சந்தேகமில்லாமல் மன்னா டே இந்தியாவின் ஈடில்லாத பாடகர் தான். இந்தியிலும், வங்க மொழியிலும் அவரது பாடல்களைக் கேட்டுக் கிறங்காதாரில்லை. 1950கள் தொடங்கி 70கள் வரை அவரது இசைப்பயணம் நிற்காமல் தொடர்ந்தது. இந்தி இசையுலகில் அன்றைக்கு ஆட்சி நடத்திக்கொண்டிருந்த முகமது ரஃபி, கிஷோர் குமார், முகேஷ் ஆகியோருடன் மன்னா டேயும் இந்திய இசை வானின் உச்சத்தைத் தொட்ட ராஜாளிதான். 3500 பாடல்களுக்கும் அதிகமாகப் பாடிய மன்னா டேவுக்கு இன்று வயது 90. ரொம்பத் தாமதமாக அவருக்கு 'தாதா சாகேப் பால்கே' விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவரது சமகாலத்துப் பாடகர்களெல்லாரும் பால்கே விருதை எப்போதோ பெற்றுவிட்டனர். மன்னா டேயின் நினைவு இப்போதுதான் மத்திய அரசுக்கு வந்ததோ என்னவோ.
மன்னா டே பிறந்தது மேற்குவங்க மாநிலம். தந்தை பூர்ண சந்திரா, தாய் மஹாமாயா டே. 1919 ஆம் ஆண்டு மே மாதம் முதல் நாளன்று பிறந்த மன்னா டேயின் இயற்பெயர் பிரபோத் சந்திர டே. அவரது பழமைப்பிடிப்புமிக்க கூட்டுக் குடும்பத்தில் அவரது இளைய மாமன் கிருஷ்ணசந்திர டே தான் மன்னா டேயின் இசை ஆர்வத்துக்கு தூண்டுகோல். கிருஷ்ணசந்திரர் லேசுப்பட்டவர் இல்லை. இசைப்புலி. சங்கீதத்தைக் கரைத்துக் குடித்திருந்த அவரை 'சங்கீதாச்சார்யா' கிருஷ்ணசந்திரர் என்றுதான் எல்லோரும் அறிந்து வைத்திருந்தனர். பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரியில் நுழைகிறபோதே பாடுவதில் தனித்திறனை வெளிப்படுத்தினார் மன்னா டே. மாமா கிருஷ்ணசந்திரர், உஸ்தாத் தாபீர் கான் ஆகியோரிடம் முறையாக இசை பயின்றார். இந்தச் சமயத்தில் கல்லூரிகளுக்கிடையே நடந்த பாடல் போட்டிகளில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளும் மன்னா டே தான் முதல் பரிசை வெல்பவராக இருந்தார்.
1942 ல் தனது மாமா கிருஷ்ண சந்திரருடன் மும்பை நகருக்கு மன்னா டே இடம்பெயர்ந்து போனார். அங்கே முதலில் மாமா கிருஷ்ண சந்திரரிடமும் பின்னர் புகழ்பெற்றிருந்த சச்சின் தேவ் பர்மனிடமும் (அன்றைய பிரபல இசையமைப்பாளர் எஸ்.டி.பர்மன்) உதவியாளராகப் பணியாற்றினார் மன்னா டே. பின்னர் வேறு சில இசையமைப்பாளர்களுக்கு உதவியாக இருந்தவர், தனித்து இயங்கத் தொடங்கினார். பல இந்திப் படங்களுக்கு இசையமைத்துக்கொண்டே உஸ்தாத் அமன் அலி மற்றும் உஸ்தாத் அப்துல் ரஹ்மான் கான் ஆகியோரிடம் இந்துஸ்தானி செவ்வியல் இசையைப் பயில்வதைத் தொடர்ந்தார்.
1943 ல் அதாவது மும்பை வந்து ஒரே ஆண்டுக்குள் இத்தனையையும் செய்து முடித்த மன்னா டே முதன் முதலாக 'தமன்னா' எனும் இந்திப் படத்தில் பின்னணிப் பாடகராக அறிமுகமானார். இசை அவரது மாமா கிருஷ்ணசந்திரர்தான். மன்னாவுடன் இணைந்து பாடியது சுரய்யா. பாடல் உடனடி வெற்றியைப் பெற்றது.
1952 ல் மராத்தியிலும் வங்க மொழியிலும் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்ட 'அமர் பூபாலி' படத்தில் மன்னா டே பாடியபின்னர்தான் அவருக்குப் புகழ் கூடியது. டே இசை மேதை பீம்சேன் ஜோஷியுடன் இணைந்து ' கேடாகி குலாப் ஜூஹி' யைத் தந்தார். ஷோலேயின் ' ஏ தோசுதி... ஹம் நஹி தோரங்கே' யை கிஷோர் குமாருடன் இணைந்து பாடியபோது இந்தி இசைப்பிரியர்கள் மட்டுமல்ல, இந்தியர்கள் எல்லோருமே மொழி கடந்து அந்தப் பாடலைக் கொண்டாடினார்கள். படத்தில் அமிதாப் பச்சனும், தர்மேந்திராவும் மன்னா டே- கிஷோர் குமார் ஜோடிக் குரல்களின் வழியாக ரசிகர்களிடையே ஒரு துள்ளலையே உண்டுபண்ணினார்கள். அந்த நாளில் ஷோலே சூப்பர் ஹிட் என்றால், இந்தப் பாடல் 'மெகா ஹிட்' ஆனது.
மன்னா டே பன்முகத்தன்மை கொண்ட பாடகர். வேறு எந்தப் பாடகரிடமும் இல்லாதது இந்தத் தனித்திறன். கிஷோர் குமார், முகமது ராஃபி, முகேஷ் போன்ற பாட்டுப் புலிகளுக்கு இணையாக மிகச் சுலபமாகப் பாடிவிடுவார் மன்னா டே. ஆனால், மன்னா டேயின் தனித்துவ நுட்பம் நிறைந்த குரலை அடியொற்றி வேறு எந்த முன்னணிப் பாடகராலும் அவரைப் போல பாடவே முடியாது என்பதுதான் நிலைமை. கவ்வாலி பாட்டாகட்டும், ராக் அண்டு ரோல் ஆகட்டும் இசையமைப்பாளர்களின் முதல் தேர்வாக மன்னா டே தான் இருப்பார். பக்தி ரசமா, காதல் கனிரசம் ததும்பும் பாடலா எதிலும் அசத்துவதில் மன்னா டேக்கு இணை மன்னா டே மட்டும்தான். புகழின் உச்சத்திலிருந்த முகமது ராஃபி ஒரு சமயம் இப்படிச் சொன்னார்: "மக்கள் என் பாடல்களை விரும்பிக் கேட்கிறார்கள் என்பது இருக்கட்டும், ஆனால் நான் மன்னா டேயின் பாடல்களைத்தான் எப்போதும் விரும்பிக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்." சக பாடகராலேயே மகுடம் சூட்டப்படுவது எல்லோருக்கும் வாய்க்ககூடியதா? மன்னா டே எனும் பிரபல பாடகர் தனியொரு சாம்ராஜ்ய சக்கரவர்த்தியாக மிக உயரத்தில் கொலு வீற்றிருந்த அதிசயத்தின் ரகசியம் இதுவும்தான். இன்னும்கூட இருக்கிறது அவரது தனித்துவ ஆற்றலின் பட்டியல் வரிசை.
மேற்கத்திய பாப் இசையுடன் அமைதி தவழும் இந்துஸ்தானி செவ்விசையை நேர்த்தியாகக் குழைத்துத் தருவது மன்னா டேக்குப் பெருவிருப்பமான செயல். ஹேமந்த் குமார் போன்ற வங்காள மொழி இசையமைப்பாளர்களோடு திறம்படப் பணியாற்றியிருக்கிறார் மன்னா டே. 'கே புரோதோம் கச்சே எசேச்சீ' என்ற பாடலை வங்க மொழியில் அவர் லதா மங்கேஷ்கருடன் இணைந்து பாடியதன் பின்னர் வங்கத்தின் முதல் வரிசைப் பாடகரின் இடத்தைப் பிடித்துக்கொண்டார் மன்னா டே. இசையில் எந்த வகைக்கும் இயைந்துபோகும் அவரின் தனித்துவ அழகே அவரை இந்திப் படவுலகின் பிரபலமான பிரதானத் தளத்திலும், செவ்வியல் இசைத் தளத்திலும் ஒருசேர நடைபோட வைத்தது. பல மொழிகளிலும் ஆயிரக்கணக்கில் பாடல்களை வழங்கியிருக்கும் மன்னா டே, உலகெங்கும் தனது ஈர்ப்புமிகு இசை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார்.
ரசிகர்களைத் தனது இனிய குரலால் அவர் மயக்கத் தவறியதே இல்லை. ஒரு உண்மையான இசைக்கலைஞனுக்கு அது ஒன்றும் அவ்வளவு கடினமான காரியமும் இல்லை. மன்னா டே அத்தகையதொரு உண்மைக் கலைஞன். மன்னா டே இன்னுமொரு பாடல் பாடமாட்டாரா என்றுதான் ரசிகர்கள் எப்போதும் ஏங்கியிருக்கிறார்கள். மலையாளத்தில் 'செம்மீன்' படத்தில் அவர் பாடிய 'மானச மைனே வரு' பாடலை ரசிகர்கள் இன்னும்கூட நினைவில் வைத்திருக்கிறார்கள். கேரளத்துடனான அவரின் பந்தம் சுலோச்சனா குமாரனை அவர் மணந்ததன் மூலமும் தொடர்ந்தது. குளிர் நிறைந்த ஒரு டிசம்பர் மாதத்தில்தான் மன்னா டே சுலோச்சனா குமாரனை மணந்தார். அது நடந்தது 1953ல். மன்னா டே தம்பதிக்கு ஷுரோமா மற்றும் சுமித்தா என்று இரண்டு செல்ல மகள்கள்.
பத்மஸ்ரீ, பத்ம பூஷன் உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றிருக்கும் மன்னா டேக்கு தற்போது தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவது உலகமெல்லாம் வாழும் அவரின் கோடிக்கணக்கான ரசிகர்களை பெருமகிழ்ச்சிகொள்ளச் செய்திருக்கும் இனிய தருணமாகும். வங்க மொழியிலும், மராத்தியிலும் அவரது சுயசரிதை 'ஜிபோனேர் ஜல்சாகோரே' என்ற பெயரில் நூலாக வந்துள்ளது. அது ஆங்கிலத்தில் 'மெமரீஸ் கம் அலைவ்' எனும் பெயரிலும், இந்தியில் ' யாதேன் ஜீ உதி' என்றும் வெளிவந்துள்ளன. 2008 ல் அவர் பற்றிய ஒரு ஆவணப்படமும் வந்துள்ளது. மன்னா டே பற்றிய முழுமையான தகவல்களை 'மன்னா டே சங்கீத் அகாடமி' ஆவணப்படுத்தி வருகிறது. 50களில், 60 களில், 70 களில் பாலிவுட் இசைவானில் மன்ன டே மட்டுமே தனி சிம் மாசனத்தில் கோலோச்சினார். தமன்னா-வில் தொடங்கிய அவரது இசைப் பயணம் கவிதா, மகாகவி காளிதாஸ், ஆவாரா, பூட் பாலிஷ், ஸ்ரீ 420, காபூலிவாலா, வக்த், லவ் இன் டோக்கியோ, உப்கார், ராத் ஒளர் தின், ஆம்னே சாம்னே, படோசன், நீல் கமல், ராம் ஒளர் ரகீம், மேரா நாம் ஜோக்கர், சீத்தா ஒளர் கீத்தா, இந்துஸ்தான் கி கசம், ஜஞ்சீர், பாபி, ஷோலே, போங்கா பன்டிட், ஜெய் சந்தோஷிமா, அமர் அக்பர் அந்தோனி, சத்யம் சிவம் சுந்தரம், பிரகார் என்று தொடர்ந்தது. நூற்றுக்கணக்கான படங்கள். பல்லாயிரக்கணக்கான பாடல்கள்.
"அது அந்தக் காலம். அப்போதெல்லாம் இசையமைப்பாளர்கள் ஒரு பாடலை உருவாக்க மாதக்கணக்கில் எடுத்துக் கொள்வார்கள். பாடகர்கள் ஐந்து நாட்கள், ஆறு நாட்கள் என்று ஒரு பாடலைப் பாட ஒத்திகை பார்ப்பார்கள். இப்போது ஒத்திகை என்றால் என்ன என்றாவது யாருக்காவது தெரியுமா?"- என்று சிரித்துக் கொண்டே கேட்கிறார் மன்னா டே. அவருக்கு இன்னொரு ஆச்சரியமும் இருக்கிறது. அது, " இப்போது வரும் படங்களில் ஏன் எல்லா பாடல் காட்சிகளிலும் ஆடுகிறார்கள்?" - இப்படித் தனது நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தும் மன்னா டே தற்போது பெங்களூருவில் வசித்துவருகிறார்.
மேற்குவங்க மக்களாகட்டும், பெங்களூருவின் மற்ற ரசிகர்களாகட்டும் சமுதாய நலன் கருதி தன்னை அணுகும் எவரையும் தட்டாமல் பொது மேடைகளில் இசை நிகழ்ச்சிகளை இன்றைக்கும் நடத்தி, துடிப்புடன் இயங்கிக்கொண்டிருக்கிறார் மன்னா டே. இப்போதாவது அவருக்கு பால்கே விருது தரவேண்டும் என்று முடிவெடுத்தார்களே, அதுவே எங்களுக்கு மகிழ்ச்சிதான் என்று சொல்லுகிறார்கள் மன்னா டே எனும் அந்த முதுபெரும் பாட்டுக்காரனின் இசையுலக சகாக்கள்.
- சோழ. நாகராஜன்