“தாரே ஜமீன் பார்” இன்று இந்திய திரை உலகின் விரும்பிகள் விமர்சகர்களுடன் குழந்தைகளும் முணுமுணுக்கும் மந்திர உச்சாடனம். இந்த இந்தித் திரைப்படத்தை பற்றி இணையதளங்களில் வெளிவந்த செய்தியையடுத்து படத்தை பார்க்கவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது மற்றொரு காரணம் அமீர்கான் இயக்கிய முதல் திரைபடம் என்பதுமே. இந்த திரைப்படத்தின் கதையோட்டம் என்னவென்று தெரிந்திராதபொழுது திரைப்படத்தை பார்ப்பதற்கு இரு தினங்களுக்கு முன் (17.01.2008) ஒரு கவிதை எழுதினேன். அந்த கவிதையை பின்னிணைத்துள்ளேன்.

பெங்களுரில் இருந்த காலகட்டத்தில் திரையரங்கு சென்று இந்தி திரைப்படங்கள் பார்த்ததே கடைசி. சிங்கப்பூர் வந்த இந்த 2 வருடங்களில் திரையரங்கு சென்று பார்ப்பதற்கான (நட்பு) சூழல் உருவாகததாலே எந்த ஒரு இந்திபடமும் இதுவரை பார்க்கவில்லை. இடையிடையே நான் பார்த்தது தமிழ் தெலுங்கு மலையாளம் மற்றும் ஆங்கிலத் திரைப்படங்களே இதுகூட என் சமீபத்தியபோக்குதான். பணிசூழல் பின் எழுத ஆரம்பித்தது எங்காவது ஒரு நிகழ்வு என்றால் நானும் அங்கு தென்படவேண்டும் என்ற ஆவலால் திரைப்படங்கள் பார்ப்பது குறைவே பீமா போன்ற திரைப்படங்களை ஆர்வமிகுதியால் உடனே பார்த்து அடிபட்டு திரும்புவதும் உண்டு.

இவ்வளவு கால இடைவெளிக்கு பிறகு நான் பார்த்த இந்தி திரைப்படம் நள்ளிரவு நேரத்தில்தான் பார்த்துக் கொண்டிருந்தேன் அமீர்கான் வருவதற்கு சற்று முன் நாளை பார்த்துக் கொள்வோம் மீதியை என்ற எண்ணப்பாட்டை அடுத்த சில நிமிடங்களில் திரையில் தோன்றிய கோமாளி மாற்றியமைத்தான். திரைப்படத்தை பார்த்து முடிக்கும்வரை ராமசாமி வாத்தியாரும் என்னுடனிருந்து படம் பார்த்ததாக ஒருவித உணர்வு.

படம் பார்த்து முடித்தபின் எப்பொழுதும்போல் என்ன நீதிப்பாண்டி என்றவாறு ராமசாமி வாத்தியார் கடந்து சென்றார். உடனே என்னுள் எழுந்தது ராமசாமி வாத்தியாரிடம் உரையாடவேண்டும். என் வீட்டில் தொடர்பு கொண்டு என் சகோதரி மற்றும் அம்மாவிடம் ராமசாமி வாத்தியாரின் தொ(ல்)லைதொடர்பு எண்ணை வாங்கித்தருமாறு கூறி ஒருவாரகாலம் ஆகிவிட்டது. இன்னும் என்னுள்ளே அதே ஆவலால் ராமசாமி வாத்தியாரிடம் உடையாடவேண்டும்.

என்னால் இயன்றளவு என் நண்பர்களை நேரிடையாகவும் மின்னஞ்சல்வழியாகவும் இந்த திரைப்படத்தை பார்க்க வேண்டி வலியுறுத்தியுள்ளேன். குழந்தைகள் இந்த படத்தை பார்த்தபின் தங்களின் பெற்றோரிடையே ஏற்படப்போகும் மாற்றங்களுக்காக நேற்றுப்போல இன்றும் அவர்களின் முகச்சாயலின் முரண்பாட்டை உற்று நோக்கியபடி..

உலக சினிமாவை பார்த்துவிட்டு உள்ளுர் சினிமாக்களை (தாரே ஜமீன் பர்) சூசூபீ என்பவர்களுக்கு நமக்கு இப்படி எழுத மட்டும்தான் தெரியும். அமீர்கான் போன்று பரிட்ச்சார்த்தமான முயற்சிகள் எடுக்கத் தெரியாது என்பதையும் மனதில் வைத்துக் கொண்டு எழுதினால் நீங்கள் எழுதுவதெல்லாம் சரியே .

பால்யம் தொட்டே
எழுத தொடங்கினேன் என்றாலும்
றெக்கை வெட்டப்பட்ட தும்பிகளாக
எழுப்பட்டவை எல்லாம்
எனக்கானதாகத்தான் தெரிகிறது
சிறுபிள்ளையின் அழுகையாய்
எல்லா பக்கங்களிலும் நிரம்ப
அம்மா மட்டும் இழுத்து அணைத்துக் கொள்கிறாள்.
இருத்தலும் மறுத்தலுமான
நெடுந்தூரப் பயணத்தில்
ராமசாமி வாத்தியார் போன்று யாரேனும்
பக்கங்களை புரட்டிப் பார்த்து
புரிதலுக்கான மொழியை சுட்டிக் காட்டியும்
புலம் பெயர்கின்றன
எழுபதப்பட்டவையெல்லாம்
இறத்தலின்போது ஒத்துக்கொள்ளப்படுகிறது
இவன் இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம் என்று.

- பாண்டித்துரை

Pin It