தமிழ்நாட்டில் திரைப்படங்களுக்குக் கேளிக்கை வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, தமிழ்நாட்டு திரை உலகம் ஒட்டுமொத்தமாக முடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் 30 சதவீதம் வரை கேளிக்கை வரி விதிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஜூலை 1 முதல் திரைப்படங்களுக்கு ஜி.எஸ்.டி வரி 18 சதவீதம் விதிக்கப்பட்டது. மொத்தம் 48 சத வரி என்பது திரைப்படத் தயாரிப்பு, விநியோகம், திரையரங்கங்கள் அனைத்தையும் பாதிக்கும் என்று கூறி, தமிழ்நாடு அரசை எதிர்த்துப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

ஜி.எஸ்.டி வரிவிதிப்புக்கு முன்புவரை எவரும் இப்படி ஒரு போராட்டத்தைத் திட்டமிடவில்லை. திரைப்படங்களுக்கு ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படுவதற்கு எதிராக கமலஹாசன் குரல்கொடுத்தார். வழக்கம்போல பிறகு அடங்கிவிட்டார். ஜி.எஸ்.டி வரி திரைத்துறையைப் பாதிக்கும் என்றால் அதை எதிர்த்துப் போராடுவது தானே நியாயம்? அதை எதிர்க்க மாட்டோம். பல ஆண்டு காலமாக நடைமுறையில் இருக்கும் உள்ளூர் கேளிக்கை வரியை நீக்குங்கள் என்று கேட்பது எந்த வகையில் நியாயம்?

இந்தக் கேளிக்கை வரி என்பது நேரடியாக பஞ்சாயத்துகளுக்கும், நகராட்சி, பேரூராட்சி களுக்கும் கிடைக்கும் வருமானம் ஆகும். வாங்கும் வரி நேரடியாக தமிழ்நாட்டுக்குப் பயன்படு வரியாகும். ஆனால், ஜி.எஸ்.டி அப்படி அல்ல. அந்த வரி முழுக்க முழுக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் செல்கிறது. திரைத்துறையினர் போராடுவதென்றால் மத்திய அரசை எதிர்த்துப் போராடவேண்டும். “மத்திய அரசின் தமிழ் டப்பிங் அரசான தமிழ்நாட்டு அரசே ஜி.எஸ்.டி வரியிலிருந்து திரைத்துறையைக் காப்பாற்று” என்று கோரிக்கையை முன்வைத்து, தமிழ்நாட்டு அரசை எதிர்க்கலாம். தமிழ்நாட்டு மக்களுக்குச் சேரும் 30 சதம் கேளிக்கை வரியை நீக்கச் சொல்லக் கூடாது.

பார்ப்பனக் கருத்தியலின் ஆதிக்கத்தில் தான் இத்துறை இயங்குகிறது. இப்போது Gemini Studios, Kavithalaya Productions போன்ற பார்ப்பனக் கம்பெனிகளும் PVR Pictures, Reliance Big Entertainment, Yash Raj Films (YRF), UTV Motion Pictures Mumbai போன்ற இந்திய தேசிய முதலாளிகளின் கம்பெனிகளும் The Walt Disney Company, Fox Studios, Eros International போன்ற மல்டி நேஷனல் கம்பெனிகளும் தமிழ்த்திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. புதிதாக, கலைஞரின் குடும்பக் கம்பெனிகளும், நடிகர்கள் கமல், ரஜினி, சிவக்குமார் போன்றோருக்குச் சொந்தமான திரைப்படத் தயாரிப்புக் கம்பெனிகளும், விஜயா ஸ்டுடியா, ஏ.ஜி.எஸ் போன்ற ஆந்திர, கேரள கம்பெனிகளும் உள்ளன.

இந்தியாவின் பெரும்பாலான திரைஅரங்கங்கள் INOX, IMAX, BIG Cinemas, PVR, Carnivel போன்ற இந்திய தேசியப் பெரு முதலைகளின் கட்டுப்பாட்டில் தான் உள்ளன. இந்த நிறுவனங்கள் பல பன்னாட்டு வணிக நிறுவனங்களின் கூட்டுடன் இயங்குகின்றன. ஒவ்வொரு நிறுவனமும் குறைந்தது 500 திரையரங்குகளுக்கு மேல் வைத்துள்ளன. பார்ப்பனக் கருத்தியலுக்கும், இந்திய தேசிய - பன்னாட்டு முதலாளிகளின் வணிகக் கொள்ளைக்கும் எதிராக எவரும் எதையும் செய்துவிட முடியாது என்ற நிலையில் தான் இந்தியத் திரை உலகம் இயங்குகிறது.  பெரிய பட்ஜெட் படங்களை ஓட வைப்பதும், சிறிய பட்ஜெட் படங்களை அடையாளம் தெரியாமல் அழித்து விடுவதும் இந்திய மயம், உலகமயத்தின் போக்குகளாகும்.

இந்த இந்திய மயமாக்கல், உலகமாயமாக்கலால், கமல், ரஜினி, அஜித், விஜய் போன்ற பெரு நடிகர்களின் படங்களுக்கு அதிகமான வருமானம் கிடைக்கிறது. மணிரத்னம் படங்களும், மேற்கண்ட பெரு நடிகர்களின் படங்கள் அகில இந்திய அளவில் அனைத்து மாநிலங்களிலும் தமிழிலும், அந்தந்த மாநில மொழிகளிலும் திரையிடப்படுகின்றன. ஆனால், சுசீந்திரனின் படத்துக்கோ, ராஜூமுருகன் படத்திற்கோ, எழில், சமுத்திரக்கனி, சசிக்குமார் படத்துக்கோ அப்படி ஒரு வாய்ப்புக் கிடைக்காது. இவர்களைவிட இளையவர்களாகப் பலரும் இப்போது திரைத் துறையில் பல்வேறு தொழில்நுட்பங்களில் சாதித்து வருகின்றனர். இவர்கள் எவருக்கும் அகில இந்திய – உலகளாவிய வணிக வாய்ப்பு கிடைத்துவிடாது.

ஏனென்றால் இவர்கள் எடுக்கும் படங்களின் மய்யக் கரு, கதைக்களம் அனைத்தும் தமிழர்களை மய்யப்படுத்தி இருக்கும். தமிழர்களை மட்டும் மய்யப்படுத்திப் படம் எடுத்தால், அப்படம் இந்திய அளவில் வணிகத்தில் வெற்றி பெறாது. ஜாதிஒழிப்பு, தீண்டாமை ஒழிப்புப் பற்றிப் படமெடுக்க நினைத்தால்கூட, பா.ஜ.க மற்றும் பார்ப்பன அடிமையான இரஜினியை வைத்து எடுத்தால் அகில இந்திய  வணிகம் நடக்கும். பார்த்திபனை வைத்து எடுத்தால் படம் தமிழ்நாட்டைத் தாண்டாது என்ற நிலைதான் நிலவுகிறது.

தமிழ்த்திரை உலகிலேயே பார்ப்பன – இந்திய தேசிய – பன்னாட்டுக் கூட்டணி ஆதிக்கச் சக்தியாக இயங்குகிறது. அந்தக் கூட்டணிக்குத் துணைபோகும் பிற்படுத்தப்பட்டோர் திரை உலகம் தனியாகவும், அந்தக் கூட்டணிக்குத் துணைபோகும் தாழ்த்தப்பட்டோர் திரை உலகம் தனியாகவும் இயங்கிக் கொண்டு இருக்கிறது. திரைஉலகில் உள்ள பிற்படுத்தப்பட்டோரும், தாழ்த்தப்பட்டோரும் இணைந்து, இந்தப் பார்ப்பன – இந்திய தேசிய – பன்னாட்டு முதலைகளை விரட்டி அடித்தால் மட்டுமே தமிழ்த்திரைத்துறை வளரும்.

ஜி.எஸ்.டி வரியோ, தமிழ்நாட்டின் 30 சதம் கேளிக்கை வரியோ திரைத்துறையை அழித்து விடாது. இந்தத் துறையில் இந்திய தேசிய முதலாளிகளுக்கும், மல்டி நேஷனல் கம்பெனிகளுக்கும் கதவைத் திறந்துவிட்ட போதே தமிழ்த்திரைத்துறையின் அழிவும் தொடங்கி விட்டது.

ஒருவேளை வரிகள் தான் திரை உலகத்தை அழிக்கும் என்று கருதினாலும், முதலில் ஜி.எஸ்.டி வரிக்கு எதிராகப் போராட வேண்டும். அதை விட்டு விட்டு நம் தமிழ்நாட்டு மக்களுக்கு நேரடிப் பலன் கொடுக்கும் கேளிக்கை வரியை நீக்கச் சொல்வது தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்யும் பெரும் துரோகம் ஆகும்.

உயர்நீதிமன்றத்தின் மூலம் தமிழ்நாட்டு விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. அதை எதிர்த்து இந்த பா.ஜ.க வின் தமிழ் டப்பிங் அரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. நாட்டின் உற்பத்தியில் தொடர்புடைய விவசாயத் தொழிலை அழிப்பதற்கு முனைப்பாக இயங்குகிறது. நாட்டின் உற்பத்திக்கு – நாட்டின் வளர்ச்சிக்கு எந்த வகையிலும் பயன்படாத திரைத்துறைக்கு கேளிக்கை வரியைக் குறைக்க முயற்சி எடுத்து வருகிறது. பொதுவுடைமை பேசும் பினராய் விஜயனின் அரசுகூட திரைப்படங்களுக்குக் கேளிக்கை வரியை ரத்து செய்துள்ளது. இது என்ன பொதுவுடைமையோ தெரியவில்லை.

“கேளிக்கை வரியைக் கொடுத்து எங்களால் திரைப்படங்களைத் தயாரிக்க முடியாது. திரை அரங்குகளை நடத்த முடியாது” என்றால், உங்களை யாரும் நடத்தச் சொல்லவில்லை. அப்படி நீங்கள் யாரும் நட்டப்படத்தேவையில்லை. போய் வேறு வேலை இருந்தால் பாருங்கள். திரைப்படத் தயாரிப்பையும், திரை அரங்கங்களையும் அரசுடமை ஆக்கிவிடலாம்.

திரைப்படத் தயாரிப்பு, விநியோகம், திரையிடல் சார்ந்த அனைத்துத் தொழிலாளர்களையும் அரசு ஊழியர்களாக மாற்றிவிடலாம். கதாநாயகன், கதாநாயகி, வில்லன், துணைநடிகர்கள், தொழில் நுட்பக்கலைஞர்கள் அனைவரையும் அரசு ஊழியர்களாக்கி விடலாம்.

இரஜினிகாந்தோ, கமலோ, அஜித், விஜயோ, நயன்தாராவோயாராக இருந்தாலும் மாதச் சம்பளம் வாங்கி நடிக்கட்டும். எவ்வளவு திறமையான இயக்குநராக இருந்தாலும் பரவாயில்லை. மாதச்சம்பளத்திற்கு உழைக்கட்டும். அப்படி எல்லாம் முடியாது என்றால் இடத்தைக் காலி செய்யட்டும்.

புதிய புதிய இளைஞர்கள் ஏராளமாக வருவார்கள். சாராயத்தையே விற்கும் அரசாங்கம், திரைப்படம் எடுப்பதோ, தியேட்டர்களை நடத்துவதோ குற்றமாகிவிடாது.  திரைக்கலையை வளர்க்கவும், திரைத்துறையில் நிலவும் பார்ப்பன – இந்திய தேசிய – பன்னாட்டுக் கூட்டுக்கொள்ளையை முடிவுக்குக் கொண்டுவரவும் திரைத்துறையை முற்றிலும் அரசுடமை ஆக்க வேண்டும்.

 

Pin It