item songமனதுக்கு நெருக்கமான எத்தனை படங்கள்.. எத்தனை பாடல்கள்... எத்தனை நாயகர்கள்... நாயகிகள்... காமெடியன்கள்... ஆட்டக்காரர்கள்.

மெல்ல பின்னோக்கிய சிந்தனையில் அது ஒரு கனவுக் காட்சியைப் போல விரிந்து கொண்டே செல்கிறது. கனவுகளில் வண்ணம் இருக்காது என்பது அறிவியல். ஆனால் இந்த வண்ணக் கனவுகளின் நிழல் காணும் காட்சிகள் அத்தனையுமே... நிறங்களாலும்... வரங்களாலும் சூழப்பட்ட பிலிம் ரோல்கள்.

ஒரு நிதானத்தோடு வெளிவந்த சினிமாக்கள் தங்களின் சாயங்களைச் சேர்க்கவோ பூக்கவோ கண்டைந்திருந்தன. மூன்றாம் கண்ணில் ஓடிக் கொண்டே இருக்கும் திரைப்படங்களை மறக்க முடியாத தருணத்தில்தான் சினிமாவின் சந்து பொந்துகளைத் தேடத் தோன்றியது.

"இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்த சினிமாதான்... நம்ம எம் ஜி ஆர் வந்ததும் என் டி ஆர் வந்ததும் இந்த சினிமாதான்..." ஆனால் அதே நேரம்... வந்து வந்து போனவர்கள்... வந்தவுடன் போனவர்கள்... வரும் போதே போனவர்கள் எத்தனையோ பேர். சினிமா ஒரு பக்கம் மலை உச்சியினாலும்... மறுபக்கம்... பள்ளத்தாக்காலும் உருவானவை.

ஜாம்பவான்கள் சரிந்த கதையும் உண்டு. சல்லிகள் ஜெயித்த கதையும் உண்டு.

பெரும்பாலையப் படங்களில் வரும் ஐட்டம் டேன்ஸ் பெரும்பாலான ரசிகர்களுக்கு விருப்பம் தான். ஆனால்.. அந்த பாடல்களுக்கு ஆடுவோர்களின் சினிமா எத்தகையது... அவர்களுக்கு சினிமா என்ன தருகிறது என்று யோசிக்கிறேன். ஐட்டம் பாடல் - கவர்ச்சி பாடல்... என்று படத்தில் இடையே எங்கோ அல்லது இறுதிக் காட்சிக்கு முந்திய காட்சியில்... இப்படி வரும் பாடல்களில்... உதாரணத்துக்கு... சில்க் ஸ்மிதா... டிஸ்கொ சாந்தி... அனுராதா... இன்னும் இவர்கள் போல இருப்போர்களை... பார்க்கும் போது நன்றாக இருக்கும்.

கிளர்ச்சி தானாக எழும். ஆனால் இவர்கள் வயதான பிறகு... இன்னமும் சொல்லப் போனால்... கொஞ்சம் கூட கூடாத இடங்களில் சதை கூடி... அல்லது தளரக் கூடாத இடங்களில் சதை தளர்ந்து... ஒதுக்கப்பட்ட பிறகு... வருமானத்துக்கு என்ன செய்வார்கள் என்று யோசித்ததுண்டு.

பெரிய பெரிய ஹீரோக்களே சினிமாவில் ஒரு கட்டத்துக்கு மேல் - வயதுக்கு மேல் காலம் தள்ள முடியாமல்.. வேறு தொழிலுக்கோ... சீரியலுக்கோ சென்று விடும் போது இந்த மாதிரி கவர்ச்சி ஆட்டம் போட்டவர்கள்.. போடுபவர்கள்... என்ன ஆவார்கள் என்று யோசிக்கிறேன்.

ஒரு கணிசமான பேங்க் பேலன்ஸோடு ரிட்டைர்மென்ட் ஆனவர்களாக... ஆகிறவர்களாக அவர்கள் தெரியவில்லை. பெரும்பாலும்... குடும்பத்தை நம்பித்தான் இருக்க வேண்டிய சூழல். "நிலா அது வானத்து மேல" -'குயிலி' போன்றோர்கள் சீரியலில் அழ வேண்டி இருக்கிறது.

சில்க் தனது 36 வது வயதில் தற்கொலைச் செய்து கொண்டது உலகம் அறிந்த செய்தி. ஒருவேளை அவர் இன்று இருந்திருந்தால்... அவருக்கான இடம் எதுவாக இருந்திருக்கும். எங்கோ உயரத்தில் இருந்திருப்பாரா... இல்லை... முதுமை கண்டு வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்திருப்பாரா. டிவி ஷோக்களில் ஜட்ஜ் ஆக கூட இருந்திருக்கலாம்.

'டிஸ்கொ சாந்தி' " தத்தோம் தலாங்கு தத்தோம்..." கமலோடு ஆடிய ஆட்டத்துக்கு இன்றும் சுதி ஏறும். மினுமினுக்கும் மிகு புன்னகையில் கண்கள் சொருகும் சகலகலாவும்... அந்த ஒரு பாடலில் இருப்பதாக தோன்றுகிறது. முன்னணி நட்சத்திரங்களோடு எத்தனை எத்தனை பாடல்கள். 'சில்க் ஸ்மிதா'... "பே...சக் கூடா...து... வெறும் பேச்சில் இல்லை... சுகம்..." ரஜினியோடு ஆடி பாடியப் பாட்டுக்கு பதிலிகள் ஒருபோதும் கிடையாது. டிஸ்கொ சாந்தி "ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி... அம்மணி..." ரஜினியோடு ஆடி சேர்ந்த கூட்டுக்கு... முடிவிலி கிடையாது.

அத்தனை பெரிய உடம்பை வைத்துக் கொண்டு "இது ரோசா பூ... கொஞ்சம் லேசா நீவு..." உள்பட "அனுராதா" ஆடிய எத்தனையோ பாடல்களை அந்த பாடல்களுக்காகவே கூட்டம் ரசித்திருக்கிறது. சிறுவனாக இருந்தாலும் கூட்டத்தில் ஒருவனாக இருந்ததை கலைக் கண்ணோடு தான் நினைவு கூறுகிறேன். அவரது மகள் "அபிநயஸ்ரீ" கூட சில படங்களில் அபிநயம் பிடித்தார். ஆலாபனை தொடரவில்லை என்று தான் நினைக்கிறேன்.

"ரகசியா" என்றொரு அழகி "ஆசை தோசை அப்பள வடை" என்று அஜித்தோடு போட்ட ஆட்டம். அவரே... "சிரிச்சி சிரிச்சு வந்தா சீனா தானா டோய்" என்று கமலோடு போட்ட ஆட்டம். இரண்டிலுமே... சிற்பம் ஆடும் கலையை நிகழ்த்தி இருப்பார்.

"என் பேரு மீனா... குமாரி..." 'முமைத்கான்' நீரில்லாமல் முத்து குளிப்பார்... "கந்தசாமி" சற்று நேரத்தில் அடித்து நொறுக்க இருக்கும் பேருந்தில்.

"பூவாட்டம் காயாட்டம் கன்னி தோட்டம்..." விசித்ரா... சித்திர வேலைப்பாடு தான்... சீனில் வந்தாலே.

கவுண்டமணியோடு ஜோடியாய் கொஞ்ச படங்களில் நடித்து அவ்வப்போது ஆடவும் செய்த "ஷர்மிலி" 'செம்பா நாத்து சார காத்து தான்'.

"கொக்கு சைவ கொக்கு" 'ஜோதி லட்சுமி'... பிறகு அவர் சகோதிரி 'ஜெயமாலினி' மற்றும் மகள் 'ஜோதி மீனா'

இன்னும் பல பாட்டுகளில் ஆடியவர்கள் என்று இவர்களின் பட்டியலும் பெருசு தான். உள்ளிருந்து இயக்கும் சினிமா ஆசை.. சினிமா புகழ்.. சினிமா பேஸ்ஸன்... பணம் என்று எது வேண்டுமானாலும் இருக்கலாம்.

வாழ்வின் காலம் சினிமாவில் இவர்களை ஆட வைத்திருக்கிறது. வைக்கிறது. குறிப்பிட்ட சிலரைத் தவிர பெரிதாக வருமானமும் இல்லை என்று தான் நினைக்கிறேன். இந்த மாதிரி ஐட்டம் டேன்சர்களின் எதிர்காலம் என்னவாகிறது. அவர்கள் தொடர்ந்து சினிமாவிலும் இல்லாமல்.. சினிமா இல்லாமலும் இருப்பது... எத்தனை சாத்தியம் என்று தெரியவில்லை.

சினிமாவில் மட்டும் தான் கடவுளுக்கும் பேய் பிடிக்கும் சாத்தியம் நடக்கும். சினிமா சிலருக்கு மலை உச்சி. பலருக்கு பாதாளம். இடையே சிறு சிறு குன்றுகள்.. காலடிகள்.. ஆசுவாசங்கள்... ஆசைகள்... பெருமூச்சுகள்... சிற்றின்பங்கள்... என்று சுற்றிலும்.. தானியங்கி தத்துவங்கள் தான் அதிகம். அதில் இந்த ஐட்டம் டேன்சர்களின் முதுமைக்கு என்ன விலை. அவர்களின் வாழ்வாதாரம்... எதைச் சுற்றி இருக்கும்.

ஓரிரு பாடல்களுக்கு வந்து போனவர்கள் பற்றிய பார்வை இல்லை இது. தொடர்ந்து கணிசமான பாடல்கள் மூலம் தனக்கென்று ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டவர்கள் பற்றி தான்... ஒவ்வொரு பாராவும்.

சிறு சிறு காமெடி கதாபாத்திரங்களில் நடித்த பலரது முதுமை துயரம் வாய்ந்தவையாகவே இருந்து வருவதைக் காண்கிறோம். சமீபத்தில் "பிந்து கோஷ்" -ன் பேட்டி சிறு உதாரணம். வாய்ப்பில்லாத போது வேறு வழி இன்றி அரசியலுக்கும் இவர்கள் செல்வது... அடிப்படையையே கேள்விக் கேட்க வைக்கிறது.

வாய்ப்பிருக்கும் போதே கிறுக்கு பிடித்து அரசியலுக்கு சென்று வாய்ப்பை நழுவ விட்டவர்கள் கதை வேறு.

தெரிந்தோ தெரியாமலோ நம் வாழ்வின் ஒரு அங்கம் தான் சினிமா. (இல்லை என்ற வாதம் தனி எபிசோட்) எதற்கு இத்தனை முக்கியத்துவம் தந்து இதையெல்லாம் பேசுகிறோம் எழுதுகிறோம் என்றால்... வெரி சிம்பிள். சினிமா பிடிக்கும்.

ஆதலால் சினிமா மனிதர்களையும் பிடிக்கிறது. சினிமா என்பது கூட்டு முயற்சி தானே. நமது எல்லா கொண்டாட்டங்களும் சினிமாவை சார்ந்தேதான் இருக்கிறது. நம்மை மகிழ்விக்கும் கலைஞர்கள் தான் இந்த டேன்சர்களும். ஆக, கிட்டத்தட்ட சினிமா பற்றிய ஆராய்ச்சி போல தான்... இதெல்லாம். அதில் ஒரு பகுதி தான்... ஐட்டம் டேன்சர்களின் அடுத்த கட்ட வாழ்வை அவர்கள் எப்படி அமைத்துக் கொள்கிறார்கள் என்கின்ற ஆர்வம்.

டேன்சர்ஸ் என்று பேசுகையில்... ஃபைட்டர்ஸ்ம் அதில் சேர்ந்து விடுகிறார்கள். சமீபத்திய "பொன்னம்பலம்"... வீடியோ... அதற்கு உதாரணம். ஆக, வலிந்தோர்களை விட மெலிந்தோர்கள் நிறைந்த தொழில் தான் சினிமாவா.

சினிமா என்றொரு தத்துவத்தில் நம்மைப் போன்ற ரசிகர்கள் கண்டடைவது என்ன. நம்மில் இருக்கும்... படைப்பாளிகள்... காண இருப்பது என்ன. சினிமா ஒரு பொழுது போக்கு மீடியா என்ற பொருளில் ரசிகனுக்கு அறிமுகம் ஆகி இருக்கலாம். ஆனால்... அது அந்த வட்டத்துக்குள் மட்டும் இல்லை என்பது தான் நிஜம்.

சினிமா என்பது கனவு தொழிற்சாலை தான். ஆனாலும் மனித உழைப்பின்றி அங்கும் ஒன்றும் இல்லை என்பது தானே உண்மை. அந்த உழைத்து களைத்த மனிதர்களுக்கு முதுமையில் சினிமா சமூகம் தரும் உத்திரவாதம் என்ன..!

கலைக்கு கண்டிப்பாக வாழ்விருக்கிறது. இந்த மாதிரி கலைஞர்களுக்கு..?

- கவிஜி

Pin It