நகைப்புக்குரியவளாய்ப் பிறந்து புன்னகை தேவதையான பிங்கி!

Pinki பிங்கி. இதுதான் அவளது இயற்பெயர். ஆனால் ஊரிலே எல்லாம் அவளை ‘ஹோத் காட்டி' என்றுதான் அழைப்பார்கள். அழைப்பது மட்டுமல்ல, கேலி - கிண்டல் செய்வார்கள். அதென்ன ‘ஹோத் காட்டி' இதற்கு ‘கிழிந்த உதட்டுக்காரி' என்பது பொருள். ஆமாம், அந்த எட்டு வயதுச் சிறுமி பிங்கி பிறந்த போதே தனது உதடுகள் பிளந்த நிலையில், பற்கள் கோரமாக வெளித்தெரிய, ஒரு சபிக்கப்பட்ட பெண் எனும் சாபத்தோடேயே பிறந்தாள்.

உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி எனும் காசி மாநகரிலிருந்து 90 நிமிடப் பயண தூரத்திலிருந்து ராம்பூர் தவய் என்னும் அந்தச் சின்னஞ்சிறிய ஊர். அது மிர்சாபூர் மாவட்டத்திலிருக்கும் ஒரு ஒதுக்குப்புற கிராமம். இங்கு வறுமை நிறைந்த தலித் குடும்பத்தில் பிறந்தவள் தான் இந்தப் பிங்கி. பிறக்கும் போதே உடன் பிறந்த அந்த உதட்டுப் பிளவு எனும் குறைபாட்டினால் பிங்கியின் அந்த அழகிய பிஞ்சுமுகம் பிறரின் கண்களுக்கு அவலட்சணமாகவே பட்டது. ஊர்க்காரர்கள் கிடக்கட்டும், பிங்கியைப் பெற்ற தாய் ஷிம்லாதேவி என்ன சொன்னாள் தெரியுமா? “என்னாலேயே என் மகளின் கோர முகத்தைக் காணச் சகிக்கவில்லையே, பிறகு எப்படி நான் என் அண்டை - அயலாரைக் குற்றம் சொல்ல முடியும்?''

குழந்தைப் பருவத்துக் குறும்புகளும், துறுதுறுப்பும் நிறைந்திருந்தாள் பிங்கி. எல்லாக் குழந்தைகளையும் போலவே அவளுக்கும் தெருவில் கூடி விளையாடக் கொள்ளை ஆசையிருக்கும். ஆனால் அவள்தான் அவலட்சணப் பிறவி ஆயிற்றே! அகோர முகம் கொண்டவளாயிற்றே! அக்கம் பக்கத்துக் குழந்தைகள் எல்லாம் பிங்கியை வெறுத்து ஒதுக்கின. வீட்டிலும் பெற்றோரின் அன்பைப் பெற அவளது முகமே அவளுக்குத் தடை போட்டிருந்தது. இந்த நிலையில்தான் அவள் பள்ளி செல்லும் வயதும் வந்தது. பள்ளிக்கூடத்தில் அவளைச் சேர்த்துக் கொள்ளவே அசூயைப்பட்டனர் ஆசிரியர்கள். மற்ற குழந்தைகளுக்கும் சங்கடம் ஏற்படும் என்றும் சாக்குப் போக்கு சொன்னார்கள் அவர்கள். மொத்தத்தில் ஊர் விலக்கம் செய்யப்பட்டாள் அந்த ஒன்றுமறியாப் பிஞ்சுப்பிள்ளை.

அது என்ன உதட்டுப் பிளவு? இதற்கு மருத்துவமே இல்லையா? கடைசி வரையில் பிங்கி போன்ற மனிதப் பிறவிகள் எல்லோரும் காண விரும்பாத முகங்களுடன்தான் வாழ்ந்து தீர வேண்டுமா? இந்தக் கேள்விகளுக்கு நமது இந்தியாவின் பின் தங்கிய சூழலில் வேண்டுமானால் விடையில்லாமல் - விடை கண்டடையப்படாமல் இருக்கலாம். வியப்பு என்னவென்றால், நவீன மருத்துவத்தில் இந்த வகைக் குறைபாடு ஒரு குறையாகவே இல்லை. மிக மிக எளிய அறுவை சிகிச்சை மட்டும் போதுமானது. ஆனாலும், இங்கே அறியாமை இருளில் கிடக்கிற நமது மக்களுக்கு இதன் மீது ஒரு விழிப்புணர்வு மட்டும்தான் உடனடி அவசியம், வேறொரு பெரிய காரியமும் தேவையில்லை.

Pinki உதட்டுப் பிளவு குறைபாடு கொண்ட குழந்தைகள் உலகம் முழுவதும் ஏராளமாக இருக்கிறார்களாம். மூக்கின் நடுப்பகுதி மற்றும் மேல் தாடை போன்றவற்றின் வழக்கத்துக்கு மீறிய வளர்ச்சிப் பெருக்கம் உள்ளிட்ட பல காரணங்களால் இந்த `உதட்டுப் பிளவு' உண்டாகிறது. இந்தக் குறைபாட்டினை கவனிக்காமல் விட்டால் அது நாக்கு இடம் மாறிப் போய் பேசுவதற்கே சிரமம் ஏற்பட்டு விடும். பற்களின் வரிசை ஒழுங்கு குலையும். சிலருக்குக் காது கேளாமை கூட ஏற்பட்டு விடும்.

இதனை குணப்படுத்துவதெப்படி? பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மிகச்சிறிய தழும்பு மட்டுமே ஏற்படக்கூடிய அறுவை சிகிச்சையை குழந்தை பிறந்த பத்து மாதங்களுக்கு பின் உடனே செய்து கொள்ளலாம். சாதாரணக் குழந்தைகளைப் போலவே எந்த வித்தியாசமும் அறுவை சிகிச்சை செய்து கொண்ட குழந்தையின் முகத்தில் தெரியாது. சரி, பிங்கியின் கதைக்கு வருவோம். ‘ஸ்மைல் டிரைன்' எனும் பன்னாட்டுத் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சமூகப் பணியாளர் பங்கஜ் என்பவர் பிங்கியைச் சந்தித்தார். இந்த ஸ்மைல் டிரைன்' என்பது உதட்டுப் பிளவுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை செய்யும் அமைப்பாகும்.

பிங்கிக்கு பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர் சுபோத் குமார் சிங் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இது ஜி.எஸ். நினைவு மருத்துவமனையில் நடந்தது. அறுவை சிகிச்சை முடிந்த அடுத்த சில நிமிடங்களிலேயே பிங்கியிடம் முகம் பார்க்கும் கண்ணாடியைத் தந்தனர். எப்போதும் வேண்டா வெறுப்புடன் கண்ணாடி பார்த்துக் கொள்ளும் பிங்கி, ஆர்வமும், கலக்கமுகமாக அந்தக் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக் கொண்டாள் என்ன ஆச்சரியம்! இது நான்தானா? பிங்கியால் தன் முகத்தைத் தானே நம்ப முடியவில்லை! அவள் முகம் ஒரு குட்டி தேவதையின் முகம் போல மாறியிருந்த அதிசய மகிழ்ச்சி பிங்கியின் மனசெங்கும் பொங்கிப் பெருகியது. அப்போதுதான் தையல் போடப்பட்டிருக்கிது என்பதை மறந்து வலியையும் மீறிப் புன்னகைத்தாள் பிங்கி.

இந்தப் பிங்கி இன்று கிராமத்தார் எல்லோரும் கொண்டாடும் குழந்தையாகி விட்டாள். அதற்கு ஒரு காரணம் அவளின் முகத்துக்கு கிடைத்த இந்த மறு பிறவி அது மட்டுமல்ல... இன்னொரு மிகச் சிறப்பான காரணம் மேகன் மைலன் எனும் பெண்மணி. அமெரிக்காவைச் சேர்ந்த மேகன் இந்தப் பிங்கியின் இந்த மறுவாழ்வுக் கதையை அதே ஊரில், அதே தெருவில், அதே பிங்கியைக் கொண்டு ஆவணப் படமாக்கி, அந்த ஆவணப்படத்துக்கும் `சிறந்த ஆவணப்படம்' எனும் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டிருக்கிறது. மேகனின் 39 நிமிட ஆவணப்படத்தில் பிங்கி ரத்தமும் சதையுமாகத் தோன்றி இன்று உலகத்துக்கே விழிப்புணர்வு தந்து விட்டாள்.

Pinki 81 வது ஆஸ்கர் விருதுக்கு மொத்தம் நான்கு ஆவணப் படங்கள் போட்டிக்கு வந்தன. அவற்றில் இந்தியாவின் ‘ஸ்மைல் பிங்கி' விருதினை வெற்றி கொண்டது. ஆஸ்கர் விருது விழாவுக்கு பிங்கியும் அழைக்கப்பட்டிருந்தாள். தந்தையுடன் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தனது பிஞ்சுக் கால்களைப் பதித்து வந்திருக்கிறாள் பிங்கி. அவளுக்கு அங்கே சிறப்புக் கம்பள வரவேற்பு.

“காக்கைக்கும் தன் குஞ்சு...'' என்றெல்லாம் பழமொழிகள் சொன்ன நம் நாட்டில்தான் தன் தாயே வெறுக்கும் சேயாகப் பிறந்தாள் இந்தப் பிங்கி. இன்று உலகம் கொண்டாடும் புன்னகைத் தேவதையாக, அவள் பிறந்த மண்ணுக்கும், பெற்றெடுத்த மக்களுக்கும் நம்பிக்கை விதைத்து நடை போடுகிறாள்.

இந்தி மற்றும் போஜ்பூரி மொழிகளில் தயாரான நிஜ உலகின் தேவதைக் கதை சொன்ன இந்த ஆவணப்படம் குறித்த கவனம் என்பது ‘ஸ்லம்டாக் மில்லியனர்' கிளப்பி விட்ட பகட்டுப் படாடோப வெளிச்சத்தில் மங்கித்தான் போயிருக்கிறது என்பது நமக்கு வருத்தமளிக்கிறது.

- சோழ.நாகராஜன்

Pin It