட்சியில் எடுக்கும் ஆயுதத்தில் அழுத்தமாக பதிகிறது.
மருது பாண்டியை நினைத்த மனதில் எவனுக்கும் இடமில்லை என்று கவிதா எடுக்கும் முடிவு.. அந்த நெருப்பின் மீது நின்று "பாடி பாடி அழைத்தேன்.. ஒரு பார்த்த ராகம் இசைத்தேன்" என்று மருது பாண்டி பாடும் பாடல்... காதலின் வலியை தீ மூட்டி காட்டும். மருது பாண்டியை பழி வாங்க அவன் தங்கைக்கு நடக்கும் கொடூரம்... அவனை கொலைகாரனாக்கி தலைமறைவு வாழ்வை வாழ செய்யும் சூழல் என்று விரட்டி விரட்டி அடிக்கும் அதிகாரத்தின் கோர பிடி..ஆணவத்தின் கட்டம். அது அதிகாரத்தின் பக்கம் தன்னை தீர்க்கமாக நிலைநிறுத்தி கால காலத்துக்கும் தர்க்கம் சேர்த்து கொண்டே இருக்கிறது. ஆனாலும் மருதுபாண்டிகள்.... தங்கள் எதிர்வினையை காட்டிக் கொண்டே தான் இருப்பார்கள்.
அம்மாபேட்டையில் எடுத்த படம். அந்த ஏரியும்... கரையை ஒட்டி இருக்கும் அந்த கோயிலும் எனக்கு நெருங்கிய பால்யம்.
காதல் தான் இந்த இரண்டு படங்களின் அடிநாதம் என்றாலும்...திரைக்கதை பேசிய பொருள்கள் இன்றைய காலத்துக்கும் தேவையான ஒன்றாகவே இருக்கிறது. ஏழை காதலன் பணக்கார காதலி என்ற பழைய வட்டம் தான் என்றாலும்.. அது சுழன்ற இடம் சமூகம் என்ற வடிவம் என்பதில் ஐயமில்லை. அதிகாரமும் அந்தகாரமும் சூழ்ந்து விட்டால்.. இல்லாதவன் என்ன ஆவான் என்பது தான் இரண்டு படங்களின் கதையின் வாயிலாக நாம் அறிந்து கொள்வது. இரண்டு படங்களிலுமே பறை ஓர் ஆயுதமாக வெளிப்படுவது இசையின் மகத்துவம்.
அற்புதமான திரைக்கதையைக் கொண்ட இரண்டு கதைகளும் படமாக்கப்பட்டதில்.... ஆங்காங்கே குறைகள் இருந்தாலும்.. இப்போதும் மனதுக்கு இனிமையான படங்கள் தான். அந்த பக்கம் கார்த்திக் ரேவதி... இந்த பக்கம் ராம்கி நிரோஷா ஜோடி... கண்கள் நிறையும் காம்பினேஷன். அந்த பக்கம் குஷ்பூ.. இந்த பக்கம் சீதா என்று சிக்கனமான திரைக்கதை உத்திகள். பாடல் இரண்டுக்குமே இசை ராஜா. எங்கு என்ன தேவையோ அங்கு தன் வித்தைகளை காட்டி விட்ட ராஜபோகம் தான் இரண்டு படங்களிலும்.
காதல்... பாசம்... தனிமை... வெறுமை.... கோபம்... அன்பு... நட்பு... துரோகம்.. விரோதம்... இயலாமை.. அதிகாரம்... ஆணவம்... மேட்டுக்குடி மேட்டிமை... பொருளாதாரத்தில் கீழே இருப்பவனின் தவிப்பு... என்று எல்லாமும் கலந்து கட்டி நிற்கும் திரைக்கதையில்... இடையே சமூகம் ஒரு வேடிக்கை மனமாக நிற்பது என்று இரண்டு படங்களுமே அதிகார சுரண்டலுக்கு எதிராக இருந்த கதைகள் என்று தான் நான் புரிந்து கொள்கிறேன்.
உங்க ஊரே வேண்டாம் என்று தாயம்மாவை கூட்டிக்கொண்டு நெடுந்தொலைவு நோக்கி செல்லும் பொன்னுரங்கம்...ஆகட்டும்..... வேற வழியே இல்லை.. களை எடுத்தல் கால கட்டாயம் என்று தங்கையை சிதைத்த கொடூரன் ஜமீன் திமிரை தலை எடுத்து விட்டு சிறைக்கு செல்லும் மருது பாண்டியாகட்டும்... கால குறியீடுகளாக தான் இருக்கிறார்கள். இந்த டெக்னாலஜி உலகில்...சுதந்திர இந்தியாவில் இன்னமும் ஊர் ஊருக்கு நடக்கும் சாதி மயிறு சம்பவங்கள் சாமி மயிறு சம்பவங்களின் வாயிலாக... இந்த கதைகள் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கின்றன. என்ன நடந்தாலும்.. காதல் எனும் ஆயுதம் இங்கே அநியாயங்களை கேள்வி கேட்டுக் கொண்டே தான் இருக்கும் என்பது தான் இந்த கதைகளின் நீட்சி....
கிழக்கு வாசல்- R.V உதயகுமார்
மருதுபாண்டி - மனோஜ்குமார்
- கவிஜி