skater girl movieராஜஸ்தானில் உதய்பூர் அருகே ஒரு குக்கிராமம்.

கிடைத்த வெள்ளை உடையில் நீலம் தோய்த்து அதை நீல வண்ண சீருடையாக அணிந்துக் கொண்டு பள்ளிச் செல்லும் பிரேனா வறுமைக்கு பலி கொடுக்கப்படும் வழக்கமான ஒரு மூத்த மகள்.

14, 15 வயதிருக்கும். செம்பட்டை தலையும்... தலை கலைந்த சிக்கு வாழ்வுமென அவள் வாழ்வென்பது இருளும் ஒளியுமற்ற இன்னபிற வடிவம். தனக்கென்ற சிந்தனையற்ற... ஒரு நடமாடும் பொருள்.

பிறர் நலனுக்கு பாடுபடும் ஒரு ஆடுமாடு. உள்ளே புகைந்துக் கொண்டே இருக்கும்... கூச்சம்... இயலாமை... தாழ்வு மனப்பான்மை, பயம் என்று அவள் உயரத்தையும் தாண்டி அவளை சூழ்ந்திருக்கும் அடிப்படைவாத கட்டமைப்புகள் வறுமையின் கை பிடித்து அவளை புன்னகைக்கவும் மறுதலிக்கச் செய்கிறது.

ஒரு முறை தன் வயது என்ன என்று கேட்கும் சூழல் கூட படத்தில் வருகிறது. அதற்கு பதில் சொல்ல தெரியாமல் தடுமாறுகிறாள். அவ்வளவு தான் அவள்.

மாறாக அவளின் தம்பி துடிப்பான சமயோசித புத்திசாலியாக இருக்கிறான். அக்கா மீது அன்புள்ளவன். விளையாட்டு போக்கிலேயே வியாக்கியான பெருசுகளை கடந்து விட தெரிந்திருக்கிறது.

காந்தி நடத்திய போராட்டத்தை ஊர் டிவியில் பார்த்து விட்டு... அதே போல தன் சகாக்களை சேர்த்துக் கொண்டு கிராமத்து பெருசுங்களுக்கு எதிராக போராடுவது... அவன் நல்ல விதை என்ற ஒரு காட்சி பதம்.

என்ன நடக்கிறது என்று எல்லாம் தெரிந்தும் அடைபட்ட இடத்தில் பத்திரமாக இருக்கும் அவர்களின் அம்மா... காலத்துக்கும் மௌன சாட்சி. தனக்கு கிடைத்ததை கை மாற்றி விடும் பிள்ளைகள் உருவாக்கும் இயந்திரம்.

குக்கிராமத்தில் பெண் பிள்ளையை மூத்த பிள்ளையாக வைத்திருக்கும் தந்தை எனப்படுபவன்... ஆழ்ந்த பயத்தில் தன்னை அடைத்துக் கொண்டிருக்கிறான்.

இறுக்கத்தின் வழியே தனது எல்லா இயலாமையையும் சமன் செய்து கொள்ளும் அதிகாரம் அவன். ஆசைகள் அற்ற குடையின் கீழ்.... பிள்ளைகளுக்காக பணம் சேர்த்து வைக்கும் கண்டிப்பான அப்பா. மொத்தத்தில் சிரிப்பை மறந்த வெகு காலம் தான் தந்தை எனப்படுபவனின் முகம்.

லண்டனுக்கு தத்துக் கொடுக்கப்பட்ட தன் அப்பா பிறந்த ஊரைத் தேடி விடுமுறை நாட்களை கழிக்க வரும்... ஜெசிக்கா... படத்தின் மிக முக்கியமான மைல்கல்.

அந்த கிராமமும்... அங்கிருக்கும் மக்களும் எதோ ஒரு வகையில் கண்டிப்பாக தன் சொந்தம் என்று உள்ளூர விரும்புகிறாள்.

அங்கிருக்கும் சிறுவர் சிறுமியர் கூட அன்பாக பழகுகிறாள். அந்த சூழலில் தான்... பிரேனாவின் தம்பி... ஒரு சக்கர வண்டியை வைத்துக் கொண்டு விளையாடுவதைக் காண்கிறாள்.

தானும் சிறு பிள்ளையைப் போல அவர்களோடு அதில் அமர்ந்து தள்ளி நகர்ந்து விளையாடி மகிழ்வதில்... லண்டன் வாழ்வில் இருந்து வெகு தூரத்தில்... தன் சொந்த வாழ்வில் தன்னில் இருக்கும் தானை கண்டடைந்ததாக நம்புகிறாள். ரத்தமும் சதையுமாக தன் அப்பா 7 வயது வரை வாழ்ந்த அந்த கிராமம் அவளை தாலாட்டுவது போல ஒரு பிரமிப்பு.

அந்த குழந்தைகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று உந்துதல். சக்கர வண்டி ஸ்கெட்டிங் போர்டு சாயலில் இருக்க ஸ்கெட்டிங் போர்ட் வாங்கி தருகிறாள்.

தனது லண்டன் நண்பனும் அவளைத் தேடி வந்து விடுகிறான். அவன் ஒரு ஸ்கேட்டிங் பிளேயர். அவன் துணைக் கொண்டு அந்த பிள்ளைகளுக்கு ஸ்கேட்டிங் கற்றுத் தர ஆரம்பிக்கிறாள்.

பிரேனா ஸ்கேட்டிங்கில் காற்றோடு நகரும் போது தன்னையே உணர்கிறாள். தான் என்பதன் அர்த்தமே அப்போது தான் விளங்குகிறது. தான் என்ற ஒரு பதமே அவளுக்கு அந்த சாலையில் மிதந்து செல்கையில் தான் தெரிகிறது.

இதுவரை அவளைச் சுற்றி இருந்த கட்டுகள் எல்லாம் களைந்து விட்டது போல தோன்றுகிறது. முதல் முறையாக முகம் முழுக்க புன்னகைக்க அவளால் அன்று தான் முடிகிறது. தனக்கு தானே சிரித்துக் காட்டுவது நிகழ்கிறது. தன்னை தானே ரசிப்பது நடக்கிறது.

தன்னிலிருந்தே தனக்கு விடுதலை கிடைப்பதை அவள் உள்ளூர உணர்கிறாள். அது தொடர்ந்து கிடைக்க அவள் விரும்புகிறாள். எதுவொன்றையும் படக்கென கேட்க தெரியாதவள்... எப்போதும் சோர்வு... எப்போதும் சுமை... எப்போதும் தனிமை என்றிருப்பவளுக்கு இந்த ஸ்கேட்டிங் சிறகு பூட்டுகிறது.

நேரம் காலமற்று இடம் பொருளற்று ஸ்கேட்டிங்-ல் ஊர் பிள்ளைகள் ஊருக்குள்... வீதியில்... வீட்டுக்குள்... நடைபாதையில்... சாலையில்... என்று விளையாட்டை கொண்டாடித் திரிகிறார்கள்.

ஸ்கேட்டிங்-ல் வரும் பிள்ளைகளுக்கு பொருட்கள் தர மாட்டாது என்று மளிகை கடையில் போர்ட் வைக்கும் அளவுக்கு பிரச்னை பெருசாகிறது. காவல்துறை வரை விஷயம் செல்ல... எல்லாவற்றுக்கும் காரணமான ஜெசிக்கா எச்சரிக்கப் படுகிறாள்.

அதன் நீட்சியாக... ஜெசிக்கா லண்டன் திரும்பாமல் கிடைத்த பதவி உயர்வையும் பொருட்படுத்தாது... அந்தக் கிராமத்தில் ஒரு ஸ்கேட்டிங் பார்க் நிறுவ முயற்சிக்கிறாள். முயற்சி வென்றதா... பிள்ளைகள் ஸ்கேட்டிங் பிளேயர்ஸ் ஆனார்களா... என்பது மீதி கதை.

மனம் உருகும்.. கண்கள் களங்கம் இறுதிக் காட்சியில்... பாவனையற்ற பரிதாபங்கள் பரிசுக்கு ஒரு போதும் அலைவதில்லை. மாறாக பறப்பதற்கு...என்று புரிகிறது.

அது விடுதலை.

சின்ன சின்ன உணர்வுகள் கூட வெறும் கனவுகளாக தான் கிடைக்கும் கடைக் கோடி கிராமத்து சிறுமிகளின் கண்களில் எப்போதும் கருப்பு வெள்ளை காட்சிகள்தான். அதுவும் 14... 15 வயதில் திருமணம் செய்து வைக்கும் கடைக்கோடி இந்தியாவின் முகத்தில்... சாதியும் சாமியும்தான் தன் கோரபற்களை முளைத்துக் கொண்டு திரிகின்றன.

இந்தப் படத்தில் கூட... மேல் சாதி என்றழைக்கப்படும் ஒரு சிறுவனை கீழ் சாதி என்றழைக்கப்படும் சிறுவர்களோடு சேர விடாமல் அந்த சிறுவனின் அம்மா தடுக்கிறாள்.

விளையாட யாருமற்று தனியாய் பாவமாய் ஒதுங்கி பார்த்துக் கொண்டிருக்கும் அந்த மேல் சாதி என்று சொல்லப்படும் சிறுவனை... கீழ் சாதி என்று சொல்லப்படும் பிரேனாவின் தம்பி.. தோழமையோடு வா என்று தோள் தொட்டணைத்து விளையாட கூட்டி செல்கையில்... குழந்தைகளிடம் இருக்கும் நிதானம் இந்த கிழட்டு முண்டங்களிடம் இல்லையே என்று தோன்றியது.

குழந்தைகள்.. கனவுகளின் இறக்கைகள். அவர்கள் தேடும் வானத்தை காட்டிக் கொடுப்பதுதான் ஆக சிறந்த சமூக திறப்பு.

"நான் மயிராக ஆசைப்பட்டேன். முடியல. நீயாவது ஆகி குலப்பெருமையை காக்கணும்" என்று தன்னுணர்வே இல்லாமல் சொல்லும் மயிறு மண்டைகளை... தூக்கி போட்டு மிதித்தாலும் சரி தான். குழந்தை என்ன ஆக வேண்டும் என்று அது முடிவு பண்ணட்டும். வழியை மட்டும் காட்டுவோம்.

தன்னம்பிக்கை இல்லாத... எல்லாவற்றுக்கும் தயங்கும் ஒரு தனித்த சிறுமிக்கு சீருடை இல்லாமல் புத்தகம் இல்லாமல் பள்ளிக்கு போக முடியாத சூழலைக் கூட ஒதுங்கி நின்று கூனி குறுகி உள்ளுக்குள்ளேயே வெதும்பும் மொழி இருந்தும் பேச்சற்ற அந்த சிறுமிக்கு பையனுக்கு தரும் எந்த ஒரு முன்னுரிமையையும் தனக்கு தரவில்லை என்பதைக் கூட எங்குமே கேட்காத இது தான் விதி போல என நம்பும் அந்த அடிமை மனோபாவத்துக்கு... எல்லாவற்றிலிருந்தும் விலக்களிப்பது போல... ஸ்கேட்டர் எனும் சிறகு பூட்டி விட்ட ஜெசிக்கா பேரன்னையின் வடிவம் ஆகிறாள்.

அந்த ஸ்கேட்டிங் பார்க்கில் உராய்ந்த சக்கரம்... தவம் உடைத்து தாகம் தீர்க்க... தன்னை உணர ஆரம்பிக்கும் பிரேனா முகத்தில் படம் முழுக்க இல்லாத பேரழகு. அவள் பறக்கும் வானத்தில் படபடவென ஆயிரம் நட்சத்திரங்கள்.

இனியும் பிரேனாக்களை தாலி கட்டி வீட்டுக்குள்... அடுப்பங்கரையில் அடித்து துவைக்காதீர்கள். பிரேனாக்களுக்கு என்ன விருப்பமோ அதை செய்யட்டும். அவரவர் விருப்பங்களின் வழியே தான் வாழ முடியும். மற்றவர் விருப்பங்களின் வழியே சாக கூட முடியாது.

படத்தின் முதல் காட்சி மீண்டும் நம் மனதில் நகர்கிறது.

சக்கர வண்டியில் தம்பியை அமர்த்தி இழுத்துக் கொண்டு ஓடும் பிரேனா முகத்தில்... காற்றின் விடுதலை விருப்பம் போல மோதுகிறது.

Film : Skater Girl
Director: Manjari Makijany
Languages: Hindi; English
Year : 2021

- கவிஜி

Pin It