chola movieசில கதைகளை சொல்ல முடியாது. சில கதைகளை சொல்லவே முடியாது. ஆனால் உணர முடியும். மனித வேட்கையின் தீரா பக்கங்களை தீர்க்கவே முடியாத தூரத்தில் இருந்து உற்று நோக்கும் கதை. உள் ஒன்று கொண்ட உவமையின் சுவையில் நா நீளும் நம்பிக்கையெல்லாம் காணும் காட்சியில் இல்லை. கேட்கும் குரலில் இல்லை. பார்க்கும் விழிகளில் இல்லை. அது சூழலில் இருக்கிறது. மனிதன் இன்னமும் மிருக குணத்தோடு தான் இருக்கிறான். அன்பு ஆதரவு நட்பு நம்பிக்கை பண்பு பாசம் என்று ஒரு பக்கம் தன்னை மெருகேற்றிக் கொண்டே போனாலும்.....தேவைப்படும் இடத்தில் மிருக தகவமைப்பை உள்ளிருந்து தேடியெடுத்து தேவையான அளவுக்கு பயன்படுத்திக் கொண்டு பசி ஆறி விடுகிறான்.

அன்பின் உச்சம் வெறுப்பு. வெறுப்பின் உச்சம் அன்பு.

இடையே நாடகமாடும் அற்புதத்தனத்தின் அற்பங்களில் தான் மானுடம் தன்னை நீராலும் நிலத்தாலும் காற்றாலும் வெளியாலும்.. தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இயல்பிலிருந்து வெளியேறி கோடிழுத்துக் கொண்டே செல்லும் திரைக்கதையில்.. ஆரம்பத்தில் இருந்தே ஒரு வித பதபதைப்பை நாம் உணர்கிறோம். கதாபாத்திர தன்மையிலேயே நாம் அதை உணர்கிறோம் என்பது தான் இந்த சினிமா மற்ற சினிமாவில் இருந்து வேறு படுகிறது.

தூங்க விடாத இந்த படம். தூங்கினாலும் விடாத படம்.

படத்தின் இயக்குனரை மிரட்சியோடு காண்கிறேன். மிக அற்புதமான படைப்பை யோசித்தது சரி. எழுத்தாக்கியது சரி. எப்படி படமாக்கியது.

மூன்று கதாபாத்திரங்களும் உயிரை கொடுத்து நடித்திருக்கிறார்கள். உயிரே போனாலும் நடித்திருப்பார்கள் போல. அத்தனை டெடிகேஷன். நாயகி அழுகையின் உச்சமாக வாந்தி எடுக்கும் ஒரு காட்சி இருக்கும். அதெல்லாம் சினிமாவை வாழ்விற்கு நெருக்கமாக்கும் ஒரு சோறு பதம். ரத்தம் சொட்ட மானுட மனம் அகன்று கத்தி கூச்சலிட்டு வேடிக்கை பார்க்கிறது. எந்த பக்கம் வேண்டுமானாலும் திரும்பும் மனத்தின் காயங்கள் ஒரு போதும் சரியாவதில்லை. மாறாக இன்னொரு காயத்தை சேர்த்துக் கொண்டு ஆறுதல் அடைகிறது.

கத்தி மேல் நடக்கும் கதை. கத்தியே நடக்கும் கதை.

பள்ளிக்கு கட் அடிக்க சொல்லி காதலியை அழைத்துக் கொண்டு ஒரே ஒரு நாள் காலையில் இருந்து மாலை வரை வெளியே ரவுண்டிங் கூட்டி போகிறான் ஒரு டீன் ஏஜ் வாலிபன். அவர்களுக்கு ஜீப் ஓட்டுவது அவனின் ஆசான். அவரிடம் தான் அவன் வேலை செய்கிறான் போல.

படம் ஆரம்பிக்கையில் மிக மிக மெதுவாக கண்ணில் படும் காடும் மழையும்......மலையும் சிலுசிலுப்பும்...பசுமை வனப்பில் கொட்ட கொட்ட அதிகாலை பனிக்குள் இருந்து பாவாடை சட்டை பள்ளி சீருடையில் ஒரு மந்தைக்கு தப்பிய ஆட்டுக்குட்டியாய் வீட்டிலிருந்து பயந்து பயந்து கதைநாயகி வருகிறாள். அந்த காடு தாண்டி தான் அவள் வீடு இருக்கிறது.

ஏதோ வந்து விட்டாள். ஆனால் அது அவளுக்கு பிடிக்கவில்லை. மனம் ஒப்பவில்லை. ஆழ்மனம் குறுகுறுக்கிறது. தப்பென்று பதபதைக்கிறது. காதலனிடம் கெஞ்சுகிறாள். இது வேண்டாம். திரும்பி போய்டறேன் என்று கெஞ்சும் அவள் இன்னமும் மனதளவில் சிறுமி தான். அவன் கெஞ்சி சமாதானப்படுத்த........ஜீப் கிளம்புகிறது. ஆசான் வண்டி ஓட்டும் வேலையை பார்க்கிறார். பின்னால் அமர்ந்த சற்று நேரத்தில் அவளுக்கு விளையாட்டு காட்டி சிரிக்க வைக்கிறான். அவளும் கொஞ்சம் சமாதானம் ஆன மாதிரி ஆகி விடுகிறாள். அவர்களுக்குள் காதல் அழகாய் மழை ரசிக்கிறது. கிசுகிசுகிறது. பூ போல தூவும் மழையும்...பூவாகவே தூவும் பனியும் காதலின் விளையாட்டு வெகு அழகாய் அர்த்தம் சேர்க்கிறது.

காடு விட்டு நகரம் வருகிறார்கள். அவள் ஆவென பார்க்கிறாள். ஒவ்வொரு கட்டடமும் அவளுக்கு அற்புதம் பூசுகிறது. புது சுடிதார் வாங்கி தருகிறான். அவளுடலில் அழகு கூடுகிறது. கடற்கரையில்... இருவரும் சிறுபிள்ளைகளாக விளையாடுகிறார்கள். ஒரு காலியான மது போத்தல் எதற்கோ குறியீடாக அவர்களை சுற்றி சுற்றி அலையில் வந்தும் போயும் இருக்கிறது. அலையின் சத்தமும்.... காலி மது போத்தலின் மௌனமும் எதையோ நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறது.

மாலை ஆகிறது. சரி கிளம்பலாம் எனும்போது காதலனுக்கு அவன் நண்பனிடம் இருந்து போன் வருகிறது. விஷயம் வீட்டுக்கு தெரிந்து விட்டது என்று.

கேள்விப்பட்டு அவள் அழுகிறாள். "சொன்னேன் கேட்டியா...இப்ப எப்டி போறது. என்னன்னு சொல்றது" என்று அவனை சிறுபிள்ளை பாவனையில் அடிக்கிறாள். அவன் கெஞ்சி அவள் கையைப் பற்றிக் கொண்டு சாமாதானப் படுத்துகிறான். ஆசான் உதவ முன் வருகிறான்.

"நான் பாத்துக்கறேன். அமைதியா இருங்க" என்கிறான். அந்த இரவு ஒரு நான்காம் தர லாட்ஜில் ரூம் போடப்படுகிறது.

அவளுக்கு உள்ளே அலாரம் அடிக்கிறது. எதுவோ சரி இல்லை. நமக்கும் உள்ளே மரம் அசைகிறது. காற்று வீசுகிறது. அருவியின் ஆரம்பம் உறுமிக் கொண்டிருக்கிறது. அவள் தயங்கி தயங்கி ரூம்க்குள் செல்ல மறுக்கிறாள். இப்பிடியே பஸ் பிடித்து போய்டலாம் என்று கெஞ்சுகிறாள். அவன் இந்த ராத்திரி எங்கன்னு போறது... என்று பதிலுக்கு கெஞ்சுகிறான். முன்னால் சென்று கொண்டிருக்கும் ஆசான் இருவரின் செய்கைகளையும் கவனித்து விட்டு " அமைதியா இரு..... இது வீடுல்ல..... லாட்ஜ்.." என்று மிரட்டும் தொனியில் அடிக்க வருகிறான். அமைதியாக பின்னால் செல்கிறார்கள். பரிதவிப்பில் அவள் அவன் கையை பற்றி வா வா என்று ஜாடை செய்து அவன் இழுக்க இழுக்க மெல்ல மெல்ல உடன் செல்கிறாள்.

ரூமுக்குள் சென்றதுமே ஆசான்... அவனை "போய் சாப்பிட ஏதாவது வாங்கிட்டு கூட சரக்கும் வாங்கிட்டு வா" என காசு நீட்டுகிறார்.

அவன் தயங்குகிறான். பார்வை அவள் மீது விழுகிறது. அவள் வேண்டாம் வேண்டாம் என்று ஜாடை செய்கிறாள். ஒரு பொம்மலாட்டம் அங்கே நிழல் மறைவில் ஆரம்பமாகிறது.

"போடானா.. போ.....போயிட்டு வா..." என்று சொல்லி மிரட்டுகிறான். அவன் தயக்கத்தோடு கிளம்ப எத்தனிக்கிறான். அவள் வேண்டாம் வேண்டாம் என்று ஜாடையில் கதறுகிறாள். அவன் தயங்கி........பயந்து கொண்டே மிரட்சியோடு அங்கிருந்து ஓடுகிறான்.

"நீ போய் குளி" என்று அவளை பார்த்து கட்டளையிடுகிறான். அவள் நடுங்கிக் கொண்டே குளியலறைக்குள் செல்கிறாள். எல்லாமே மெல்ல மெல்ல காலத்தின் மீது பூரான் ஊரும் காட்சிகள். கண்களாலும் காதுகளாலும் நகரும் காட்சிகள். என்னவோ நடக்க போகிறது என்று மூளை நம்புகிறது. மிக பெரிய அசம்பாவிதங்கள் எல்லாம் அந்த நேரத்தில் தீர்மானிக்கப்படுவன. அவள் குளியலறையில் அமர்ந்து வாய் பொத்தி அழுகிறாள். காதலை நம்பி வந்து என்னென்னவோ நடந்து கொண்டிருக்கிறது. எதுவுமே சரி இல்லை. அவள் பயந்து நடுங்கி அழுது அரட்டுகிறாள்.

"இன்னும் குளிக்கலயா"... வெளியிருந்து அதிகார சத்தம். சத்தத்துக்கு கட்டுப்பட்ட அவளுடல் தானாக நீரை மொண்டு மொண்டு தலையில் ஊற்றுகிறது. அவள் கண்கள் யோசித்துக் கொண்டேயிருக்கிறது. சிங்கத்தின் குகைக்குள் இருந்து கண்டிப்பாக தப்பிக்கவே முடியாது. அவளின் ஆழ்மனம் எதையோ சமாதானப் படுத்துகிறது. ஆடை கழற்றாமலே குளித்தவள் அப்படியே தொப்பலாக வெளியே வருகிறாள். ஈரம் சொட்ட அவள் கண்ணாடியை உற்று நோக்குகிறாள். நனைந்திருந்த அவளாடையில் சட்டையைத் தாண்டி பூத்து குளிர்ந்த உள்ளாடை அவள் பருவம் சொட்டுகிறது. கண்ணாடியை பார்த்துக் கொண்டே நிற்கிறாள். டிவியை பார்த்துக் கொண்டே அமர்ந்திருக்கும் ஆசான்.. அப்படியே அமர்ந்திருக்கிறான். சற்று முன் குடித்த சரக்கின் வேகம் அவன் முகத்தில் கனிந்துக் கொண்டிருக்கிறது. அவள் நடுங்கி கொண்டே கண்ணாடியை பார்க்கிறாள். அவன் டிவியைப் பார்த்துக் கொண்டேயிருக்கிறான்.

வெளியே சரக்கும் டிபனும் வாங்கி ஓடி வந்து கொண்டிருக்கிறான் காதலன். கேமரா யாருமே இல்லாத அந்த வீதியை துழாவுகிறது. ஒரு வெறி பிடித்த கருமம் இரவை பிராண்டுகிறது. ஆஅஹ் என கத்திக் கொண்டு அலையும் கேமராவை கண்டு நாம் அஞ்சுகிறோம்.

அந்த காதலனின் அழுகை இயலாமையில் சிக்கிக் கொண்டு உடல் பலமும் இல்லாமல் உள்ள பலமும் இல்லாமல்.. ஒரு பைத்தியக்காரனைப் போல "ஏன் ஆசானே... இப்டி பண்ணின?" என்று கேட்டு உதை வாங்குகையில்... இயலாமையின் பிடியில் அடிமையாய் கிடப்பதை அவன் ஆழ்மனமும் விரும்புகிறது. அது ஆரம்பமும் அற்ற முடிவும் அற்ற ஒருவகை ஆண்டான் அடிமை நீட்சி. அடுக்குத் தொடர். பலசாலியின் முடிவை பலமில்லாதவன் கேட்டுக் கொள்ளத்தான் வேண்டும். அவஸ்தைக்குள் இருக்கும் அனுகூலத்தை ரசிக்கும் மானுட பிறழ்வு அங்கே அரங்கேறுகிறது. மண்டைக்குள் தடுமாறும் அவனின் அழுகையும் அரட்டலும் அவ்விரவை அந்த வாசலிலேயே கழிக்க செய்கிறது. ஆசான் ஜீப்பில் கிடக்க.. அவள் உள்ளே தாழிட்டு அழுது கொண்டிருக்கிறாள்.

நூலிழையில் தான் சம்பவங்கள் தீர்மானிக்கப்படுகின்றன. தப்பித்துக் கொள்ளும் வாய்ப்பை சாக போகும் எலி வேண்டுமென்றே விட்டு விடுதலில் ஒரு சுய பச்சாதாபமும் கழிவிரக்கமும் தன்னையே மேய்ந்து கொள்கிறது. திருடனுக்கு தேள் கொட்டுகையில்... திரை மறைவில் வாய் பொத்தி அழுவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும். தப்பித்துக் கொள்ளுதல் தான் புத்திசாலித்தனம். ஆனால் தொடர்ந்து போராடி மாட்டிக் கொள்தலில்... சரணடைதல் இருக்கிறது.

விடியலில் மிக இயல்பாக சீக்கிரம் கிளம்புங்கள் போலாம் என்று ஜீப்பை எடுக்கிறான் ஆசான். ஜீப் ஊருக்குள் செல்லாமல் ஒரு காட்டுக்குள் வழியே இல்லாமல் வழி செய்து கொண்டே சென்று அருவிக்கு அருகே நிற்கிறது. வண்டியில் அமர்ந்து கொண்டு "ஆசான் எங்க ஆசான் போறோம்... வேண்டாம் ஆசானே... வீட்டுக்கு போயிரலாம்" என்று கெஞ்சும் போதே நமக்கு பெரிய சம்பவங்கள் நிகழ போகிறது என்று புரிந்து விடுகிறது. அவள் அழுகிறாள். விரும்பி அழுவது போல நாம் புரிந்து கொள்ளலாம்.

அவள் தலை கலைந்த ஒரு பைத்தியத்தின் ஆரம்ப நிலையை எட்டி இருக்கிறாள். அந்த காடு மிக கோரமான தன் உடலைத் திறந்து காட்டிக் கொண்டிருக்கிறது. இடையே வந்து விழுந்து அடித்துக் கொண்டு ஓடும் ஆற்றுக்கு கருணையே இல்லை. அங்கே ஒரு வதம் நிகழ காத்துக் கொண்டிருக்கிறது. ஆசானுள் இருக்கும் மிருகம் முழுதாக தன்னை உருமாற்றிக் கொள்கிறது. ஆடிக் களிக்கிறான்.

அவன் மகுடி ஊத அவள் ஆட துவங்குகிறாள். அழுகையை விசும்பிக் கொண்டே அவன் பின்னால் சற்று முன் பிறந்த பிசாசுக் குட்டியாய் நடக்கிறாள். அவன் அவளை கரையில் அமர்த்தி விட்டு நீரில் நீந்துகிறான். நீச்சலின் வழியே குதூகலத்தை நியாயப்படுத்துகிறான். அவளை இழுத்து நீருக்குள் போட்டு புரட்டுகிறான். அருவியின் பாறை நடுவே வைத்து அவளை நீர் கொட்ட கொட்ட நீராடுகிறான். மீண்டும் கரையில் விட்டு விளையாட்டு காட்டுகிறான். இடையே கரையில் நின்று மனம் வெதும்பி.... துரோகத்தை தாங்கும் சக்தியற்று அழுது நடுங்கி "ஆசானு வேண்டாம் ஆசானே." என்று கத்திக் கொண்டி இருக்கும் காதலன் செய்வதறியாது காடுகளில் ஓடி ஓடி தன்னை பைத்தியமாக்க முயற்சிக்கிறான். மனமும் உடலும் வேறு வேறு திசையில் அலைக்கழிந்து அல்லாடுகிறது. தலையை பிய்த்தபடி கரகரவென கத்தும் போது அவனை சூழ்ந்திருக்கிறது நம் கண்ணுக்கு தெரியும் நரகம்.

அதன் நீட்சி.....யில்.. ஒரு ரத்த களரி நிகழ்கிறது. அதற்கு எதிரே நின்று அவள் அழுகிறாள். இந்த இடம் தான்.. மனித மனதின் குறுக்கு வெட்டு தோற்றதை புரிந்து கொள்ளவே இயலாத நுட்பத்தின் கிழிசல். மிக ஆதுரமான எதிர்திசையில் அழுது அரற்றும் அரூப வெளிப்பாட்டை பயந்து கொண்டே நாம் கடக்கிறோம். பிராய்டுக்கும் அடங்காத மனம் அங்கே ஆள் மாற்றி விசும்புகிறது.

கட்டுப்பாடற்ற ஆறு சுழன்று சுழன்று இந்தக் கதையை கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டே இருக்க... அந்த இரவு முழுக்க அவள் சிறு சிறு கற்கள் கொண்டு ஸ்தூபி செய்கிறாள். தொட்டால்..... அசைந்து விடும்.......விழுந்து விடும்......சரிந்து விடும் ஆசுவாச நிலையை அவள் நடுங்கும் உடலை கொண்டு விசும்பிக் கொண்டே காண்கிறாள். பாறையின் இடுக்கில்.... நீர் வற்றிய ஒரு கடல் கன்னியாக சுருண்டு கிடக்கிறாள். காதலன் விடியலில்... வெற்றி கொண்டு சிரிப்பும் அழுகையுமாக அவளிடம் வந்து கண்கள் விரிய ஒரு பிசாசின் வன்மத்தோடு சிரிக்கிறான்.

அடுத்த சில நொடிகளில் மெல்ல நிதானமாக அவள் ஒரு சம்பவத்தை நிகழ்த்துகிறாள். அது சூட்சமம் அற்ற சுயமற்ற வெறுப்பின் உச்சத்தில் பிறக்கும் எதிர் நிலை அன்பு என்று நாம் முடிவுக்கு வரலாம். பயத்தின் உச்சம் சரணடைவது. ரத்தமும் சதையுமாக ஒப்புக் கொடுப்பது. அதற்கு அவள் எடுத்த ஆயுதம் பாய்ச்சிய நங்கூரம்....பார்க்கும் மனதை வெறி கொண்டு தாக்கும் மானுட மாயங்கள். மாயத்தின் விளிம்பில் அந்த ஆற்றின் சூழல் ரத்தமும் யுத்தமுமாக சுழன்று கொண்டேயிருக்கிறது. சுழல சுழல மனிதனின் மாயம் இங்கே மனிதனை மனிதனிடம் மாற்றி மாற்றி காட்டிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. மகத்தான நம்பிக்கை துரோகத்தால் அடையாளப்படுத்தப் படுவதை நாம் மிக அச்சத்தோடு உணர்கிறோம்.

உண்மையில் மனிதனுக்கு அடையாளம் இல்லை. அவன் இன்னமும் மிருகம் தான்.

Film: Chola
Language: Malayalam
Director: Sanal Kumar Sasitharan
Year : 2019

- கவிஜி

Pin It