purge movieபாவங்களின் நிமித்தம் தானே, தன்னை நிவர்த்தி செய்யும் தனி மனித ஒழுக்கம் கேள்விக்குரியதாக மாறும் நிகழ்வுகளை அவ்விரவு கொண்டாடக் காத்திருக்கிறது. 

அன்று மாலை அலுவலகத்தில்... பேருந்து நிலையங்களில்... மற்றும் நண்பர்கள் கூடும் இடத்திலெல்லாமே எல்லாரும் மற்றவருக்குச் சொல்லி வழி அனுப்பும் செய்தி..."பத்திரமாயிரு.... பத்திரமாயிரு" தான். 

பதபதைப்போடு கண்களில்... பயம் துடிக்கத் தனியாக செல்லும் கதை நாயகியிடம் வம்பு செய்வது போல வழியில் சில ஆண்கள்....." இன்னைக்கு உங்களுக்கு பாதுகாப்புக்கு வரட்டா...!" என்று இரட்டை அர்த்தத்தில் கேட்பதும் நடக்கிறது. குறிப்பிட்ட பணத்தை கூலியாக கேட்கிறார்கள். பணமே வேண்டாம் என்று சொல்லி நமட்டு சிரிப்பு சிரிப்போரையும் கடந்தே வேக வேகமாய்  வீட்டை அடைகிறாள்.

நமக்கு கொஞ்சம் புரிய ஆரம்பிக்கிறது. என்னவோ நடக்க போகிறது. ஒரு திருவிழாவுக்கு காத்திருப்பது போல முகமூடி மனிதர்கள் கத்தியோடும் துப்பாக்கியோடும்... சாமி வந்த உடல் மொழியில்.... சாத்தான்களின் சுய மொழியில்... சாலைச் சாலையாய்  வீதி வீதியாய் அலைகையில்.... நடுக்கம் கண்களில்.... அதிர்வு இதய நரம்புகளில். ஒரு லாக் டவுனுக்கு முன் நடக்கும் அத்தனை பரபரப்பும்....நடக்கிறது. ஓடி ஓடி வீட்டைகிறார்கள். அந்த இரவு ஒரு சூனியத்துக்குள் தன்னை அதி தீவிரமாக நுழைத்துக் கொண்டிருக்கிறது.

" இந்த ஓர் இரவு எப்படியாவது தப்பித்துக் கொள்ளுங்கள். என்னை நான் 2000 டாலருக்கு விற்று விட்டேன். அது உங்கள் வங்கி கணக்கிற்கு வந்து விடும்" என்று அவளின் தந்தையே கூட... கடிதம் எழுதி வைத்து விட்டு..... சென்று விடுகிறார். அவர் எங்கு செல்கிறார்..... யாரிடம் தன்னை விற்றார்.... என்று தெரிய வருகையில்... மானுட மனதின் ஆழத்தில் பதிந்து கிடக்கும்....வேட்டைக் குணம் மெல்ல மெல்ல வெளியேறுவதை நாம் உணர்கிறோம். 

பணம் படைத்தவன்.... தனி இனமாக மாறி விடும் இடம் அச்சுறுத்தலின் உச்சம்.

ஓர் இரவு.... சட்ட திட்டங்கள் எதுவுமில்லை. குற்றங்கள் அனுமதிக்கப்படுகின்றன... கொலை உள்பட. மனிதனுள் இருக்கும் வக்கிரம்..... முன்பகை... விரோதம்...குரோதம்... பொறாமை.. வெறி... காமம்.... திருட்டு... பஞ்சமா பாதகம்... என்று உள்ளிருக்கும் சாத்தானை வெளியிலெடுத்து உலவ விட்டுக் கொள்ளலாம்.  இந்த இரவில் யார் யாரை வேண்டுமானாலும் சுட்டு கொல்லலாம். வெட்டி கொல்லலாம். எப்படி வேண்டுமானாலும்  ரசித்து ருசித்துக் கொல்லலாம். 

இதையெல்லாம் தாண்டி பணத்துக்காகவும்.. ஜஸ்ட் கிக்குக்காகவும் இதில் ஈடுபடுவோரும் உண்டு. இவன் தான் செய்தான் என்ற சாட்சியோ தடயமோ தெரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வளவு தான். அரசாங்கமே அதற்கு அனுமதி கொடுத்திருக்கிறது. இரவில் 10 மணியில் இருந்து காலை 6 மணி வரை மருத்துவமனை இல்லை. காவல்துறை இல்லை. அவரவரே அவரவரைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். பாதுகாக்கும் பொருட்டும் தன்னைத் தற்காக்கும் பொருட்டும்  எதிர் கொலைகளும் அனுமதியே. 

அரசாங்கத்துக்கு மக்கள் தொகை குறைய வேண்டும். பிழைத்திருக்கும் புத்திசாலிகள் போதுமானதாக கருதுகிறது. கோழைகள் வேண்டாம். தகுதி உள்ளவை தப்பி பிழைத்து வரட்டும் என்று விட்டு விடுகிறது. அரச பயங்கரவாதத்தின் இன்னொரு வகை சூதாட்டம்  இது. சாத்தான்களுக்கு முகம் மூடி அகம் திறக்கும் கொண்டாட்டம்.

வீதி வீதியாக சாலை சாலையாய் விரட்டி விரட்டி கொல்வதில் இருக்கும் சுகம் தக தகவென ரத்தம் பீச்சிக் கொண்டு இன்பம் தெளிக்கிறது. கொலையும் அதன் கொக்கரிப்பின் மூலமாக தனக்குள் இருக்கும் வக்கிரம்... உள்ளே படிந்து போன ஆதி அழுக்கு ஆசுவாசம் கொள்வதை ஒவ்வொருவரும் விரும்புகிறார்கள்.

பணக்காரர்கள்...... ஓர் இல்லாதவனை...... இயலாதவனை.... முதிர்ந்தவனை விலை பேசி வாங்கி வைத்துக் கொண்டு அந்த இரவில் அவனை இஷ்டம் போல கொன்று  கொண்டாடுவார்கள். அதன் மூலம். தங்களின் இயலாமை.. கோபம்.. மூர்க்கம்.. சமன்படுவதாக நம்புகிறார்கள். அது மட்டுமல்லாம்... வேறு கும்பல் வீட்டுக்குள் நுழைந்து விட்டால்.. இந்த கொலை  சம்பவம் அவர்களை ...... "சரி சரி.. நம்மாளுங்கதான ........ செய்யுங்க" என்று சியர்ஸ் சொல்லிக் கிளம்பி விடும் என்ற எச்சரிக்கைக்காகவும் இந்த மாதிரி தற்காப்பு நிமித்தமும் அது நிகழ்கிறது. 

இதில் இன்னொரு அதிர்ச்சியான சம்பவம் என்னவெனில்..... நண்பன்... தோழி.. என்று யார் எப்போது கொலை செய்யத் தொடங்குவார்கள் என்றே தெரியாது. உள்ளே மாறும் குணத்தை ஒருபோதும் கணிக்க முடியாது. தன் உயிர் போகும் சூழல் வந்தால் பரிணாமம் அமிழ்ந்து ஆதி வேட்டை குணம் மேலெழும் சூழல் அது.  தொடர்ந்து ஒரு செயலைக் காணுகையில்... அதில் தானும் ஈடுபடலாம் என்ற கை மீறியச் செயலை மூளை அனிச்சையாக அனுமதிக்கும். 

வீட்டுக்குள் முகமூடி மனிதர்கள் நுழைந்து கலாட்டா செய்ய ஆரம்பிக்கையில்... வீட்டிலிருந்து தப்பித்து கதை நாயகியும் அவளின் பதின் பருவத்து மகளும் வீதியில் மாட்டிக் கொள்ள.. அவர்களோடு கார் பிரேக் டவுன்ல ஒரு காதல் ஜோடியும் சேர்ந்து கொள்ள... அவ்வழியே  ஹீரோ என்ட்ரி.

ஹீரோவும் இந்த நாளுக்காகத்தான் ஒரு வருடமாக  காத்திருக்கிறார். தன் மகனை கடந்த ஆண்டு கொன்றவனை பலி தீர்க்கச் செல்கையில்.. இந்த பெண்கள் சாத்தான்களிடம் மாட்டிக் கொண்டு கொலைச் செய்யப்பட இருக்கும்  சூழ்நிலையில் .... தனக்குள் இருக்கும் கடவுள் குணம் இம்சிக்க வேறு வழியின்றி அவர்களை காப்பாற்றுகிறார். 

அதன் பிறகு கதை..... அந்தக் கொலை இரவில்...துப்பாக்கி தோட்டாக்களாலும்..... கத்தி கோடரியின் சத்தங்களாலும் உயிர் அதிர பதபதைக்க வைக்கிறது. இறுதிக் காட்சியில் மனிதனுள் இருக்கும்..... மிக நுட்பமான அந்தரங்கமான குரூரம் வெளி வருவதை நாம் நடுக்கத்தோடுதான் காண முடிகிறது. 

மாட்டிக் கொண்ட ஹீரோ அண்ட் கூட்டணியை முகமூடி மனிதர்களிடம் இருந்து வாங்கித் தன் பணக்கார கூட்டத்துக்குள் ஏலத்துக்கு விடுகிறாள் பணக்காரக் கூட்டத்தின் பெருமனுஷி. ஏலம் எடுத்த கூட்டம் அவர்களை ஓர் அறைக்குள் விட்டு விட்டு விரட்டி விரட்டி கொல்வதும் அதை பால்கனியில் சுற்றி நின்று ரசித்து அவ்விரவைக் கொண்டாடுவதும் தான் பணக்காரர்களின் திட்டம். லவ் ஷோவாக அது நிகழ இருக்கிறது.

மனித மனம்... எப்போது வேண்டுமானாலும் பிறழ்வு நிலைக்குத் தன்னை நகர்த்திக் கொள்ளும். சாடிஸம் நிரம்பிய வடிவம் அதற்கு. இந்த மாதிரி நேரம் லட்டு தின்பது போல. அசுரத்தனம் நிரம்பிய புன்னகையில்.... ரத்தம் சுவைக்க நீளும் நாவோடு காத்திருக்கிறது.. கூட்டுக் கொலை மனநிலை.  

என்ன ஆக போகிறதோ... என்று பதறி நாம் காணுகையில்.... நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்று எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்... தத்துவம் தான் பதில் சொல்கிறது. 

ஒரு எழுச்சிப்படை அதே துப்பாக்கிகளோடு வந்து இந்த கிறுக்கு பயலுகளைச் சும்மா போட்டு தாக்குவதில் பரிணாமம் இந்த மானுடத்தைக் காக்கும்..... என்று நம்புகிறோம். ஆசுவாசத்துக்கு போராடுபவன் தம் முட்டாள்தனங்களை நிரூபிக்க ஆயுதம் எடுக்கிறான். அடிப்படைக்கே போராடுபவன் தன்னைக் காத்துக் கொள்ள தன்னையே ஆயுதமாக எடுக்கிறான். மனதின் குரூரத்துக்கும் மனதின் அமைதிக்கும் இடையே நடக்கும் யுத்தம்... பலிகளினூடாகவே விடியலில் முடிவுக்கு வருகிறது. 

இப்படியெல்லாம் நடக்குமா... இதெல்லாம் கற்பனை... இது தேவை இல்லாதது.. என்ன சொல்ல வருகிறார்கள்... என்றெல்லாம்.. கேள்விகள் எழலாம். இந்த ஆச்சரியம் நிறைந்த சக்தி பெற்ற மனித இனம் தனக்குள் மிகப்பெரிய குழு மனப்பான்மையை...... ஈகோவை சுமந்து கொண்டே அலைகிறது என்பது நிஜம்.

இடத்துக்கும் இனத்துக்குமான சண்டை காலத்துக்குமானது. அதன் அடுத்த வெர்சன் தான் இந்த மாதிரி கோமாளித்தனங்களில்..... அரச பயங்கரவாதம் நிகழ்வது. நிஜத்தில் இந்த வடிவத்தில் இல்லையே தவிர... இந்த பயங்கரவாதம் நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது. ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் மாதிரி. 

உலக அரசியலை உற்று நோக்குவோர்க்கு உண்மை புரியும்.

மிருகம் சூழ் வடிவம் தான் மனதின் ஆழ அடுக்கில் ஒளிந்திருக்கிறது. அதிலிருந்து மனித சமூகம் வெகு தூரம் மேல் நோக்கி வந்து விட்ட போதிலும் சாத்தானின் சுரண்டல் அவ்வப்போது அடியாழத்துக்கு இழுத்துச் செல்லும். அதிலிருந்து மீண்டு கடவுளின் நிலையைத் தேர்ந்தெடுக்கத்தான் கலை இலக்கிய பண்பாட்டு... கூட்டு வாழ்வு முறை... சமூக... கட்டமைப்பு என்றெல்லாம் மனிதன் தனக்கு தானே பாதுகாப்பு அரண் அமைத்துக் கொண்டது.

ஆனாலும் தனிமனித ஆழ்மனம் எப்போதும் ஒரு யுத்தத்துக்குத் தயாராகவே இருக்கும். ஈகோ என்றொரு மாய பேய் பற்களை மூடிக் கொண்டு புன்னகை பூக்கும். எப்போது வேண்டுமானாலும் வெடித்து கிளம்பும் வடிவம் தான் இவ்வுயிரின் சொரூபம். அதிலிருந்து மேன்மையடைய அன்பினால் மட்டுமே சத்தியம். அதற்கு சுதந்திரம் என்ற ஒற்றைச் சொல் பொதுவானதாக இருக்க வேண்டும்.

Film : The Purge: Anarchy

Year : 2014

Director: James DeMonaco

Language: English

- கவிஜி

Pin It