பிரான்சிஸ் ஃபோர்ட் கப்பாலோ நேர்காணல்;

தமிழில்: ராம் முரளி

காட்ஃபாதர் திரைப்படத்தினை இதுவரையிலும் நம்மில் பலர் பலமுறை பார்த்திருக்கிறோம். வசீகரமான மாய கனவொன்றில் நுழைந்து சிறிது நேரம் உலாத்திவிட்டு மனமொப்பாது மீண்டும் இயல்புக்கு திரும்பும் உணர்வே ஒவ்வொருமுறை காட்ஃபாதரை பார்த்து முடிக்கும்போதும் ஏற்படும். காட்ஃபாதராக திரையில் நடமாடிய மர்லன் பிராண்டோவின் சிறுசிறு அசைவுகளும் பலரை வசீகரித்திருக்கின்றன. மிகப்பெரிய மாஃபியா கும்பலொன்றின் தலைவனாக அறிமுகமாகி, தன் குடும்பத்தின் மீதான அன்பினால் இறுதியில் தனது கட்டுறுதி குலைந்து சிறுபிள்ளைப்போல அழுகின்ற பிராண்டோவின் முகம் இப்போதும் நினைவில் தங்கியுள்ளது. அல் பாசினோ – ராபர்ட் டி நிரோ என்ற மிகச்சிறந்த இரு நடிகர்களை அடையாளம் காட்டிய காட்ஃபாதர் திரைப்படம் உலகின் மிக முக்கியமான பல இயக்குனர்களையும் அதிக தாக்கத்துக்குள்ளாக்கியது.

இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த திரைப்பட மேதைகளில் ஒருவராக போற்றப்படும் அமெரிக்க இயக்குனரான பிரான்சிஸ் ஃபோர்ட் கப்பல்லோ, காட்ஃபாதர் திரைப்படத்தின் முதல் பாகத்தை உருவாக்க துவங்கியபோது அவருக்கு வெறும் 29 வயதுதான். மிகவும் இளையவரான கப்பல்லோ, ஸ்டுடியோக்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஹாலிவுட் சினிமாவில் தான் நினைத்ததைப்போல காட்ஃபாதரை எடுத்து முடிப்பதற்குள் எண்ணற்ற சிக்கல்களையும், போராட்டங்களையும் எதிர்கொள்ள நேர்ந்தது. எனினும், உறுதியுடன் அவைகளை அவர் எதிர்கொண்டார்.

சினிமா விமர்சகரான மார்வின் ஆர்.ஷங்கின் உடனான இந்த நேர்காணலில் காட்ஃபாதர் திரைப்பட உருவாக்கத்தின் பின்னணியை பேசியிருக்கிறார் கப்பல்லோ.

brando and francis

உலகில் படைக்கப்பட்ட மிகச் சிறந்த திரைப்படங்களில் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததான காட்ஃபாதர் திரைப்படத்தை இயக்க பாரமெளன்ட் நிறுவனம் (Paramount Pictures) உங்களுக்கு முன்பாக 30க்கும் மேற்பட்ட இயக்குனர்களை அணுகியதாகவும், அவர்கள் அனைவருமே இப்படத்தினை இயக்க மறுத்துவிட்டதாகவும் கேள்விப்பட்டேன். உண்மையில் நடந்தது என்ன? காட்ஃபாதர் படத்தை இயக்கும் பொறுப்பு உங்களை வந்தடைந்தது எப்படி?

காட்ஃபாதர் படத்தை இயக்க 30க்கும் மேற்பட்ட இயக்குனர்கள் மறுத்தார்களா என்று தெரியவில்லை. ஆனால், உறுதியாக சிலர் மறுத்துவிட்டனர். காட்ஃபாதருக்கு ஓராண்டுக்கு முன்னதாக வெளியான தி பிரதர்ஹுட் (The Brotherhood) என்றொரு அப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. அதனால், மாஃபியா பின்னணியில் அமைந்திருந்த காட்ஃபாதர் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை பலரும் உதாசீனப்படுத்திவிட்டார்கள்.

பாரமெளன்ட் நிறுவனம், காட்ஃபாதர் நாவல் வெளியாகியிருந்த உடனேயே அதனை அவர்கள் மிகக்குறைந்த பொருட் செலவில் தயாரிப்பதென்றும், பணத்தை அதிகம் விரயம் செய்யாமல் சிக்கனமாக கையாளத் தெரிந்த இளைஞர் ஒருவரை இயக்குனராக நியமிப்பது என்றும் முடிவு செய்திருந்ததார்கள்.

பாரமெளன்ட் நிறுவனம் இரண்டு மில்லியனுக்கும் குறைவான பணத்தில் படத்தை தயாரிப்பதென்றும், இத்தாலியரையோ அல்லது இத்தாலிய வம்சாவழியை சார்ந்த ஒருவரையோ இயக்குனராக நியமிப்பதன் மூலம் நாவலில் விவரிக்கப்பட்டுள்ள குடும்ப உறவுகளை புரிந்துக்கொண்டு அதனை கையாள ஏதுவாக இருக்கும் என்று கருதினார்கள்.

என்னுடைய “யூ ஆர் எ பிக் பாய் நவ்” (You are a big boy now) படம் நியூயார்க்கில் சிறியளவில் வெற்றி அடைந்திருந்தது. அதோடு, அப்படத்தில் கையாளப்பட்டிருந்த புதிய கருவிகள், திரைப்பட உருவாக்கத்தில் பின்பற்றியிருந்த புதிய உத்திகள், அதிக செலவு இழுக்காத தெளிவான திட்டமிடல்களை பற்றியும் பரவலாக பேசப்பட்டது. எனக்கு அப்போது 29 வயது.

அப்போதுதான் பாராமெளன்ட் நிறுவனம் மேற்சொன்ன காரணங்களுக்காக காட்ஃபாதரை என்னை இயக்கச் சொல்லி அணுகியது. அதோடு அல் ரூடிதான் படத்தின் தயாரிப்பாளர் என்றும் தெரிவித்தது. ஆனால் நான் “தி கான்வர்சேஷனை” படமாக்க விரும்பினேன். இருப்பினும், தொடர் வற்புறுத்தலால் காட்ஃபாதர் நாவலை கையில் எடுத்துக் கொண்டேன். அதிலிருந்த சகோததர்களுக்கிடையிலான உறவு, தந்தையின் கதை மற்றும் மாஃபியா போன்ற சமாச்சாரங்கள் என்னை வசீகரித்தன. ஆனாலும், காட்ஃபாதரில் இடம்பெற்றிருந்த பெண்ணினது பகுதி மிகவும் சலிப்பூட்டக்கூடியதாக இருந்தது. நாவலில் உள்ள சுவாரஸ்யமான புள்ளிகளை மட்டுமாவது கையிலெடுக்க விரும்பினேன். அதனால், அதில் அடங்கியிருந்த மாஃபியா எனும் புள்ளியை கையிலெடுத்துக்கொண்டு, மாஃபியாக்கள் குறித்த தகவல்களை திரட்டத் துவங்கினேன்.

அப்போது உங்களுக்கு மாஃபியா கும்பல்களை பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை இல்லையா?

நிச்சயமாக எதுவும் அறிந்திருக்கவில்லை. நான் முன்னதாகவே சில போர் சார்ந்த திரைப்படங்களுக்கு திரைக்கதைகள் எழுதியிருந்தாலும், அவைகளில் ஒரு நேர்த்தி இல்லாதிருந்தது. அதனால், இம்முறை கவனமாக திரைக்கதையை கையாள வேண்டுமென்று முடிவெடுத்தேன். நூலகத்திலிருந்து மூன்று புத்தகங்களை எடுத்து வந்து வாசிக்க தொடங்கினேன்.

அந்த புத்தகங்களை இப்போதும் நினைவு வைத்திருக்கிறீர்களா?

ஆம். அவை நியூயார்க் நகரில் வேர்விட்டிருந்த மாஃபியா கும்பல்களை பற்றிய புத்தகங்கள். அதில் நியூயார்க்கில் மாஃபியா கும்பல்களின் வரலாறு விரிவாக விளக்கப்பட்டிருந்தது. அதோடு, சால்வடோர் மாரன்சானோ எனும் மிகப்பெரிய மாஃபியா தலைவனின் கொலைப் பற்றியும் விவரிக்கப்பட்டிருந்தது. அந்த புத்தகத்தை எழுதியிருந்தவர் லக்கி லூஸியானா. அதோடு மேலும் சில மாஃபியா தலைவர்களைப் பற்றியும் அதில் விரிவாக எழுதப்பட்டிருந்தது. அவை எல்லாமே வெவ்வேறான மாஃபியா கும்பல்களுக்கிடையிலான உறவினை ஆழமாக அலசியிருந்தன. மீண்டுமொருமுறை காட்ஃபாதர் நாவலை வாசிக்கத் துவங்கினேன். எனக்கு கிடைத்திருந்த குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு, ஒரு திரைக்கதை வடிவத்தை வரைந்தெடுத்தேன். அதோடு ஒவ்வொரு காட்சியைப் பற்றிய சிறுசிறு துணுக்குகளையும், படத்தில் உள்ள மனிதர்களுக்கிடையிலான உறவினையும் உருவாக்கி வைத்துக்கொண்டேன்.

நாவலில் இருந்து எத்தனை தூரம் விலகி நீங்கள் உங்கள் திரைக்கதையை அமைத்தீர்கள்?

நான் காட்ஃபாதரை இயக்கியபோது நாவலையோ, அதில் இருந்த திரைக்கதையையோ பயன்படுத்தவில்லை. சேகரித்து வைத்திருந்த குறிப்புகளையே பயன்படுத்தினேன். ஒவ்வொரு சிறு துணுக்கையும் தேவைக்கேற்ப விரிவாக்கி, அதனை காட்சிகளாக மாற்றினேன்.

நான் ஒரு கட்டுரையில் காட்ஃபாதர் உருவாக்கத்தின் பின்னணியில் பாரமெளன்ட் நிறுவனத்தினர் பலரும் பங்குகொண்டதாக தகவல் ஒன்றை படித்தேன். அதில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது?  

உண்மைதான். அவர்கள் இரண்டு மில்லியனுக்கும் குறைவான தொகையிலேயே படத்தை எடுத்து முடித்துவிட வேண்டுமென்பதில் தீர்மானமாக இருந்தார்கள். ஏனெனில், அப்போதுதான் புத்தகம் வாசகர்களிடம் லேசான கவனிப்பை பெற்றிருந்தது. முதலில் உருவாக்கிய திரைக்கதை நிகழ்காலத்தில் நடைபெறுவதாக அமைக்கப்பட்டிருந்தது. காட்ஃபாதரை வரலாற்று படமாக அல்லாமல், நிகழ்காலத்தில் நடைபெறுவதைப்போல திரைக்கதையை அமைப்பதன் மூலமாக செலவுகளை அதிகளவில் குறைக்க முடியும். அதோடு உடைகள், செட்டுகள் என எதற்கும் அதிக மெனக்கெடல் தேவைப்படாது.

ஆனால், நான் புத்தகத்தில் நடைபெறுவதைப்போல 40 களில் நடப்பதாகவே படத்தையும் இயக்க விரும்புவதாக ஸ்டுடியோக்காரர்களிடம் தெரிவித்தேன். அவர்கள் அதனை ஏற்கவில்லை. வரலாற்று படமாக இதனை உருவாக்கினால் இரண்டு மில்லியன்களை நிச்சயாக கடந்துவிடும் என்பதிலேயே நிலையாக நின்றிருந்தனர். நான் காட்ஃபாதரை கிளாசிக் தன்மையிலேயே உருவாக்க விரும்பினேன். அதேபோல, படத்தை நியூயார்க் நகரத்தில் படம்பிடிக்க வேண்டுமென்ற என் கோரிக்கையையும் ஸ்டுடியோவினர் நிராகரித்தனர். நியூயார்க்கில் படம் பிடிப்பது அதிக பணத்தை இழுக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

முக்கிய கதாபாத்திரங்கள் உருவான விதம் பற்றி கூறுங்கள்...

அதே தருணத்தில், நான் விட்டோ கார்லியோனின் கதாப்பாத்திரத்தை வடிவமைப்பத்தில் அதிக முனைப்புடன் ஈடுபட துவங்கினேன்.

“காட்ஃபாதர் கதாப்பாத்திரத்திற்கு யாரைத் தேர்வு செய்திருக்கிறீர்கள்?” என்று கேட்டனர். நான் “உலகத்திலேயே மிகச்சிறந்த இரண்டு நடிகர்கள் லாரன்ஸ் ஆலிவரும், மர்லன் பிராண்டோவும்தான். ஆனால், மர்லன் பிராண்டோ இன்னும் இளையவராகவே இருக்கிறார். அவருக்கு வயது 47 தான். அதனால் நாம் ஏன் ஆலிவரை அணுகக்கூடாது” என்றேன். அதற்கு அவர்கள், “ஆலிவர் இனியும் நடிப்பதாக இல்லை. அவர் விரைவிலேயே இறந்து விடுவார்” என்றார்கள். “அப்போது நாம் மர்லன் பிராண்டோவை அணுகலாம்” என்றேன்.

பாரமெளன்ட் நிறுவனத்தினருடனான அடுத்த அமர்வில் நான் மர்லன் பிராண்டோவை முன் மொழிந்தேன். ஆனால், அவர்கள் “மர்லன் பிராண்டோ அப்போது இறுதியாக பர்ன் (Burn) என்றொரு படத்தில் நடித்திருந்தார். ஒருவேளை அவர் அதில் நடித்திருக்காவிட்டால், படம் சிறப்பாக வந்திருக்கும். அதனால் மர்லன் பிராண்டோவை காட்ஃபாதராக கற்பனை செய்து பார்ப்பதைக்கூட தவிர்த்துவிடுங்கள்” என்றனர்.

அதோடு, இன்னொரு அமர்வுக்கும் என்னை அழைத்திருந்தனர். அதில் பாரமெளன்ட் நிறுவனத்தின் முக்கியஸ்தர்கள் பலரும் இடம் பெற்றிருந்தனர். அவர்களின் பிரெசிடென்ட், “இந்த படத்தில் மர்லன் பிராண்டோ நிச்சயமாக இல்லை” என்று திடமாக சொன்னார். அதற்கு நான், “என்னை இயக்குனராக நியமித்திருக்கிறீர்கள். ஆனால், என் கருத்தை துளியும் நீங்கள் ஏற்பதில்லை. இப்போது நீங்கள் எனக்கு கட்டளையிடுகிறீர்கள். தயவுக் கூர்ந்து இந்த ஒன்றிலாவது என் பேச்சை கேளுங்கள்” என்று மன்றாடினேன்.

இறுதியாக அவர்கள் மர்லன் பிராண்டோ படத்தில் இடம்பெற வேண்டுமானால் மூன்று விஷயங்களை உடனடியாக செய்தாக வேண்டுமென்று தெரிவித்தார்கள். முதலாவது, காட்ஃபாதரில் படத்தில் நடிப்பதற்கு பிராண்டோவுக்கு சம்பளம் எதுவும் கொடுக்கப்படாது. இரண்டு, அவர் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். அதாவது, படப்பிடிப்புக்காக திட்டமிடப்பட்ட செலவு தொகை அவரால் விரயமாகுமானால், அதற்கு அவரே முழுப் பொறுப்பும் ஏற்று அந்த தொகையினை திருப்பிக்கொடுக்க வேண்டும். மூன்றாவது, அவர் ஸ்கிரீன் டெஸ்டிற்கு தன்னை உட்படுத்திக்கொள்ள வேண்டும்.

மூன்று கோரிக்கைகளில் எனக்கு பெரும் பிரச்சனையாக தெரிந்தது ஸ்கிரீன் டெஸ்ட்தான். அதனால், பிராண்டோவுக்கு போன் செய்து, ”நாம் காட்ஃபாதர் கதாப்பாத்திரத்துக்கான ஒத்திகை ஒன்றினை நிகழ்த்திப் பார்க்கலாமா? சிறிய வீடியோ கேமரா ஒன்றில் அதனைப் பதிவு செய்து கொள்ளலாம், காட்ஃபாதர் கதாப்பாத்திரத்தை மெருகேற்ற அது பெரிதும் துணை புரியும்” என்றேன். இதுவொரு ஸ்கிரீன் டெஸ்ட் என்பதை அப்போது அவரிடம் தெரிவிக்கவில்லை. அவரும் உடனடியாக என்னை தனது வீட்டிற்கு வரும்படி அழைத்தார்.

நான் பிராண்டோ பற்றி அதிகம் படித்திருந்தேன். அதனால் என்னுடைய குழுவினரிடம், “பிராண்டோ அதிகம் சத்தத்தை விரும்ப மாட்டார். அவருக்கு இரைச்சல் துளியும் பிடிக்காது. அதோடு துளி சத்தமும் எழுப்பாமல் அமைதியாக நமது சம்பாஷனையினை நிகழ்த்துவோம்” என்று தெளிவுப்படுத்தியிருந்தேன். என்னிடம் மிகச்சிறிய கேமரா ஒன்று இருந்தது. நாங்கள் ஒரு காலைப்பொழுதில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்த அவரது வீட்டின் கதவை தட்டினோம். முதிய பெண்ணொருத்தி வீட்டின் கதவை திறந்து எங்களை வரவேற்றார்.

நான் இத்தாலிய மாஃபியாக்கள் பயன்படுத்தக்கூடிய பல பொருட்களை என்னுடன் எடுத்துச் சென்றிருந்தேன். அவைகளை பிராண்டோவின் அறையில் பரப்பி வைத்துவிட்டு பதற்றத்துடன் காத்திருந்தேன். பிராண்டோ உறக்கத்திலிருந்து மெல்ல எழுந்து என் அருகே நடந்து வந்தார். நான், ”காலை வணக்கம் பிராண்டோ” என்றேன். அவர் தனது பாணியில், “ம்ம்ம்” என்றுவிட்டு தனது நாற்காலியில் அமர்ந்து சிகரெட் ஒன்றினை பற்ற வைத்துவிட்டு, “ம்ம்ம்” என்றார்.

பிறகு, அவர் எழுந்து சென்று தன் தலை கேசத்தை வழித்து சீவினார். அதோடு, தன் ஷுக்களுக்கு பாலிஷ் செய்தார். அவர் தன் சட்டை காலரை சுருட்டியபடியே, “அவர்களின் சட்டை காலர் எப்போதும் சுருங்கியிருக்கும்” என்றார். அவர் மெல்ல காட்ஃபாதராக உருமாறிக்கொண்டிருந்தார். தன் மேல் கோட்டை அணிந்துக்கொண்டு சிகரெட் ஒன்றை பற்ற வைத்தார். நாங்கள் அனைத்தையும் படம் பிடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றோம். எப்படி 47 வயதுடையவரான பிராண்டோவால் காட்ஃபாதராக கச்சிதமாக உருமாற முடிந்திருந்தது என்று வியந்தபடியே அங்கிருந்து கிளம்பி சென்றோம்.

நான் நேராக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்த சார்லியின் அலுவலகத்திற்கு சென்றேன். அவர்தான் பிராண்டோ கூடாது என்பதில் அதிக தீவிரத்துடன் இருந்தார். பிராண்டோவை அந்த வீடியோவில் பார்த்ததும் முதலில், “இது அவசியமில்லை..” என்று சொல்லிக்கொண்டே இருந்தவர். வீடியோ டேப் முழுவதும் முடிந்திருந்தபோது, “பிராண்டோதான் காட்ஃபாதருக்கான சரியான தேர்வு” என்றார்.

அவருக்கு பிறகு, பாரமெளன்ட் நிறுவனத்தை சேர்ந்த மேலும் ஐவரும் பிராண்டோவின் தோற்றத்தால் அசந்துப்போயிருந்தார்கள். அதனால், எல்லோருமே அவர் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்தனர். மேலும், அவருக்கு சம்பள தொகை தருவதோடு, எந்த ஒப்பந்தத்திலும் அவர் கையெழுத்திட வேண்டிய அவசியமுமில்லை என்றும் தெரிவித்தனர்.

அல்பசினோ – படத்திற்குள் எப்படி வந்தார்?

மைக்கேல் கதாப்பாத்திரத்திற்கு ராபர்ட் ரெட்ஃபோர்டை சிபாரிசு செய்தனர். ஆனால், அவர் இத்தாலிய சாயலில் இல்லை என்று சொல்லி, அதனை நான் நிராகரித்துவிட்டேன். அவர்கள் தொடர்ந்து பல நடிகர்களை சிபாரிசு செய்தபடியே இருந்தனர். ஆனால், அதனை எதையும் நான் ஏற்கவில்லை. அல் பாசினோ என்பவர்தான் மிக சரியான தேர்வாக இருப்பார் என்று சொன்னேன். உடனே அவர்கள், “யார் அந்த அல் பாசினோ?” என்று கேட்டார்கள். நான், “அவர் ஒரு மிகச் சிறந்த நாடக நடிகர். இன்னும் திரைப்படங்கள் நடிக்கவில்லை. எனினும், மைக்கேல் கதாப்பாத்திரத்திற்கு அதிக நியாயம் சேர்க்கக்கூடியவர் அவராகத்தான் இருக்கும்” என்றேன். உடனேயே அவர்கள் அதனை மறுத்துவிட்டனர். காட்ஃபாதரில் அல் பாசினோ நிச்சயமாக இல்லை என்றார்கள் தீர்மானமாக.

சில நாட்கள் கழித்து, அல் பாசினோ நடித்து வெளியாகியிராத “தி பானிக்” (The Panic) என்ற படத்தின் சில காட்சிகளை பாரமெளன்ட் நிறுவனத்தினர் பார்த்திருந்தனர். அப்படத்தில் அல் பாசினோ சிறப்பாக நடித்திருப்பதாகவும், இனி அவர் காட்ஃபாதரில் நடிப்பதில் தங்களது பிரச்சனை எதுவும் இல்லை என்றும் தெரிவித்தனர்.

காட்ஃபாதர் இரண்டாம் பாகத்தை பற்றி சொல்லுங்கள்?

காட்ஃபாதர் (The Godfather (1972)) வெளியாகி, மிகப் பெரிய அளவில் வெற்றி அடைந்திருந்தது. அக்காலக்கட்ட திரைப்பட வரலாற்றிலேயே காட்ஃபாதர் அளவுக்கு வெற்றி அடைந்த படமென்று எதுவும் இருந்திருக்கவில்லை. காட்ஃபாதர் திரைப்படம் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டபோது, அது மிகச்சிறந்த திரைப்படத்துக்கான விருதினை பெற்றது. மிகச்சிறந்த இயக்குனருக்கான விருது கிடைக்கவில்லை. ஆனாலும், எனக்கு வேறு சில விருதுகள் கிடைத்திருந்தன. இதன்மூலம், நான் கொஞ்சம் வசதியானவனாகவே மாறியிருந்தேன்.

காட்ஃபாதர் முதல் பாகம் முடிந்ததுமே நான் அதிலிருந்து முழுவதுமாக விலகி விடுவதென்று முடிவு செய்திருந்தேன். மேலும் மேலும் மாஃபியாக்கள் குறித்து எதையும் ஆராய்ந்துக்கொண்டிருக்க நான் விரும்பவில்லை. ஆனால், சார்லி என்னிடம் “உங்களுக்கு சக்சஸ் பார்முலா தெரிந்திருக்கிறது, அதனால் இன்னொரு காட்ஃபாதரை செய்யுங்களேன்” என்றார். “காட்ஃபாதர் சரியான இடத்தில் நிறைவு பெற்றுவிட்டது, மேலும் அதிலிருந்து நீட்டித்து இழுக்க எதுவுமில்லை” என்று தீர்மானமாக சொல்லிவிட்டேன். மேலும்,  “நான் திறமையான இளைஞன் ஒருவனை பிடித்துத் தருகிறேன். பாரமெளன்ட் நிறுவனத்துடன் மீண்டும் இணைந்து வேலை செய்ய முடியாது” என்றேன். அதனால் நான் மார்டின் ஸ்கார்ஸசியின் பெயரை பரிந்துரைத்தேன். மேலும், திரைக்கதை உருவாக்கத்தில் அவருக்கு நானும் மேரியோ புஸோவும் உதவி புரிவதாகவும் சொன்னேன். ஆனால், அவர்கள் “நிச்சயமாக மார்ட்டின் ஸ்கார்ஸசி காட்ஃபாதர் இராண்டாம் பாகத்தை இயக்கப் போவதில்லை” என்று மறுத்துவிட்டார்கள். மீண்டும் என்னையே இயக்கும்படி வற்புறுத்தினார்கள். நிச்சயமாக நான்தான் அவர்களுக்காக காட்ஃபாதர் இரண்டாம் பாகத்தை இயக்க வேண்டுமானால், சில கோரிக்கைகளை தெரிவித்தேன். முதலாவது, நிச்சயமாக நான் கான்வர்சேஷன் படத்தை முடித்துவிட்டுதான் காட்ஃபாதரை கையிலேடுப்பேன் என்றேன். இரண்டாவது, எனக்கு சம்பளமாக ஒரு மில்லியன் டாலர்கள் கொடுக்க வேண்டும் என்றேன். அடுத்தது, படத்துக்கான முழு பட்ஜெட்டையும் நானே முடிவு செய்வேன் என்றேன். இறுதியாக, இந்த படத்தை “தி ரிடர்ன் ஆஃப் மைக்கேல் கார்லியோன்” (The Return of Michael carleone) என்று அழைப்பதற்கு பதிலாக, காட்ஃபாதர் இரண்டாம் பாகம் என்றே அழைக்கப்பட வேண்டும் என்றேன்.

அவர்களும் அதற்கு ஒப்புதல் தெரிவித்தனர். பிறகு, நான் திரைக்கதையினை தனியே அமர்ந்து எழுதி எடுத்துச் சென்று மேரியோ புஸோவிடம் காண்பித்தேன். இறுதியாக, நானும் புஸோவும் பேசி சில மாற்றங்களை திரைக்கதையில் கொண்டு வந்தோம்.

காட்ஃபாதர் இரண்டாம் பாகம், முதல் பாகத்தை விட அதிக வசூலை குவித்ததா?

இல்லை. நிச்சயமாக இல்லை. எனினும் காட்ஃபாதர் இரண்டாம் பாகம் (The Godfather II (1974) எனக்கு சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார் விருதினை பெற்று தந்தது. அதோடு, முதல் பாகத்தை விடவும் சிறந்த படமென்று பலராலும் பாராட்டப்பட்டது.

அதோடு, பல வருடங்களுக்கு பிறகு காட்ஃபாதர் மூன்றாவது பாகத்தையும் (The Godfather III (1990) இயக்கினேன். ஆனால், எல்லோரும் முதல் பாகத்தைதான் பெரிதும் விரும்புகிறார்கள். அதன் வசனங்களை இப்போதும் பயன்படுத்துகிறார்கள். அதற்கு காரணம், அப்படத்தில் எல்லாமும் சிறப்பாக அமைந்திருந்தது. மர்லன் பிராண்டோ எனக்கு கிடைத்திருந்தார். மிகச்சிறந்த தொழிற்நுட்ப கலைஞர்கள் எனக்கு கிடைத்திருந்தார்கள். இரண்டாவது பாகத்தையே நான் இயக்க விரும்பவில்லை. இருந்தும், மூன்றாவது பாகத்தை செய்ததன் காரணம், அத்தருணத்தில் நான் மிகவும் சரிவடைந்திருந்தேன் என்பதால் தான்.

காட்ஃபாதர் திரைப்படத்தை பற்றி இப்போது என்ன நினைக்கிறீர்கள்? அப்படம் தான் உங்களை புகழின் உச்சிக்கு உயர்த்தியது இல்லையா?

உண்மையில் நான் காட்ஃபாதர் திரைப்படம் உருவாக்கப்பட்டதன் பின்னணியை மறக்கவே விரும்புகிறேன். அத்தனை தூரம் எனக்கு மன உளைச்சலை அளித்த திரைப்படம் என்றாலும் காட்ஃபாதர்தான் என்னை புகழின் உச்சிக்கு அழைத்துச் சென்றது என்பதையும் மறுக்க முடியாது. காட்ஃபாதர்தான் என்னை உலகில் அடையாளப்படுத்தியது. அந்த படம்தான் எனக்கு தி கன்வர்சேஷனையும் (The Conversation (1972)), அப்போகாலிப்ஸ் நெளவ்வையும் (Apocalypse Now (1979)) இயக்கும் வாய்ப்பையும் எனக்களித்தது.

காட்ஃபாதர் திரைப்படம் என்னுடைய உழைப்பால் மட்டுமே சாத்தியமான படமல்ல. மர்லன் பிராண்டோ, அல் பாசினோ, மேரியோ புஸோ, எனது ஒளிப்பதிவாளர் வில்லிஸ், கலை இயக்குனர் கிளைமர் என்று பலருடைய உழைப்பும் அதில் கலந்திருக்கிறது. எல்லா படங்களுமே கூட்டு உழைப்பால் மட்டுமே சாத்தியமாகின்றன. வாழ்க்கையிலும் நாம் சக மனிதர்களின் உறுதுணையுடன்தானே ஒவ்வொரு நாளை கடத்திக்கொண்டிருக்கிறோம்.

Pin It