the maidசில கதைகளுக்கு கிளைமாக்ஸ் தன் போக்கில் அமைந்து விடும். அப்படி நிறுத்தி நிதானமாக அடித்தாடும் இறுதிக்காட்சி தான்... இந்தப்படத்தின் முழுமை. அன்பின் ஆழமான தேவைக்கு ஆசுவாசம் ஒருபோதும் இருப்பதில்லை. அது அமைதியற்று தேடிக் கொண்டே தான் இருக்கும். வேறு வழியில்லாத போது பேய் பிடித்தும் ஆடும்.

ஊரில் உள்ள ஒரு பெரிய வீட்டுக்கு வேலைக்காரியாகச் செல்கிறாள் ஜாய் என்ற இளைஞி.

ஜப்பான் பொம்மை மாதிரி இருக்கும் அவள் எப்போதும் உள்ளே எதையோ சுமக்கும்.. மென் சோகத்தோடு இருப்பது நமக்குள் ஆரம்பம் முதலே எதையோ ஆராய செய்து விடுகிறது. அந்த வீட்டில் ஒரு பணக்கார ஜோடி. அவர்களுக்கு ஒரு குழந்தை. இரண்டு வேலைக்காரிகள் மற்றும் ஒரு டிரைவர்.

அத்தனை பெரிய பங்களாவில் இவர்கள் மட்டும் தான். இவர்களோடு புதிதாக ஜாய். நேர்காணல் நடக்கிறது. இனிய தருணம் ஜாய் முகத்தில். எஜமானி முகத்தில் அழகு ததும்பினாலும்.. அகத்தில் ஆணவத் ததும்பல். அவளுக்கும் கணவனுக்கும் அவ்வளவாக ஒத்து போவதில்லை... என்று வந்த அன்றே கூட ஜாயால் புரிந்து கொள்ள முடிகிறது.

"தானுண்டு தான் வேலையுண்டு... என்று இருக்க வேண்டும்... எவர் விஷயத்திலும் தலையிடக் கூடாது" என்ற எச்சரிக்கையோடு தான்... நாளையில் இருந்து வேளைக்கு சேர உத்தரவு. ஆனால் இன்று இரவே தங்கி இருக்கும் கெஸ்ட் ஹவுசில் பல வகையான அமானுஷ்யங்கள் போட்டுத் தாக்குகிறது. ஜாய் மிரண்டு அலறுகிறாள். அந்த வீட்டில் எதுவோ சரி இல்லை என்று புரிகிறது. ஆனாலும் வேலை முக்கியம் அவளுக்கு.

அடுத்த நாள் வேலைக்கு சேர்ந்து விடுகிறாள். அந்த குழந்தைக்கு கூட உடல் நிலை சரி இல்லை... கொஞ்சம் மனநிலையும் சரி இல்லை என்று மூத்த வேலைக்காரியால் அறிமுகம் செய்யப்படுகிறது. அறை சுவற்றிலெல்லாம் அந்த குழந்தை கிறுக்கிய பொம்மைகளும்... கோட்டோவியங்களும். எல்லாமே ஏதோவொரு குறியீட்டைக் கொண்டிருக்கிறது என்று புரிகிறது.

அது என்னவோ சொல்ல வருகிறது. ஒரு மீடியம் போல நமக்கு உணர்த்தப்படுகிறது. அந்த அறையிலும் ஒரு உருவத்தை அவள் காண நேரிட... பயந்து அலறி.. கத்தி... சத்தமிட்டு... மற்றவர்களிடம் சொல்ல...'எல்லாம் உன் கற்பனை' என்று வழக்கம் போல தட்டி கழிக்கப்படுகிறது.

ஜாய்க்கு கியூரியாசிட்டி அதிகமாகிறது.

ஜாயை கிண்டல் செய்யும் வேலைக்காரிகள்... எப்போதும் அலட்சியப்படுத்தும் எஜமானி... அந்த வீட்டில் ஆங்காங்கே தென்படும் அந்த அமானுஷ்ய உருவம் என்று ஜாயின் ஒவ்வொரு நாளும்.. முக்கோணத்தில் மாட்டிக் கொண்ட காலத்தைக் கொண்டிருக்கிறது. அவள் எதையோ தேடி அலைய ஆரம்பிக்கிறாள்.

நாட்கள் நகர... கொஞ்சம் கொஞ்சமாக சக வேலைக்காரியிடம் மெல்ல பேசி பேசி... 'முன்னாள் வேலைக்காரிக்கு என்ன தான் ஆச்சு...?' என்று துருவுகிறாள். அதே நேரம்... அந்தக் குழந்தையிடமும் நன்றாக நெருங்கி பழக ஆரம்பித்து விடுகிறாள். அம்மா அப்பாவின் கவனத்தில் பெரிதும் இல்லாத அந்தக் குழந்தைக்கு ஜாயைப் பிடித்து விடுகிறது.

"அம்மா என்னை எங்குமே அழைத்து போக மாட்டாள்... வீட்டுக்குள்ளேயே தான் இருப்பேன்" என்று தன் சோகத்தை தன்னளவில் வெளிப்படுத்துகிறது. ஆனாலும் அந்த உருவத்தை தான் பார்ப்பதாக... தன்னிடம் அந்த உருவம் பேசுவதாக கூறுகிறது. அந்த பங்களாவில் ஏதோ மர்மம் இருப்பதை உணர்ந்து கொள்ளும் ஜாய்... இன்னும் கூர்ந்து தேட ஆரம்பிக்கிறாள்.

கணவனோடு சண்டையிடும் போதெல்லாம் கத்தி கூச்சலிட்டு அறையை விட்டு வேலைக்காரிகளை வெளியேற சொல்கிறாள்... எஜமானி. எஜமானிக்கும் கணவனுக்குமான இடைவெளியை... ஏதோ ஒரு மர்மம் அதிகமாக்கிக் கொண்டே செல்கிறது. அந்த பங்களாவில் அலையும் மௌனம் பெருந்துயரை சுமந்தலைவதை ஜாய் உணர்கிறாள்.

தொடர் நச்சரிப்பில்... ஒரு கட்டத்தில்... சக வேலைக்காரி ஜாய்க்கு முன் வேலை செய்த வேலைக்காரி பற்றி பேச ஆரம்பிக்கிறாள்.

எஜமானுக்கு எப்போதும் வேலைதான் குறிக்கோள். எஜமானி மீது பெரிதாக ஈடுபாடு இல்லை. அது மட்டுமல்ல. இந்த சொத்தெல்லாம் மனைவியின் சொத்து என்ற ஈகோவினால் மனைவியோடு அவனுக்கு நெருக்கமோ இணக்கமோ இல்லை. அவளும் கணவன் மீது அதிகாரம் செலுத்துபவளாகத்தான் இருக்கிறாள். அந்த தனிமையில் இருக்கும் எஜமானியை தன் கவனிப்பால்... அன்பால்... நேசிப்பால் சமாதானப் படுத்துகிறாள்... அந்த முன்னாள் வேலைக்காரி 'ப்லாய்'.

"என்ன இருந்து என்ன பிரயோஜனம். என்னை நேசிக்க யாரும் இல்லையே" என்று புலம்பும் எஜமானியிடம்.. "இந்த வீட்டில் இருக்கும் எல்லாரும் உங்களை நேசிக்கிறோம். நான் கூட உங்களை நேசிக்கிறேன்" என்று... கனிவாலும்... உணர்வாலும்... எஜமானியை ஆசுவாசப்படுத்தி கண்கள் நிரம்ப பார்க்கிறாள் ப்லாய். நான்கு கண்களும் ஒன்றையொன்று ஈர்க்க அவர்களுள் காதல் பூக்கிறது.

எப்போதும் ஒன்றாகவே தான் இருக்கிறார்கள். எஜமானியின் முகத்தில் புன்னகையும் அன்பும் தவழுகிறது. இருவரும் கொண்ட கார் பயணங்களில் எல்லாம் ரசனை கூடுகிறது.

அதே காலகட்டத்தில்... எஜமானுக்கும் ப்லாய் மீது காதல் வருகிறது. திரைக்கதை சூடு பறக்கும் இடம் இது. முக்கோண காதலில்... அந்த பங்களா திக்கு முக்காடுகிறது.

மனைவிக்கும் வேலைக்காரி மீது காதல். கணவனுக்கும் வேலைக்காரி மீது காதல். கணவன் மனைவி இருவரையும் காதலிக்கும் அழகி ப்லாய் - டம்... பேரன்பு கொட்டிக் கிடக்கிறது. புரியாத சக வேலைக்காரிகள் புறம் பேசி என்ன நடக்கிறது என்று கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். காதல் இன்னும் நெருக்கமாகிறது.

மூத்த வேலைக்காரி திடும்மென சமையலறைக்குள் வந்து விட 'எனக்கு அவளோதான் தெரியும்" என்று இத்தனை நேரம் சொல்லிக் கொண்டிருந்த சக வேலைக்காரி கழன்று கொள்கிறாள்.

எல்லாவற்றுக்கும் துணை போகும் சொன்னதை செய்பவர்கள்... மிக மிக ஆபத்தானவர்கள். விட்ட கைகள் நடுங்கி நிதானிக்கும் முன் புறப்பட்ட அம்பு குத்தி கொன்று விடும். எல்லாரும் சேர்ந்து எல்லாம் மறைத்தாலும்... ஒருவருக்கு தெரிந்த எந்தவொரு ரகசியத்தையும் ஒருபோதும் மறைக்க இயலாது. அது மெல்லப் புகைந்து புகைந்து நெருப்பைக் காட்டி கொடுத்து விடும்.

ராஜ வாழ்க்கை வாழும் எஜமானியின் தனிமைக்குள் ப்லாய்- ன் அழகு... ஒரு தேவதையின் இடத்தைக் கொண்டிருக்கிறது. பிறகு அதே தேவதை தன் கணவனுக்கும் காதலி ஆகும் போது எஜமானியின் கண்களில் தெரியும்... மானுட வஞ்சம்... அச்சமூட்டுபவை. அது தொடர்ந்து ஒரு சாவை அரங்கேற்றிக் கொண்டே இருக்கிறது. சாவின் தூரங்கள்... முதல்முறை தான் நெருங்க தயங்குபவை. பிறகு வழக்கம் போல ஆகி விடும்.. வடிவமற்ற சமையல் போலத்தான்.

இடையிடையே ஜாய்க்கு மனநல ஆலோசனை நடக்கும் காட்சிகளும் காட்டப்படுகின்றன.

என்ன நடக்கிறது என்று நாம் சுதாரித்துக் கொண்டு கண்களைத் தேய்த்துக் கொள்கையில்... ஜாய் எதைத் தேடினாள். தேடியது கிடைத்ததா... ஏன் இத்தனை கியூரியாசிட்டி... அந்த முன்னாள் வேலைக்காரி - ப்லாய் என்ன ஆனாள்... மூவருக்கும் இடையேயான காதல் என்னானது... வீட்டில் இருக்கும் அமானுஷயம் என்ன... அந்த குழந்தை கண்ணுக்குத் தெரியும் உருவம் யாருடையது... என்று அடுத்தடுத்து ஒவ்வொரு கண்ணியாக விலகும் போது மானுட ஆழம் தன் தேவையொட்டி... சுயமொட்டி எத்தனை துல்லியமாக வெளிப்படுகிறது என்று உணர முடிகிறது. எதிர்பக்கம் நின்று நிகழ்த்த வேண்டிய தேவையேயில்லை. நம் பக்கம் நின்றும் தானாக நிகழ்வதை விட்டு விட முடியும்.

பிலாய் வரும் காட்சியெல்லாம் பொக்கிஷம். நீள் செவ்வக முகத்தில்... ஹைக்கூக்கள் காண்கிறேன். அவன் கையில் மது கோப்பை. பிலாய் கையில் தேனீர் கோப்பை. அவள் கையிலோ காலம். ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான நீரோடையில் நகரும் நிலவைப் போல ஜாய். அத்தனை தெளிவாக திரைக்கதையை இழுத்துக் கொண்டு முன்னுக்கு செல்கிறாள். ஒவ்வொரு ஃபிரேமும்... கதை சொல்கிறது.

ஒரு காட்சியில் கூட கேமராவை ஆட்டி தலை வலிக்க வைக்கவில்லை. ஆனாலும்.. ஆட்டம் காணும் காட்சியை நாம் உணர முடிகிறது.

எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக படு பயங்கரமான இறுதிக் காட்சிக்குள் நுழைய மிக நுட்பமான மெலோட்ராமாவை கலந்து கட்டித் தெறிக்க விட்டிருப்பதில்... குருதிப்புனல்... கோப்பைகள் தான் ஒவ்வொருவர் கையிலும்.

சக வேலைக்காரியிடம் இடுப்பை ஆட்டி காட்டுகையில்... ஜாயின் கண்களில்... அன்பின் வெறி. "அங்க போய் நில்லு" என குழந்தையிடம் சொல்லி விட்டு கீழே விழுந்து கதறி அழும்போது அர்த்தமுள்ள கோபத்தின் நொடி மெல்ல அவிழ்கிறது.

Film: The Maid
Directed by: Lee Thongkham
Language: Thai
Year : 2020

- கவிஜி

Pin It