ஒரு பெண் அதுவும் காதலி தன்னை விட கொஞ்சம் உயரமாகவும் இருந்து விடக் கூடாது. தன்னை விட உயரத்திலும் இருந்து விடக் கூடாது. ஆணாதிக்க மனநிலையில் இருக்கும் ஆண்களின் காழ்ப்புணர்ச்சி என்ன வேண்டுமானாலும் செய்யும். அடிக்கும். குடிக்கும். குறை சொல்லும். குத்தி பேசும். கொலை கூட செய்யும். ஒரு பெண் ஸ்கூட்டியில் நம்மை முந்துவதைக் கூட சகிக்காத ஆண் மனங்களை 2019லும் காண முடிவதை "உயரே" படம் பதைபதைக்க சொல்கிறது.

uyare 650பல்லவியும் கோவிந்தும் பள்ளி நாட்கள் முதலே நண்பர்களாக இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அது காதலாக மாறுகிறது. சிறுவயது முதலே பைலட் ஆக வேண்டும் என்ற உயர்ந்த கனவோடு இருக்கும் பல்லவிக்கு காதல் இரண்டாம் பட்சம் தான். ஆனால் அவன் மீது துளியும் அன்பு குறையாத காதலியாகவும் அவனை சகித்துக் கொள்ளும் தோழியாகவும் இருக்கிறாள். அவள் இன்றைய கால கட்டத்தின் பிராக்டிகல் பிரச்னைகளை உள் வாங்கியவளாக இருக்கிறாள். அவனோ படிப்பிலும் சரி வர இயலாத..... வேலையும் சரியானபடி அமைத்துக் கொள்ளாத வாழ்வை எதிர்கொள்ளும் துணிச்சலற்றவனாக இருக்கிறான். எதற்கெடுத்தாலும் அழுதுகொண்டு சுய பச்சாதாப உணர்வோடு வாழும் அவன் கண்களில் எப்போதும் ஒருவகை குரூரம் தென்படுகிறது.

முதல் காட்சியில் கல்லூரி விழாவில் பாடலுக்கு நடனம் ஆடும் பல்லவியின் வெளி மிக பெரியது. அவளுக்கான கை குலுக்கல்கள் மைதானம் முழுக்க நிறைந்து கிடக்கிறது. அவனோ யாராலும் அவள் கொண்டாடப்படும் தருணங்களில் முள் மீது நிற்பவன் போல சூனியத்தை வெறித்தபடி அமர்ந்திருக்கிறான். ஈகோ வலுப்பெறும் இடமாகக் கூட இருக்கிறது.

ஒரு வழியாக தன் அப்பாவின் ரிட்டையர்ட் பணத்தை எல்லாம் வைத்து அவள் பைலட்டுக்கு படிக்க மும்பை செல்கிறாள். காதலின் கை பிரிந்து உடல் நடுங்க பிரியா விடை பெறுகிறாள். பைலட்டாக என்னென்ன தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டுமோ அத்தனையும் மிக ஸ்மார்ட்டாக வளர்த்துக் கொள்கிறாள். அழகின் பேருரு அவள் முகத்தில் மலர்ந்து நிற்கிறது. அவள் மனம் முழுக்க உயர பறக்க போகும் நாளுக்காக காத்திருக்கிறது. வகுப்பில் இருக்கும் போது அடிக்கடி காதலனின் அலைபேசி அழைப்பு மானத்தை வாங்குவதோடு படிப்பையும் தடை செய்து அவளை வெளியே நிற்க வைக்கிறது. கடிந்து கொள்கிறாள். அவன் எதையும் புரிந்து கொள்வதில்லை. நினைத்த நேரத்தில் பேச வேண்டுமென்ற சிறுபிள்ளை காதலாகவே இருக்கிறது அவன் காதல். பைலட் ஆகி விட்டு கல்யாணம் செய்து கொண்டு பெருங்காதல் செய்வோம் என்பது அவள் காதலாக இருக்கிறது.

நண்பர்கள் கொடுக்கும் விருந்தொன்றில் கலந்து கொண்டு நள்ளிரவு வீடு திரும்புகையில் வீட்டு வாசலில் கோவிந்த் நிற்கிறான். சற்று முன் அவன் அலைபேசியில் அழைத்த போது அவன் மனம் கஷ்டப் படக் கூடாது என்று தூங்குவதாக பொய் சொல்கிறாள். அதை சொல்லிக் காட்டி, "என்னை ஏமாத்திட்டு இவுங்க கூட போய் கூத்தடிச்சிட்டு வர்றயா..? என்று மிக கடுமையாக ரோட்டில் நின்று பல்லவியின் நண்பர்கள் மத்தியில் அவமானப் படுத்துகிறான். "பைலட் ஆக போற திமிரு என்னை ஒதுக்குதா"ன்னு அசிங்கப்படுத்து கிறான். மிக அருவருப்பை ஏற்படுத்தும் சொற்களோடு பேச கூடாததெல்லாம் பேசுகிறான். மனம் உடையும் பல்லவி, "இனி என் முகத்தில் முழிக்காத" என்று சொல்லி வீட்டுக்குள் சென்று அழுகிறாள். குமுறுகிறாள். விடிய விடிய தவிக்கிறாள். காதலின் அவஸ்தையை நாமும் உணர்கிறோம்.

மறுநாள் முகம் வீங்க... காதல் நடுங்க ஸ்கூட்டியில் வெளியே செல்கிறாள். கோவிந்த் தெருமுனையில் காத்திருக்கிறான்.

பேசு பேசு என்று கெஞ்சுகிறான். அவள் மறுபேச்சு பேசாமல் அவன் போட்ட மோதிரத்தை கழட்டி அவனிடம் நீட்டுகிறாள். அவன் வாங்க மறுத்த மோதிரத்தை அப்படியே வெற்றிடத்தில் விட்டு விட்டு நகர்கிறாள்.

அவள் மட்டுமல்ல நாமும் எதிர்பார்க்காத அடுத்த சில நொடிகளில் அவன் பையில் இருந்து ஒரு பாட்டிலை எடுத்து அதிலிருக்கும் அமிலத்தை அவள் முகத்தில் வீசுகிறான். உயிர் நோக சாலையில் விழுந்து புரளுகிறாள். அந்த நாள் அவள் வாழ்வை தலைகீழாக புரட்டிப் போடுகிறது.

பாதி முகம் வெந்து கருக....காதல் அவளை காயப்படுத்தி ஆற்றாமையின் மனக்குமுறலோடு மருத்துவமனையில் சாய்க்கிறது. உடலாலும் மனதாலும்.. கூனிக் குறுகி புரண்டு ஒளிகிறாள். பைலட் கனவு தகர்கிறது. ஒரு பக்க கண் பார்வை மங்குகிறது. இடப்பக்கம் முகத்தை காணவே மிரட்சியாக இருக்கிறது. அவளே பார்த்து பயந்து நடுங்குகிறாள். பேச்சற்ற விசும்பலில் அவள் காணும் கண்ணாடி ஆயிரம் ஊசிகளால் கண்கள் குத்துகிறது. எல்லாமே அஸ்தமிக்கும் காட்சியை அந்த கண்ணாடியில் நாமும் காண்கிறோம். கூட இருக்கும் எல்லாருக்கும் துக்கத்தின் சுமை கோணல் மணலாக பிய்ந்து தொங்கும் சதையின் சாட்சியாகவே உணரப்படுகிறது. 12 வயசுல இருந்து கண்ட சொப்பனம் கலைஞ்சு போச்சு என்று சொல்லி அழுகையில்.... காதலின் மறுபக்கம் வெறிகொண்ட பற்களோடு நீண்டிருப்பதை பயந்து கொண்டு தான் காண்கிறோம்.

வாழ்வின் மிக அற்புதமான நொடிகள் சடுதியில் கொடூரமான நொடிகளாக மாறுவதை எதிர் கொள்வது அத்தனை சுலபமானது இல்லை. எல்லாம் தகர்ந்து ஒதுங்கி அமர்கையில்... ஒரு தேவதூதன் பல்லவியின் வாழ்வில் வருகிறான்.

அவள் ஏர் ஹோஸ்டஸ் ஆசையை அவளின் தகுதியின் அடிப்படியில் நிறைவேற்றுகிறான். கடைசிவரை நண்பனாகவேயிருக்கிறான். தன்னைப்போல பாதிக்கப்பட்ட பெண்களிடம் பழகத் தொடங்குகிறாள். இடையில் கோவிந்த் மீதான கேஸ் நடக்கிறது. எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் அவன்.... தான் அதை செய்யவே இல்லை என்று கோர்ட்டில் சொல்கிறான். அவன் முகத்தைக் கூட பார்க்க பிடிக்காத வெறுப்போடு.... அவனை காட்டிக் கொடுக்கிறாள். "தெரியாதவன் இதை பண்ணிருந்தா கூட மன்னிச்சிருப்பேன். சின்ன வயசுல இருந்து கூடவே இருந்தவன் இப்டி பண்ணிட்டாங்கும் போதும் தான் வலி கூடுது" என்று சொல்லி அழுகையில்.... பல்லவியின் அழுகையை திரை தாண்டி நாமும் அழுகிறோம்.

எதிர்பாராத ஒரு தருணத்தில் அவள் ஏர் ஹோஸ்டசாக பணிபுரியும் விமானத்தில் காக்பிட்டில் அமர வேண்டியதாகிறது. பல விமர்சனங்களினூடாக, தானே எடுத்த முடிவின் தைரியத்தில்.... நண்பன் கேட்டுக்கொண்ட வாக்குறுதியின்படி தரை இறங்க தடுமாறிக் கொண்டிருக்கும் விமானத்தை தன் பைலட் ஆசைகளையும் திறமைகளையும் நுட்பமாக பயன்படுத்தி யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் தரை இறக்குகிறாள். கோவிந்துக்கு சட்டரீதியாக 5 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கிறது.

"இன்னும் ஏர் ஹோஸ்டஸ் என்றாலே அழகாகத்தான் இருக்க வேண்டும் என்று எத்தனை நாளைக்கு சொல்லிக் கொண்டிருப்பீர்கள். புத்திசாலித்தனம் இருந்தால் போதாதா...?" என்று அந்த நண்பன் வாதாடும் இடம் கிளாப்ஸ். அவள் ஒரு பக்கம் தீய்ந்து போன முகத்தோடு இந்த உலகை எதிர் கொள்ள பழகுகிறாள். அது பற்றிய விழிப்புணர்வுக்கு முன்னுதாரணமாக இருக்கிறாள். அதன் பிறகு அமில வீச்சுக்கு ஆளானவர்களின் மறு வாழ்வுக்கு அவள் ஒரு குறியீடாக மாறிப் போகிறாள்.

படம் முழுக்க வரும் அவளின் தோழி... நட்பின் பலம். தேவதூதர்கள் நண்பர்களாகவும் இருப்பார்கள்.

காதலின் அவஸ்தை நின்று வாழ்த்துமே தவிர கொன்று போடாது. புரியாத கோவிந்துக்களுக்கு இந்தப்படம் சமர்ப்பணம்.

உயரே.... பறக்க விடுவோம் நம் பெண்களை.. அவர்கள் காதலிகளாக இருந்தாலும்....!

- கவிஜி