sufiyum sujathayumஒரு மிதமான நதியில்.. ஒரு இலை தன்னை உதிர்த்தபடி.... மிதந்து தவழ்ந்து கலந்து..... அதனோடே காணாமலே போகிறது. போகட்டும். காணாமல் போவது கண்டெடுக்கப் படுவதை விட அர்த்தம் வாய்ந்தவை.

அது நிகழ்கிறது. நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நிகழும்.

கடவுள் என்ன காதல் என்ன... இரண்டும் ஒன்று தான்.

ஒரு சூஃபிக்கும் ஒரு சுஜாதேவுக்கும் காதல் கடவுளின் தேசத்தில் நிச்சயிக்கப்படுகிறது. கண்கள் தான் மொழி. கண்ணாடி தான் பாவனை. அவளுக்கு மொழியெல்லாம் அவனாகும் விதை காலத்தின் மௌனத்தில் முளைக்கிறது. காதலுள்ளோர் கண்டடையும் கண்ணாடி அது. கவிதையுள்ளோர் தன்னை கரைத்துக் கொள்ளும்... தன் ஆடை அது.

காதலில் சாவதும் ஒரு கலைதான். அல்லாவை அழைக்கையில்... மெல்ல சரியும் தேகத்தில்... மெல்லிய காதல்.. கனத்துக் கிடக்கிறது. விஷயம் கேள்விப் பட்டு சுஜாதேவை அழைத்துக் கொண்டு வருகிறான் அவள் கணவன். கதை பின்னோக்கி நகர.. காதல்.. நம் கண்ணோக்கி நகர்கிறது.

சில விஷயங்களை இசைதான் தீர்மானிக்க வேண்டும். சூஃபியும் சுஜாதேவும் முதல் முறை சந்திக்கும் பேருந்தில்.. பெரு உந்துதல் நமக்கு. கிளாரினெட் இசை படம் முழுக்க குறியீடு செய்கிறது. கிளாரினெட்க்குள் ஒரு சிறுவனின் கர கர அழுகை......ஒரு சிறுமியின் கர கர சிரிப்பு... அது இடம் மாறி இடம் மாறி.. மௌனம் சுரக்கும் காற்றில் இருவரின் உயிரும்... கலந்திருப்பதை.. கடவுளின் ஆணையால் நான் காண்கிறேன்.

சாதாரண முகத்துக்கு கூட மூக்குத்திக்குப் பின் அசலூர் பெண் முகம் வாய்த்து விடுகிறது. பட நாயகி.. அதிதிக்கு அப்படித்தான் ஒரு அற்புதம் நிகழ்கிறது. மணி ரத்னம் சினிமாவில் கூட அவர் இத்தனை அழகு இல்லை. பச்சை தேசத்தில்... பசுமை போர்த்தி திரியும்...... அவள் பார்வை...... அவள் பாவனை அதிரூப அவஸ்தை. (நம்மூர் பிரசன்னா சாயல்) தாடிக்குள்... புதைந்திருக்கும் சிறு புன்னகையில்... அவன் ஒரு கால ரசிகன். தேவ புதல்வன். அவனிடம் பேசும் அமைதி. அவளிடம் பேசா அமைதி. காதலைப் பேச மொழி வேண்டாம். மனம் போதும். ஷோபனாவின் சாயல் அவளுக்கு. சொப்பனத்தின் சாயல் அவனுக்கு. உருதோ... உருது சாயலோ...காதலுக்கு நெருக்கம் கூட்டுகிறது. பச்சை சால்- ஐ... தலையோடு முக்காடிட்டு பார்த்து கண்ணாடியில் வெட்கப்படுவாள். வேர்க்கும் கண்ணாடியோ அவனுக்கு முன்னாடி விக்கல் எடுக்கும்.

அவன் உள்ளங்காலும்... அவள் உள்ளங்கையும் சந்திக்கும் இடம் அல்லா அற்புதம் செய்யும் இடம்.

ஒரு காட்சியில்.... அவள் ஆட ஆட.... கேமரா வீட்டிலிருந்து மேலே எழும்பி கூரையைத் தாண்டி... இன்னும் இன்னும் விரிந்து வானத்தில் அகலும் நாழிகையில் சூஃபி தத்துவங்களின்.... ஜென் கலந்த தித்திப்பு. அப்போது 'அல்லாகு அக்பர்' என்று மசூதியில் எழும் அவன் குரலில் அத்தி பூ. ஆட்டம் அவன் குரலில் இருக்க.. சந்தம் அவள் பாதங்களில் இருக்க......இரண்டையும் இணைத்த இயக்குனர்..... கடவுளின் பிள்ளையாக இருக்க வேண்டும்.

நடனம் என்பது வழிபாடு. கடவுளைத் தேட சிரி... ஆடு.... பாடு.. ருசி ரசி.... முத்தாய்ப்பாய் காதலி.

"தூக்கத்துக்கு ஒன்றும் தெரியாது... தூங்க மட்டும் தான் தெரியும்.. தூக்கத்துக்கு சாமி சாத்தனெல்லாம் ஒன்னு தான்." குரு சூட்சுமம் விதைக்க பேசுவார்.

ஒரு கட்டத்தில் அவன் செல்கிறான். எதுவோ சரி இல்லை என்று அவன் காதலைக் கடக்க முயற்சிக்கிறான். ஓடோடி வரும் அவள் காதலின் வேட்கையில் சைக்கிளை அங்கிருந்தே தள்ளி விடுகிறாள். படிக்கட்டில் குதித்து குதித்து வந்து அவன் முன்னால் சரிகிறது சைக்கிள். அடுத்த கணம் அவள் அவனைக் கட்டிக் கொண்டு நிற்கிறாள். கட்டிக் கொள்தல் காதலின் மொழி மட்டுமல்ல. அன்பின் வழியும் கூட.

சாத்தான் ரேப் பண்ணினால் விட்டு விடுவோம். கடவுள் கட்டிக் கொண்டால் நாம் கருத்து சொல்வோம்.... என்ன வேணா சொல்லிக்கலாம். அவர்கள் கட்டிக் கொண்டார்கள். காதல் அருகே நதியாக ஓடிக் கொண்டிருக்கிறது.

வழக்கம் போல எமோஷனல் ப்ளாக் மெய்லர்ஸ்.... இல்லாத வியாக்கியானம் பேசி அப்பன்களாக திரிவான்கள். மகள் பெட்டியோடு செல்வதைப் பார்த்து நெஞ்சு நெஞ்சாய் அடித்து கொண்டு தற்கொலைக்கு முயற்சித்து காதலை கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கி விடும் அதே அப்பன்தான் இறுதிக் காட்சியில்.... மருமகன் பேசும் நியாயமான பேச்சுக்கு முன் தலை குனிந்து ஒன்பது ஓட்டைகளையும் மூடிக் கொண்டு நிற்பான். ஈகோயிஸ்ட் அண்ட் இடியட்ஸ்களின் சாம்பிள் கதாபாத்திரம் இது.

அவள் அங்கேயே நின்று விட்டாள். சூபிக்கு வேறு வழியே இல்லை. வெளியே வாசலில் ஒரு இரையற்ற இறையாய் நின்று கொண்டிருப்பான்.

சல்லி மனிதர்களின் அறிவுரை கருமம் வளர்த்த அவளுக்கு இன்னொரு நல்லவனோடு கல்யாணம் செய்து வைக்கும். வாய் பேச முடியாத அவளுக்கு பேச்சு தான் வராது. அழுகை வரும். அவள் திருமணமான கடந்த 10 வருடங்களில்.... சிலுவையை சுமந்து கொண்டு தான் இருக்கிறாள். அவளுக்காவது சிலுவையின் சுமையில் காதல் இருக்கிறது. அவளை கல்யாணம் செய்து கொண்ட ஒரே காரணத்துக்காக அந்த கணவன் காதலையே சிலுவையாக சுமந்து கொண்டிருக்கிறான்.

படம் பார்த்து முடிக்கையில் தியானித்து எழுந்தது போல. ரெம்ப்ப ஓவருன்னு சொன்னா.......ஆமா ஓவர் தான்.. ஓவர் தான்.. கம்மி நிலையை உணர்த்தும் என்பது ஓவர் காண்பிடன்ட் இல்லை. ஒரிஜினல் காண்பிடன்ட்.

இறுதியில்.... இதுவரை யாரும் செய்ய தயங்கும் ஒரு வேலையை....... சூழல்......கணவனை செய்ய வைக்கிறது.

ஒரு நதி ஓடிக் கொண்டேயிருக்கிறது. இளைப்பாறிய மரம் வெதும்பி ததும்பி.. பின் அந்த நதியில் நிழலாகி விடுகிறது. சூபி இடம் மாறும் அந்த விமான தருணம்... காதலின் கதவுகள் ஒரு போதும் தன்னை அடைத்துக் கொள்வதில்லை என்று நம்பிக்கையைத் தருகிறது. காதல் இடம் மாறி கணவன் காதலனாகிறான்.

சூபி... இப்போது அவளிடம் ஆசுவாசமாகிறான்.

Film : Sufiyum Sujatayum
Language : Malayalam
Director : Naranipuzha Shanavas
Year : 2020

- கவிஜி

Pin It