ஆதிக்க மரபணு என்ன செய்யும் என்று திக் திக் நிமிடங்களில் நம்மை உறைய வைக்கும் படம் தான் "ஒளிவு திவசத்தே களி" 
 
ஐந்து வெவ்வேறு வகையிலான நண்பர்கள் ஒன்று கூடுகிறார்கள். குடித்து அந்த நாளை கொண்டாடித் தீர்க்க நதி சூழ்ந்த காட்டுக்குள் இருக்கும் ஒரு தனித்த பங்களாவுக்கு செல்கிறார்கள். 
 
அது ஒரு எலெக்சன் தினம். அதற்கான விடுமுறையை அவர்கள் குடிப்பதற்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். கேமரா அசைவு இல்லை. இசையின் இம்சை இல்லை. காட்சியை நாம் ஒளிந்திருந்து பார்ப்பது போன்ற பிரமிப்பு தான். நம் ஊரில் இருக்கும் ஒரு ஐந்து பேர் கொண்ட கூட்டணி போல தான் அவர்களும் இருக்கிறார்கள்.குடிக்கிறார்கள். குடிகாரர்களின் கொண்டாட்டம் விவாதங்களின் வழியே தன் இயல்பு வாழ்வின் வக்கிரங்களை தனித்துக் கொள்கிறது. 
 
ozhivu divasathe kaliகுடிக்கும் வரை வேறு முகத்தில் இருக்கும் ஐவருமே குடித்து போதை ஏறிய பிறகு வேறு முகத்தை பூட்டிக் கொள்வது மிக துல்லியமாக காட்டப் படுகிறது. அவரவரின் ஆதி முகம், ஆதிக்க முகம் மரபணு வழியே பயணித்து இத்தனை கால பரிணாமத்தைக் கேள்வி கேட்கிறது. சமையல்காரியிடம் செய்யும் சில்மிஷங்கள்... குடிக்கே உண்டான தனிச்சிறப்பு. எப்படியாவது கோழி வெந்து முடிப்பதற்குள் அவளை வேக வைக்க எடுக்கும் முயற்சிகள், இறுதியில்.... கூட்டத்தலைவனின் கன்னத்தில் விழும் அறையில் முடிவுக்கு வருகிறது. கூப்பிட்டவுடன் கேவலம் ஒரு சமையலக்காரி தன்னோடு வரவில்லை என்ற தலைமை கிரீடம் அவரை அதன் பிறகு முள்ளாய் அழுத்துகிறது. அவ்வப்போது தானாக அனிச்சையாக அடிபட்ட கன்னத்தில் கை கொண்டு தடுவுவதில் அவருள் அந்த ஆங்காரம் தானாக போதை ஊற்றி வளர்ந்து கொண்டிருக்கிறது என்று புரிய முடிகிறது.
 
அரசு ஊழியராக இருந்து ஓய்வு பெற்றவருக்கும் வெளிநாடு சென்று பணம் சம்பாதித்து வளர்ந்து வந்த இந்த கூட்டத்தின் தலைவன்  பெரிய அண்ணாவுக்குமான சண்டையில் ஆரம்பிக்கிறது அந்த குடிகார கொண்டாட்டத்தின் முதல் ஈகோயிசம்.
 
நியாயத்தின் பக்கம் நின்று அரசு ஊழியர் பேச.. பணம் படைத்தவன்..." நீ குடிக்கறது.......திங்கற கோழி.....எல்லாமே என் காசுல வாங்கினது..." என்று சொல்ல.......சண்டை முற்றி வீட்டை விட்டு வெளியேறுகிறார் அரசு ஊழியர். அதற்குள் சரக்கு போதவில்லை என்று வாங்க சென்ற ஒரு அய்யர் உள்பட்ட மூவர் அணி வந்து விட..... இருவரையும் சமாதானம் செய்து வைக்க போராடுகிறார்கள். யாருக்கும் நிற்க முடியவில்லை. போதை தலைக்கேறிய தவிப்போடு.... மழையில் தள்ளாடியபடியே நின்று கொண்டு செய்யும் சலம்பல் குடிகாரர்களுக்கே உரித்தானது. கருத்தியலின் மூலம்... ஆதிக்க மனோபாவம் தோண்டப்பட்ட நிலையில் அவரவர்கான சாதியின் உள் நோக்கு மேலே எட்டிப்பார்க்கும் நெடியை நாம் துயரத்தோடு காண நேரிடுகிறது. குடிகார மனம் மிக குரூரமாக நிஜம் பேசி தானே தன் முகத்தைக் கீறிக் கொள்ளும் மனோபாவம் உடையது. அது தான் நிகழ்கிறது.
 
ஒரு கட்டத்தில் அந்த கூட்டத்தில் இருக்கும் தாசனை பெரியண்ணன் அவனின் நிறம் குறித்து பேசி விடுகிறார். அதற்கு கோபத்தோடு தள்ளாடிக் கொண்டே எழுந்து நின்று தலை குனிந்தபடியே தாசன் ஆங்கிலத்தில் பதில் பேசுகிறான். 
 
நான் பிறக்கும் போது கறுப்பு.. வளரும் போது கறுப்பு.....மழைல நனைஞ்சாலும் கறுப்பு.....சாகும் போது கூட கறுப்பு தான். ஆனா நீங்க பிறக்கும் போது பிங்க்.....வளரும் போது மஞ்சள்... உடம்பு சரியில்லனா நீலம். சாகும் போது மாநிறம். நீங்க என் நிறத்தை பத்தி பேசறீங்களா" என்று கேட்டு விட்டு போதையில் தலை நிமிர்ந்து அந்த வாதத்தை ஹோல்டு செய்கையில் மற்றவர்கள் ஒவ்வொருவராக அந்த இடத்தை விட்டு மௌனமாக நகர்ந்து செல்கிறார்கள். 
 
முக்கியமான நுட்பமான இடம் இது. 
 
ஒரு ப்ளாக்- கிடம் பேசி வெற்றி பெற முடியவில்லை. தங்களின் பொதுவான குறைகளை ஒரு ப்ளாக் சுட்டிக் காட்டி விட்டான். அதுவும் ஆங்கிலத்தில்.....எதிரே நின்று பேசி... தன் அறிவுத்தனத்தைக் காட்டி விட்டான்....எல்லாம் தாண்டி தங்களிடம் கோபப்பட்டு விட்டான் போன்ற பல அலசல்களை அவர்களின் முதுகு வழியே நாம் காண முடிகிறது. அவர்கள் எல்லாரும் பால்கனி சுவற்றில் கவிழ்ந்து வெளியே காட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். குரூர சிந்தனை இசையின்றி மௌனமாக நம்மை மிரட்டுகிறது. தாசனின் அரசியல் புரிதலை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அத்தனை போதையிலும் அவர்களுக்குள் இருக்கும் ஆதிக்க வெறி மிக தெளிவாக வேலை செய்கிறது....ஒருவருக்கொருவர் அது பற்றி எதுவும் பேசிக்கொள்ளாமலே.
 
ஒரு ப்ளாக் கருத்தியல் ரீதியாக கூட தன்னை முந்தி விடக் கூடாது என்ற குரூரம் ஆழ் மனதுக்குள் அனிச்சையாக பதிந்திருப்பதை நாம் உணர்ந்து கொள்ளும் நுட்பம் தான் மிரட்டல். ஆதிக்க மனம் தனக்கு தெரியாமலே அதுவாகவே விளையாட்டாக வெளிப்படுவது தான் ஆதிக்க நுட்பத்தின் தரிசனம். ஆண்டாண்டு காலாமாக ஊறிப்போன அதிகார வெறியின் அடித்தளம் தானாகவே முளைவிடுகிறது. எந்த வித குற்ற உணர்ச்சியோ பரிதாபமோ இன்றி தாசனை பலியிடும் போது நாம் பதைபதைத்து தூக்கில் தொங்குகிறோம்.
 
திருடன் போலீஸ் விளையாடுகிறார்கள். விளையாட்டில் கூட அய்யர்தான் வழக்கம் போல ஜட்ஜாகிறார். பிளாக் வழக்கம் போல திருடனாகிறான். அவனுக்கான தண்டனை மரண தண்டனை என்று விதிக்கப்படுகிறது. போலீஸ் சற்று முன் திருடனை மாற்றி கண்டு பிடித்ததற்கு ஜட்ஜ்க்கு லஞ்சம் கொடுத்து தப்பித்துக் கொள்கிறான். இறுதியில் மாட்டிக் கொள்ளும் "பிளாக்" தாசனுக்கு லஞ்சம் தர கூட வாய்ப்பு தருவதில்லை. விளையாட்டில் கூட அவன் திருடனாகத்தான் இருக்க முடியும் என்ற பொதுப்புத்தியின் நீட்சியே அவனை நிஜமாகவே தூக்கில் ஏற்றுகிறது. விளையாட்டுக்கு செய்வதாக நம்பும் மனம் அவன் பிளாக்காக இருப்பதால் மட்டுமே உருவாகி இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகையில் பதைபதைக்காமல் இருக்க முடிவதில்லை. அவன் நிஜமாக கத்தி கூச்சலிடுவது கூட அவர்களுக்கு விளையாட்டாகவே இருக்கிறது. ஒரு பிளாக்கின் மரணம் அவர்களுக்கான இயல்பாகி விடுதலில் சாதியின் கொடூர அகம் பயங்கரத்தின் கூடாரமாக இருக்கிறது. அவன் திமிறலை அடக்கி அவன் லுங்கியை எடுத்தே அவன் கழுத்தில் மாட்டி சிரித்துக் கொண்டே தொங்க விடுகிறார்கள்.
 
விளையாட்டு முடிந்து எல்லாரும் போதையில் தள்ளாடிக் கொண்டே அவரவர் இடத்துக்கு சென்று அமர்கிறார்கள். நிஜமாகவே ஜட்டியோடு கைகள் கட்டப்பட்டு தன் லுங்கியிலேயே கழுத்திறுகி செத்து தொங்கி கொண்டிருக்கும் தாசனின் கருப்பு நிறம் பல கேள்விகளோடு கருப்பு நிறத்தை இன்னும் அடர்த்தியாக சொட்டிக் கொண்டிருக்கிறது....!
 
- கவிஜி
 
Film : ozhivu thivasathe kali
Director :Sanal Kumar Sasidharan  
Language : Malaiyalam
Year : 2015
Pin It