பெண் விடுதலை குறித்த பாடல் ஒலிப்பெருக்கியின் வழியே செவிக்குள் ஊடுருவுகிறது. சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையின் ஒரு ஓரத்தில் கூட்டம் குவிகிறது. அது சும்மா பொழுது போக்குகிற கூட்டமல்ல. பொழுதை திட்டமிட்டு அறிவுத் தளத்தில் செயல்படுகிற, சமூகத்தின் மீது அக்கறை கொண்ட கூட்டம். அவர்களோடு பொது மக்களும் வந்தமர்கிறார்கள். அவர்களின் எதிரே ஆவணப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்த்தன் நிற்கிறார். அவருக்குப் பின் திரை கட்டப்பட்டிருக்கிறது. அவரது “போரும் அமைதியும்” திரையிடயிருப்பதாக துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தார்கள்.
மும்பையைச் சேர்ந்த ஆனந்த் பட்வர்த்தன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆவணப் படங்களை இயக்கி வருபவர். இதுவரை 13 படங்கள் இயக்கியிருக்கிறார். அவரது படங்கள் அனைத்தும் பட்டாளி மக்களின் துயரங்களையும் சாதி, மத வெறியாட்டங்களால் ஏற்படும் பிளவுகளையும் உலக அமைதிக் கருத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டவை.
பட்வர்த்தனுடைய “போரும் அமைதியும்” (வார் அண்டு பீஸ்) ஆவணப்படம் பெஸ்ட் டாக்குமென்டரி, தேசிய விருது - 2003, பெஸ்ட் டாக்குமென்ட்ரி சர்வதேச விருதுகள் உள்ளிட்ட ஒன்பது விருதுகளை பெற்றுள்ளது. பொக்ரானில் நடத்தப்பட்ட அணுகுண்டு சோதனைக்குப்பின் இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்தப் படத்தை பட்வர்த்தன் படமாக்கியுள்ளார். வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் வேளையில் அமைதிக்காக போராடும் மக்களைப் பற்றிய படம்தான் போரும் அமைதியும்.
இந்த படம் கடந்த ஆண்டு எலியட்ஸ் கடற்கரையில் ஆங்கிலத்தில் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பு பெற்றதாக படத்தை திரையிட்டவர்கள் கூறுகிறார்கள். இந்த ஆண்டு இதே படம் ஞாயிறு (நவம்பர் 20) அன்று இதே கடற்கரையில் தமிழ் மொழியாக்கத்துடன் சப்-டைட்டில்ஸ் தமிழில் கொடுக்கப்பட்டு திரையிடப்பட்டது.
திரையிடுவதற்கு முன் இயக்குநர் தன்னுடைய சில அனுபவங்களை பார்வையாளர்களோடு பகிர்ந்துகொண்டார். 1945 ல் அமெரிக்க ஏகாதிபத்திய வெள்ளை அரசு யுரேனியம், ஹைட்ரஜன் குண்டுகளால் தன்னுடைய வெறித்தனமான தாக்குதலை ஜப்பான் இரட்டை நகரங்களான ஹிரோஷிமா - நாகசாகி மீது தொடுத்தது. 1998ல் இந்தியா தனது வல்லமையை நிரூபிக்க பொக்ரானில் அணு ஆயுத சோதனை நடத்தியது. அத்தகையதொரு இக்கட்டான ஆண்டாக கருதப்பட்ட 1998 ல் இந்தப்படம் துவக்கப்பட்டு சுமார் நான்கு ஆண்டுகள் கழித்துதான் நிறைவு பெற்றதாக ஆனந்த் பட்வர்த்தன் கூறினார். இந்த படத்திற்கு தமிழில் பின்னணி குரல் கொடுத்திருப்பவர் சென்னை கலைக்குழுவைச் சேர்ந்த பிரளயன். 93 நிமிடங்கள் வரை ஓடக்கூடிய இப்படம் முழுக்க முழுக்க போர் குறித்தும் அமைதி குறித்தும் பேசுவாதாக எடுக்கப்பட்டுள்ளது.
நேரடியாக மக்களிடமிருந்து அமைதி குறித்து அவர்களுடைய கருத்துப் பகிர்வையும் ஆதங்கத்தையும் இப்படம் பதிவு செய்திருக்கிறது. மேலும் இந்தியா - பாகிஸ்தான் இரு நாடுகளின் ஒற்றுமை குறித்து மக்கள் தங்களின் உணர்ச்சிமிகுந்த உணர்வுகளோடும் மத அடிப்படை அரசியல்வாதிகளை சாடுவதையும் இப்படம் பேசுகிறது என்றார் பட்வர்த்தன்.
படம் மொத்தம் 6 பகுதிகளாக பிரிக்கப்படிருக்கிறது.
1. அகிம்சையிலிருந்து அணு ஆயுத தேசியம்.
2. பகைநாடு (எள்ளல் தொணியில்)
3. எல்லைக்கோடு (கார்கில் யுத்தத்தை ஒட்டியது)
4. மரபு சார்ந்த சொத்து
5. அறிவியலின் வெற்றி
6. அமெரிக்காவின் கீதம்
மூன்றாம் உலக நாடுகளாகிய இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு அமெரிக்காவைப்போல் வாழ வேண்டும் என்ற நிலைப்பாடு இருக்கிறது அதை சுட்டிக் காட்டுவதாக இறுதிப் பகுதியான ‘அமெரிக்காவின் கீதம்’ பகுதி இருக்கிறது. படத்தின் இறுதியில் அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தாக்கப்பட்டதும் பின் இணைப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இயக்குநர் தெரிவித்தார்.
அரசாங்க அதிகாரிகளிடமும் பொது மக்களிடமும் அமைதிக்காக போராடுபவர்களிடமும் நேருக்கு நேர் பேசி உலக அமைதியின் முக்கியத்துவத்தையும் அதனை அடையும் வழிகளையும் நிலைநாட்டுகிற படமாக போரும் அமைதியும் ஆவணப்படத்தை ஆனந்த் பட்வர்த்தன் படைத்திருக்கிறார்.
- இலாகுபாரதி