kuppaikaranகுப்பைக்காரன் குறும்படம் சமீபத்தில் பார்த்தேன். படம் கொஞ்சம் நீளமாக இருந்தாலும், ஆரம்பத்தில் இயக்குநர் ஜஸ்டின் பிரபு ஏதோவொரு செய்தியைச் சொல்ல முற்படுகிறார் எனப் பொறுமையாகப் பார்த்தேன். சிறுவன் தனது தந்தை துப்புரவுத் தொழில் செய்வதால் மற்றவர்களால் அவமதிக்கப்படுகிறான். உடன் படிக்கும் சக மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள் எனப் பலரும் ஏளனமாகப் பார்க்கிறார்கள்.

முதல் காட்சியாக சிறுவன் பள்ளிக்கூடம் போகும் போது தனது தந்தை குப்பையை அள்ளப் பயன்படுத்தும் குப்பை வண்டியிலேயே பயணம் செய்கிறான். கடையில் திண்பண்டம் வாங்கும் போது துப்புரவுத் தொழில் செய்பவர் என்பதற்காக கடைக்காரர் அவரை “நீயெல்லாம் திண்பண்டங்களைத் தொட்டா அத யாரு வாங்குவா?” எனக் கேட்டு அவமதிப்புக்கு உள்ளாக்குகிறார்.

அதைவிட மோசம் துப்புரவுத் தொழிலாளி கொடுக்கும் பணத்தை கையில் வாங்காதததும். இதுகுற்றம் எனவே, இதுபோன்று இழிவு செய்தால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்ற பதிவோ அல்லது அதைச் சரிசெய்யும் விதத்திலோ எந்தவிதமான பதிவும் இல்லை.

சக மாணவனுடன் தன்னுடைய திண்பண்டங்களைப் பகிர்ந்து கொண்டு துப்புரவுத் தொழிலாளியின் மகன் வரும் வழியில் உடன் வரும் சிறுவனின் தந்தை “அவனோடு சேராதே” எனச் சொல்லிவிட்டு அவனையும் அவனது தந்தையின் தொழிலையும் குறிப்பிட்டு இழிவுபடுத்தும் போது அச்சிறுவனுக்கு தனது தந்தை இத்தொழிலை விட்டுவிட்டால் என்ன எனத் தோன்றுவது இயல்புதான். அதை நன்றாகவே காட்சிப் படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

அதே சிறுவன் தன் தந்தையிடம் துப்புரவுத் தொழிலை விட்டுவிடச் சொல்லி அழுகிறான். ஏன்? அத்தொழிலால் தானும் தன்னைச் சார்ந்தவர்களும் அவமானப்படுத்தப்படுகிறோம் என்பதால். இதுவரை நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. இயக்குநர் சமூகப் பொறுப்புணர்வுடன் இக்குறும்படத்தை படைத்திருக்கிறார் என நினைத்த சமயத்தில் பல்டி அடித்துவிட்டார்.

அச்சிறுவன் தொலைக்காட்சியில் வரும் ஒரு செய்தியைப் பார்த்துவிட்டு சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க வேண்டுமென உந்துதல் பெற்று கிளம்பும் போது தெருவில் வழக்கமாக விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்கள் விளையாடுகிறார்கள். ஆனால் இச்சிறுவன் மட்டும் அவனது தந்தை துப்புரவுத் தொழில் செய்து கொண்டிருப்பதை பார்த்துவிட்டு அவருடன் வேலைகளில் ஒத்தாசைக்குச் செல்கிறான்.

“நானும் உன்னோட குப்பை அள்ளட்டுமா?” எனக் கேட்டு குப்பையை அள்ளிப் போட்டு சிரித்த முகத்தோடு அவ்வேலையைச் செய்வதாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

துப்புரவுத் தொழிலை செய்தால் தானும் தனது தந்தையும் இழிவாகப் பார்க்கப்படுகிறோம் என்பதை அனுபவப் பூர்வமாகக் கண்டு அவ்வேலையை விடச் சொன்ன சிறுவன், அவனே குப்பை அள்ளும் அளவுக்கு அந்தக் காட்சி அவனை தூண்டுவது போல் காட்சிப்படுத்துவது கடைந்தெடுத்த சாதிய வன்மம் என்றுதான் சொல்ல வேண்டும்.

தெருவில் அத்தனை சிறுவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் யாராவது தொலைக்காட்சியைப் பார்த்து கொசுக்கள் வராமல் தடுக்க சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க வேண்டுமென அந்த துப்புரவுத் தொழிலாளியோடு குப்பை அள்ளப் போவது போல காட்சிப் படுத்தியிருக்கலாமே?

துப்புரவுத் தொழிலை அறவே வேண்டாம் எனச் சொன்ன சிறுவனை வலிய கொண்டுப் போய்க் குப்பை அள்ள வைப்பது ஒரு வன்மம் என்றால், எந்த அப்பனாவது தன் பிள்ளைப் படித்து தான் செய்யும் இந்த இழிதொழிலை இனிமேல் தன் பிள்ளை எக்காரணம் கொண்டும் செய்யக்கூடாது என்றுதான் நினைப்பார்கள். ஆனால் இங்கோ சிறுவன் குப்பையை அள்ள “நானும் வருகிறேன்” எனச் சொன்னதும் உடனே குப்பையை அள்ளச் சம்மதிக்கிறார்.

குப்பைக்காரன் குறும்படத்தின் இயக்குநர் துப்புரவுத் தொழிலாளர்கள் குறித்து என்ன மாதிரியான பார்வையை வைத்திருக்கிறார் என்பதற்கு அச்சிறுவனை குப்பை அள்ளச் செய்யும் காட்சி ஒன்றே சாட்சி.

இதில் இன்னொரு வகையில் மறைமுகமாக ஒரு செய்தியைப் புகுத்தவும் செய்கிறார். துப்புரவுத் தொழிலாளியின் மகன் அதேத் தொழிலைத்தான் செய்ய வேண்டும் என்கிற புதிய கல்விக் கொள்கையின் சாரம்சத்தை அப்படியே இப்படம் பரப்புரை செய்வதாகவே புரிந்து கொள்ள முடிகிறது.

தொடக்கத்தில் துப்புரவுத் தொழிலாளர்களுக்கான மறுவாழ்வு படம் என நினைத்துப் பார்க்கத் தொடங்கினால் அப்படியே தலையில் மண்னை அள்ளிப் போட்டு விடுகிறார் இயக்குநர். துப்புரவுத் தொழிலாளியின் வாரிசுகள், அந்த வம்சம் அப்படியே அடுத்தடுத்து அந்த நாத்தத்தைதான் அள்ள வேண்டுமென பொதுப் புத்தியில் ஊறிப் போயிருக்கும் அதேச் சிந்தனையின் வெளிப்பாடுதான் இக்குறும்படம்.

ஒரு படைப்பு வழியாக சமூகத்தில் நிலவும் அவலங்களை அல்லது தொடரும் நிலையை மாற்றவும் முடியும்! அப்படியேத் தொடரட்டும்... அல்லது நீடிக்க வேண்டும் என மேலும் மேலும் வலுவூட்டவும் முடியும்!

அந்த வகையில் குப்பைக்காரன் குறும்படம் ஏற்கனவே துப்புரவுத் தொழிலாளியின் வாரிசு துப்புரவுத் தொழிலைத்தான் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கும் பொதுப் புத்தியின் உச்சம் எனச் சொல்லலாம்.

மற்ற குழந்தைகள் எல்லாம் பள்ளிக்கூடம் முடித்து வீட்டிற்கு வந்த பின்பு ஒன்றாக சேர்ந்து விளையாடுகிறார்கள். ஆனால் துப்புரவுத் தொழிலாளியின் குழந்தையோ அவனது தந்தையுடன் சேர்ந்து குப்பையை அள்ளப் போகிறான்.

குழந்தைகள் என்றாலே எல்லாரும் குழந்தைகள்தானே? அதிலென்ன ஒருசாரார் குழந்தைகள் விளையாடுவதும் குறிப்பிட்ட தொழிலையோ அல்லது சமூகத்தையோ சார்ந்த குழந்தை மட்டும் வேலை செய்ய முற்படுவது போலக் காட்சிப்படுத்துவது? இது குழந்தைகள் மீது படைப்புகள் வழியாக வலிந்து திணிக்கும் வன்முறையல்லவா?

இன்னொரு பக்கம், துப்புரவுத் தொழிலாளியை சக மனிதனாகப் பார்க்காத சமூகத்தில் அவர் தொடர்ந்து அத்தொழிலை செய்து கொண்டே இருக்க வேண்டும் என நினைப்பதும்தான்!

இருக்கிற நிலைமை தொடர்வதை காட்சிப்படுத்த இப்படியொரு படைப்பு தேவையில்லை. அது சரியான அணுகுமுறையாக இருந்தால்கூட பரவாயில்லை. சாதிய மனோபாவத்தால் குறிப்பிட்ட சமூகத்தினரை இழிதொழிலை செய்ய நிர்பந்திக்கப்பட்டது போல அவர்களது குழந்தைகளையும் அத்தொழிலுக்குள் வலிந்து திணிக்கும் பாதக செயலையும் இயக்குநர் செய்திருக்கிறார்.

சமத்துவம், மனிதநேயம், சமூகநீதி என்ற அடிப்படையில் பார்த்தாலும் சரி, குழந்தைகளின் உரிமைகள் என்ற அடிப்படையில் பார்த்தாலும் சரி குப்பைக்காரன் ஏற்றுக் கொள்ள முடியாத குறும்படம்.

சமூகத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளை, அவலங்களை களைந்தெடுப்பதே சமூக அக்கறையுள்ள படைப்பாக கருத முடியும்! அந்த வகையில் குப்பைக்காரன் குறும்படம் மனம் முழுதும் குப்பை மேடாக உயர்ந்திருக்கும் ஒருவரின் எண்ண வெளிப்பாடே!

- மு.தமிழ்ச்செல்வன்

Pin It