மும்பையிலிருந்து பதவி உயர்வுடன் கூடிய பணிமாறுதலில் எர்ணாகுளத்திற்கு தன் மனைவி ப்ரியாவுடன் வந்து சேருகிறார் பொறியாளரான ரஞ்சன் மேத்யூஸ். ப்ரியா கலைப்பொருட்களை சேகரிப்பதில் அக்கறையான பெண். தாங்கள் புதிதாகக் குடியேறியிருக்கும் வீட்டை அழகுபடுத்த கலைப்பொருட்களை வாங்கச் செல்பவர், பழமையான ஹீப்ரு மொழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஒரு மரப்பெட்டியை வாங்குகிறார். அதன் கலைநுட்பத்தில் மயங்கி அதனைத் திறக்கிறார். அந்தப் பெட்டியின் வரலாறு என்ன. ?. அதிலிருந்து வெளிவரும் அமானுஷ்யமும் அதன் நோக்கமும் என்ன. . . ? அதை ரஞ்சன் எப்படித் தடுக்கிறார் . . ? என்பதே ப்ரித்விராஜ்,ப்ரியா ஆனந்த், சுஜித் ஷங்கர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும் "எஸ்ரா" மலையாளப் படத்தின் சுருக்கம்.
படத்தின் இயக்குனர் ஜேகே. "கம்மட்டிபாடம்" இயக்குனர் ராஜீவ் ரவியிடம் வேலை கற்றவர். அவருக்கு இது முதல் படம். யூத இன சம்பிரதாயங்களைப் பற்றி நிறைய ஆய்வுகளை செய்திருக்கிறார். வழக்கமான பேய் அம்சங்களைக் கொண்டிருக்கும் இந்தத் திரைப்படத்தில் தனித்துத் தெரிவது யூதர்களின் சடங்குகளும், காட்சிகளில் ஆங்காங்கே வெளிப்படும் அவர்களின் வரலாறும்தான். படத்தில் சொல்லப்படும் "Dybbuk" சமாச்சாரம் போன்றவை புதிதாக இருந்தது.
மனைவியின் நிலையைக் கண்டு கலங்குவதும், இருட்டில் தேவைக்கேற்ப பயப்படுவதும் என சந்திரமுகி பிரபுவின் கதாபாத்திரம்தான் பிருத்விராஜிற்கு. ஆனால் மலையாள நடிகர்கள் கதைக்குத்தானே முக்கியத்துவம் கொடுப்பார்கள். இயக்குனரும் ஒளிப்பதிவாளரும்தான் இங்கே கதாநாயகர்கள். மிரட்டலான இசையும் இருக்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அறிமுகப்படுத்துவதிலும், காட்சியின் நகர்வுகளும் ஸ்டைலிஷாக இருந்தது என சொல்லலாம். உதாரணமாக மார்க்கஸ் கேரக்டர் அறிமுகமாகும் இடம்.
படத்தின் முக்கியமான இடத்தில் மிகவும் சுமாரான ஃப்ளாஷ்பேக் வேகத்தைக் குறைக்கிறது. பயமுறுத்தும் காட்சிகள் சில இடங்களில் வலிந்து திணிக்கப்பட்டிருக்கிறது. ஒரு பேய்ப்படத்தை நாம் பார்ப்பதற்கு முக்கியமான காரணம் நாம் பயப்படாமல் இருப்பதற்கும், கத்திக் கூச்சலிட்டு மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுப்பதற்கும் அல்ல. நாம் பயப்படுவதற்காகத்தான் இதுபோன்ற படங்களுக்கு செல்கிறோம் என்றால் படம் முழுக்க நம்மை பயத்திலேயே வைத்திருந்து புது அனுபவத்தைத் தருகிறார்கள்.
எஸ்ரா தாராளமாக ஒரு முறைப் பார்க்கலாம், பயப்படுபவர்களுக்கு மட்டும்.
- சாண்டில்யன் ராஜூ